🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

4 Bad Reasons: DMK அதிர்ச்சித் தோல்வி ஏன்?

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தமிழக வெற்றிக் கழகம் (tvk) வெற்றிக்கும், திமுக (Dmk) தோல்விக்கும் வழி ஏற்படுத்திய 4 மிகப் பெரிய தவறுகளை சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் இந்த கட்டுரை, திமுகவின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலத்துக்குமான எச்சரிக்கை பதிவு.

திமுக தொண்டர்களுக்கும், புதிதாக தங்கள் தலைவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருக்கும் தொண்டர்களுக்கும் இந்த கட்டுரையில் இடம்பெற்றிருப்பவை சற்று கசப்பானதாகவே இருக்கும்.

DMK அதிர்ச்சி தோல்வி

தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும், இந்த மாபெரும் திமுக (DMK) தோல்வி ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பணத்தைக் கொடுத்து மக்களின் வாக்குகளை எளிதில் விலைபேசி விடலாம் என்ற பழைய அரசியல் கணக்குகளை இன்றைய இளம்தலைமுறை இதன் மூலம் தெரிந்தோ, தெரியாமலோ சுக்குநூறாக உடைத்துள்ளது.

ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை இந்த மாபெரும் தேர்தல் முடிவுகள் நமக்கு ஆணித்தரமாக உணர்த்துகின்றன.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக மக்கள் ஒரு புதிய அரசியல் பாதையை நோக்கித் திரும்பியுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் திமுகவின் (DMK) தோல்விக்கு 4 முக்கிய மோசமான காரணங்களை நாம் ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

சலிப்பை ஏற்படுத்திய குடும்ப அரசியல் தாக்கம்

ஆண்டாண்டு காலமாக தமிழக அரசியலை திமுக (DMK) ஆக்கிரமித்து வரும் குடும்ப அரசியல் முறை மக்களுக்கு மிகப் பெரிய சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிட்டது.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து அதிகார மையத்தில் இருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானதும் கூட.

திமுகவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம்

திமுகவை (DMK) பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, தன்னுடைய மகனான மு.க. ஸ்டாலினை அரசியல் வாரிசாக அமர வைக்க நீண்டகாலம் எடுத்துக் கொண்டதற்கு காரணம். தமிழக மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான்.

இந்த சூழலில்தான் மு.க.ஸ்டாலின் திமுகவின் (DMK) அடிமட்ட உறுப்பினரில் இருந்து படிப்படியாக திமுகவின் தலைமையை நோக்கி மிக நிதானமாக மு. கருணாநிதியால் நகர்த்தப்பட்டு வந்தார். இதனால் கட்சியின் நீண்டகால நிர்வாகிகளும், தொண்டர்களும் மு..க. ஸ்டாலினை மெல்ல ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

தந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை ஏனோ மு.க.ஸ்டாலின் பின்பற்றவில்லை. அதற்கு காரணமாக தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டதாக சொன்னாலும், அந்த வேகமான நகர்வு மக்களின் புருவங்களை உயர்த்த வைத்தது. தொண்டர்களின் முகத்தை சுளிக்க வைத்தது.

மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும் கூட, அவருடைய குடும்பத்தினரின் மறைமுகமான ஆதிக்கம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மட்டத்தில் இருந்து கிளைச் செயலர் மட்டம் வரை பரவியிருந்தது.

மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதியை ஏற்றுக் கொண்ட அளவுக்கு மருமகன் சபரீசனின் தலையீட்டை கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிட்டத்திட்ட அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலா நடராஜன் கோலோச்சியது போன்ற தோற்றம் சபரீசன் மீது விழுந்ததை எல்லோருமே பார்த்து வந்தனர்.

திமுக (DMK) கூட்டணி விஷயங்களில் கூட குடும்ப ஆதிக்கம் இருந்ததாக பேசப்பட்டு வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாவிட்டாலும், மு.க. ஸ்டாலினின் நகர்வுகள் ஒரு பொம்மை முதல்வர் என்ற விமர்சனத்தை நோக்கி நகர்த்தியது.

திறமைக்கும், உழைப்பிற்கும் மதிப்பளிக்காமல் வாரிசு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து பதவிகள் வழங்கப்படுவதை திமுகவில் (DMK) உள்ள இளைஞர்கள் ஏற்றுக் கொண்ட அளவுக்கு, இன்றைய இளைஞர்கள் சிறிதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்த மனநிலையே குடும்ப அரசியலுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியை புதிதாக வாக்களிக்கத் தொடங்கிய இளைஞர்களிடத்தில் உருவாக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு போதுமானதாக இருந்தது.

திமுக வீழ்ச்சிக்கு 2-ஆவது காரணம்

திமுக (DMK) ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்களில் நடைபெற்ற நுட்பமான முறைகேடுகள் மக்கள் மத்தியில் அம்பலமாகின. இந்த விஞ்ஞான ஊழல் என்ற விமர்சனம் அரசின் நம்பகத்தன்மையைப் பாதாளத்திற்குத் தள்ளியது.

ஆதாரங்கள் ஏதும் சிக்காத வகையில் மிகவும் தந்திரமாகச் செய்யப்பட்ட ஊழல்கள் (Corruption) குறித்த விழிப்புணர்வு சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சாமானிய மக்களையும் சென்றடைந்தது. இது மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீதான கடுமையான கோபத்தை உருவாக்கியது.

குறிப்பாக அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து திமுக (DMK) ஆட்சியிலும் உள்ளாட்சித் துறையில் தலைவிரித்தாடிய ஊழல் முறைகேடுகளை மக்கள் நேரடியாக அனுபவித்தார்கள்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் பதவிக்கு வந்தவர்கள் எல்லோருமே பாரபட்சமின்றி மக்களின் வரிப்பணத்தை சூறையாடினார்கள்.

கடைகளில் 25 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய floor cleaner-ஐ ரூ.300 விலைக்கு திமுகவினர் இடம்பெற்ற உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

கணினி தொழில்நுட்பம் மூலம் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்கள் இலவசம் என்றாலும் அதற்கு சாதாரண மக்கள் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1000 வரை மறைமுகமாக நிர்வாகத்துக்கு லஞ்சமாக தர வேண்டியிருந்ததை மு.க. ஸ்டாலின் அறிந்திருக்க மாட்டார்.

இன்றைக்கும் ஆயிரக்கணக்காண மக்கள் குடும்ப அட்டைக்கு அதிகாரிகளின் நடவடிக்கை மெத்தனத்தால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ஆளும் கட்சி துண்டு போட்டவன், எதிர்க்கட்சி துண்டு போட்டவன் சாதிக்க முடிந்ததை சாதாரண குடிமகனால் அரசு அலுவலகங்களில் சாதிக்க முடியவில்லை.

கூட்டுக் கொள்ளை

இந்த லஞ்ச, லாவண்யத்துக்கு சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதும் மற்றொரு காரணமாக இருந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆக, உள்ளாட்சி நி்ரவாகிகளும், அலுவலர்களும் கடந்த 5 ஆண்டுகளில் கைக்கோர்த்து அடித்த கொள்ளையை மதிப்பிட முடியாது.

அதிமுக ஆட்சி காலத்தில் இந்த முறைகேடு கிடையாதா என்ற எதிர்கேள்வியை திமுக (DMK) உள்ளிட்டவை இன்றைக்கு கேட்கலாம்.

உண்மையில் அதிமுகவினர் அடித்த கொள்ளையை பார்த்துவிட்டு, மாற்றுக் கட்சிகள் எதுவும் இல்லை. இப்போது திமுகதான் (DMK) உள்ளது. கருணாநிதிக்கு பிறகு தலைமை வகிக்கும் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் இந்த முறைகேடுகளுக்கு முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் 2021-இல் மக்கள் திமுகவுக்கு (DMK) வாக்களித்தார்கள்.

ஆனால், மக்களுக்கு இதுவும் ஏமாற்றமாக முடிந்தது. டெண்டர்களில் கூட ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பங்கு பிரிப்பதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள், தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது ஏனோ திமுக (DMK) தலைமைக்கு தெரியாமல் போய்விட்டது.

வாய் மூடி மௌனித்த ஊடகங்கள்

இதனால், அதிமுக ஆட்சியில் நீடித்த முறைகேடுகளை திமுக (DMK) தொடர்ந்ததை ஊடகங்கள், பத்திரிகைகள் சுட்டிக் காட்டினாலும், அவர்களின் வாயை அடைக்க குடும்ப உறவுகள் குறிப்பாக சபரீசன் போன்றவர்களின் ஆலோசனையின் படி விளம்பரங்கள் மூலம் அவை வாயடைப்பு செய்யப்பட்டன என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

இதனால் திமுகவின் (DMK) தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டிய இடத்தில் இருந்த பத்திரிகைகள், ஊடகங்கள் மு.க.ஸ்டாலினை வானளாவ புகழ்ந்து தள்ளின.

அந்த புகழ் மயக்கத்தில் இருந்த மு.க. ஸ்டாலின் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கையை இழப்பதை உணரவில்லை.

அத்துடன் தேர்தல் நேரத்தில் அதிமுகவை போல சில கவர்ச்சிகரமான அறிவிப்புகள், பண உதவிகள், தற்காலிக தீர்வுகள், தேர்தல் நேரத்தில் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் மனநிலை உடைய மக்களை கவர்ந்து வெற்றியை பெற்றுவிடலாம் என திமுக தவறான கணிப்பை செய்துவிட்டது.

இதேபோன்ற மனநிலை காரணமாகவே ஒரு கட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு மெல்ல குறையத் தொடங்கியதையும் கூட ஸ்டாலின் உணரவில்லை.

திமுகவின் (DMK) பகட்டான விளம்பரங்கள் மூலம் உள்ளே புரையோடிப்போன ஊழலையும், சீர்கேடுகளையும் மறைத்துவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது பொய்துப்போயிருக்கிறது.

தமிழ் உணர்வு, மத்திய அரசின் மாநில அரசு உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே திமுகவை (DMK) மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடும் என்று ஸ்டாலின் போட்ட கணக்கு இப்போது தவறாகப் போய்விட்டது.

மு.க. ஸ்டாலினும் அதிமுக செய்த அதே தவறுகளை பின்தொடர்ந்த காரணத்தால்தான், கொளத்தூர் வாக்காளர்கள் கூட தன்னை புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை இப்போதாவது அவர் உணர வேண்டும்.

ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை வைத்து தேர்தலின் போது வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மமதைக்கு மக்கள் தகுந்த பாடமாக இந்த தேர்தல் அமைந்துவிட்டது. இதுதான் இன்றைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு சாதகமான அம்சம் என்பதையும் மறுக்க முடியாது.

திமுகவில் பறிக்கப்பட்ட சுதந்திரம்

திமுகவின் (DMK) தோல்விக்கு 3-ஆவதாக அமைந்துள்ள காரணம் இதுதான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட மரியாதையும் கருத்துச் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்தச் சுதந்திரம் சமீப காலமாக திமுகவில் (DMK) முற்றிலுமாகப் பறிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கட்சியின் வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த மூத்த தலைவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சிலர் கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்களாகவும், கோடிக் கணக்கில் பணம் சேர்த்தவர்களாகவும் இருந்தாலும், கட்சியின் அடிமட்டம் வரை தொண்டர்களை ஏதேதோ மாயமந்திரங்கள் செய்து கட்டுக்கோப்பாக வழி நடத்தி வந்திருப்பதை மறுக்க முடியாது.

அவர்களின் ஊழல் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்த மு.க.ஸ்டாலின், அவர்களை தவறாக கையாள முயன்றதும் கூட தோல்விக்கு வித்திட்டது.

கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி காலத்தில் ஓரளவுக்கு பொதுமக்களை மதித்து வந்த மூத்த நிர்வாகிகள் பலரும், மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் மக்களை துச்சமென மதித்தார்கள் என்பதும் கூட உண்மை.

இவர்களை பார்க்க வரும் தொண்டர்கள் எல்லோருக்குமே தன்னை எஜமானர்களாக நினைக்க வேண்டிய நிலைக்கு உயர்ந்து நின்றார்கள் என்பது அதைவிட கசப்பானது.

இதனால் விரக்தி அடைந்த அடிமட்ட தொண்டர்களும் கூட இந்த முறை திமுகவுக்கு வாக்களிக்காமல் போயுள்ளனர் என்பதை களநிலவரம் சுட்டிக் காட்டுகிறது.

கூட்டணி அமைப்பதில் கூட, அனுபவம் வாய்ந்த தலைவர்களின் ஆலோசனைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஒரு சில அதிகார மையங்களின் முடிவுகள் மட்டுமே திணிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டும் திமுக மீது இந்த முறை விழுந்திருக்கிறது.

தோழமை கட்சிகளிடம் திமுக ஒரு சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்ததும் கூட அக்கட்சிகளின் தொண்டர்கள் திமுகவை புறக்கணிக்க காரணமாக அமைந்தது.

குறிப்பாக, மிகக் குறைந்த வாக்குகளை கொண்ட தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க 10 தொகுதிகளை இழந்தது.

தொகுதிக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் வாக்குகளை பெற்ற கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது போன்ற சர்வாதிகார மனோபாவம் திமுகவின் தோல்விக்கு மற்றொரு காரணம்.

பிடிஆர் போன்ற நேர்மையாளர்களின் பரிதாப நிலை

நான்காவதாக, பிடிஆர் பழனிவேல்ராஜன் போன்ற மிகவும் திறமையான, படித்த, நேர்மையான தலைவர்களைக் கட்சியில் சுதந்திரமாக இயங்க விடாமல் தடுத்தது மாபெரும் அரசியல் பிழை.

இத்தகைய செயல்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே சில ஆண்டுகளாகவே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்சியின் நற்பெயரைக் காப்பதற்காகவும், அரசு நிர்வாகத்தைச் சீரமைப்பதற்காகவும் அறிவுப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்த தலைவர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டனர். இது கட்சியின் அறிவுசார் தளத்தை (Intellectual Base) வெகுவாகப் பலவீனப்படுத்தியது.

கட்சியில் நேர்மையானவர்கள் வளர்வதற்கு, ஊழல் பெருச்சாளிகள் பலரும் தடையாக இருந்தனர் என்பதை அடிமட்ட தொண்டர்களே இப்போது பேசி அங்காலய்க்கிறார்கள்.

திறமையான, நேர்மையானவர்களை கட்சியில் உள்ள ஊழல்வாதிகள், அதிகார மனப்போக்கு படைத்தவர்கள் வளரக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு இந்த தேர்தலில் பணிபுரிந்தார்கள் என்பதையும் தேர்தல் களத்தில் காண முடிந்தது.

திறமைக்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்காத எந்தவொரு அமைப்பும் மக்கள் மன்றத்தில் நீண்ட காலம் நிலைக்க முடியாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு உணர்த்துகின்றன.

இன்றைய இளம்தலையின் நோக்கம்

இன்றைய இளம்தலைமுறைக்கு அரசியல் புரிதல் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் பார்வையில் நேர்மையற்ற நிர்வாகத்தை புறம்தள்ள ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் இருந்ததை மறுக்கமுடியாது.

விஜயின் ஈர்ப்புத் தன்மையால் கவரப்பட்ட ரசிக குணம் மிக்க இளைஞர் பட்டாளம் அவருக்கு வாக்களித்த நிலையில், திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். இளைஞர் பட்டாளம் விரும்பும் விஜய்க்கு இந்த முறை ஓட்டு போடலாம் என்ற மனநிலைக்கு நடுநிலை வாக்காளர்களும் தள்ளப்பட்டார்கள்.

இதுதான் இன்றைக்கு விஜய் 108 சட்டப் பேரவை தொகுதிகளை பெற காரணமாக இருந்தது.

இதை படித்தீர்களா? கமலின் திடீர் முடிவு: மக்கள் நீதி மய்யம் ஏமாற்றப்பட்டதா?

விஜய்க்கு இது நிரந்தர வெற்றி அல்ல!

இளம்தலைமுறையை வீடுகளில் எவ்வித பாதிப்பும் இன்றி வளர்த்த பெற்றோர், அவர்களுக்குச் சரியான அரசியல் புரிதலைச் சொல்லிக் கொடுக்காமல் போனதன் விளைவாகவே ஒரு வெற்றிடம் உருவானது.

அந்த வெற்றிடம்தான் உண்மையில் இன்றைக்கு விஜய்க்கு இவ்வளவு பெரிய வெற்றி வாய்ப்பை வழங்க காரணமாக அமைந்தது என்பதும் மற்றொரு உண்மை.

முந்தைய காலக்கட்டங்களில், கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், சமூக பொறுப்புணர்வு கொண்டவர்களாக, தமிழ், தமிழ் பண்பாடு, நேர்மை போன்றவற்றை கதைகள் மூலமாக சொல்லிக் கொடுத்தன் விளைவாக ஒரு அரசியல் புரிதலை 18 வயது நிரம்பிய மாணவன் அடைய முடிந்தது.

ஆனால் இன்றைக்கு அரசியல் புரிதலை விட, பொழுதுபோக்கு, நையாண்டி, யாரை பற்றியும் கவலைப்படாத மனப்போக்கு, நாகரீகம் என்ற பெயரில் மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றுதல், குடும்ப உறவுகளுக்கு மதிப்பளிக்காமை, தானே ராஜா தானே மந்திரி போன்ற ஒரு தலைமுறை உருவெடுத்திருக்கிறது.

இந்த தலைமுறை எது நல்லது, எது கெட்டது என்பதை உணர முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையை எட்டியிருப்பதும் கூட விஜய் திடீரென அரசியல் களத்தில் வெற்றி வாய்ப்பை பெற காரணமாக அமைந்துவிட்டது.

இது ஒரு வகையில் ஆட்சி அதிகாரத்தில் கடந்த அரை நூற்றாண்டாக ஊழலை தாரகமந்திரமாக கொண்டிருந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் பாடம் புகட்டியதுதான் ஆச்சரியமான விஷயம்.

மக்கள் மனங்களை வெல்ல விஜய் என்ன செய்ய வேண்டும்?

சினிமா என்ற போதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் விஜய், அரசியல் ரீதியாக மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்து அவர்களை கவர முடியும் என்பதை திட்டமிட வேண்டும்.

விஜய் உண்மையில் தமிழக மக்களால் முழு மனதோடு தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர் அல்ல. இதை முதலில் அவர் உணர வேண்டும்.

அவருக்கு மொத்தம் வாக்களித்தவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். மீதமுள்ள 65 சதவீதம் மக்கள் இன்னமும் விஜயை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே நேரத்தில் விஜய்க்கு அறுதி பெரும்பான்மை என்ற 117 என்ற வெற்றி இலக்கை எட்ட மக்கள் உதவவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் ஒரு தொங்கு சட்டசபையையே விஜய் அமைக்க வேண்டிய நிலை இப்போது இருக்கிறது. ஏற்கெனவே ஆட்சியில் பங்கு என்ற அறைகூவலோடு வலம் வந்த விஜய்க்கு ஒரு நல்ல வாய்ப்பு இது.

அதனால் ஆட்சியில் பங்கு என்ற ரீதியில் இன்றைக்கு வெற்றிபெற்ற திமுக அணியில் உள்ள ஒருசில சிறிய கட்சிகள், அதிமுக அணியில் உள்ள ஒருசில சிறிய கட்சிகள் ஆதரவு அளிக்கக் கூடும்.

இதை நல்ல முறையில் பயன்படுத்தும் அதே வேளையில், திமுகவை போல, அதிமுகவை போல விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் மனப்போக்கு விஜய்க்கோ, அவரது வெற்றி வேட்பாளர்களுக்கோ, கட்சியின் மாவட்ட நிர்வாக ரீதியிலான நிர்வாகிகளுக்கோ இருக்குமேயானால் 5 ஆண்டுகளுக்கு கட்டாயம் ஒதுக்கி வையுங்கள்.

ஆட்சிக்கு வந்ததே, சம்பாதிக்கத்தான் என்று கட்சித் தலைமை முதல் நிர்வாகிகள் வரை நினைத்தால் அடுத்த முறை இத்தகைய வாய்ப்பை தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் அளிக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

அதனால், எதிர்காலப் பணிகள் முற்றிலும் லஞ்ச, லாவண்யம் அற்ற, நேர்மையான அரசாக (Honest Government) அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே விஜயின் எதிர்காலத்தை காப்பாற்றும்.

அத்துடன் இன்றைக்கு தேர்வு செய்யப்பட்ட தவெக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களை திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் போல் எஜமானர்களாக நினைத்துக் கொண்டு மக்களை துச்சமென மதிக்கும் கடந்தகால எம்எல்ஏ கலாசாரத்தை கைவிட வேண்டும்.

மக்கள் எளிதில் சந்திக்கும் ஒரு நண்பனாக, மக்களை நோக்கி சென்று குறைகளை கேட்கும் ஊழியனாக இருக்க வேண்டும்.

ஊராட்சி, மாநகராட்சி, கட்டுமானங்கள், பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் சாலைப் பணிகள் என அனைத்திலும் திமுக மற்றும் அதிமுகவைப் போல் கூட்டுக்கொள்ளை அடிக்காமல் இருக்க வேண்டும்.

அந்தத் தவறுகளை நீக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தவேகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இந்த விஷயத்தை இப்போது விஜய் உணராவிட்டால், அவரது எதிர்காலம் இன்றைய அரசியல் கட்சிகளை விட மிக மோசமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மதுக்கடைகளை ஒழிக்கப் போகிறேன் என்று லாட்டரி சீட்டை கொண்டுவரும் நோக்கத்தை ஒரு வேளை விஜய் கொண்டிருப்பாரேயானால், அது அவரது ஆட்சிக்கு வைக்கப்படும் மிகப்பெரிய வேட்டு என்பதையும் எச்சரித்தாக வேண்டும்.

திமுகவுக்கு எச்சரிக்கை

எதிர்க்கட்சி வரிசையில் அதிமுகவை விட திமுகவே (DMK) மேல் என்ற ரீதியில்தான் அந்த தகுதியை மக்கள் அளித்திருக்கிறார்கள்.

அத்துடன் சட்டப் பேரவையில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி வெற்றி பெற்றும் அமர முடியாத சூழல் ஏற்பட்டது போன்ற நிலை மு.க. ஸ்டாலினுக்கு ஏற்படவில்லை.

காரணம் மக்கள் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் எதிர் வரிசையில் அமர்ந்து செயல்படுவதை விட, கட்சியின் தலைமைக்கு முழு பொறுப்பேற்று அதை தூய்மை செய்யும் பணியையும், மக்களுக்கு நேர்மையான முறையில் தொண்டாற்றும் வகையிலான நேர்மையாளர்களை கட்சியில் உயர்த்திப் பிடிக்க தொடங்க வேண்டும் என்று அவரை மக்கள் தோல்வியுற செய்திருக்கிறார்கள்..

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாரிசாக வரவேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் ஆசையும் கூட இப்போது நிறைவேறியிருக்கிறது.

இதை படித்தீர்களா? Tamil Nadu BJP: Massive Shocking அரசியல் தந்திரங்கள்!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வெற்றி மூலம் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அமரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திமுக (DMK) தலைமையும், அக்கட்சியில் இதுவரை கோடிக்கோடியாக பல தலைமுறைக்கு பணம் சேர்த்தவர்களும், இனியாவது மக்களுக்கு உண்மையான தொண்டாற்றும் மனநிலையோடு காய் நகர்த்த தொடங்க வேண்டும்.

நேர்மையானவர்கள், குறிப்பாக கம்யூனிஸ சித்தாந்த தோழர்களிடம் காணப்படும் நல்ல குணாதியசங்களைக் கொண்டவர்களை எதிர்காலத்தில் வேட்பாளர்களாக நிறுத்துங்கள். பணம் இருப்பவன்தான் பலசாலி என்ற நிலையை கட்சி மட்டத்தில் இருந்து அகற்றுங்கள்.

இந்த விடியோவை பார்த்தீர்களா – ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கான Assured Pension Scheme

எதிர்காலத்தில் கட்சியில் உழைக்கும் அடிமட்ட தொண்டனும் கூட சட்டப் பேரவைக்கு செல்லும் எம்ஜிஆர் பாணி அரசியலை கையில் எடுங்கள். அப்போதுதான் தலைமைக்கு கட்டுப்பட்ட நிர்வாகத்தை உங்களால் உருவாக்க முடியும்.

உங்களின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பை அளிக்க வழியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்றைக்கு அதிமுகவுக்கு ஏற்பட்ட கடைசி இடம்தான் உங்கள் கட்சிக்கும் ஒதுக்கப்படும்.

அதிமுக செய்ய வேண்டியது என்ன?

அதிமுக மாநில உரிமைகளை கொஞ்சம்கொஞ்சமாக தன்னுடைய சுயநலத்துக்காக அடகு வைத்ததை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சுயநலத்தோடு, ஒருசில நிர்வாகிகளோடு கைக்கோர்த்துக்கொண்டு யார் ஆட்சியிலும் இருந்தாலும், வரவேண்டிய பங்கு வந்துவிடும் என்ற போக்கை இனியும் அதிமுக கடைபிடிக்குமானால் அதனுடைய எதிர்காலம் இப்போதைய சூழலை விட மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுவிடும்.

மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மூலம் மேற்கொள்வது போன்ற பணிகளை கடந்த கால எஜமான தோரணையை கைவிட்டு களத்தில் இறங்கிச் செல்ல பழகிக்கொள்ளுங்கள்.

நாட்டில் அரசியலில் ஊழல் மிகுந்த நிர்வாகங்களைக் கொண்டதாக மாற்றிய பெருமை திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. இதை உணர்ந்தாவது எதிர்காலத்தை மக்கள் சேவை மனத்தை வளர்த்துக் கொண்டு, சுரண்டல் தத்துவத்தை கைவிட பழகிக் கொள்ளுங்கள். அதற்காகவே இன்றைக்கு 3-வது இடத்தை மக்கள் அளித்திருக்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் இருந்து 2-ஆவது இடத்தை பிடிக்க முதலில் ஒரு நேர்மையான கட்டமைப்பு கொண்டவர்களாக மாறத் தொடங்குங்கள். இல்லாவிட்டால் 2031 தேர்தலில் அதிமுக என்ற கட்சி இருந்ததற்கான அடையாளம் கூட மறைந்துவிடும்.

பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், பணத்தால் ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற மனநிலையை இப்போதாவது இரு திராவிட கட்சிகளும் கைவிட வேண்டும். பணத்தின் மூலம் சாதிக்கும் தன்மை உங்களிடம் இருந்து விடுபட்டால்தான் நாளைக்கு உங்களை நம்பி மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள்.

இல்லாவிட்டால், நாளைக்கு உதயமாகும் மற்றொரு கட்சிக்கு வாய்ப்புக் கதவு திறக்கும்.


திமுக தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

குடும்ப அரசியல், விஞ்ஞான ஊழல், மற்றும் நேர்மையானவர்களை, திறமையானவர்களை ஓரங்கட்டியதே முக்கிய காரணங்களாகும்.

தவேக வெற்றிக்கு யார் காரணம்?

அரசியல் மாற்றத்தை விரும்பிய, பணத்திற்கு விலைபோகாத இளம்தலைமுறையினரின் வாக்குகளே இதற்கு முக்கிய காரணம்.

விஞ்ஞான ஊழல் என்றால் என்ன?

அரசுத் திட்டங்களில் நேரடியாகச் சிக்காதவாறு, மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் முறைகேடுகள் விஞ்ஞான ஊழல் எனப்படும். இவற்றுக்கான சாட்சியங்களை திரட்டுவதும், நிரூபணம் செய்வதும் மிகவும் கடினம்.

பிடிஆர் பழனிவேல்ராஜன் ஏன் ஓரங்கட்டப்பட்டார்?

அவரது நேர்மையான மற்றும் வெளிப்படையான கருத்துகள் கட்சித் தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதால் அவர் ஓரங்கட்டப்பட்டார். பெயரளவில் ஒரு அமைச்சர் பதவி தரப்பட்டது. தேர்தல் களத்தில் அவரை தோற்கடிக்கவும் மாற்று வியூகங்கள் வகுக்கப்பட்டதன் காரணமாக தோற்றுப்போனார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

அவர்கள் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை வழங்கினால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

இளைஞர்கள் ஏன் தவேகவை ஆதரிக்கின்றனர்?

பாரம்பரிய கட்சிகளின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலால் ஏற்பட்ட அதிருப்தியே இளைஞர்களை மாற்றுப்பக்கம் திருப்பியது.

குடும்ப அரசியல் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் உயர்பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பது குடும்ப அரசியல் ஆகும்.

தவேக அரசு எப்படிச் செயல்பட வேண்டும்?

ஊராட்சி முதல் மாநகராட்சி வரை எவ்வித லஞ்சமும், கூட்டுக்கொள்ளையும் இன்றி மிகவும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களால் எளிதில் அணுகக் கூடியவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

2026 தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பண பலத்தை விட மக்கள் சக்தியே மேலானது என்பதையும், நேர்மையான மாற்று அரசியலை தமிழகம் நாடுகிறது என்பதையும் உணர்த்துகிறது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உண்டா?

உண்டு. எம்ஜிஆர் பாணியில் ஒரு சாதாரண தொழிலாளியும் சட்டப் பேரவை உறுப்பினர் தகுதியை பெறும் வகையில் நேர்மையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இப்போது களத்தில் இருப்பவர்களைத் தவிர இதர குடும்பத்தினரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

Politics #DMKDefeat #TVKVictory #ElectionAnalysis #YouthPowerTN #CorruptionFreeGovt #TNPoliticalChange #MithiranNews

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *