சுவேதாரண்யேஸ்வரர் கோயில்: பிள்ளை வரம் தலம்

செந்தூர் திருமாலன்

சுவேதாரண்யேஸ்வரர் கோயில். இது மயிலாடுதுறை அருகேயுள்ள திருவெண்காட்டில் உள்ள திருக்கோயில். நவக்கிரகங்களில் புதனுக்கு தனி சந்நதி இங்குதான் உள்ளது.
காசிக்கு சமமான திருத்தலங்களில் ஒன்றுதான் இந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயில். சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது
சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களில் ஒன்றாகிய ஸ்ரீஅகோரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காண முடியும்.

சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

இத்திருத்தலத்தில் சுவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீநடராஜர், அகோரமூர்த்தி என மூன்று சிவமூர்த்தங்கள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என மூன்று தீர்த்தங்கள் இருப்பது மற்றொரு சிறப்பு.
சிவபெருமான் உமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க திருவெண்காட்டில் எழுந்தருளினார் அப்போது ஆனந்தத்தால் அவருடைய மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் துளிகள் சிந்தின.
அந்த மூன்று துளிகளும் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என மூன்று குளங்களாக உருவெடுத்தன என்று தலபுராணம் சொல்கிறது.

நால்வரின் பாடல் பெற்ற தலம்

விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், ஐராவதம் முதலானவர்கள் சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் பாடல் பெற்ற தலமாக இந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற இடம்

பதினோராம் திருமுறையை பாடிய பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற திருக்கோயிலும் சுவேதாரண்யேஸ்வரர் கோயில்தான்.
பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட சிவஞான போதம் என்னும் சைவ, சித்தாந்த முழு முதல் நூலை எழுதிய மெய்கண்டார் அவதரித்த தலம் இது.
பிரளய காலத்திலும் அழியாமல் சிவபெருமானின் சூலாயுதத்தால் தாங்க பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
வியாச முனிவரின் ஸ்கந்த மகாபுராணம், அருணாச்சல புராணத்தில் இத்தலத்தின் சிறப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

தேவாரப் பாடல்

இத்திருத்தலத்தின் இறைவன் வேதாரண்யேஸ்வர் உமையவள் பிரம்மவித்யாம்பிகை அம்மனுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

“பேயடையா பிரிவெய்தும்
பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத்
தோயாவாந் தீவினையே”


என்று தேவாரப் பாடலில் சுவேதாரண்யேஸ்வரர் கோயிலின் சிறப்பை திருஞானசம்பந்தர் கூறுகிறார்.
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து, அங்குள்ள முக்குள நீரில் எழுந்து வழிபடுவோரை பேய்கள் பிடிக்காது. பேய் பிடித்திருந்தாலும் விலகும்.
இறையருளால் மகப்பேறு வாய்க்கும், மனவிருப்பங்கள் நிறைவேறும் . இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.
குழந்தை வரம் தரும் சுவேதாரண்யேஸ்வரர் பற்றி அவர் இப்படி விவரித்திருக்கிறார் தன்னுடைய பாடலில்.

சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தல வரலாறு

ஜலதராசூரனுடைய மகன் மருத்துவாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அதன் பலனாக ஈஸ்வரனிடம் இருந்து சூலாயுதத்தை வரமாக பெற்றான்.
இதையடுத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் பல செய்யத் தொடங்கினான். இதனால், தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தினியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார். மருத்துவாசுரன் சிவபெருமானிடமிருந்து பெற்ற சூலாயுதத்தால் நந்தியை தாக்குகிறான்.
நந்திக்கு ஒன்பது இடங்களில் காயம் ஏற்படுகிறது. (இன்றளவும் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் இந்த காயங்களின் தழும்புகளை காணலாம்).

அகோரமூர்த்தியின் தோற்றம்

நந்தி காயமடைந்ததை அறிந்த சிவபெருமான் சினம் கொள்கிறார். அகோரமூர்த்தியாக மாசி மாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அவதாரம் எடுக்கிறார்.
கரிய திருமேனியுடன், செவ்வாடை உடுத்தி, இடது காலை முன் வைத்து வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலை ஊன்றி நிற்கிறார்.
அவரது எட்டுக் கரங்களும் அவற்றில் ஏழு ஆயுதங்களைத் தாங்கிய கம்பீர தோற்றத்தை மருத்துவாசுரன் பார்க்கிறான்.

மருத்துவாசுரனின் வேண்டுதல்

அகோர மூர்த்தியின் கைகளில் மணி, கேடயம்,கத்தி,வேதாளம், உடுக்கை,கபாலம், திரிசூலம் ஆயுதங்களும், கோரை பற்களுடன் 14 பாம்புகளை தன் திருமேனியில் அணிந்தும், மணிமாலை அணிந்தும் அஷ்ட பைரவர்களுடன் காட்சி தந்த கோலத்தைக் கண்ட மருத்துவாசுரன் அவரது காலடியில் சரணடைந்தான்.
இறைவனிடம் தன்னை மன்னித்தருள வேண்டிய அவன், அகோர மூர்த்தியான உங்களை உண்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நவக்கிரக தோஷம், புத்திர தோஷம், எம பயம் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
அவர்களின் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற அருள் வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டான்.
அவன் வேண்டியபடியே அந்த வரத்தை அகோரமூர்த்தி அருளியதால்தான், இத்திருத்தலத்தை நாடி வழிபட்டு செல்வோருக்கு மரண பயம் நீக்கியும், நீண்ட ஆயுளையும் இறைவன் தருகிறான்.
இந்த தலத்தின் பெருமைகளை கேட்டறியும் மக்கள் ஆயிரக்கணக்கில் நாள்தோறும் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.

சிறப்பு வழிபாடுகள்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அகோரமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.
மாதம்தோறும் பூர நட்சத்திரத்தில் அகோரமூர்த்தி பூஜையும் நடைபெறுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மிகச் சிறப்பானவை.
இத்தலத்தின் விருட்சங்களாக ஆல், கொன்றை, வில்வம் ஆகியன இருக்கின்றன.

குழந்தை பாக்கியம்

விருத்தாச்சலம் அருகே உள்ள பெண்ணாடத்தில் வாழ்ந்து வந்த அச்சுதகளப்பாளர் என்பவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
அவர் தனது குருவாகிய அருள்நிதி அருணந்தி சிவாச்சாரியாரிடம தனது குறையை வெளிப்படுத்துகிறார்.
அவர் திருமுறைகளைப் பூஜித்து கயிறு சாத்தி பார்த்தார். அப்போது டபேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை” என்னும் திருவெண்காடு ஈசனை நோக்கி திருஞானசம்பந்தர் பாடிய தேவார பாடல் வந்தது.

மெய்கண்ட தேவர் நாயனார்

அச்சுதக்களப்பாளர் தம் மனைவியுடன் திருவெண்காட்டிற்கு வந்து முறையாக முக்குளம் மூழ்கி சுவேதாரண்யேஸ்வரர் கோயில் வந்து சுவேதாரண்யேஸ்வரரை வணங்கி வழிபட்டு வந்தார்.
ஒருநாள் இரவு அச்சிதக்களப்பாளரின் கனவில் வெண்காடர்தோன்றி உமக்கு இந்த பிறவியில் குழந்தை பேறு இல்லை. எனினும் நம் ஞானக் குழந்தையின் பாடலில் நம்பிக்கை வைத்து நம்மை வழிபட்டு வருவதால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று அருளினார்.
அதன்படியே அச்சிதகளப்பாளரின் மனைவி கருவுற்று ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
குழந்தைக்கு சுவேதனபெருமாள் என்ற பெயரை சூட்டினார். அவரே மெய் கண்டார் என்று தீட்சை நாமம் பெற்று சிவஞான போதம் நூலை இயற்றி அருளிய சித்தாந்த ஞானபரம்பரைக்கு முதல் தலைவராக விளங்கிய மெய்கண்ட தேவர் நாயனாராவார்.

சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் வழிபடும் முறை

சுவேதாரண்யேஸ்வரர் கோயில் வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த குளத்துக்கு வர வேண்டும்.
ஆண்கள் வேட்டியும் ,பெண்கள் புடவையும் கட்டிக் கொண்டு அக்னி தீர்த்த குளக்கரையில் உள்ள மெய்கண்டார் சிலையை வணங்கியபடி குழந்தை வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் இறைவனை நினைத்து குளத்தில் கிழக்கு முகமாக பார்த்து மூழ்க வேண்டும்.
அப்போது ஒரு மடக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.பெண்கள் முகத்தில் மஞ்சளை தடவிக் கொள்ள வேண்டும். குளத்தில் எலுமிச்சைப் பழம், வாழைப் பழம், பூக்களை சமர்ப்பிக்க வேண்டும் . பின்னர் சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
தொடர்ந்து சந்திர தீர்த்தத்திற்கு சுற்றி செல்ல வேண்டும் (குறுக்காக செல்லக்கூடாது). குளித்து முடித்தவுடன் ஈரமான ஆடைகளை அங்கேயே விடக்கூடாது. அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
புது ஆடைகள் அணிந்து கொண்டு முதலில் பெரிய வாரணர், விநாயகர், சுவேதாரணஸ்வரர், அகோரமூர்த்தி, பிரம்ம வித்யாம்பிகை,பிள்ளை இடுக்கி அம்மன், புதன் சந்நதியில் தங்கள் பெயர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். பிள்ளை இடுக்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

பிள்ளை இடுக்கி அம்மன் மகிமை

திருஞானசம்பந்தர் சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்தபோது தரை முழுவதும் சிவலிங்கங்களாக காட்சியளித்தன இதனால் அவர் தலத்தில் கால் வைக்க தயங்கி எப்படி நான் இந்த தலத்திற்கு செல்வேன்? என நினைத்து சிவனை வேண்டினார்.
அவரது குரலை கேட்டு சிவபெருமான் பார்வதியை அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வரும் படி கூறினார்.
சிவனின் ஆணைக்கிணங்க பார்வதிதேவி திருஞானசம்பந்தரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் வந்தடைந்தார். அதனால் பிள்ளை இடுக்கி அம்மன் என்ற திருநாமத்தை அவர் பெற்றார்.
அம்மன் தனி சந்நதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். அவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், அவர் குழந்தை வரம் அருள்வதாக புராணம் சொல்கிறது.

வழியும் – தூரமும்

திருவெண்காடு திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. சீர்காழியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து ரயிலில் வருபவர்கள் சீர்காழியிலோ, மயிலாடுதுறையிலோ இறங்கி பஸ், கார் மூலம் கோயிலை சென்றடையலாம்.
திருச்சி மார்க்கத்தில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு பஸ், கார் மூலம் சென்றடையலாம்.
சீர்காழி, மயிலாடுதுறையில் இருந்து கோயிலுக்கு நகர பேருந்துகள் பகல் நேரத்தில் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்:

சுவேதாரண்யேஸ்வரர் கோயில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 5 மணி, 6 மணி, இரவு 8.30 மணி என ஆறு கால பூஜைகள் வழக்கமாக நடந்து வருகிறது.

திருவிழா

மாசி மாதம் இந்திர விழா 10 நாள்கள் சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறும். 5-ஆவது நாள் விழாவில் அகோரமூர்த்தி அசுரனை சம்ஹார புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
கார்த்திகை மாதம் 10,008 சங்காபிஷேகமும், வருடம்தோறும் நடராஜருக்கு ஆறு அபிஷேகமும் நடைபெறும்.
இங்குள்ள ருத்ர பாதத்தில் பூஜை செய்தால் 21 தலைமுறையினர் செய்த பாவம் நீங்குவதாக ஐதீகம்.
சௌபாக்கிய துர்க்கை , ஸ்வேதா மாகாளி, சுவேதன பெருமாள் ஆகியோருக்கு தனி சந்நதிகள் உள்ளன. 28 பிள்ளையார்கள் இங்கு உள்ளன.

திருநாகேஸ்வரம் திருக்கோயில் – ராகு கேது தலம்

குடந்தை ப. சரவணன்

திருநாகேஸ்வரம் கோயில் ராகு, கேது தலமாக விளங்குவதோடு, அது வழிபட வருவோர்க்கு ஆனந்தத்தை அளிக்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது.

ஆன்மிகவாதிகளில் 5 வகை

கடவுளை வணங்குபவர்கள் ஆன்மிகவாதிகளாக இந்த பூவுலகில் கருதப்படுகிறார்கள். இந்த ஆன்மிகவாதிகளில் 5 வகையானவர்கள் உண்டு.

ஆன்மிகவாதிகளில் இறையன்பிற்காக தவமாய் கிடப்பவர்கள் முதல் ரகம். சரீரத்தை விட்டு ஆன்மா பிரியும் காலத்தில் அது முக்தி அடைய வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக வணங்குபவர்கள் இரண்டாவது ரகம்.
தன்னுடைய துன்பத்தை போக்குவதற்காக வேண்டுபவர்கள் மூன்றாவது ரகம். தன்னுடைய ஆசைகளை, கனவுகளை பூர்த்தி செய்ய வேண்டுபவர்கள் நான்காவது ரகம்.
கடவுள் தமக்கு தேவைப்படும்போதோ அல்லது இவர் ஒரு கடவுள் பக்தர் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக வழிபடுவர்கள் கடைசி ரகம். அதுதான் ஐந்தாவது ரகம்.

ஆனந்தம் ஐந்து வகை

அதேபோல் ஐம்புலன்கள் மூலம் கிடைக்கும் நமக்கு ஆனந்தமும் 5 வகையாக இருக்கிறது. ஆனால் இவற்றில் ஒரு புலனுக்கு மட்டும் மனதுக்கு பேரானந்தத்தை தரும் சக்தி உண்டு.

என்ன வாசம், மூக்கை துளைக்கிறதே…. ஆனந்தமாக இருக்கிறது என்று சொல்ல வைக்கும் நாசி.

அடடா.. என்ன மாதிரியான சுவை.. என்று ருசியை பதம் பார்த்து நம்மை திருப்தி அடைய வைக்கும் நாக்கு.

வெப்பத்தில் புழுங்கும்போது, எங்கிருந்தோ நம் உடல் மீது உரசிச் செல்லும் குளிர்ந்த காற்ற உணர வைத்து ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என பாட வைக்கும் தோல்.

இனிய இசையை கேட்கும்போது அதில் லயித்து போக வைத்து ஆனந்தம் தரும் காதுகள்.

மனதுக்கு ரம்மியமான காட்சிகளை பார்த்து ஆனந்தப்பட வைக்கும் கண்கள்

இந்த ஐம்புலன்களில் கண்களுக்கு மட்டும் பேரானந்தத்தை தரும் சக்தி உண்டு.

இறைவா… உன்னை எப்போது காண்பேன்… உன் திருவடி பாதங்களை எப்போது தொழுவேன் என்று சதா சர்வ காலமும் ஏங்கும் பக்தர்களுக்கு பேரானந்தம் தருபவை திருக்கோயில்களில் நடைபெறும் உற்சவர் அலங்காரங்களும், சேவைகளும்தான்.

பேரானந்தம் தரும் உற்சவர் சேவைகள்

திருக்கோயில்களில் நடக்கும் உற்சவ சேவைகளை சிலர் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் பேரானந்தம் இருக்கிறதே… அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அருகில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வையும் தாண்டி மெய்சிலிர்த்து கண்ணில் நீர் வழிகிறதே அதற்கு காரணம் மனம் அடையும் பேரானந்தம்தான்.

திருநாகேஸ்வரம் திருக்கோயில் உற்சவர் சேவை

அத்தகைய பேரானந்தத்தை நீங்களும் அடைய விரும்பினால் அவசியமாக நீங்கள் கும்பகோணத்துக்கு நான் சொல்லும் திருக்கோயில்களுக்கு வந்து அந்த உற்சவர் சேவைகள் கண்டு பாருங்கள்.

குறிப்பாக, கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோவிலுக்கு நீங்கள் வரவேண்டும்.

இத்தலத்துக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 90-ஆவது தலமாக விளங்குகிறது.
காவிரி தென்கரைத் தலங்கள் 127-இல் 27-ஆவது திருத்தலமாக திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் பெயரில் விளங்குகிறது.

பதிகம் பெற்ற தலங்களில் இத்தலம் கிழக்கே இருப்பதால் கீழ்க்கோட்டம் எனப்படுகிறது.

குடந்தை கோயில் கருட சேவை

புராண வரலாறு

ஒருமுறை இந்த பூவுலகைத் தாங்கும் ஆதிசேஷன் பாரம் தாளமுடியாமல் சிவபெருமானிடம் முறையிடுகிறான். இந்த உலகை தாங்கும் சக்தியை தா என்று வேண்டுகிறான்.
சிவபெருமான் பிரளயக் காலத்தில் அமுதக் குடத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் நீ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தால் உனக்கு இந்த பூமியை தாங்கும் சக்தி கிடைக்கும் என்கிறார் சிவபெருமான்.
சிவபெருமானின் கட்டளையை ஏற்ற ஆதிசேஷன், குடந்தையில் அமுதக் குடத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் லிங்கத்தை நிறுவினான். அதற்கு பூஜை செய்தான். ஆயிரம் தலைகளையுடைய அவன் ஒரு தலையில் மட்டுமே பூமியை தாங்கும் சக்தியைப் பெற்றான்.
பிரளயத்தின்போது வில்வம் விழுந்த இந்த இடம் வில்வவனம் என பெயரானது. ஆதிசேஷன் பூஜை செய்ததால் இறைவன் நாகேஸ்வரர் என பெயரிடப்பட்டார் என்பது புராண வரலாறு.

பிரிந்த தம்பதியார் கூடுவர்

இந்த திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருவோருக்கு ராகு, கேது ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருநாகேஸ்வரம் கருவறை மேற்குப்புற தேவகோட்டத்தில் உள்ள உமையொரு பாகனை வழிபாடு செய்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.

திருநாகேஸ்வரம் தலத்துக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. மகா சிவராத்திரி அன்று முதல் காலம் ஆதிசேஷன் வழிபட்ட நாக தோஷ பரிகார தலமாகவும் திருநாகேஸ்வரம் விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களில் நடைபெறும் கருடசேவை போன்று திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறுகிறது.
கருட வாகனத்தில் வேணுகானம் இசைக்கும் ஸ்ரீ வேணுகோபாலர் வீதியுலா திருக்காட்சி உற்சவத்தைக் கண்டு நாம் பேரானந்தம் அடைவது உறுதி.
சிவ வைணவம் இணைந்து அருளும் இத்தலத்தில் ஸ்ரீஹரிஹர தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் ஆண்டுதோறும் விஷ்ணு அம்சமான அருள்மிகு ஸ்ரீவேணுகோபாலசுவாமி கருட வாகனத்தில் கருடசேவை சாதிப்பது மிகச் சிறப்பானது.
இந்த ஆலயத்தில் நடைபெறுவதை போன்று வேறு எந்த சிவாலயங்களிலும் கருடசேவை நடைபெறுவதும் இல்லை.

அப்பர் பெருமான் மனம் உருகிய காட்சி

ஆலயத்தில் உள்ள ஆனந்த சபாபதி சபையில் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் தனது திருக்கரங்களால் தாளமிடுகிறார். ஸ்ரீவேணுகோபால சுவாமி புல்லாங்குழல் வாசிக்கிறார். ஆனந்தமாக திருநடனமாடுகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான். இக்காட்சியைக் கண்ட அப்பர் பெருமான் குடந்தை கீழ்க்கோட்டக் கூத்தனாரே என்று பதிகம் பாடியிருக்கிறார்.

சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கமாகிச்
சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்;
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும் கடல்
நஞ்சம் உண்டு; இருண்ட கண்டர் போலும்;
மன் மலிந்த மணி வரைத் திண் தோளர் போலும்
மலையரையன் மடப் பாவை மணாளர் போலும்;
கொல் மலிந்த மூவிலை வேல் குழகர் போலும்
குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

என்ற பதிகம்தான் இது.

யார் இந்த குடந்த கீழக்கோட்டத்து கூத்தனார்?

இறைவா! நீ அரிய சொற்களால் ஆன நான்கு வேதங்களாக இருக்கிறாய். அந்த வேதங்களுக்கு அரணாக விளங்கும் ஆறு அங்கங்களாகவும் இருக்கிறாய்.

சொற்களையும், சொற்கள் உணர்த்தும் பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாக நீ இருக்கிறாய்.

மடிப்பு மலைகளாய், கற்களால் குவிக்கப்பட்ட இமயத்தில் வாழ்பவன் நீ. பாற்கடலில் இருந்து திரண்ட விஷத்தை உண்டு கண்டத்தில் தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தை உடையவனாய் இருக்கிறாய்.

மலை போன்று வலிமையாக மட்டுமின்றி பேரழகுடைய தோள்களை கொண்டவனாய் இருக்கிறாய்.

மலைக்கு அரசனாய் விளங்கிய இமவானின் மகள் அழகுக்கு இலக்கணமாய் என்றும் இளமை பெற்ற பார்வதியின் மணாளனே.

மூன்று இலைகள் சேர்ந்ததுபோல் அழித்தலுக்கு பயன்படும் சூலத்தை உடையவன் நீ. குடந்தை நகரின் கீழ்க் கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாய் வீற்றிருக்கிறாய் என்பதுதான் இதன் சுருக்க விளக்கம்.

தாயாருக்கு கருட சேவை

அதேபோல், 108 திவ்ய தேசங்களில் தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை விழா நடைபெறும் தலமும் இதுதான்.
அருள்மிகு ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத ஸ்ரீசாரங்கபாணி எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் இந்த கருட சேவை சிறப்பானது.
பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகோமளவல்லித் தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளி கருடசேவை சாதிக்கிறார்.

எமதர்மன் சங்கடத்தில் சிக்கிய சம்பவம்

வெ. நாராயணமூர்த்தி

எமதர்மன் மல்லுக்கு நின்ற சிறுவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய கதைதான் இது. இந்த கேள்வி, பலரின் வாழ்க்கை பயணத்தை செம்மை படுத்த உதவி புரியும்.

மனிதகுலத்துக்கே சவாலாக அமைந்த ஒரு கேள்விக்கான பதிலைத் தேடி அலைந்த ஒரு மாணாக்கன் எப்படி ஒரு பெரிய ரஹஸ்யத்தை வெளிக்கொணர முடிந்தது என்பதை விளக்கவே இந்தப் பதிவு.

‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த
கேள்வியைக் கேட்டவன் நச்சிகேது என்கிற சிறுவன்.

இவன் கேட்ட இந்தக் கேள்வி நம் அனைவரின் சார்பாகவும் கேட்கப்பட்டுள்ளதாக நான் பார்க்கிறேன்.

அவன் தெரிந்து கொண்ட தகவல்கள் காலத்தால் அழியாமல் நமக்கெல்லாம் இன்றும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

எமதர்மன் சந்திக்க நேர்ந்த நச்சிகேது

நச்சிகேது கேட்டது சாதாரண கேள்வி அல்ல. நம் வாழ்க்கைப் பாதையின் முடிவு. எதை
நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான விடை.

தேவ ரஹஸ்யம். நாம் அனைவரும் கேட்க நினைப்பது. தெரிந்துக்கொள்ள நினைப்பதுதான் இந்தக் கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி, அந்த ஞானத்தை நாடி, தங்கள் வாழ்நாளை இழந்த ரிஷிகளும், முனிவர்களும், மன்னர்களும், சாமானியர்களும் ஏராளம்.

ஆனால் தெரிந்து கொண்டவர்களோ, இந்த ஞானத்தை உணர்ந்தவர்களோ ஒரு சிலர்தான்.

நச்சிகேதுவின் தேடல்

நச்சிகேதுவின் இந்தத் தேடல் பற்றிய தகவல் ஒரு கதை வடிவில் வேத ஸாராம்ஸங்களில்
ஒன்றான ‘கடோபநிஷத்’தில் விவரிக்கப்பட்டுள்ளது.

நச்சிகேதுவின் தந்தை வாஜ்ரஸவர் விஸ்வஜித் யாகம் செய்கிறார். விஸ்வஜித் யாகம் என்பது சொர்க்கத்தை அடைய நினைக்கும் நபர் செய்யும் கடினமான யாகம்.

மிகுந்த உயர்நிலை யாகம் என்று அந்தக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த யாகத்தை செய்பவர் தன்னிடத்தில் உள்ள அனைத்து பொருள்களையும், தான் சேர்த்த அனைத்து புண்ணியங்களையும் மற்றவர்களுக்கு முழுமையாக, ஸ்ரத்தையாக தானம் செய்யவேண்டும்.

யாகத்தை வேடிக்கை பார்க்க வந்த அனைவருக்கும் பொருள்கள் எல்லாம் தானமாக கிடைக்கும்.

இந்த யாகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் நச்சிகேதுவிற்கு ஒரு விஷயம்
புலப்படவில்லை.

தந்தையிடம் சந்தேகத்தை கேட்ட சிறுவன்

தானும் தந்தையின் சொத்தல்லவா? தந்தை செய்யும் யாகத்தில் தன்னை யாருக்கு தானமாகத் தரபோகிறார்? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தந்தையிடமே கேட்டான். ‘தந்தையே உங்களுக்குச் சொந்தமான எல்லா பொருள்களையும் தானமாகத் தந்து வருகிறீர்களே, என்னை யாருக்கு தானம் தரப்போகிறீர்கள்?

சிறிய பாலகனான தன் மகனின் கேள்வியை தந்தை முதலில் பொருட்படுத்தவில்லை. ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பினார்.

மகனோ விடுவதாக இல்லை. தொடர்ந்து நச்சு செய்ய ஆரம்பித்தான். (இவன் செய்த
நச்சைதான் பின்னர் இவன் பெயரிலேயே ‘நச்சு செய்தல்’ என்ற வார்த்தை உருவானாதோ?).

மைந்தனின் தொல்லை தாங்க முடியாத தந்தை தன் கோபத்தை அடக்கமுடியாமல், ‘உன்னை எமனுக்கே தானம் தருகிறேன் போ’ என்று ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுவிட்டார்.

குருகுலத்தில் பயின்ற நச்சிகேது இதையேத் தன் தந்தையின் விருப்பம் என்று கருதி,
எமலோகம் செல்ல கிளம்பி விட்டான்.

உணவை ஏன் மறுத்தான்?

கடும்தவம் இருந்து, தன்னையே தியாகம் செய்து எம பட்டணத்தை அடைந்தான். வாயில் காப்போன் இந்தச் சிறுவனை தடுத்து நிறுத்தினான்.

‘எமதேவன் அனுமதியில்லாமல் உள்ளே வர இயலாது’’ என்று திரும்பிச் செல்லுமாறு
பணித்தான். நடந்த கதையை சொல்லி, தன் தந்தை தன்னை எமனுக்குத் தானமாகத்
தந்துவிட்டபடியால், தான் தற்போது எமனின் சொத்து.

எனவே உள்ளே செல்ல யார் அனுமதியும் தேவை இல்லை’’ என்று வாதித்தான் சிறுவன். அதிர்ந்துபோன காவலாளி சிறுவனை அழைத்துச்சென்று சிறுவனுக்கு உணவளித்தான்.

சிறுவனோ உணவை மறுத்து, தான் எமனிடம் சில விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டபின்தான் உண்ணமுடியும் என்று பிடிவாதம் பிடித்தான்.

தொடர்ந்து மூன்று நாட்கள் கழித்த பின்னரே எமனை நேரில் காண முடிந்தது.

சிறுவனை பார்த்து வியந்த எமன்

தான் அழைக்காமலே வந்த சிறுவனைக் கண்டு எமதேவனே ஆச்சர்யப்பட்டான். ஆனாலும்
அந்தச் சிறுவனின் தைரியத்தையும், ஆர்வத்தையும் மெச்சினான் எமன்.

அச்சிறுவன் வந்த காரணத்தை கேட்டான். ‘என் தந்தை என்னை உங்களுக்குத் தானமாகத் தந்துவிட்டார். நான் தற்போது உங்களுக்குச் சொந்தமாகிவிட்டேன்.

எனக்கு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை. என்னை முதலில் உங்கள் சொத்தாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றான் சிறுவன்.

அசந்து போன எமன், ‘சரி முதலில் ஏதாவது சாப்பிடு. மூன்று நாளாக எதையும் உண்ணாமல்
இருக்கிறாய். சாப்பிட்டவுடன் நீ மீண்டும் உன் தந்தையிடம் அனுப்பிவிடுகிறேன்’ என்றார் எமன்.

‘நான் சாப்பிட வேண்டுமானால் நீங்கள் எனக்கு மூன்று வரங்கள் தரவேண்டும்’ என்றான் நாச்சிகேது பிடிவாதமாக.

சிறுவனின் புத்திக்கூர்மையையும் அவனது விவேகத்தையும் கண்டு மெச்சிய எமன் மூன்று வரங்கள் தருவதாக வாக்களித்தான்.

வேதங்கள் ஒரு சிறுவனின் மன நிலையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது
பாருங்கள்!

எமன் கொடுத்த வரங்கள்

‘எமலோகத்தில் உணவு அருந்துபவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்று நான் சாஸ்த்ரங்களில் படித்திருக்கிறேன். அப்படி நான் மீண்டும் திரும்பி சென்றால் என் தந்தை என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் என் மேல் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும், கோபித்துக் கொள்ளக்கூடாது’ என்று தன் முதல் கோரிக்கையை வைத்தான் நச்சிகேது.

மரணத்தில் இருந்து மீண்டு வரும் நபர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதில் அந்தக்
காலத்திலேயே சிக்கல் இருந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ.

கோபத்தில் இருக்கும் தந்தை மீண்டும் தன்னிடத்தில் அன்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது ஒரு சிறுவனின் சராசரி மனநிலை அல்லவா? ‘அப்படியே ஆகட்டும்’’ என்று எமன் முதல் வரம் தந்தான்.

நச்சிகேது யாக ஸாஸ்திரம்

‘வேதசாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தில் யாகங்கள் செய்வது பற்றிய
விளக்கங்கள், அவைகளின் பலன்கள் பற்றிய போதிய தெளிவு இல்லை.

எனக்கு இவைப் பற்றி நீங்கள் சொல்லித் தரவேண்டும்’ என்று தனது இரண்டாவது கோரிக்கையை வைத்தான் சிறுவன்.

எமன் சொல்லித்தந்த அனைத்து விஷயங்களையும் நச்சிகேது பின்னர் மற்றவர்களுக்கு புரியும் வகையில் அனைத்தையும் வகைப்படுத்தி பதிவிட்டு சென்றுள்ளான்.

இவை ‘நச்சிகேது யாக ஸாஸ்த்ரம்’ என்று இன்றும் நம்மிடையே ஆதிக்ரந்தமாக பயன்பாட்டில் இருக்கிறது.

மரணம் என்றால் என்ன?

நாச்சிகேதுவின் மூன்றாவது கேள்வி எமனுக்கே ஆட்டம் தந்தது. ‘ஸாஸ்த்ரங்கள் இறப்பைப்
பற்றிய சரியாக விளக்கம் அளிக்கவில்லை.

மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது? இறந்தபின் மறு பிறவி உண்டா?’ வயதுக்கு மீறிய இந்த கேள்விக்கு எமதேவன் உடனடியாக பதில் அளிக்க விரும்பவில்லை.

‘இது தேவ ரஹஸ்யம். இதைத் தெரிந்து கொள்ள உனக்கு வயதோ, மனநிலையோ, அறிவோ போதாது. ஆகவே என்னால் உன் கேள்விக்கு பதில் தர முடியாது.

ஆனால் நீ கேட்ட இந்த கேள்விக்காக நான் உனக்கு உன் உலகில் உள்ள மிக உயர்ந்த ஆஸ்தியைத் தருகிறேன், ராஜ்யத்தைத் தருகிறேன். அதை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இரு’ என்றான்.

சிறுவனின் பிடிவாதம்

எமதேவன் சிறுவனின் நம்பிக்கையையும், தெரிந்து கொள்ளும் தீவிரத்தையும் இங்கே
சோதனை செய்கிறான்.

சிறுவனோ ‘உங்கள் ஆஸ்தியோ, ராஜ்யமோ எதுவும் எனக்குத் தேவையில்லை’ என்று மறுத்து விட்டான். எமன் விடவில்லை.

‘சரி சொர்க்க லோகத்தில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் உனக்குப் பரிசாகத் தருகிறேன். இந்தக் கேள்வியை மட்டும் மறந்துவிடு’. சிறுவன் மறுத்தான்.

‘போகட்டும், உன்னுடைய அனைத்து பிறப்புகளுக்கான புண்ணியங்களை இப்போதே உனக்குத் தானம் தருகிறேன். இந்தக் கேள்வியை மறந்துவிடு’.

எமனின் எந்த ஆசை வார்த்தைகளுமே சிறுவனை அசைக்க முடியவில்லை.

இறப்பு என்றால் என்ன?

‘எமதேவரே, நீங்கள் எனக்குத் தருவதாகக் கூறும் அனைத்தும் பொருள்களும் காலத்தால்
அழியக்கூடியவை. நிலையில்லாதவை.

மரணம் இந்த அனைத்து சந்தோஷங்களையும் அழித்துவிடும். இறப்பு என்பது என்ன என்று தெரிந்து கொண்டால்தான் நீங்கள் தருவதாகக் கூறும் அனைத்து செல்வங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும்’ என்று சிறுவன் வாதிட்டான்.

சிறுவனின் விவேகத்தையும், கற்றுக்கொள்ளவேண்டும் என்ற வைராக்கியத்தையும்,
ஆர்வத்தையும், உறுதியையும் கண்டு வியந்தான் எமன்.

தனக்கு ஒரு உண்மையான மாணவன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து, மனிதகுலத்துக்கே முதல் முறையாக இறப்பின் ரகசியத்தை சிறுவனுக்கு போதித்தான்:

‘நீ பார்க்கும், உணரும் உடல் உண்மையில் நீயல்ல. உன் உடலில் உள்ள புலன்களை அடக்கி
ஆளும் மனமும், மனதை ஆளும் புத்தியும், இவை அனைத்தையுமே ஆளும் ‘நான்’ என்கிற
சுயநலமும் நீயல்ல.

இவைகளுக்கெல்லாம் மகுடமாக, இவை அனைத்தையும் சாட்சியாக கவனித்து, ஒளிக்கெல்லாம் ஒளியாக, சதா கோடி சூரிய ப்ரகாசமாக, மனம் என்னும்
கண்ணாடியுள் பிரதிபலித்து உன்னுள்ளே ஸ்வப்ரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கும்
ஆத்மன்தான் உண்மையான நீ’.

எமதேவன் தொடர்ந்தான்.

சரீரம் ரதமேவ ச

ஆத்மானாம் ரதினம் வித்தி,
சரீரம் ரதமேவ ச,
புத்திம் து சாரதீம் வித்தி
மனப் பிரகரஹம் ஏவ ச
இந்திரியாணி ஹயானா ஆஹூர்
விஷயம் தேஸூ கோசரான்
ஆத்ம இந்த்ரிய மனோ யுக்தம்
போக்தேதி ஆயூர் மனீஷிணஹ

‘ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்துள்ள பயணி நீ. தேர்தான் உன் உடல். குதிரைகள்
உன் புலன்கள். உன் மனம் கடிவாளம். தேரை இயக்குவது உன் புத்தி.

பாதைகளை முடிவு செய்வது உன் கர்ம வினைகள். பாதையை மட்டுமே உன்னால் முடிவு செய்ய முடியும்.

விழித்திருக்கும் நிலையில் தேரையும், குதிரைகளையும், தேரோட்டியையும் அடையாளம்
கண்டுகொள்கிறாய். இவை அனைத்தும் நீ என்று தவறாக நினைத்துக்கொள்கிறாய்.

உறக்க நிலையில் புதிய உலகை, புதிய தேரைக் காண்கிறாய். அங்கும் அவை அனைத்தும் நீதான் என்று எண்ணிக் கொள்கிறாய்.

‘நான்’ நீயல்ல! நீ ‘நான்’ அல்ல!

ஆழ்ந்த உறக்க நிலையில் இந்த தேரும், உலகமும், பாதையும் மறைந்துவிடுகின்றன.
ஆனாலும் மறைந்து போகிறது என்பதையும் ’ நீ ‘அல்லவா உணருகிறாய்.

அப்படி இருக்கும்போது, நீயாக நினைத்துக்கொண்டிருக்கும் உடல்-உள்ளம்-புத்தி சேர்ந்த கலவை என்று ‘நீ’ எப்படி முடிவு செய்கிறாய்?

நீ இந்த சூட்சும உடலோ, ஸ்தூல உடலோ அல்லது காரண உடலோ அல்ல என்பதை உணரும்போது ஸம்ஸார தொல்லைகளிலிருந்தும் துக்கங்களிலிருந்தும், ‘நான்’ என்னும் உன்னிடத்திலிருந்தும் விடுதலை பெற்று மோட்சம் அடைகிறாய்’.

‘இந்த உண்மையை உணருபவர்கள் தங்களை மட்டுமல்லாது இந்த உலகத்தையும்,
ப்ரம்மத்தையுமே உணரமுடியும்.

ஆத்மன் ஒன்றே நிதர்சனம்

அதுமட்டுமல்ல இந்த ஆத்மன் ஒன்றே நிதர்சனம் என்ற உண்மையையும் உணரமுடியும். இதைத்தான் உபநிஷத்துக்கள் ‘பிரம்ம சத்யம், ஜகத் மித்ய, ஜீவோ பிரம்மைவ நாபரஹ’ என்று பிரகடனப்படுத்துகின்றன.

பிரம்மன் ஒன்றே நிஜம். அதைத் தவிர வேறு எதுவும் உண்மை இல்லை. நீ பார்க்கும் இந்த உலகம் ஒரு தோற்றம். உண்மை இல்லை. ஜீவன் ப்ரம்மனை உணர்ந்துவிட்டால் அதுவே நிரந்திரம். அழியாதது.

அதுவே ஆனந்தம். சத் சித் ஆனந்தம். இந்த நிலையை உணருபவர்களுக்கு மரணம் இல்லை.
பிறப்பும் இல்லை. இதுவே நீ தெரிந்துகொள்ளவேண்டிய ரகசியம்’. என்று முடித்தான் எமன்.

நாம் காணும் உலகம்

இந்த இடத்தில் ‘தோற்றம்’ என்பதை விளக்கியே ஆகவேண்டும். மரத்திலான ஒரு பொருளைப்
பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக ஒரு மேசை. நாம் மேசையைப் பார்க்கும்போது அந்த மேசை உருவாவதற்குக் காரணமான மரம் மேசையில் மறைந்துள்ளது. காண முடிவதில்லை.

மேசை உண்மையையிலேயே மரம்தான். ஆனால் நமக்கு வேறு உருவத்தில், வடிவத்தில் தெரிகிறது. அதைப் போலவே ஒரு மண்ணினால் உருவான ஒரு
குடத்தைக் காணும்போது மண் நமக்குத் தெரிவதில்லை.

தங்கத்தினால் ஆன ஒரு ஆபரணத்தைப் பார்க்கும்போது தங்கம் தெரிவதில்லை. மரமோ, மண்ணோ, தங்கமோ இந்தப் பொருள்கள் இல்லாமலும் கூட தன்னிச்சையாக இருக்கமுடியும்.

ஆனால் அவைகளினால் உருவான பொருள்கள், அவைகள் உருவாவதற்குக் காரணமான ஆதிகாரணிகளிலிருந்து வேறுபட்டு தன்னிச்சையாக இருக்கமுடியாது.

அதைப் போலத்தான் நம்மைச் சுற்றி நாம் காணும் இந்த உலகம், அதிலுள்ள ஒவ்வொரு
பொருளும், அவைகளின் ஆதிகாரணிகளின் பிரதிபலிப்பாக நமக்குள் தோன்றும் தோற்றமே.
நிலையற்றவை. தொடர்ந்து மாற்றங்களை சந்திப்பவை.

ஏகம் சத்

இங்கே உபநிஷத்துக்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்து, உறைந்து, மறைந்து இருக்கும் ஒரே ஆதிகாரணி ப்ரம்மன் மட்டுமே. ப்ரம்மன் இல்லாவிட்டால் எதுவும் இல்லை.

இது ஒன்றேதான் உண்மை. மற்றவையெல்லாம் (உடல், உள்ளம், எண்ணம் கலவை சேர்த்து)
தோற்றமே! ஏகம் சத்!

இந்த உண்மையை, பிரம்மதீட்சையை உணர்ந்து கொண்டதனால் நச்சிகேது மரணத்திலிருந்து விடுதலையும் பெற்றான்.

ப்ரம்மனை உணர்ந்தவர்களுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்ற ரஹஸ்யம் நச்சிகேதுவால் வெளிவந்தது.

இந்த ரஹஸ்யத்தை உலகறியச் செய்த பெருமை நச்சிகேதுவையே சாரும். இது வேத காலத்தில் நடந்தது. அறிந்துகொள்ள முடியாத பல யுகங்களுக்கு முன்னர் நடந்தது.

நச்சிகேது உணர்ந்த விஷயங்கள் கடோபநிஷத்தில் இன்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது.

மனித குலத்தை எட்டிய ரஹஸ்யம்

பல ரிஷிகளும் மஹான்களும் உபநிஷங்களுக்கு பல வகையில் விளக்கம் அளிக்க
முயன்றார்கள்.

சரியான வகையில், நாமெல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் லகுவாக விளக்கம் அளித்த பெருமை ஸ்ரீஸங்கரரைச் சாரும். எட்டாக்கனியாக இருந்த இந்த ரஹஸ்யம் மனிதகுலத்துக்கே எட்டியது.

எமன் என்கிற மஹாகுருவுக்கு நச்சிகேது என்கிற அபூர்வ மாணாக்கன் கிடைத்தான். அவன்
எடுத்த மிகப் பெரிய முயற்சியால் பிறப்பு-இறப்பு பற்றிய விளக்கம் நமக்கு கிடைத்தது.

இது மிகப் பெரிய மனித சேவை. ஒரு நல்ல மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நச்சிகேது ஒரு நல்ல உதாரணம்.

வாழ்வியல் நெறி

விவேகம் (எது தேவை, தேவை இல்லை என்கிற சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு), வைராக்யம் (இலக்கைத் தவிர மற்றவைகளை ஒதுக்கித் தள்ளுவது), ஷட்ஸம்பத்தி என்று கருதப்படும் ஷம(எண்ணங்களை அடக்குதல்), தம (ஐம்புலங்களை அடக்குதல்), உபரதி (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்), திதிக்க்ஷை (பொறுமை), சிரத்தை (இச்சைகளிலிருந்து விலகி நிற்கும் பயிற்சி) சமாதான ( ஆழ்ந்த முனைப்பு), இவைகளோடு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவுடன் (முமுக்ஷத்துவம்) ஆகிய இந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் எவர் முயன்றாலும் (இதுதான் தவ நிலை).

இந்த உண்மையான, மரணமே இல்லாத பேரானந்த நிலையை (சத்சிதானந்த நிலை) உணர முடியும் என்பதை இந்தச் சிறுவன் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினான்.

இந்த நான்கு ஒழுக்கப் பண்புகளும் (விவேகம், வைராக்யம், ஷட்ஸம்பத்தி, முமுக்ஷத்துவம்) உண்மையை நாடும் ஒரு மாணவனுக்கான அடிப்படைத் தேவை என்பதையும் ஒரு வாழ்வியல் நெறியாக உணர்த்தியுள்ளான்.

உபநிஷத் சொல்வது என்ன?

வைராக்ய நிலை அடைவது சுலபமல்ல. இது பெரிய போராட்டம். தேரையும்
தேரோட்டியையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து சரியான பாதையுள் இலக்கை நோக்கி
பயணிப்பது.

இது நம்மைப் பற்றிய ‘உள்நோக்கிய பயணம்’. இலக்கை அடையும் போது ஆதித்யனைப் (சூரியனை) போல நமக்குள் பிரகாசித்து ப்ரம்மனை உணர வழி கிடைக்கும்.

‘வேதாஹம் புருஷம் மஹாந்தம், ஆதித்யவர்ணம் ஸமசஸ்த்துபாரே’ (இருளைப் போக்கும்
ஸூர்யனைப் போல ஒளிர்ந்துகொண்டிருக்கும் ப்ரம்மன்தான் நீ என்பதை அறிவாயாக’) என்று அழகாக வருணிக்கிறது உபநிஷத்.

நமக்கு தடையாக இருப்பது எது?

இந்த ஞானத்தை உணருவதற்கு தடையாக இருப்பது நம்முடைய அறியாமை.
ப்ரம்மஸூத்ரங்களுக்கு விளக்கம் எழுதியுள்ள ஸ்ரீசங்கராச்சாரியர் அறியாமையை ஒரு
கொடிய வியாதி என்று வருணிக்கிறார்.

சத்சிதானந்த சொரூபமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ப்ரம்மனை, இறைநிலையாய் உணருவதே நம் வாழ்க்கைப் பயணம்.

வெறும் உடல், மனம், புத்தி, சுயநலம் கொண்ட தேரையும், தேரோட்டியையும் உண்மையான ‘நாம்’ என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

இந்தக் ‘கருவிகளால்’ ஏற்படும் துன்பங்கள் ‘நம்முடையது’ என்று தவறாக கருதி ஏற்றுக்கொண்டு அல்லல் படுகிறோம்.

அழியாத ப்ரம்மனை அழியக்கூடிய பொருள்களாக எண்ணுவது மூடத்தனம் என்று வாதிடுகிறார் ஸ்ரீசங்கராச்சாரியார்.

அழியாத ப்ரம்மனுக்கு மரணமேது, ஜனனமேது?

இந்த உண்மையை புரிந்து உணர்ந்துகொள்பவர்களால் மட்டுமே எப்போதும் மரணபயம் கடந்து ஆனந்தமாக பேரானந்தமாக வாழமுடியும். இதுவே வாழும்நிலை முக்தி, மோட்சம்.

எதுவும் எளிதல்ல

நச்சிகேதுவுக்கு எமதேவன் என்கிற மஹாஞானி குருவாகக் கிடைத்தார். நச்சிகேது இந்த
குருவை சாதாரணமாக எந்தக் கஷ்டமும் இல்லாமல் அடைய முடியவில்லை. தன்னையே தியாகம் செய்துக்கொள்ளவேண்டியிருந்தது.

வேத சாஸ்திரங்கள் சொல்லும் அனைத்து ஒழுக்க நியதிகளையும் பின்பற்றி அதன் பலனாகவே, ‘ப்ரம்மன், பிறப்பு, இறப்பு’ பற்றிய ரஹஸ்யங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

மனிதகுலமே அறிந்திராத இந்த மாபெரும் ரஹஸ்யம் இந்த சிறுவன் வழியாக இந்த உலகிற்கு தெரிய வந்தது.

தான் அறிந்த தேவ ரஹஸ்யங்களை, நேரடி அனுபவங்களை, அவைகளின் பலங்களை மாத்திரம் இந்த மாணவன் வெளிஉலகிற்கு சொல்லவில்லை.

குரு-சிஷ்ய பாரம்பரியம்

தன் குருவைப் பற்றிய பெருமைகளையும், அவர் அருளிய ‘ஆத்மபோதத் தத்துவங்களையும்’ நாமெல்லாம் அறிய வழிசெய்தான். இது ஒரு உண்மையான குரு-சிஷ்ய பாரம்பரியம்.

நச்சிகேது மேற்கொண்ட தியாகங்களையோ, தீவிர முயற்சியையோ, பக்தி சிரத்தையையோ
நம்மால் கடைபிடிக்கமுடியுமா என்று தெரியாது.

இந்த உண்மையை புரிந்துகொள்வதோ, உணருவதோ சாமான்ய காரியம் அல்ல. இதற்கு முற்றும் உணர்ந்த ஒரு ப்ரம்மகுருவின் உதவி இல்லாமால் இது சாத்யமில்லை என்கிறது வேத சாஸ்திரங்கள்.

திரட்டு பிள்ளையார் – திருட்டு பிள்ளையார் எது சரி?

குடந்தை ப. சரவணன்

ஒரு கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு பிள்ளையார் சிலை முதலில் நிறுவப்பட வேண்டும். அதுவும் அந்த பிள்ளையாரை திருடிக் கொண்டு வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை வழக்கத்தில் இருக்கிறது.

இந்த நடைமுறை சரியா? தவறா? என்பதைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகர் சுழி

நம் நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் முதற்கடவுளான விநாயகருக்குத் தான் முதல் வழிபாடு நடத்துவது வழக்கத்தில் இருக்கிறது.

எந்த நல்ல காரியத்தையும், பிள்ளையார் சுழியிட்டு தொடங்குவது தொன்றுதொட்ட தமிழர் மரபின் மற்றொரு சிறப்பு.

இந்த விநாயகர் வழிபாட்டில் நம் முன்னோர்கள் ஒரு வழிமுறையை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

திரட்டு விநாயகர்

வெறும் மண்ணிலோ அல்லது மஞ்சள் பொடியிலோ அல்லது பசுஞ்சாணத்திலோ சிறிதளவு நீர் விட்டு பிசைந்து கையால் பிடித்து வைப்பர். அந்த பிடி விநாயகருக்கு எளிதில் கிடைக்கக் கூடிய அருகம்புல், தும்பைப் பூ, எருக்கம் பூ என இவைகளில் ஏதேனும் ஒன்றை சாத்துவர்.

இந்த விநாயகர்தான் திரட்டு பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இவரைத் தான் வழிபாட்டுக்குரியவராக நம் முன்னோர்கள் கண்ட வழிமுறை.

அவரை வழிபட்டாலே நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் அருளுவார். எந்த விஷயத்திலும் வெற்றியை தருவார் என்ற நம்பிக்கை உண்டு.

கர்நாடக மாநிலம், ஆனெகுடே விநாயகர் கோயில் தரிசனம்

விடியோவை காணுங்கள்

திருட்டு பிள்ளையார்

காலப் போக்கில் இந்த திரட்டு பிள்ளையார் திரிந்து திருட்டு பிள்ளையாராக மாறிப் போனார். இதற்குக் காரணம் ஆன்மிகத்தை முழுமையாக தெளிந்துணராதவர்கள் உச்சரிப்பை மாறியதால் இப்படி ஒரு நிலை உருவாகிவிட்டது.

இதனால்தான், ஒரு கோயில் கட்ட வேண்டும் எனில் முதலில் ஒரு விநாயகரை திருடி வந்து வைக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஆகம விதிகளும் இத்தகைய நடைமுறையை பின்பற்றச் சொல்லவில்லை. ஆனால், இன்றைக்கும் சிலர் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவது அறியாமையின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது..

புராணக் கதை

திரட்டு விநாயகர் என கையினால் மண்ணையோ, மஞ்சளையோ பிடித்து வைப்பதற்கு ஒரு ஆன்மிக புராணக் கதையும் உண்டு.

கிடா முட்டு கல்வெட்டுகள் சொல்லும் தகவல்

படித்துவிட்டீர்களா?

அன்னை மகாசக்தி, பரமனை கஜமுகாசூரனின் அன்புச் சிறையில் இருந்து மீட்டெடுக்க தன் சக்தியை அதிரிக்க தவம் செய்ய முற்படுகிறாள். தன்னுடைய தவத்துக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக அன்னை ஒரு காரியம் செய்கிறாள்.

தன் உடலில் பூசப்பட்டிருக்கும் மஞ்சளை திரட்டுகிறாள். அப்படி திரட்டிய மஞ்சளை பிடித்து வைக்கிறாள். அதற்கு பரமனின் ஆற்றல் கலந்த தன்னுடைய சக்தியைத் திரட்டி அதற்கு உயிரூட்டுகிறாள்.

அப்படி மஞ்சள் திரட்டப்பட்டு பரமனின் ஆற்றலையும், தனது சக்தியையும் தாங்கிய அந்த வீரனையே தன் தவம் களையாமல் இருப்பதற்காக பாதுகாவலனாக நிறுத்துகிறாள்.

அப்படி உருவானவர்தான் இன்றைக்கு நாம் வணங்கும் விநாயகர். அன்னை மகாசக்தி மஞ்சளை திரட்டி உருவம் கொடுத்ததால் திரட்டு விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.

ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?

வெ நாராயணமூர்த்தி

இன்றைக்கு பணத்துக்காகவும், பதவிக்காகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் ஆன்மீக சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வை இப்போதாவது பெறுவது அவசியமாகிறது.

ம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான
எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள்
அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும்.

ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய உயர்நிலை சிந்தனை
(இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்).

இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்).

இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

ஆன்மீக சிந்தனைகள்

பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மீக சிந்தனைகள் அல்லது தெய்வீகத்தைப் பற்றிய சிந்தனைத்தான்.

இது கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள்,
தானம், தியானம், நல்லோர் நட்பு போன்றவையாக இருக்கலாம்.

பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்க்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக ஆன்மீக சிந்தனைகள் இருக்கலாம்.

இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.

இவையே நம்மை இயக்குகின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்கைப் பயணமும் அமைகிறது.

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் நாம், நம் குடும்பம், உறவுகள், நம்மைச் சுற்றியுள்ள உலகம், ஆசைகள், வேட்கைகள், நல்லவை, கெட்டவை, தேவை, தேவையில்லாதவை, பயன்படக்கூடியவை, பயனில்லாதவை. போன்ற உலக பொருள்களில் மோகம் கொண்டு ஒரு சிறிய, ஸம்ஸார வட்டத்துக்குள் சிக்குகிறோம்.

இத்தகைய சிந்தனைகளால், இந்த குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறோம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

நம்மை இப்படி தடுத்து சீர்குலைக்க வைக்கும் எட்டு நாசக் காரணிகளைப் பற்றி ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.


த்யாயதோ விஷயா புன்ஸ சங்க தேஷுபஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமாத் க்ரோத அபிஜாயதே

க்ரோதாத் பவதி சம்மோஹ சம்மோஹாத் ஸ்மிருதி விப்ரமஹ
ஸ்மிருதி ப்ரன்ஷாத் புத்தி நாஷஹ, புத்தி நாஷாத் ப்ரநாஷ்யதி

(ஸ்ரீமத் பகவத் கீதை, அத்யாயம் 2, ஸ்லோகம் 62,63)

“புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது
(த்யாயதே), நம் சிந்தனை அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது (சங்கமமாகிறது).

சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது. ‘அது எனக்குக் கிடைத்தால்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத்
(காமம்) தூண்டுகிறது.

இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப் போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது.

ஆசை பேராசையாக மாறுகிறது. அது தடைபடும்போதோ, கிடைக்காமல்
போகும்போதோ ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத் (க்ரோதம்)
தூண்டுகிறது.

கோபம்

கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது. முதலில் தெளிவாக யோசிக்கும்
திறமையை மூடி மறைக்கிறது (சம்மோஹத்-மறைத்தல்). பின் குழப்பத்தை ஏற்படுகிறது. (விப்ரமஹ-குழப்பம்).

இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிக சிந்தனை
உட்பட) மறந்துபோகின்றன (ப்ரன்ஷாத்-மறப்பு). இதனால் புத்தி தடுமாறுகிறது (புத்தி
நாசம்). சரியான முடிவு எடுக்கமுடியாமல் நாசவாலையில் சிக்கிக் கொள்கிறோம்.

ஆன்மீக சிந்தனைகள் தடைபடுகின்றன. தவறான பாதையில் சிக்கிக் கொண்டபிறகு நாம் சந்திக்கும் பிரச்னைகள் பெரிதாகும்போது சீரழிவை நோக்கி நகர்கிறோம்.

இந்நிலையிலிருந்து மீள்வதே முக்கியமாகி இதற்கான விடைதேடுவதே நம் முதல்
பணியாகிறது.

ஆன்மீக சிந்தனைகளை அடையும் முயற்சி

இந்த முயற்சியில் அவ்வப்போது ஆறுதல் கிடைக்க முதலில் எளிய வகையில் உடனடி
நிவாரணம் தரும் ஆன்மிக வழிகளைத் தேடுகிறோம்.

எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காதபோது ஆன்மீக சிந்தனைகள் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது.

இதனால்தான் நம்மில் பெரும்பாலோர் ஆன்மீக சிந்தனைகளில் முழு ஈடுபாடு கொள்ளமுடிவதில்லை.

நாம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவோ, உணரவோ முடிவதில்லை.

ஏன் இத்தகைய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்? இதை எப்படி சரி செய்வது
என்பதை பார்ப்போம்.

வேத சாஸ்த்ரங்கள் விடை

வேத சாஸ்த்ரங்கள் இதற்கு விடை அளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான ஸக்தி உயிரோட்டங்கள் உள்ளன. இவை அவனுக்குள் சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன.

அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே அவன் உள், வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், உணர்ந்துகொள்ளுதல்
போன்ற இவை அனைத்தும் ஞான உயிரோட்டத்தால் ஏற்படுவது.

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் விதம் பற்றிய வரையறைகளை தேர்வு செய்வது கர்ம உயிரோட்டம். நாம் பிறக்கும்போதே நமக்குள் பிரத்யேகமாக உருவான உள்நிலை
பரிவர்தனைகளை (பாவனைகளை) வெளிக்காட்டுவது ஸ்வபாவ உயிரோட்டம்.

ஸ்வபாவ உயிரோட்டம்

இங்கே ஸ்வபாவ உயிரோட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்வது அவசியம். இதை
‘ஸம்ஸ்க்காரம்’ என்று குறிப்பிட்டு சொல்கின்றன வேதங்கள்.

இது ஒரு வகையான எண்ணச் சுமைகள் (நினைவுச் சுவடுகள்) கொண்டவை. நல்லவை, தொல்லை தருபவை சேர்ந்த ஒரு கலவை.

பிறந்ததிலிருந்து நாம் பார்த்த அனுபவங்கள், சில நிகழ்வுகள், ஆறாத வடுக்கள், சோகம் அல்லது சுகம் தரும் நினைவுகள் (சென்ற பல பிறப்புகளிலிருந்தும் கூட இருக்கலாம்) ஆகியவை நம்முள் ஆழப் பதிந்து கிடக்கின்றன.
இவை ஆழ்மனதில் சேமிப்பாக, பத்திரமாக பாதுகாக்கப் படுகிறது. இந்த எண்ணச்
சுவடுகளின் தாக்கங்கள்தான் செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன.

இது ஒரு ஸ்திர நிலை. சாதாரணமாக மாற்றிக்கொள்ளவோ அழிக்கவோ முடிவதில்லை.
தேவைப்படும்போது இவை ஆழ்சேமிப்பிலிருந்து எண்ணங்களாக அவ்வப்போது
கொப்பளித்து வெளிவருகிறது. இது ஸ்வபாவ சக்ரம்.

புத்தியின் முடிவு

சிலர் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவது, சந்தேகப்படுவது, ஆதங்கப்
படுவதைப் பார்க்கிறோம்.

சிலர் எதற்கும் அசராமல், மிகப் பெரிய இன்னல்களையெல்லாம் கூட சர்வ சாதாரணமாக கையாள்வதையும் பார்க்கிறோம்.
கூச்சம், குறும்பு, கிண்டல், அமைதி, உரக்கப் பேசுவது, மென்மையாகப் பேசுவது,
கூர்ந்து கவனிப்பது, மரியாதையான நடத்தை, பக்திமார்கத்தில் நாட்டம், சிரித்துப்
பேசுவது,

இப்படி ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனிப்பட்ட பாவனை (ஸ்வபாவம்)
இருக்கிறது. இதை சாதாரணமாக அழிக்கவோ அல்லது அதன் பிரதிபலிப்பிலிருந்து
விடுபடுவதோ சுலபமான காரியம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் ஸம்ஸ்க்காரங்களின் உந்துதல்படியேதான் புத்தி முடிவு
எடுக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே நாம் பல காரியங்களை தெரிந்தோ தெரியாமலோச் செய்கிறோம், பின்னர் அவைகளின் (நல்ல அல்லது தீய) விளைவுகளையும், பலன்களையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம்.

செம்மைபடாத நம் எண்ணங்களே நமக்கு எதிராகத் திரும்பி, எப்படி நம்மை
அழிக்கின்றன பார்த்தீர்களா?

இவைகளை பிராரர்த கர்மவினைகள் என்கிறது வேதங்கள். ஆக நமக்குள்ளே சேர்த்து வைத்திருக்கும் இந்த ஸ்வபாவங்களை எப்படி சீர்ப்படுத்துவது? செம்மைப்படுத்துவது?

ஸ்ரீமத் மஹாபாரத புராணம்

செம்மை படாத ஸ்வபாவம் எப்படி ஆபத்தானது என்பதை துரியோதனின் மனப்
போக்கை உதாரணமாக வைத்து விளக்குகிறது ஸ்ரீமத் மஹாபாரத புராணம். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும்.

மஹாபாரத புராணத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாகக் கேள்விப்பட்ட ஒரு நாத்திக நண்பர் ஒரு கேள்வி கேட்டார். மிகப் பெரிய ஞான தத்துவங்களை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் போதிக்கவேண்டும்?

சாதுவான, சாத்வீகமான அர்ஜுனனுக்கு இது பெரிதாகப் பயன்படப் போவதில்லை. இவ்வளவு தத்துவக் குவியல்களையும் நியாய தர்மங்களையும் இந்தக் கதையின் முக்கிய வில்லனான துரியோதனனுக்கு சொல்லியிருந்தால் ஒரு வேளை அவன் மனம் மாறி, யுத்தமும் அழிவும் இல்லாமல் தவிர்த்திருக்கலாமே?

இது உங்களுக்கு நியாயமான கேள்வியாகப் படுகிறது அல்லவா?

இது பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தெரியாதா?

ஏற்க மறுத்த துரியோதனன்

யுத்தத்துக்கு முன்னரே துரியோதனனைச் சந்தித்து அவனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் துரியோதனின் ஸ்வபாவம் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதது.

‘நீ சொல்லும் தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கேட்டது எல்லாம் எனக்கும் தெரியும் கண்ணா! நானும் குருகுலத்தில் கற்றவனே.

ஆனால் தர்மத்தையும், நியாயத்தையும், நல்லவைகளையும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறதே! என் மனம் சொல்லும் அதர்ம, அநியாய, கெட்ட விஷயங்களை, அவைகளின் உந்துதல்களை என்னால் எதிர்க்க முடியவில்லையே!

என் மனம் எடுக்கும் முடிவுதான் என்னுடையது’ என்று ஆணித்தரமாக அத்துணை போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

ஸாட்ஷாத் பரம்பொருளே வந்து நல்லவைகளை போதித்தாலும், அவன் ஸ்வபாவம்
அவனை எப்படி தடுக்கிறது பாருங்கள்!

இந்த பாவனைதான் அவன் அழிவுக்குக் காரணமானது. அதனால்தான் எண்ணங்களையும், புத்தியையும், பாவனைகளையும் கட்டுப்படுத்தும் திறமைகொண்ட அர்ஜுனனுக்கு ஞானபோதனை செய்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த போதனைகள் அர்ஜுனனுக்கு மாத்திரம் அல்ல, நம் எல்லோருக்கும் சேர்த்துதான்.

மனதைக் கட்டுப்படுத்த 8 வழிகள்

நல்ல வாழ்க்கையை கடைப்பிடிக்க கௌதம புத்தன் எட்டு வழிகளை (அஷ்டாங்க
மார்க்கம்) சொல்லிச் சென்றுள்ளார். மனதை கட்டுப்படுத்த எட்டு யோக (அஷ்டாங்க யோக) முறைகளை பதஞ்சலி முனிவர் சொல்லிச் சென்றுள்ளார்.

அதுபோல நம்மை ஆன்மீக சிந்தனைகள் கொண்டு செல்லும் பாதையில் முனைப்போடு செல்லத் தடையாக இருக்கும் இந்த எட்டு நாச காரணிகளிலிருந்து விடுபட வேண்டிய முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் வாயிலாகப் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அன்று துரியோதனன் பேசியது நிதர்சனமாக உண்மை. இது அவன் பிரச்சனை
மட்டுமல்ல. இன்று இதுவே நம் பெரும்பாலோரின் மிகப் பெரிய பிரச்சனை.

நாளடைவில் இது பழக்கமாகிவிடுகிறது. அதனால் பலவிதமான சிக்கல்களில் தொடர்ந்து சிக்கி அல்லல்படுகிறோம் என்பதையும் கண்கூடாக அனுபவிக்கிறோம்.

அப்படியென்றால் சதா இந்த ஸம்ஸ்க்கார மாயத்தில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்க
வேண்டியதுதானா? இதற்குத் தீர்வே இல்லையா?

ஆன்மீக சிந்தனைகள் தரும் நிவாரணம்

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வபாவம் என்பது நம்
உண்மையான இயல்பு அல்ல.

சில எண்ணங்களின் உந்துதலால் கட்டுப்படுத்தப்பட்டு மனதால் பிரதிபலிக்கபடும் ஒரு நிலை.

ஆனால் இது நம் உண்மையான இயல்பு அல்ல என்று உணர்ந்து இந்த நிலையிலிருந்து விடுபட நாம் முயல்வதே இல்லை. இது நம் உண்மையான இயல்பை நாம் உணரவே முடியாமல் தடுக்கும் மிகப் பெரிய தடை.

இதிலிருந்து மீள என்ன வழி? நம் உண்மை இயல்பை உணர்வது என்பது நம்
உண்மையான ஸ்வரூபமே தெய்வீகம் என்பதை உணருவது! இது எப்படி சாத்தியம்?

ஒரே ஸ்வரூபம்

நம் அறியாமையால் இந்த உடல், உள்ளம், எண்ணங்கள், நினைவு, புத்தி கொண்ட
கலவையே ‘நாம்’ என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ,

இதுவே நம் இயற்கையான இயல்பு என்றும் தவறாக நம்புகிறோம். இந்தப் புலன்களின்
கலவைகளால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நம்முடையது என்று
ஏற்றுக்கொண்டு மேலும் அல்லல்படுகிறோம்.

அதனால் தொடர்ந்து தவறு செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறோம் என்று சுட்டிக்காட்டுகின்றன வேதங்கள்.

நம் அனைவருக்கும் ஒரே ஸ்வரூபம்- தெய்வீகம். இது சத்சித்ஆனந்த நிலை. ஆத்ம
நிலை. ப்ரம்ம நிலை. ஆன்மீக சிந்தனைகள் தரும் உணர்வு.

ஆனால் இதை உணர முடியாமல் ஸ்வபாவத்தால் கட்டுண்டு மாறுபடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள எட்டு (நினைப்பு, இணைப்பு, காமம், க்ரோதம், மறைப்பு, குழப்பம், மறப்பு, புத்திநாசம்) காரணிகளுக்கும் அடிமையானவர்கள் இவைகளின் வெளிப்பாடான ஸ்வபாவங்களுக்கும் அடிமையாகிறார்கள்.

செம்மைபடாத ஸ்வபாவங்களிலிருந்து விடுபட வேதங்கள் பல வழிகளைக்
காட்டியுள்ளது.

அந்தக் காலத்தில் குருகுலங்கள் இதற்கான முறையான பயிற்சிகளை கற்றுத் தந்து வந்தன. இன்றைக்கு இவைகளைப் பற்றி படித்து தெரிந்துகொண்டாலும், விளக்கம் சொல்லவோ, ஆழமான பயிற்சி தரவோ தகுந்த குருகுலங்களோ, குருமார்களோ இல்லை.

கற்றுக்கொள்ள நமக்கு நேரமோ, ஆர்வமோ, முனைப்போ, வழிமுறைகளோ இல்லை. பிறகு என்னதான் வழி?

ஒன்று, நாமே போராடி முயன்று கற்றுக்கொள்வது. சாஸ்த்ரங்களைக் கற்றுக் கொள்ளலாம். வ்யாக்கானங்களை படிக்கலாம்.

வேதத்தைக் கற்றவர்களுடன் நட்பு கொண்டு பல விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு நம் வாழ்நாள் முழுதும் தேவைப்படலாம். இரண்டாவது, நம்மைப் படைத்தவன்
மட்டுமே செய்யக்கூடியது! இது இமைப் பொழுதிலும் நடக்கலாம்.

பயிற்சியும் முயற்சியும் தேவை

‘அவித்ய-காம-கர்ம’ என்பது ஒரு ஆபத்தான வாழ்வியல் வட்டம். அவித்ய (அறியாமை)
தேவை இல்லாத இச்சைகளை (காம) உருவாக்கும்.

இச்சைகளின் எதிர்மறை விளைவே கர்ம வினைப்பலன்கள். நாம் புலன்களால் பார்ப்பது, உணர்வது அனைத்தும் நம் உண்மை இயல்பு நிலை பற்றிய அறியாமையால் ஏற்படும் தோற்றங்கள்.

‘உண்மை நிலையை’ அறிந்து பிரித்து எடுக்க கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை.

எண்ணங்களை ஒருநிலைப் படுத்தும் தியானம், மந்த்ர ஸ்மரணை பக்தி வழிபாடு, ஸாத்வீக சிந்தனைகள், ஆன்மிக ஆன்றோர்களுடன் நட்பு, தர்மகாரியங்கள் செய்வது போன்ற பயிற்சிகள் ஆன்மீக சிந்தனைகள் மீதான பலனை தரும். ஆனால் இது போதாது. ஆரம்பம் மட்டுமே.

அவித்ய-காம-கர்ம வட்டத்திலிருந்து விடுதலை பெற அனைத்தும் உணர்ந்த ஒரு
பிரம்மகுருவின் உதவியும், ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் அவசியம்.

ஸ்ரீசங்கராச்சாரியார் சுட்டிக்காட்டும் விவேகம், வைராக்யம், உபரதி, திதிக்ஷை, ஷ்ரத்தை, சமாதான, முமுக்ஷத்வ (ஒரே சிந்தை) கொண்ட ஒழுக்கக் கட்டுப்பாடு நியதிகளுடன், முனைப்போடு கடும் முயற்சி செய்தால், அந்த குருவே அவரை அடையாளம் காணும் வழியைக் காட்டுவார்.

மேலும் அத்தகைய குருவருள் பெற இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியம், என்கிறது சாஸ்த்ரங்கள்.

ஆன்மீக சிந்தனைகள் மட்டுமே இந்த பிறப்பின் காரணத்தை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவி. ஆன்மீக சிந்தனைகள் இன்றி ஈடுபடும் எந்த செயலும் முழுமை அடைவதில்லை. ஆன்மீக சிந்தனைகள் என்பது இப்பிறவியில் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு பாதை.

மகாபாரதம் சொல்லும் மணி முடி, சிகை முடி

குடந்தை ப. சரவணன்

மகாபாரதம் மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் ஒரு புராண காவியமாக விளங்குகிறது.

“தேர் ஓட்டி மகன் என்பதாலும், மணிமுடி இல்லை என்பதாலும் உனக்கு வில் போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை”. இப்படிச் சொல்லி மாவீர புருஷர்களான பாண்டவர்கள், கௌரவர்களின் குருநாதர்கள் கொண்ட சபையினர் ஒருவனை
அவமானம் செய்தார்கள்.

அவன்தான் கொடுத்துக் கொடுத்து கை சிவந்த கர்ணன் என்ற புகழின் உச்சியை பின்னாளில் பெற்றவன்.

மாவீரன் கர்ணன்


கர்ணன் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட மாமன்னன் துரியோதனன் தனது அதிகாரத்தில் உள்ள ஒரு நாட்டின் மன்னனாக பதவி தந்து மாவீரன் கர்ணனை அச்சபையினர் முன்னே மணிமுடி சூட்டி மகிழ்ந்தான்.

மகாபாரதம் திரௌபதி சபதம்


திரௌபதி தன் சபதம் நிறைவேறும் வரை தன் சிகையை முடிய மாட்டேன் என்று சொல்கிறாள். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனான மன்னன் ஜயத்ரதன், திரௌபதி மீது ஆசைக் கொண்டு அவளை கடத்தி செல்ல முயற்சி செய்கிறான்.

அதனால், பாண்டவர்கள் அவனைப் பிடித்து இழுத்து வந்து அவனின் தலையில் உள்ள சிகையை ஐந்து சிறு சிறு குடுமிகளாக பிரிக்கிறார்கள்.

பிறகு வெட்டப்பட்டு மற்ற முடிகளை மழித்து அதையே தண்டனையாக வழங்கினார்கள். இது மகாபாரத இதிகாசத்தில் வரும் மணிமுடி, முடி தொடர்பான சில நிகழ்வுகள். இதுதான் மகாபாரதம் போருக்கு வழி வகுக்கிறது.

சிரஞ்சீவிகள்

அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் ஆகிய ஏழு பேரும் சிரஞ்சிவிகள் ஆவர்.
மகாபாரத காவியத்தில் உலா வரும் ஒருவன் தான் இந்த சிகை இழந்த சிரஞ்சீவி அஸ்வத்தாமன். இவனே மாவீரர் துரோணரின் மகன்.
கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. அந்த போரின் 17-ஆம் நாள் போர்க் களத்திலுள்ள பாசறையில் துரியோதனன் பீமனால் தாக்கப்படுகிறான்.
கால்கள் உடைந்துபோனதால், உடல் வலியும், மனவலியும் அவனை துன்பத்தில் துடிக்க வைத்தது. அப்போது அவனை துரோணர் மகன் அஸ்வத்தாமன் சந்திக்கிறான்.
அப்போது அவன், தங்களை இந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை, எனது தந்தையை கொன்றவர்களை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று சொல்லிச் செல்கிறான்.
அன்றைய நள்ளிவு நேரத்தில், பாண்டவர்களின் பாசறைக்குள் ஒரு கள்வனைப் போல் நுழைகிறான். அங்கு பாண்டவர்கள் போல் தோற்றம் கொண்ட உபபாண்டவர்கள் ஐவரும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
அவர்களை பாண்டவர்கள் என நினைத்து அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினான் அஸ்வத்தாமன்.

வெட்டியத் தலைகளை எடுத்து வந்து துரியோதனின் காலடியில் வைத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகச் சொல்கிறான்.
இதைக் கண்ட துரியோதனன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். நேர்மையான முறையில் நீ போரில் இதை செய்திருந்தால் நன்று.
ஆனால் நீ அவர்களை தூங்கும் போது வஞ்சகமாக வெட்டி வீழ்த்தியது யுத்த தர்மத்துக்கு எதிரானது. அதற்கான தண்டனையை நீ அடைவாய் என்று நிந்தித்து திருப்பி அனுப்பினான்.
உபபாண்டவர்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. இதைக் கண்ட அர்ஜுனன் அஸ்வத்தாமானின் ஈனச் செயலுக்காக அவனது சிரசைக் கொய்து உங்களின் காலடியில் வைக்கிறேன் என சூளுரைக்கிறான்.
அதைத் தொடர்ந்து அவன் ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட்டு சிறைப்பிடித்து வந்து திரௌபதி முன் நிறுத்துகிறான்.

மன்னிப்பும், தண்டனையும்


தலைக்குனிந்து நின்ற அஸ்வத்தாமனின் அவல நிலையைப் பார்த்த திரௌபதி மனம் இறங்கி இவன் தங்களின் குருவின் புதல்வர். புதல்வர்களை இழந்து தவிக்கும் என் மனவேதனை இவனின் தாயாருக்கு வர வேண்டாம். அதனால் இவனை மன்னித்து விடலாம் என்கிறாள் திரௌபதி.
அவளுடைய கருத்தை தருமர் உள்பட அனைவருமே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், பீமசேனன் மட்டும் இதை ஏற்கவில்லை.
பல உயிர்களை வஞ்சகமாக கொன்றவனின் உயிரை எடுத்தாக வேண்டும் என உறுதியாக சொல்கிறான். இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணர் ஒரு கருத்தை இப்படி சொல்கிறார்.

“ஒருவனின் மானத்திற்கு சமமாக கருதப்படுவது உயிர், அந்த உயிருக்கு சமமாக கருதப்படுவது தலையில் உள்ள சிகை (முடி). அதனால் அஸ்வத்தாமனின் உயிரை எடுப்பதற்கு பதில் அவனுடைய சிகையை எடுப்பது உயிரை பறிப்பதற்கு சமம்”
என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதன்படி, மரணமே இல்லாத சிரஞ்சீவியான அஸ்வத்தாமனின் உயிருக்கும், மானத்திற்கும் சமமான சிகை முடியையும், அதனுடன் சேரத்து ரத்தினத்தையும் வாளால் வெட்டி திரௌபதி காலடியில் சமர்ப்பிக்கிறான் அர்ஜுனன்.

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் காணப்படும், மகாபாரத காவிய நிகழ்ச்சியை நம் கண் முன்னே நிறுத்தும் மிக அரிதான முப்பரிமாண சிற்பம் (படம் குடந்தை ப. சரவணன்)


சிரஞ்சீவி என்றாலும் தவறு செய்தால் இறைவன் சபையில் மரணத்திற்கு நிகரான தண்டனை உண்டு. இதை உலகுக்கு உணர்த்தவே, கிருஷ்ண பகவான் நடத்திய லீலையே இது.
இதனால்தான் இன்றைக்கும், ஒருசில ஊர்களில் மன்னிக்கக் கூடிய குற்றங்களுக்காக, தவறு செய்தவர்களைத் தண்டிக்க, மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தும் வழக்கம் இருக்கிறது. அத்துடன் கழுதை மீது ஏற்றி ஊரை சுற்றி வரச் செய்வதை மிகப்பெரும் தண்டனையாகக் கருதி செய்கிறார்கள்.

அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆயுள் விருத்தி தலம்

செந்தூர் திருமாலன்

உலகில் பிறப்பு ஒன்று உண்டு என்றால் இறப்பு வருவது நிச்சயம். மனிதனாகப் பிறந்தவர்கள் மரணத்திலிருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தை. பயத்தைத் தராமல் இருக்க இறையருள் அவசியம். அந்த அருளை அமிர்தகடேஸ்வரர் கோயில் தருகிறது.

மரண பயம்

மனிதன் மரணத்தை நினைத்து பயந்து அதனால் அடையும் மன சஞ்சலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

மரண பயம் நீங்க அதற்கென்று அமையப் பெற்ற ஆலயங்களைத் தேடிச் சென்று இறைவனை பயபக்தியுடன் வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் மன அமைதி கிடைக்கும்.

புராண இதிகாசங்களில் திருக்கடையூர் , திருவீழிமிழலை ,திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகிய திருத்தலங்கள் மரண பயம் போக்கும் தலங்களாக கூறப்பட்டுள்ளன.

திருக்கடையூர் – அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று

இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்திப் பெற்றது. சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்று.

நாகை மாவட்டம், பொறையார் அருகே திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது.

மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார். எமனை உதைத்த காலசம்கார மூர்த்திக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

அம்பாளின் திருநாமம் அபிராமி. திருஞானசம்பந்தர். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் பதிகங்கள் பாடியுள்ளனர்.

பிரம்மன் வழிப்பட்ட தலம்

பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான் பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றை கொடுத்தார். இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்துக்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார்.

சிவபெருமான் கட்டளைப்படி, பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டு வைத்தார். திருக்கடவூரில்தான் வில்வ விதையிலிருந்து முளை வந்தது.

இதனால் இப்பகுதிக்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது. சாகா வரம் தரும் அமிர்தத்தை பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர்.

அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்குக் கொடுக்க விரும்பாத தேவர்கள் அதைக் குடத்தில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியில் நீராடுவதற்காக ஒரு இடத்தில் அதை வைத்தனர் .நீராடிவிட்டு குடத்தை எடுக்க முயன்றபோது அதை எடுக்க முடியவில்லை.

அந்த குடம் பாதாளம் வரை ஊடுருவி சென்று சிவலிங்கமாக மாறி இருப்பதைக் கண்டார்கள். அமிர்தம் இருந்த இடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் என்பதால் இப்பகுதி திருக்கடையூர் என பெயர் பெற்றது.

உற்சவர் அமிர்தகடேஸ்வரர்

தல வரலாறு

மிருகண்டு முனிவர் தம்பதியர் குழந்தை பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களின் பக்தியை மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றினார்.

“ஆயிரம் ஆண்டுகள் வாழும் கெட்ட குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டுமே வாழும் அறிவில் சிறந்த மகன் வேண்டுமா? ” எனக் கேட்டார்.

அவர்கள் 16 வயது வரை மட்டுமே வாழக் கூடிய தலைச் சிறந்த மகனே எங்களுக்கு போதும் என்றனர்.

இறைவன் அவர்கள் விருப்பப்படியே வரம் அளித்தார். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் மார்க்கண்டேயன் என்ற மகன் பிறந்தான்.

மார்க்கண்டேயன் அறிவில் சிறந்தவராகவும் சிறந்த சிவபக்தர் ஆகவும் விளங்கினார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் பதினாறு வயதுதான் என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினர்.

எனக்கு நீண்ட ஆயுளை சிவபெருமாள் மட்டுமே வழங்க முடியும். அதனால்தான் ஒவ்வொரு ஆலயமாக சென்று வழிபடுகிறேன் என பெற்றோரிடம் கூறிவிட்டு மார்க்கண்டேயன் ஒவ்வொரு ஆலயமாக தரிசித்து வந்தார்.

அவ்வாறு அவர் திருக்கடையூர் வந்தபோது அவருடைய ஆயுள் முடிவுக்கு வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினார்.

எமனைக் கண்டு அச்சம் அடைந்த மார்க்கண்டேயன் தான் வழிபட்டுக் கொண்டு இருந்த லிங்கத்தை ஆறத்தழுவிக் கொண்டான்.

எமனும் தனது பாசக் கயிற்றை லிங்கத்தின் மீது சேர்த்து வீசினான். சிவபெருமான் பக்தனை காக்கும் பொருட்டு லிங்கத்தில் இருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனை காலால் எட்டி உதைத்தார்.

காலனை சூலாயுதத்தால் கொன்று காலனுக்கு காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார்.

மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயதுடைய சிரஞ்சீவியாக வாழும் வரத்தை வழங்கி அருள்புரிந்தார்.

பின்னர் பூமாதேவி, பிரம்மா, மகா விஷ்ணு ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்கி எமன் உயிர் பெற்றதாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு


ஆலயத்தின் மேற்கில் ஏழுநிலை ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமாஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வர ர், பைரவர், பஞ்சபூதங்கள், சூரியன், அகத்தியர், சப்தகன்னியர்கள், 64 நாயன்மார்களின் சந்நிதிகள் உள்ளன.

இந்த கோவிலில் நவகிரகங்கள் இல்லை. கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் காலசம்கார மூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காட்சி தருகிறார்.

அருகில் மார்க்கண்டேயன் கூப்பிய கரத்துடன் காட்சி தருகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பிய நிலையில் நிற்கும் எமனுக்கு தனி சந்நிதியும் உண்டு.

எமனின் பாசக் கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் ஒரு தழும்பும் உள்ளது.

கோவில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பகுதியில், அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. முருகப் பெருமாள் ஒரு முகத்துடன் நான்கு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்

அமாவாசை அன்று வானில் தோன்றிய முழுநிலவு

திருக்கடையூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ஒரு அமாவாசை தினத்தன்று திருக்கடையூர் வந்தார். மன்னரின் வருகையின்போது அவரை கவனிக்காமல், பட்டர் அன்னை அபிராமி நினைவில் மூழ்கியிருந்தார்.

இதனால் பட்டரை நோக்கி இன்று என்ன திதி தெரியுமா என்று கேட்டார். ஆழந்த தியானத்தில் இருந்த பட்டர் இன்று பௌர்ணமி திதி என்று தவறுதலாக சொன்னார்.

.இதனால் கோபம் அடைந்த மன்னர் இன்று இரவு வானில் பௌர்ணமி நிலவு காணப்படாவிட்டால், பட்டருக்கு தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மன்னரிடம் தவறாக சொன்னதை அறிந்த பட்டர், அபிராமி சந்நிதி முன்பு குழி வெட்டி, அதில் தீ மூட்டி, அதற்கு மேல் ஒரு விட்டமும், 100 கயிறுகள் கொண்ட உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்தார்.

அன்னை மீது கொண்ட பக்தி உண்மையானால், இந்த பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தீக்குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பேன் என சபதம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அந்தாதி பாடல்களை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலுக்கும் உறியைத் தாங்கி நிற்கும் கயிறு ஒன்றை அறுத்து வந்தார்.

79-ஆவது பாடலை பாடும்போது, அன்னை காட்சி தந்து, தனது காதனியை விண்ணில் வீசி முழு நிலவு தோன்றச் செய்த அபிராமி, பாடலை தொடர்ந்து பாடக் கேட்டுக் கொண்டார்.

அன்னையின் கருணையைக் கண்டு வியந்து, தொடர்ந்து பாடல்களை பாடி 100-வது பாட்டுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.

மன்னர் தான் செய்த தவறுக்கு பட்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்

இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவிழாக்கள்


சித்திரை மாதம் பிரமோற்சவம்,

ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம்,

தை அமாவாசை உற்சவம்,

கார்த்திகை மாதம் 1008 சங்காபிஷேகம்.

இருப்பிடம்


நாகை மாவட்டம், மயிலாடுதுறை தரங்கம்பாடி செல்லும் வழியில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது.

சீர்காழியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை ,சீர்காழியில் இறங்கி அங்கிருந்து திருக்கடையூர் செல்லலாம்.

சஷ்டியப்த பூர்த்தி பூஜைகளை செய்யும் இடம்

மரண பயத்தை போக்கும் இடம் என்பதால் இந்த திருக்கோயிலில் நீண்ட ஆயுள் பெற தம்பதியர் பூஜை செய்ய வருகின்றனர்.

60 வயது நிரம்பியவர்கள் கோவிலுக்கு மனைவியுடன் வந்து ஆயுள் வேள்வி செய்கின்றனர்.

60 வயது தொடங்கும்போது உக்ரரத சாந்தியும், 61 வயது தொடக்கத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் செய்கிறார்கள்.

71 வயதில் தொடக்கத்தில் பீமராத சாந்தியும், 80 வயது தொடக்கத்தில் சதாபிஷேகமும் இங்கு செய்துகொள்கிறார்கள்.

என்றும் இளமையுடன் வாழ சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் இங்கு செய்யப்படுகிறது. இந்த பூஜைகளை அவரவர் பிறந்த தமிழ் மாதம், பிறந்த நட்சத்திரம், திதி, வாரம் கூடி வரும் நாளில் செய்துகொள்வது நல்லது.

திருக்கடையூர் கோவிலில் அறுபதாவது திருமண வழிபாடு நடத்தினால் ஒரு கோடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்

அஷ்டாவக்ர கீதை சொல்லும் தத்துவ போதனை

நம்மில் பெரும்பாலோர் அமைதியையும் ஆனந்தத்தையும், ஒரு சிலர் உண்மையையும் தேடி அலைபவர்கள், ஆனால் அந்த ரகஸியம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்! அந்த ரகஸியத்தைத்தான் அஷ்டாவக்ர கீதை (Astavakra gita) சொல்கிறது.

ஆன்மீக பாதை காட்டும் அஷ்டாவக்ர கீதை

ஒரு சிலரே ரகஸியத்தைத் தேடும் தானே அந்த ரகஸியம் என்பதையும் உணர
முயல்கிறார்கள். இந்த அடிப்படை ரகஸியத்தை அறிந்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் நம் வாழ்க்கைப் பாதை அமைகிறது. இதைத்தான் அஷ்டாவக்ர கீதை நமக்கு சொல்லித் தருகிறது.

ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர வழிகாட்டும்
பாதை.

இந்த முயற்சியில் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ள வேதங்களின்
சாராம்ஸங்களை, பிரம்ம தத்துவங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது
தேவையில்லை, உணர்ந்து ஏற்றுக்கொள்வது சிறந்த வழி.

உபநிஷத்துக்கள் இந்தக் கருத்தைதான் பல யுகங்களாக வலியுறுத்தி வருகின்றன.

அரிய தத்வ போதனை

தன் உண்மை நிலையை உணரத் துடித்த ஒரு மன்னனுக்கு அவரது இளம் குரு ஒரு
அற்புத அரிய தத்வ போதனையைத் தந்தார்.

இதற்காக அந்த மன்னன் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, தன்னை வறுத்திக்கொண்டு, காத்திருந்து பெற வேண்டியிருந்தது. யார் அந்த மன்னன்? யார் அந்த குரு? என்ன தத்வம் அது?

ஜனகன் (ராமாயண நாயகி சீதாதேவியின் தந்தை) ஒரு நேர்மை தவறாத மன்னன்.
மிதிலையின் சக்கரவர்த்தி. ராஜரிஷி. சகல சாஸ்த்ரங்களைக் கற்ற பண்டிதன்.

சனாதன தர்மங்களை கடைப்பிடித்து ராஜபரிபாலனை செய்துவந்தான். மக்கள் ஆனந்தமாக
வாழ்ந்தனர். இந்த மன்னன் வாயிலாக ஒரு அபாரமான தத்துவத்தை உலகத்துக்கு
அளித்தார் இவரின் குரு அஷ்டாவக்ர மாமுனி.

இது ரிக் வேதத்தின் சாரமான மாண்டூக்கிய உபநிஷத்தில் வெகு அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்றால் என்ன என்பதன் நிதர்சன தத்வத்தை மனித குலத்துக்கே விளக்கும் முதல் காவியம் இது.

காட்டில் சிக்கிய மன்னன்

ஜனகன் ஒரு நாள் தன்னை மறந்து கற்பனை உலகில் சஞ்சரித்துக்
கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடி வந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச்
சொன்னான்.

மிதிலை நாட்டை கைப்பற்ற அண்டை நாட்டு அரசன் ஒருவன் படையோடு வந்து விட்டான் என்பதுதான் அது. ‘மன்னா, போருக்காக நம் படைகள்
தயார் நிலையில் உள்ளது.

நீங்கள் வந்து தலைமை ஏற்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றான் சேவகன். குழம்பிப் போன ஜனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘போரா? இது எப்படி சாத்தியம்? எனக்குத்தான் எதிரிகளே இல்லையே, வந்திருக்கும் எதிரி யார்?’

இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு போருக்குத் தயாரானான். கடும் போர் நிகழ்ந்தது.
எதிரி மிக பலசாலி, திறமைசாலி. போரில் ஜனகன் தோற்றான்.

வென்ற மன்னன் ‘இந்த நாடு இப்போது எனக்குச் சொந்தம். ஜனகா நீ நல்லவன் அதனால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஆனால் நாடு கடத்துகிறேன். எல்லாவற்றையும் விட்டு வெளியேறு’ என்று ஆணையிட்டான்.

தரும நெறி தவறாத ஜனகன் தோல்வியை ஏற்று நாட்டை விட்டு வெளியேறினான். தனக்கு நேர்ந்த அநீதியை எண்ணிப் பொருமினான். செல்லும் இடம் தெரியாது அலைந்தான்.

ஒரு காட்டில் தஞ்சம் புகுந்தான். மனச்சோர்வில் புத்தி தடுமாறியது. உண்ண உணவின்றி அலைந்து மயங்கி விழுந்தான்.

மயக்கம் தெளிந்தபோது, ஒரு காட்டுவாசி கும்பலிடம் தான் சிக்கிக் கொண்டுள்ளதை
உணர்ந்தான். அவர்களுக்கு ஜனக மன்னனை அடையாளம் தெரியவில்லை.

வேறு மொழி பேசினார்கள். புரியவில்லை. வயிறு நிறைய உணவு தந்து மன்னனை ஒரு
பலிபீடத்தில் கட்டி நரபலி இடுவதற்கு தயாரானார்கள்.

ஜனகன் எவ்வளவு மன்றாடியும் அவர்கள் மசிவதாகத் தெரியவில்லை. கொடூரமான முகத்தைக் கொண்ட ஒருவன் ஒரு பெரிய கத்தியைக் கொண்டுவந்து ஜனகன் தலைமேல் நிறுத்தி வெட்டுவதற்கு ஓங்கினான்.

மரண பயத்தில் ஜனகன் கண்களை மூடிக்கொண்டு உரக்க ‘ஐயோ, காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று ஓலமிட்டான்.

கண்டது கனவா? நினைவா?

அடுத்த க்ஷணம் விழித்துப் பார்த்தால் தான் தன் அரண்மனையில் கட்டிலில் இருந்து
கீழே விழுந்து கிடப்பதையும், தன்னைச் சுற்றி தன் சேவகர்கள் கவலையுடன்
நிற்பதையும் கண்டான்.

முதலில் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டான். அட, இவ்வளவு நேரம் தான் கண்டது கனவா? அல்லது நிஜமா?

அப்படியென்றால் எது நிஜம்? இப்போது எதிரே பார்ப்பது என்ன, சற்று முன் கனவில்
பார்த்தது என்ன? எது உண்மை?’ என்று தன் மனதுக்குள் குழம்பிப் போனான்.

தன் மந்திரிகளை அழைத்துத் தன் அனுபவங்களை விவரித்தான். ‘எது உண்மை?’ என்று
அனைவரையும் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை.

‘மன்னனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் எவருக்கும் பரிசு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. பலர் வந்தனர்.

ஜனகனை திருப்தி படுத்தக்கூடிய வகையில் சரியாக பதில் அளிக்க
முடியவில்லை. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஹோத முனி

மிதிலையின் அருகில் உள்ள ஒரு காட்டில் வாழ்ந்து வந்தார் கஹோத முனி. வேத
சாஸ்திரங்கள் கற்றவர்.

எளிய குருகுல ஆசிரமம் நடத்தி வந்தார். மகப்பேறு வேண்டி தவம் இருந்து புத்ரவரம் பெற்றார். மனைவி சுஜாதா கருவுற்றாள்.

கஹோத முனி தன் சீடர்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது சுஜாதாவும் அருகில் இருப்பாள். அவள் கருவில் இருக்கும் சிசுவும் இந்தப் பாடங்களை உன்னிப்பாகக் கேட்டு வந்தது.

பரமேஸ்வரன் அருளால் உருவான தெய்வீகக் கருவல்லவா அது, ஞானத்தில்
ஜொலித்தது.

தன் தந்தை சொல்லித்தரும் பாடத்திலேயே தவறுகளைச் சுட்டிக்காட்ட
ஆரம்பித்தது.

அஷ்டாவக்ர கீதை எப்படி வந்தது

ஒருநாள் வெகுண்டு போன தந்தை, தனக்கு பிறக்கபோகும் மகவு என்றுகூட பாராமல், ‘அஷ்ட வக்ரங்களோடு’ பிறக்க சாபமிட்டார்.

அஷ்ட வக்ரங்களோடு (உடலில் எட்டு கோணங்கள்) பிறந்த குழந்தைக்கு
‘அஷ்டாவக்ரன்’ என்ற காரணப் பெயரே நிலைத்தது.

மனிதர்களில் உள்ள அஷ்ட வக்ரங்களை களைவதற்கு உதவி செய்து வந்ததால் தெய்வப் பிறவியான இவருக்கு அஷ்டாவக்ரர் என்ற புனைப்பெயர் வந்தாகவும் சில புராணங்களில் கூறப்படுகிறது.

பெயர் இதுவானாலும் தந்தையை விட சிறந்த புத்திமானாக விளங்கினான் சிறுவன்
அஷ்டாவக்ரன்.

இந்த நிலையில் ஏழ்மையில் வாடிய கஹோத முனி ஜனக மன்னனின்
சந்தேகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைத் தீர்த்து அவன் தரும் பரிசை பெற
எண்ணி மிதிலை சென்றார்.

அங்கே அவரும் தோற்றுப்போய் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்கள் பல சென்றன.

சென்ற கணவன் நெடுநாளாகியும் திரும்பவில்லையே எனக் கவலையுற்ற சுஜாதா தன் மகன் அஷ்டாவக்ரனை தன் தந்தையைத் தேட அனுப்பினாள்.

தன் தந்தையின் நிலையை ஞானத்துள் உணர்ந்த அஷ்டாவக்ரன் மிதிலைக்குச் சென்று ஜனகனின் சந்தேகத்தை தான் தீர்ப்பதாக அறிவித்தான், இதற்கு
இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான்.

மன்னன் தன்னை குருவாக ஏற்றுக் கொள்ளவேண்டும். சிறையில் வாடும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பவைத்தான் இந்த நிபந்தனைகள்.

சிறுவனை குருவாக ஏற்ற ஜனகன்

வயது குறைவாக இருந்தாலும் இவ்வளவு திறமையுடன் பேசும் சிறுவனைக் கண்டு
அசந்து போன ஜனகன் அஷ்டாவக்ரனை தன் குருவாக மனதார ஏற்றுக்கொண்டான்.

கடும் நிஷ்டைகளோடும், நிபந்தனைகளோடும் இந்தப் புதிய குரு-சிஷ்ய பாரம்பரியம்
தொடங்கியது. உண்மையை உணரத் துடித்த மன்னன் பல இன்னல்களை ஏற்று,
தன்னை வருத்திக் கொண்டு தன் இளம் குருவிடம் பாடம் கற்றான்.

அஷ்டாவக்ரனும் ஜனகனும் பரிமாறிக்கொண்ட கேள்வி பதில்கள்தாம், காலத்தால்
அழியாது இன்றும் நம்மிடையே ஆன்மிக பாரம்பரியத்தின் மகுடமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நமக்கு பாடம் சொல்லித் தரும் அஷ்டாவக்ர கீதை.

இளம் குரு மாண்டூக்ய உபநிஷதத்தை போதித்தான். தற்போது நம்மிடையே இருப்பதாகக் கருதப்படும் 108 உபநிஷத்துக்களிலேயே மாண்டூக்ய உபநிஷத்துதான் சிறியது.

பன்னிரெண்டு ஸ்லோகங்களை மட்டுமே கொண்டது. ஆனால் மனிதனின் அனுபவ நிலைகள் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை மிகத் தெளிவாக இந்த உலகிற்கு அளித்துள்ளது இந்த உபநிஷத்து.

முதல் முறையாக, இந்த உபநிஷத்துவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த ப்ரபஞ்சத்தையே
ஆட்டிப்படைக்கும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்த்ரத்துக்கும் மனித உயிர்களுக்கும் இருக்கும்
நெருங்கிய பந்தம் பற்றிய விளக்கம் அளித்தார் குரு அஷ்டாவக்ரர்.

ஜனகனின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமன்றி இந்த மனித குலமே பயன்பெற அவர் ஒரு கீதையையே படைத்தார். அதுதான் இன்றைக்கு அஷ்டாவக்ர கீதையாக இருக்கிறது.

அஷ்டாவக்ர கீதை சாராம்சம்

ஜனகனின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அஷ்டாவக்ரர் சொல்லித்தந்த பதில்கள்
இதோ:

மனிதன் மூன்று நிலைகளில் ஏற்படும் அனுபவங்கள் வழியாக தன்னை
சுற்றியுள்ள உலகை தெரிந்துகொள்கிறான்.

முதல் நிலை விழித்திருப்பது. இது ‘விஸ்னவார’ நிலை. நாம் விழித்திருக்கும்போது நம் ஐம்புலன்கள் மற்றும் மனம் வழியாக நாம் உணரும் அனுபவங்கள். (இதற்கு பிரதிக்க்ஷை அனுபவம் என்று பெயர்).

அடுத்தது கனவு நிலை (இது ‘தேஜச’ நிலை). இந்த நிலையில் ஐம்புலன்கள்
வழியாகத் தோன்றும் அனுபவங்கள் அடங்கி விடுகின்றன.

மனம் மட்டும் செயல் படுகிறது. மனத்திரையில் பிரதிபலிக்கும் கனவிலும் நமக்கு ஒரு புதிய உலகம் தெரிகிறது. பல விஷயங்களை உணர்ந்து அனுபவிக்க முடிகிறது.

ஆனால் கனவு தெளிந்தபின், நாம் விழித்தெழும்போது கனவில் கண்டவை அனைத்தும் மறைந்து விடுகின்றன.

மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலை. (இது ‘பிரக்ஞ’ நிலை). இங்கே ஐம்புலன்களும் மனமும், எண்ணங்களும், புத்தியும் அடங்கிவிடுகின்றன. இந்த நிலையில் நமக்கு என்ன நடந்தாலும் தெரிவதில்லை.

நம் உடலையும் கனவுலகையும் விட்டு விலகி நிற்கிறோம். இந்த நிலையிலிருந்து நம்மை தட்டி எழுப்பி மீண்டும் முதல் நிலைக்கு கொண்டுவருவது தெய்வீக சக்தி. முதல் மூன்று நிலைகளையும் கவனித்து வரும்,

இந்த மூன்று நிலைகளையும் அனுபவத் தோற்றங்களை ஒளிர்வித்து உணர்த்தும் ‘சாட்சி’ இது. இதுவே ஆத்மன்.

எப்பொழுதும் ஆழ்ந்த அமைதி நிலையில், ஸூர்யனாக, ஸ்வயப் பிரகாச ஜோதியாக ஒளிர்ந்து, உடல், மனம், எண்ணம், புத்தி ஆகியவைகளை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் ஆத்ம ஜோதி.

பரப்பிரம்மம். இதைத்தான் உண்மையான ‘நீ’ என்று புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜனகனுக்கு விளக்கம் அளித்தார். இந்த அஷ்டாவக்ர கீதை நமக்கு பல உண்மைகளை போதிக்கிறது.

ஆத்மனுக்குள் உடல், மனம், எண்ணம்

அஷ்டாவக்ர முனி தொடர்ந்தார். ‘ஜனகா, உண்மை சொரூபமான ஆத்மனாகத்தான்
இந்த மூன்று நிலைகளிலும் ஒளிர்விக்கப்படும் அனுபங்களை உணர்கிறாய்.

உனக்குள் ஆத்மன் இல்லை. ஆத்மனுக்குள்தான் உடல், மனம், எண்ணம், புத்தி சேர்ந்த கலவை ஒளிர்ந்து உலக அனுபவங்களை உணர்கிறது.

ஆகவே ஐம்புலன்கள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ அல்லது உன் மனம், எண்ணங்கள், கற்பனைகள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ, அதைபற்றிய ஞாபகமோ அல்லது கனவுலகில் நீ உணரும் அனுபவங்களோ எதுவும் நிலையானது அல்ல.

இவை அனைத்தும் அனுபவங்களின் அடிப்படையில் தோன்றும் தோற்றங்கள். தோன்றி மறைபவை. அவை உண்மை அல்ல.

ஆத்மன் ஒன்றுதான் உண்மை. நீ பார்க்கும் இந்த உலகையே ஒளிர்விக்கும் பிரம்மன். ஆத்மனை உணரும்போது உன் உண்மை சொரூபத்தை உணருகிறாய். உன்னைப் படைத்தவனை உணருகிறாய்’.

ஓம் என்ற சொல்

இந்த உண்மையை உணர இன்னுமொரு ஒரு ரகஸ்யத்தை சொல்கிறேன். நான்
விளக்கிய அனுபவ நிலைகளைக் குறிக்கும் ஒரு சொல்லை தவ நிலையில் த்யானிக்கும்
போது நீ ஆத்மனை உணரத் தொடங்கலாம்.

அதுதான் ‘ஓம்’. இந்தச் சொல்லில் நான்கு சப்தங்கள் உள்ளன. அ, உ, ம், அஹ. கடைசி சப்தம் (சப்தமே அல்ல, ஆழ்ந்த அமைதி).

பரிசுத்தமான, பூர்ண நிலையை குறிக்கிறது. அனைத்து சப்தங்களையும் தன்னுள்
அடக்கியது. இது ஆதி, அந்தம் இல்லா நிலை. அதுதான் ஆத்மன்,

உண்மையான ‘நீ’. முதல் சப்தம் விழித்திருக்கும் நிலையையும், இரண்டாவது கனவு நிலையையும் குறிக்கிறது. மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலையையும், நான்காம் நிலை ஆழ்ந்த அமைதியில் ஜோதியாக ஜொலிக்கும் ‘ஆத்ம சொரூபமான உண்மையான உன்னையும்’ குறிக்கிறது.

விடை இதுதான்

நீ கேட்ட கேள்விக்கு விடை இதோ. நீ நேரடியாக உன் புலன்களின் வழியாக உணரும்
அனுபவங்களும் உண்மை இல்லை,

கனவில் நீ உணரும் அனுபவங்களும் உண்மை இல்லை. இந்த அனுபவங்களை உணர்விக்கும், ஆத்மஜோதியான ‘நீ’ ஒன்றே உண்மை.

ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப்
படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி ஜனக
சக்ரவர்த்திக்குப் போதித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் மனித சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.

இந்த ‘தன்னிலை உணரும்’ தத்துவத்தை அருளிய அஷ்டாவக்ர மாமுனியையும் அவரது
சீடன் ஜனகனையும் இந்த உலகம் என்றென்றும் மறக்க முடியாது.

அஷ்டாவக்ர மஹாகுருவின் உதவியால் ஜனகராஜன் தன்னை, தன் உண்மை
சொரூபத்தை உணரமுடிந்தது.

அதனால் அவரை இந்த உலகம் அறிந்துகொள்ள முடிந்தது. இதைப்போல பின்னர் வந்த குருமார்கள் ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமத்வர் போன்றோர் தங்கள் குருமார்களின் உதவியால் தங்களை உணர்ந்ததால் இந்த உலகிற்கு வேத சாராம்ஸங்களைத் தர முடிந்தது.

பல தத்துவ போதனைகளைத் தர முடிந்தது. பல பாரம்பரியங்களை உருவாக்க முடிந்தது. அவர்களை இந்த உலகம் மறக்கவே முடியாது. மனிதகுல சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற இவர்கள் நம் வழிகாட்டிகள்.

இந்த உண்மை நிலையை, ‘தன்னை’ தானே அறிவது சுலபமான காரியம் அல்ல.
உணர்வுகளையும், உள்ளத்தையும், எண்ணத்தையும் பிராணத்தையும் அடக்கி, வேத
சாஸ்திரங்களில் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை கலந்த முனைப்புடன்
முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் அஷ்டாவக்ர கீதை போதிக்கிறது.

முன்காலத்தில் இருந்த குரு பாரம்பரியத்தில் குருமார்கள் தத்துவ போதனைகளை மட்டுமே அளிப்பர். அவைகளை உணர வழிமுறைகளை சொல்லித் தருவர். ஆனால் சீடர்கள் இவைகளை உள்வாங்கி, தாமாகவே முயற்சி செய்து இந்த மெய்ஞான போதனைகளை உணரவேண்டும்.

அஷ்டாவக்ர கீதை சொல்லித் தருவது பல. அஷ்டாவக்ர கீதை நமக்கு வழி காட்டுகிறது.

மெய்ஞான போதனைகளை உணர கடும் தவம் இருக்க நேரிடும். இது சாதாரணமான காரியம் அல்ல. இதற்கு அவர்களின் பயிற்சி, முயற்சி, முனைப்பு, திறமைகளைப் பொறுத்தே பலன் கிட்டும்.

இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். முயற்சி பலன் தராமலும் போகலாம். வாழ்நாளும் முடிந்து போகலாம். அது அந்தக் கால நடைமுறை.

ஒரு பிரம்மகுருவின் அருளாசி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் மாண்டூக்கிய உபநிஷத்துக்கு பின் காலத்தில் விளக்கம் அளித்த ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார்.

ஜனகனைப் போல உண்மைநிலையை உணரத் துடிக்கும் பக்தர்களுக்கு, கிடைக்கரிய
இந்த தெய்வீக அருளாசி வழங்கவே காத்திருக்கிறார் பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா
ஸ்வாமிகள்.

மூகாம்பிகை கோயில் தரிசனம் – ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்

பெங்களூர்: மூகாம்பிகை கோயில் மூலவர் சிலை ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது. அத்துடன் அத்திருக்கோயிலுக்கு சென்று வருவோருக்கு அனைத்து வியாதிகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

கொல்லூர் மூகாம்பிகை கோயில்

மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்திருக்கிறது.

கோடஞ்சத்திரி மலைக் குன்றுகளின் அடிவாரத்தில் இந்த மூகாம்பிகை கோயில் அமைந்துள்ளது. இதன் தென்புறத்தில் சௌபர்னிகா நதி ஓடுகிறது.

திருக்கோயில் 51 சக்தி பீடங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு தேவியின் காது விழுந்த இடமாக புராணக்கதைகள் சொல்கின்றன.

மங்களூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. உடுப்பியில் இருந்தும் மூகாம்பிகை திருக்கோயிலுக்கு சென்றுவர பேருந்து வசதி இருக்கிறது.

உடுப்பியில் இருந்து மூகாம்பிகை திருக்கோயில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஜோதிர்லிங்கம்

மூகாம்பிகை கோயில் அமைந்திருக்கும் நிலப்பரப்பை புராண காலத்தில் பரசுராமர் உருவாக்கியதாக ஐதீகம்.

கொல்லூர் மூகாம்பிகை கோயில் பிரதான தெய்வம் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஜோதிர்லிங்கமாகும்.

ஜோதிர்லிங்கத்தின் நடுவில் தங்கத்தால் ஆன வரிகளுடன் ஒரு பிளவு காணப்படுகிறது.

இந்த லிங்கத்தின் இடப்புறம் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை குறிக்கிறது. வலப்புறம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் குறிக்கிறது.

லிங்கத்தின் பின்புறம் 4 கரங்களுடைய பஞ்சலோகத்தால் ஆன மூகாம்பிகை திருவுருவம் காட்சி தருகிறது.

மும்மூர்த்திகள்

கலைகளுக்கு சிறப்பிடம் பெற்ற இத்திருக்கோயில் சிவனை வழிபடுவதால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கிறது.

மூகாம்பிகை ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்து காட்சித் தருகிறாள். கோலன் மகரிஷி கொல்லூரில் ஆசிரமம் அமைத்து தவம் செய்துள்ளதாகவும் புராண வரலாறு சொல்கிறது. அதனால் இந்த பகுதி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த இடம் சங்கர பீடம் என அழைக்கப்படுகிறது. அத்துடன், மகா மண்டபம் என அழைக்கப்படும் சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்துதான் சங்கரர் சௌந்தர்யலகரி பாடி அரங்கேற்றம் செய்துள்ளார்.

தல வரலாறு

கொல்லூரில் கம்பாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி சாகா வரம் கேட்டு கடும் தவம் செய்கிறான்.. வரம் பெற்ற அவன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்துகிறான்.

இதை அறிந்த தேவி, அரக்கனின் வீரத்தைக் குறைக்க அவனை ஊமையாக்குகிறாள். அதனால் அவனது அரக்ககுணம் மறைகிறது. அதுமுதல் அவன் மூகாசூரன் என அழைக்கப்பட்டான்.
கன்னடத்தில் மூகா என்றால் ஊமை எனப் பொருள்படுகிறது. தேவியும் மூகாம்பிகை என அழைக்கப்படுகிறாள் என்று ஒரு புராணக் கதை சொல்கிறது.

கோலன் மகரிஷி

கோலன் மகரிஷி தவம் புரிய சிவன் ஒரு பாறையில் தோன்றுகிறார். சக்தி இல்லாமல் எப்படி நான் வழிபடுவது என மகரிஷி கேட்கிறார். சிவலிங்கத்தின் மீது காணப்படும் ஸ்வரண ரேகையை காண்பித்து இடது பாகத்தில் அகிலத்தின் அன்னை பார்வதி, 64 கலைகளின் தாய் சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் அரூபமாக இருக்கிறார்கள்.

வலது பக்கம் பிரம்மா, விஷ்ணுவுடன் நானும் இருக்கிறேன் என்று சிவபெருமான் கூறியுள்ளார்.
மகரிஷிக்கு சொர்ண லிங்கம் கிடைத்திருப்பதை அறிந்த மூகாசுரன் அப்பகுதிக்கு வருகிறான். அதை அறிந்த மகரிஷி பராசக்தியிடம் வேண்டுகிறார்.
வீரபத்திரன் தலைமையில் ஒரு படையை உருவாக்கி அந்த அசுரனை அழிக்கிறாள். சாகும் தருவாயில் தனக்கு முக்தி வேண்டும் என அன்னையிடம் அரக்கன் மன்றாடுகிறான்.

இதனால் தேவி இனி இந்த இடத்தில் நீ பிரம்மலிங்கேஸ்வரராக இருக்கலாம் என்று வரம் அளிக்கிறாள்.
கோயிலில் உள்ள மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவியுள்ளான்.

காட்சி தந்த மூகாம்பிகை

அதேபோல் ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகை தேவி தரிசனத்தைக் கண்டதை அடுத்து இங்கு அவர் கோயில் நிறுவியதாக ஐதீகம்.

ஒரு நாள் மூகாம்பிகை ஆதிசங்கரர் முன்பாக தோன்றுகிறார். அவர் வேண்டிய வரத்தை கேட்குமாறு சங்கரரிடம் கூறுகிறார்.

அன்னையின் தரிசனத்தைக் கண்ட ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அங்கு மக்கள் அனைவரும் அன்னையை வழிபட கோயில் கட்ட வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவி ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஏற்று ஆதி சங்கரர் முன்னால் செல்கிறார்.

மூகாம்பிகை சங்கரரை சோதிக்க விரும்பி, தன் காலில் அணிந்திருந்த கொலுசுகளின் சத்தம் சங்கரர் காதுகளில் விழாமல் தடுக்கிறாள். சலங்கை சத்தம் கேட்காததால், சங்கரர் நிபந்தனையை மறந்து திரும்பி பார்க்கிறார்.

தேவியின் நிபந்தனையை மீறி திரும்பி பார்த்ததால் அந்த இடத்திலேயே தேவி சிலையாக மாறி நின்றுவிடுகிறாள். அந்த இடம்தான் கொல்லூர் முகாம்பிகை திருக்கோயிலாக விளங்குகிறது.

மற்றொரு புராணக் கதை


மற்றொரு புராண வரலாறாக, ஆலயத்துககு ஆதிசங்கரர் வந்தபோது, பக்தர்கள் ஸ்வர்ணலிங்கத்தில் அரூபமாக இருக்கும் தேவியை காண விரும்புகிறார்கள். ஆதிசங்கரர் தியானத்தில் மூழ்குகிறார்.

அப்போது அன்னை அவருக்கு காட்சி தர, அந்த உருவத்தை மனதில் தாங்கி, சிற்பிகள் மூலமாக தான கண்ட தேவியை தத்ரூபமாக செதுக்கச் செய்கிறார். அப்படி உருவான சிற்பம்தான் நாம் வணங்கும் மூகாம்பிகை .

இது பஞ்சலோக சிலை. இந்த சிலையை பிரதிஷ்டை செய்யும்முன் சக்தி வாய்ந்த ஒரு ஸ்ரீசக்கரத்தையும் ஆதிசங்கரர் வைத்தார். அந்த சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம்.

ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால் மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

பூஜை முறைகள்

மூகாம்பிகை திருக்கோயில் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதி சங்கரரே வகுத்து தந்துள்ளார்.

தாயார் சந்நிதிக்கு பின்னாள் சுயம்பு பஞ்சமுக கணபதி, கருவறை ஸ்ரீசக்கரம் ஆகியவை மும்மூர்த்திகளால் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இத்திருக்கோயிலில் மூலவரான ஜோதிர்லிங்கத்துக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்வதில்லை. புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே செய்யப்படுகிறது.
மூகாம்பிகைக்கு துளசி, பிச்சிப்பூவால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. அம்பாளுக்கு நித்தமும் பட்டு புடவை மட்டுமே சாத்தப்படுகிறது. சிவேலியில் காலை, மதியம் மாலையில் தேவியை சுமந்து வருகிறார்கள்.
கலா மண்டபத்தில் மாலையில் எழுந்தருளியதும் கலைஞர்கள் பாடி வணங்குகின்றனர். பொதுவாக கிரகண காலங்களில் கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இத்திருக்கோயில் அதில் விதிவிலக்கு. இங்கு கிரகண நேரத்திலும் சாமி தரிசனம், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

தேவி தந்த கஷாயம்


இத்திருக்கோயிலில் தேவியை பாடி மகிழ்ந்த சங்கரர் ஒருமுறை எழ இயலாமல் அவதியுறுவதைக் கண்ட தேவி ஒரு மூலிகை கஷாயம் தருகிறார்.

அதை இன்றளவும் தயாரித்து தேவிக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த கஷாயம் அருந்துவோரின் அனைத்து வியாதிகளும் நீங்குவதாக ஐதீகம்.
ஆலயத்தில் காலையில் தேவி அம்சம், மதியம் சரஸ்வதி, இரவு கலைமகள் அம்சமாகவும் காட்சி தருகிறாள்.

பக்தர்கள் பலரும் சௌபர்னிகா நதியில் 21 தடவை குளித்துவிட்டு ஒவ்வொரு முறையும் அம்பாளை வழிபாடு செய்வது உண்டு. இதற்கு காரணம் நம்முடைய 21 ஜன்ம பாவங்களை போக்குவதாக ஐதீகம்.

இது ஸித்தி சேத்திரமாக விளங்குகிறது. மனதில் மிகுந்த பக்தியுடன் வேண்டுவதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

இங்கு குத்து விளக்கின் பஞ்ச முகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமான ஒன்று.

ரதோற்சவம்

மார்ச் இறுதி வாரம் முதல் முதல் வாரம் வரை 8 நாள்கள் ரதோற்சவம், ஜூன் முதல் வாரம் சுக்ல பட்சம், அஷ்டமி திதியில் அம்பாளின் ஜன்மாஷ்டமி திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூகாம்பிகை. நாள்தோறும் மாலை 7 முதல் 8 மணிக்குள் ரத உற்சவம் நடைபெறுகிறது. அம்பாள் சந்நிதிக்கு வலதுபக்கம் நாகலிங்கம் உள்ளது. இது நாகதோஷத்தை போக்கவல்லது.
கோயில் உட்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர், பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சந்நிதிகள் உள்ளன. கோயிலில் நித்தமும் இருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.
ரவி வர்மாவின் சித்திரங்கள் இத்திருக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.
ஆலயம் காலை 5 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

ஹொரனாடு அன்னபூரணி கோயில் தரிசனம்

ஹொரனாடு என்று அழைக்கப்படும் ஸ்ரீஷேத்திர ஹோரனாடு கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகே அமைந்திருக்கிறது. இங்குதான் அன்னபூர்ணி திருக்கோயில் அமைந்திருக்கிறது.

கோயில் எங்கே இருக்கிறது?

இது சிக்மகளூரில் இருந்து 95 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்லும் தூரம் 316 கி.மீட்டர்.

இந்த அழகிய திருக்கோயில் மலைகளுக்கிடையே அமைந்திருக்கிறது. இங்கிருந்து சிருங்கேரி 61 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 2,726 அடி உயரத்தில் ஹொரநாடு அமைந்திருக்கிறது. இதுஒரு குளிர்ச்சியான மலைப்பிரதேசமாகும்.

சுற்றிலும் வனப்பகுதிகளும், பசுமை நிறைந்த இயற்கையும் சூழ்ந்ததாக இது அமைந்திருக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் கூட இப்பிரதேசம் குளிர்ச்சி பொருந்தியதாக அமைந்திருப்பது சிறப்பு.

இதனால் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வோருக்கு இத்திருக்கோயில் தரிசனம் ஏற்றது.

இனிய அனுபவம்

பகல் நேரத்தில் சிக்மகளூரில் இருந்து ஹொரநாடுக்கு காரிலோ, பேருந்திலோ பயணம் செய்பவர்களுக்கு இனிய அனுபவம் காத்திருக்கிறது.

சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள், நீர்வீழ்ச்சிகள் நம் கண்களை பரவசப்படுத்தும்.


அன்னபூரணி திருக்கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பயணிகள், பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான விடுதிகள் பல அமைந்திருக்கின்றன. உணவருந்தும் ஹோட்டல்கள் பலவும் உள்ளன. கோயிலிலும் நித்தமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிலை

அன்னபூரணி திருக்கோயிலின் மூலவர் அன்னபூர்ணேஸ்வரி சிலையை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக புராண வரலாறு சொல்கிறது.

எட்டாம் நூற்றாண்டில் அன்னபூரணி திருக்கோயில் எழும்பியுள்ளது. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிலை பின்னாளில் சேதமடைந்துள்ளது. அன்னபூரணி திருக்கோயிலுக்கு வந்த ஆதிசங்கரர் சிலையை புதுப்பித்திருக்கிறார்.

அன்னைக்கு அவர், ஆதி சக்தியத் மஹா ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி என புதிய பெயர் அப்போது சூட்டப்பட்டது. கோயிலின் முகப்பும் மிகவும் அழகிய தோரண வாயிலாக அமைந்திருக்கிறது.

தோரண வாயிலை முப்பெரும் தேவியரின் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கோயில் வாயிலில் அமைந்திருக்கும் 4 தூண்களிலும் சிம்ம சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. தோரண வாயிலை அடுத்து அகலமான படிக்கட்டுகள் நம்மை ஆலயத்துக்கு அழைத்துச் செல்கின்றன.

ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி


ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் காணப்படுகிறார். நின்ற கோலத்தில் 4 கரங்களோடு காட்சி தருகிறார். முற்றிலும் தங்கத்தால் ஆன திருமேனியைக் காண கண் கோடி வேண்டும்.

வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்மையில் அன்னையைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்.

புராண வரலாறு

திருக்கோயில் தொடர்பான ஒரு புராண வரலாறும் உண்டு. சிவன், பார்வதி இருவருக்குள் உணவு பற்றிய வாக்குவாதம் எழுகிறது.

அப்போது உணவுப் பண்டங்கள் ஒரு மாயை என சிவபெருமான் கூறுகிறார். அதை பார்வதி தேவி மறுக்கிறார். கோபமடைந்த சிவபெருமான் இயற்கையின் செயல்பாட்டை நிறுத்துகிறார்.

இதனால் தாவரங்கள் வளர்ச்சி நின்றுபோகிறது. உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஜீவராசிகள் உணவின்றி தவிக்கின்றன. இதைக்கண்டு வருந்திய பார்வதி தேவி, அன்னபூர்ணியாக அவதரிக்கிறார்.

எல்லோருக்கும் உணவளிக்கும் பணியை தொடர்கிறார். இந்த சூழலில், பிரம்மாவால் ஏற்பட்ட சாபம் காரணமாக, சிவபெருமானின் கையில் திருவோடு ஒட்டிக்கொள்கிறது. அதை அகற்ற முடியவில்லை.

திருவோடு அன்னத்தால் நிரம்பினால் மட்டுமே அது விலகும் என்பது சாபம். இதை அறிந்த பார்வதி தேவி சிவனின் திருவோட்டை அன்னத்தால் நிரப்புகிறார்.

அன்னம் நிரம்பிய நிலையில் திருவோடு சிவனின் கையில் இருந்து விடுபடுகிறது. சிவனின் சாபமும் நீங்குகிறது. அந்த அன்னபூரணியே இத்திருக்கோயிலில் வீற்றிருக்கிறார்.

ஹொரநாடு ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி திருக்கோயில் தரிசனத்தை எளிய முறையில் காண விரும்புவோர் கர்நாடக மாநிலத்தின் சுற்றுலாத் துறை வாரம்தோறும் இயக்கும் தெற்கு கர்நாடகா சுற்றுலா பேருந்தில் முன்பதிவு காண முடியும்.