முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் – ஒரு அலசல்

முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் – ஒரு அலசல்

கட்டுரையாளர்:ஆர். ராமலிங்கம்

சென்னை: கடந்த ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 13 வரை நடந்த முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் பல சுவாரஸ்மான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது.

இக்கூட்டத் தொடர் திமுகவின் தேர்தல் நேர வாக்குறுதிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளைத் தாங்கியதாக அமைந்தது எனலாம்.

முத்தாய்ப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்த அதிமுக பெயரளவில் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியது.

திமுக தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கான விலக்கை சட்டரீதியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அதன் படிப்படியான நகர்வு வெளிப்படுத்துகிறது.

நீட் தேர்வு விலக்கு சட்டப் போராட்டத்தில் திமுக ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமைந்துவிடும்.

அந்த பயம் அதிமுகவிடம் இருப்பது சட்டப் பேரவை நிகழ்வுகளிலும், வெளியில் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் நன்றாகவே வெளிப்பட்டது.

அதிமுக உள்ளூர நினைப்பது திமுக நீட் தேர்வு விவகாரத்தில் எவ்வகையிலும் சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.

ஆனாலும் மக்கள் பெரும்பாலோரின் விருப்பத்துக்கு எதிராக நடந்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதால் அதிமுக பெயரளவில் மசோதாவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது எனலாம்.

சோதனைக் காலம்

சட்டப் பேரவை கூட்டத் தொடங்கியது முதலே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சோதனைகாலம் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது.

வெள்ளை அறிக்கை தொடங்கி, கொடநாடு கொலை விவகாரம் வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பதற்றமான செயல்பாடுகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ரசித்து வருவது அவரது முகக் கவசத்தையும் தாண்டி  வெளிப்படையாகத் தெரிந்தது.

எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கில் பதற்றமாக இருப்பது கட்சிக்காரர்களுக்கே அவர் மீதான ஒரு மரியாதையை கொஞ்சம் குறைக்கத்தான் செய்தது.

எதற்கும் அஞ்சாத சிங்கமாய் திகழ்ந்த ஜெயலலிதா இருந்த இடத்தை பிடித்துவிட்டதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது தற்போதைய பேச்சுகள், பேட்டிகள், குறைந்தபட்சம் 100 நாள்களாக ஒரு புதிய அரசுக்கு காலஅவகாசம் கொடுத்து விமர்சிக்க வேண்டும். அந்த அரசியல் நாகரிகத்தை அவர் புறம்தள்ளியதற்கு காரணம் கொடநாடு விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றமே என்கிறார்கள் அதிமுகவினர்.

திமுகவின் செயல்பாடு

திமுகவின் தற்போதைய செயல்பாடுகள், ஏற்கெனவே திமுகவை விமர்சித்து வந்த நடுநிலை சிந்தனையாளர்களிடையே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொண்ட பதற்றத்தை, ஓ. பன்னீர்செல்வத்தை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது.

அவரது நிதானமான பேச்சு, திமுக கொண்டு வந்த ஒருசில நல்ல முயற்சிகளுக்கு பாராட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலம் பார்க்க முடிந்தது.

கூட்டத் தொடங்கியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான பதில்கள் வரை அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதங்கள் ஆரோக்கியமான சட்டப் பேரவை நகர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்ப தன் மீதான புகழுரையைக் குறைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் அதை ஒருசில சட்டப் பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் கண்டுகொள்ளாமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.

உதயநிதிக்கு முக்கியத்துவம்

சட்டப் பேரவையில் புதிய உறுப்பினராக வந்துள்ள முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட, கொடுக்கப்படும் முக்கியத்துவம், புகழுரைகள் திருவாளர் பொதுஜனங்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கருணாநிதி நினைவிடம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது,  பாஜக, பாமக ஆகியன வரவேற்றன. 

ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், ஒருபடி மேலே போய், “என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் பராசக்தி பட வசனப்புத்தகம் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரததில் நாங்கள் எடுத்துப் பார்த்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்று ஒரு போடு போட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, இப்படி அவர் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாகும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *