Indian dogs: நாய் வளர்ப்பவர்கள் கவனிக்கவும்

நாய் வளர்ப்பவர்கள் கவனிக்கவும்
Spread the love

வீடுகளில் ராட்வெய்லர் நாய்களை வளர்ப்பது பாதுகாப்பானதா?


சென்னை: தடை செய்யப்பட்ட நாய் இனங்களில் ஒன்றான ராட்வைலர் நாய்கள் கடித்ததால் சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது உடல்நிலை தற்போது தேறி வருவது ஒரு ஆறுதலான விஷயம். இருந்தாலும், இந்த சம்பவம் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை வைத்திருப்போருக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

இந்த அச்சம், தற்போது, தெருக்களில் சாதாரணமாக நடமாடும் தெரு நாய்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதனால் 5 வயது சிறுமி விஷயத்தில் ராட்வைலர் நாய் வளர்ப்பாளர் செய்த தவறையும், ராட்வைலர் நாயின் குணங்களையும் எல்லோரும் அறிந்துகொள்வது நல்லது.


அத்துடன் வீடுகளில் தற்போது வெளிநாட்டு நாய் இனங்களை வளர்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும். நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள் எந்த வகையான நாய்களை தேர்வு செய்து வளர்க்கலாம்.. நாய் பராமரிப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்.

சென்னை சம்பவம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி 4வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மே 5-ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – இரவு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்திருந்தார்.

அந்த மாநகராட்சி பூங்காவின் காவலாளியாக பணிபுரிந்தவரின் மகள் ஆவார். குழந்தையின் பெற்றோர் பூங்காவில் ஒரு பகுதியில் உள்ள சிறிய அறையில்தான் வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்த பூங்காவுக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிப்பவர் புகழேந்தி. இவர் இரு ராட்வைலர் வகை நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்த நாய்கள் இந்திய அரசால் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட நாய் வகைகளில் ஒன்றாகும்.

அதேபோல் இனப்பெருக்கம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை நாய்கள் வெளிநாடுகளில் வேட்டை நாய்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கால்நடைகளை மேய்ப்பவர்களும், வேட்டைக்கு செல்பவர்களும் பழக்கப்படுத்தி பயன்படுத்தக் கூடிய வகையைச் சேர்ந்தது இது.

ஆபத்தானவை

பார்ப்பதற்கு அச்சமூட்டும் விழிகளையும், குரலையும் கொண்டது இந்த நாய். இதை வெளிநாடுகள் பலவற்றி் தடை செய்திருக்கிறார்கள்.

இந்த நாய்களை சிலர் சண்டைக்காக பயன்படுத்தி வருவதும் உண்டு. இவை சாதாரணமாக கட்டி வைத்து வளர்க்கக் கூடியவை. சுதந்திரமாக வீடுகளில் வளர்க்கக் கூடியவை அல்ல.

இந்த வகை நாய் குட்டிகள் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் வரை விலைப் போகிறது. அதனால் சிலர் திருட்டுத்தனமாக இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.

இத்தகைய நாய்களை வீட்டில் வளர்ப்பவர்கள் சில நேரங்களில் அவற்றிடம் கடிப்படுவதும் உண்டு.
ஜெர்மனி நாட்டில் உள்ள ராட்வைல் பகுதியை தாயகமாகக் கொண்டதால் இந்த நாய்களை ராட்வைலர் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வெளியில் இந்த நாய்களை அழைத்துச் செல்லும்போது உறுதியான இரும்பு சங்கிலி அல்லது கயிற்றால் கட்டியே அழைத்துச் செல்ல வேண்டும்.

காரணம் இவை கோழி, ஆடு போன்றவற்றை கண்டால் அவற்றை அடித்து சாப்பிட்டுவிடும். அந்த அளவுக்கு ஆபத்தானவை.

கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் தந்தது பற்றி காமெடி

அத்தகைய ஆபத்தான இரு நாய்களை வளர்த்து வந்த வீட்டு உரிமையாளர் புகழேந்தி சம்பவத்தன்று எந்தவித பாதுகாப்பு சங்கிலியும் இன்றி சுதந்திரமாக தன்னுடன் வாக்கிங் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போதுதான் இரு நாய்களும் குழந்தையை கடித்து குதறியிருக்கின்றன..
உலகின் ஆபத்தான வேட்டை நாய்களாக கருதப்படும் 20 நாய் இனங்களில் மிகவும் மூர்க்கத்தனம் கொண்ட இந்த ராட்வைய்லர் நாய் கல், குச்சிகளைக் கண்டு பயந்து ஓடாமல் எதிரியை தாக்கக் கூடியவை.

தற்போது நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

வெளிநாட்டு நாய் மோகம்

பொதுவாக வீடுகளில் பாதுகாப்புக்காக நாய் வளர்ப்பது பணக்காரர்கள் வீடுகளில் சகஜம். ஆனால் அதற்கு விலையுயர்ந்த வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதில் பலருக்கும் அதீத ஆர்வம் உண்டு.
பணக்கார குடும்பங்களில் அவர்களின் ஸ்டேட்டஸை நிலைநிறுத்திக்கொள்ளவும் இத்தகைய நாய்களை வளர்ப்பது தற்போது ஒரு நாகரிகமாக மாறியிருக்கிறது.
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய வெளிநாட்டு நாய்களை வளர்ப்பது என்பது மிகவும் கடினம்.
இந்தியாவை பொறுத்தவரை, நாட்டுப்புற நாய்களை வளர்ப்பதே நல்லது. ஆனால் இன்றைக்கு நாட்டுப்புற நாய்களை வளர்ப்பதை ஒரு கௌரவ குறைச்சலாக கருதும் மனப்பான்மை மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.
வெளிநாட்டு நாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வெறிநாய்த் தடுப்பூசி போடுவதும், 3 மாதத்துக்கு ஒரு முறை தோல் மற்றும் உரோமங்களில் ஏற்படும் நோய் தொற்றுக்களை தடுப்பதற்கான மருந்துகளையும் தருவது அவசியம்.

துர்நாற்றம் வீசும்

இப்படி பராமரிக்காமல் போவதால்தான், வெளிநாட்டு நாய் இனங்களை வளர்ப்பவர்கள் வீடுகளில் ஒருவகை துர்நாற்றம் வீசுவதை நாம் பார்த்திருக்க முடியும். ஆனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அந்த நாற்றம் தெரியாது.
அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தோல் நோய்கள், குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சுகாதரமின்மை அமைந்துவிடுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்திய அரசு ஒருசில நாய் இனங்களை இறக்குமதி செய்வதையும், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் நாய் இனங்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதித்திருக்கிறது.

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்கள் விவரம்

பிட்புல் டெரியர் (Pitbull Terrier), டோசா இனு (Tosa Inu),

அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் (American Staffordshire Terrier),

ஃபிலா பிரசிலிரோ (Fila Brasileiro),

டோகோ அர்ஜெண்டினோ (Dogo Argentino),

அமெரிக்கன் புல்டாக் (American Bulldog), போயஸ்போல் (Boesboel),

காங்கல் (Kangal),

மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (Central Asian Shepherd Dog),

காக்கேசிய ஷெப்பர்ட் நாய் (Caucasian Shepherd Dog),
தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய் (South Russian Shepherd Dog),

டோர்னஜாக், சார்ப்ளானினாக் (Tornjak, Sarplaninac), ஜப்பானிய டோசா அகிதா (Japanese Tosa and Akita),

மாஸ்டிஃப் (Mastiffs), ராட்வெய்லர் (Rottweiler),
டெரியர்கள் (Terriers), ரோடேஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback),

ஓநாய் நாய்கள் (Wolf Dogs),

கனாரியோ (Canario),

அக்பாஷ் (Akbash),

மாஸ்கோ காவல் நாய் (Moscow Guard Dog),

கேன் கோர்சோ (Cane Corso), பேன்நாய்(Bandog) ஆகியவை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.


அதேபோல் தமிழ்நாடு அரசும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு நாய் இனங்களில் 9 வகை நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடை விதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது.


பாசெட் ஹவுண்ட் (Basset Hound),

பிரெஞ்ச் புல்டாக் (French Bulldog),

அலாஸ்கன் மாலமியூட் (Alaskan Malamute),

கேஷோண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாண்ட் (Newfoundland),

நோர்வே எல்க்ஹவுண்ட் (Norwegian Elkhound),

திபேத்திய மஸ்திஃப் (Tibetan Mastiff),

சைபீரியன் ஹஸ்கி (Siberian husky),

செயிண்ட் பெர்னார்ட் (Saint Bernard) வகை நாய்களின் இனப்பெருக்கம் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது.


இந்த இனங்களை முன்பே வீடுகளில் வளர்த்து வந்தால், அவர்கள் கண்டிப்பாக கென்னல் கிளப் ஆப் இந்தியா மற்றும் தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகத்தில் பதிவு செய்து உரிமை பெறுவது அவசியமாகிறது.
நாய்கள் மட்டுமின்றி, பூனைகள், பறவைகளை வளர்ப்பவர்களும் உரிய அனுமதியை உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற வேண்டும்.

தவறினால் அவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அரசு அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.


தெரு நாய்களை தத்தெடுங்கள்

வீட்டில் நாய்கள் வளர்க்க விரும்புவோர் நாட்டு நாய்களை வளர்க்க முன் வர வேண்டும். இவை வெளிநாட்டு நாய்களைக் காட்டிலும் எளிதில் மனிதர்களோடு பழகக் கூடியவை. அவற்றின் கீழ்படிதல் தன்மையும், அச்சப்படும் சுபாவமும் அதிகம்.


ஒரு நாயை ஆரோக்கியமான முறையில் வளர்த்தாலும் கூட, அதன் உமிழ்நீர் ஆபத்தானது. சலைவா என அழைக்கப்படும் உமிழ்நீரில்தான் ரேப்பிஸ் நோய் தொற்று கிருமிகள் உருவாகின்றன.
உமிழ்நீர் மூலமே மனிதனை கடிக்கும்போதும் அல்லது காயங்கள் மீது அதன் உமிழ்நீர் படும்போதும் அல்லது வேறு உணவுப் பொருள்கள் வழியாகவும் மனித உடலுக்கு எளிதில் செல்லும் தன்மை கொண்டது ரேப்பிஸ் நோய் கிருமிகள்.
அதனால் நாய்களை மிக நெருக்கமாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் தேவை. ஆண்டுதோறும் ரேப்பிஸ் தடுப்பூசி போடுவதையும், நோய்த் தடுப்பு மருந்துகள், முறையான பராமரிப்பு போன்றவற்றில் அக்கறை செலுத்த முடியுமானால் மட்டுமே வீட்டில் நாய்களை வளர்க்கலாம்.
சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நாய்களை வளர்ப்பது நல்லதல்ல. அப்படி வளர்ப்பதால் அவற்றை ஒரு பகுதியில் கட்டிப்போட்டே வளர்க்க வேண்டும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *