நேர்மை ஏழைச் சிறுவனுக்கு தந்த மாபெரும் பரிசு

பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த பரிசும்” கதை எடுத்துச் சொல்கிறது.

ஏழை சிறுவன்

அவனுடைய பெயர் வாசு. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார்.

கூவம் ஆற்றங்கரையோரம் ஒரு குடிசைப் போட்டு வசித்து வந்த அவனுடைய தாய் ரேவதி, மகனை படிக்க வைக்க ஆசைப்பட்டாள்.

ஒருசில அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அதிகாலையிலேயே சென்று வாசல் பெருக்கி, கோலமிட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு மகனை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கத் தொடங்கினாள்.

சிறுவன் வாசு, 5-ஆம் வகுப்பை தொட்டபோது, ரேவதிக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் அவளை படுத்த படுக்கையாக்கியது. விவரம் அறியாத சிறுவன் வாசுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இறந்துபோன தாய்

ஒரு நாள் இரவு அவள் திடீரென இறந்து போனாள். தாய் இறந்ததுகூட தெரியாமல் காலை வரை அவளை கட்டிப்பிடித்து உறங்கிய அவன், மறுநாள் காலை அவளுடைய கண்கள் திறந்தபடியே இருப்பதைக் கண்டு பயந்து போனான்.

தாயை எத்தனையோ முறை தட்டி எழுப்பியும் அவள் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் அவன் ஓடிப்போய் சொன்னபோது அவர்கள் வந்து பார்த்துவிட்டு, உன் தாய் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டது என்றபோது அவனுக்கு கண்கள் இருண்டு போனது.

அவள்தான் அவனுடைய உலகமாக இருந்தாள். ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட அவனுடைய பள்ளிப் படிப்பு கனவாக மாறிப்போனது.

ஆதரவு கரம் நீட்டிய மற்றொரு தாய்

அருகில் இருந்த குடிசையில் வசித்து வந்த பார்வதி அம்மாள், நீயும் என் பிள்ளைதான் என்று பாசம் காட்டி சில நாள்களாக உணவு கொடுத்து வந்தார்.

அவரும் ஆதரவற்றவர்தான். அவளுடைய மகன் செந்தாமரை வாசுவின் வயதை ஒத்தவன்தான். அவனுடைய பள்ளிப் படிப்பு நிறைவேறாமல் போனது. அதனால் அவன் குப்பைகளில் கிடக்கும் பொருள்களை சேகரிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த கூவத்தின் ஓரம் கட்டப்பட்டிருந்த குடிசைகளை மாநகராட்சி அகற்றியது. அதில் வாசுவின் குடிசையும் காணாமல் போனது.

குடிசைவாசிகளுக்கு ஏதோ ஒரு இடம் தரப்போவதாகச் சொன்னபோது, எல்லோரும் புதிய இடத்தை நோக்கி புறப்பட்டார்கள்.

தனித்து நின்ற சிறுவன்

பார்வதி அம்மாவும் புறப்பட்டாள். பலமுறை அவள் வாசுவை தன்னோடு வருமாறு அழைத்தும் அவளோடு வர மறுத்துவிட்டான். தாய் இருந்த இடத்தை விட்டு செல்வதற்கு அவனுக்கு மனமில்லாமல் தவித்தான்.

இதனால் அவனை பிரிய மனமில்லாதவளாக வேறு வழியின்றி தன் மகன் செந்தாமரையுடன் பார்வதி அம்மாள் புறப்பட்டு போய்விட்டாள்.

பார்வதி அம்மாள் உணவளித்து வந்த வரை அதைப் பற்றி சிந்திக்காமல் இருந்து விட்டோமே. இப்போது நானே உழைத்து சம்பாதித்தால்தான் உணவு சாப்பிட முடியும் என்பதை அப்போதுதான் வாசு உணர்ந்தான்.

அவன் பல இடங்களில் வேலைக் கேட்டு சென்றபோது, சிறுவனாக இருக்கும் அவனுக்கு யாரும் வேலை தர முன்வரவில்லை. இரண்டு நாள் பட்டினி கிடந்த அவன், சாலையோரத்தில் படுத்துறங்கினான்.

பிழைக்க வழி தெரிந்தது

அதிகாலை நேரத்தில் நாய்கள் குலைக்கும் சத்தத்தில் எழுந்த அவன், எதிரில் ஒரு குப்பைத் தொட்டியில் முதியவர் ஒருவர் குப்பைகளை கிளறி, பிளாஸ்டிக் பாட்டிகளை சேகரித்து சாக்குப் பையில் போடுவதைப் பார்த்தான்.

உழைப்பதற்கு தயாராக காத்திருந்த அவனுக்கு இப்போது கண் முன்னே ஒரு வேலை இருப்பதைப் பார்த்ததும் சந்தோஷம் தாளவில்லை.

முதியவரை பார்த்து, இனி நான் உங்களுக்கு உதவிக்கு வருகிறேன். கிடைக்கும் பணத்தில் எனக்கு 3 வேளை சாப்பாடு போட்டால் போதும் என்றான் வாசு. தனி ஆளாக தவித்த அந்த முதியவரும், அவனை தன்னுடைய வேலைக்கு அவனை துணையாக சேர்த்துக் கொண்டார்.

ஒரு சில ஆண்டுகள் கடந்த நிலையில், முதியவரும் இறந்து போனார். அவர் சாலையோரம் குடிசைப் போட்டு வசித்து வந்த இடம் இப்போது வாசுவுக்கு சொந்தமானதாக மாறியது.

நேர்மைக்கு கிடைத்த பரிசு

தனி ஆளாக குப்பைகளில் உள்ள பொருள்களை சேகரித்து பணம் ஈட்டத் தொடங்கிய வாசு, தன்னுடைய தாய் “நேர்மை தவறாதே. உழைப்புதான் உன்னை உயர்வடையச் செய்யும். படித்து பெரியவனாகி நீ 4 பேருக்கு வேலை கொடு” என்று சொல்வதை அடிக்கடி நினைத்துக் கொள்வான்.

சில ஆண்டுகள் இப்படியே உருண்டோடியது. 21 வயதைக் கடந்த அவன் இப்போது ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கியிருந்தான். சாப்பாடுக்கு போக மீதமிருந்த தொகையை தொடர்ந்து சேமிக்கத் தொடங்கினான்.

ஒரு நாள் அவனுடைய வங்கிக் கணக்கில் யாரோ 10 லட்சம் ரூபாய் போட்டிருந்தார்கள். நேர்மையாக வாழ வேண்டும் என்று தாய் சொன்னது அப்போது அவனுக்கு ஞாபகம் வந்துவிடவே, அந்த பணத்தின் மீது அவனுக்கு ஆசை ஏற்படவில்லை.

உடனடியாக அவன் வங்கி மேலாளரை சந்தித்து விவரத்தைச் சொன்னபோது, வங்கி மேலாளர் அவனுடைய நேர்மையைக் கண்டு வியந்து போனார்.

குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டிகளையும், அட்டைப் பெட்டிகளையும் பொறுக்கி வாழும் உன்னிடம் இந்த நேர்மையை நான் எதிர்பார்க்கவில்லை என்று பாராட்டினார்.

உடனடியாக தவறாக போடப்பட்ட பணத்தை, திருப்பி அந்த பணத்துக்கு உரியவரிடமே தகவல் அளித்து மாற்றியபோது, அந்த நபர் வாசுவிடம் செல்போனில் பேச விரும்பினார்..

வாசுவும் அவரிடம் சிறிது தயக்கத்தோடு பேசினான். அப்போது அந்த எதிர் முனையில் இருந்தவர், நான் ஒரு வைர வியாபாரி. எனக்கு இந்த 10 லட்சம் ரூபாய் வேறு கணக்குக்கு தவறாக போவதால் பெரிய இழப்பை ஒன்றும் சந்தித்திருக்க மாட்டேன்.

ஆனால் தவறாக ஒரு பெரிய தொகை உன் வங்கிக் கணக்குக்கு வந்தபோது கொஞ்சம் கூட சபலமின்றி நீ செயல்பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது. உன்னே போன்ற ஒரு நேர்மையாளனைத்தான் இதுவரை தேடிக் கொண்டிருந்தேன்.

நீ என்னிடம் வந்துவிடு. நான் உனக்கு வேலை தருகிறேன் என்று சொன்னபோது வாசுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

வங்கி மேலாளர் அந்த வைர வியாபாரியிடம் பேசும்போது, இந்தப் பையன் அதிகம் படிக்காதவன் என்றபோது, எனக்கு படிப்பு தேவையில்லை. திறமையும், உண்மையும்தான் தேவை. அதனால் உடனே அவனை என்னிடம் அனுப்பி வையுங்கள் சென்று சொல்லிவிட்டார்.

வேலையில் சேர்ந்த வாசு

வங்கி மேலாளரின் வற்புறுத்தலை அடுத்து அவன் அந்த வைர வியாபாரியிடம் சென்றடைந்தான்.

அது முதல் அவனுடைய வாழ்க்கை தலைக்கீழாக மாறிப்போனது. வைர வியாபாரத்தின் அனைத்து நுணுக்கங்களையும் அந்த வியாபாரி வாசுக்கு கற்றுத் தந்து தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவனாக தன்னிடம் வைத்துக் கொண்டார்.

வருமானத்தில் ஒரு பகுதியை அவனுடைய வங்கிக் கணக்கில் போடத் தொடங்கினார். இப்போது வாசு நகரின் முக்கியப் பகுதியில் ஒரு மாடி வீட்டுக்கு சொந்தக்காரனாக மாறிப்போனான்.

நகரில் முதலாளிக்கு சொந்தமான கிளையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பாளனாக மாறினான். முதலாளி, அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்தும் வைத்தார்.

நன்றி மறவாத வாசு

ஒரு நாள் அவன் தன்னுடைய கடை வாசலில் யாரோ ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளி தயங்கி நிற்பதைப் பார்த்த அவன், உடனடியாக அந்த இளைஞனை உள்ளே அழைத்து வந்து அமர வைத்தான்.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல. பார்வதி அம்மாவின் மகன் செந்தாமரை என்பதை முகசாயலில் இருந்து தெரிந்துகொண்டுதான் அவனை உள்ளே அழைத்து வந்தான்.

பார்வதி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்பதையும், பல இடங்களில் உன்னையும், பார்வதி அம்மாவையும் தேடியும் பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போதாவது உன்னை பார்க்க முடிந்தது என்று பழைய பாசத்தோடு அவனுடைய கைகளை பிடித்து தடவினான் வாசு.

பார்வதி அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவளுக்கு மருந்து வாங்கக் கூட காசு இல்லை. நான் ஒரு நாள் குப்பையில் இருந்து இந்த கல்லை எடுத்தேன். அது விலை உயர்ந்த கல்லாக இருக்கும் என்று நான் சேகரித்த பொருள்களைக் கொடுத்து வரும் கடைக்காரர் சொன்னார்.

அதனால் அதை வீட்டில் எடுத்து வைத்திருந்தேன். அம்மாவுக்கு சில நாள்களாகவே உடம்பு சரியில்லை. இன்றைக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் போனதால் இந்த கல்லை உங்கள் கடைக்கு அருகில் உள்ள கடைக்கு வந்து காட்டினேன்.

அவர் இது சாதாரணக் கல்தான். வேண்டுமானால் 50 ரூபாய் தருகிறேன் என்றார். எனக்கு மருந்து வாங்க 100 ரூபாய் தேவைப்பட்டது. அதனால் தயக்கத்தோடு அவரிடம் இருந்து கல்லை வாங்கிக் கொண்டு அடுத்தக் கடையாக இருக்கும் உன் கடை வாசலில் வந்து நின்றேன்.

நீ இங்கிருப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சோகத்தோடு சொன்னான் செந்தாமரை.

கவலைப்படாதே… இப்போதே அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து நல்ல சிகிச்சை அளித்து குணப்படுத்துவோம் என்று அவனை அழைத்துக் கொண்டு அவன் இடத்துக்கு புறப்பட்டான்.

பார்வதி அம்மா குணடைந்ததும் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். செந்தாமரையை அழைத்து ஒரு நாள் விலை உயர்ந்த கல்லாக இருக்கும் என்று சந்தேகப்பட்டு என்னிடம் கொண்டு வந்து தந்தாயே… அது உண்மையில் விலை உயர்ந்த நீலக்கல்.

அதை பட்டை தீட்டி விலை மதிப்பை செய்தபோது, இந்தியாவில் உள்ள பெரிய கற்களில் இது ஒன்றாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு இன்றைக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் இருக்கும்.

அதை என் முதலாளியிடம் கொடுத்து பணத்தை உனக்குத் தர ஏற்பாடு செய்திருக்கிறேன். இனி நீ அந்த பணத்தில் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கிவிட்டு அம்மாவை அழைத்துச் செல் என்றான் வாசு.

மனிதனும் மிருகமும்! – ஒரு குட்டிக் கதை

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அப்படிப்பட்ட மனிதர்களை விட ஆபத்தான மிருகம் மேலானது என்பதை உணர்த்தும் கதையாக இந்த மனிதனும் மிருகமும் சிறுகதை அமைகிறது.

மன்னிக்க தெரியாத அரசன்

ஜெயபாதம் என்ற நாட்டை வித்யாதரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் யார் சிறு தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டான். அதேபோல் அவனுக்கு பிடிக்காத எதை செய்தாலும் தண்டனை தருவதையும் வழக்கத்தில் வைத்திருந்தான்.

தவறுக்கான தண்டனையாக அவன் பாதாள அறையில் வளர்த்து வந்த சிங்கத்துக்கு இரையாக்குவதை வழக்கமாக வைத்திருந்தான். இதனால் அந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் தவித்தார்கள்.

இதனால் வித்யாதரனின் அமைச்சரவையில் இருந்தவர்களும் அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று சொல்வார்களே ஒழிய தவறாக இருந்தால் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

அவனுடைய உறவினர்கள் யார் தவறு செய்தாலும் கூட சிங்கத்துக்கு இரையாக வேண்டியதுதான்.

சமையல் கலைஞர்

அந்த அரசன் சிறு வயதாக இருந்தபோதே அரண்மனையில் தவசு என்ற சமையல்காரன் பணியில் இருந்தான். அவனுடைய உணவு அரசன் வீட்டைச் சேர்ந்த அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

அதனால் அவன் வயதான காலத்திலும் வித்யாதரன் அரண்மனையில் சமையல் வேலையை தொடர்ந்து செய்து வந்தான்.

தவசுக்கு வயது மூப்பு காரணமாக ஞாபக மறதி ஏற்படத் தொடங்கியது. அதனால், சில நேரங்களில் உணவை சரிவர சமைக்க முடியாமல் தடுமாறினான். அதனால் அரசன் வித்யாதரனை சந்தித்து தன்னுடைய இயலாமையை தெரிவித்தான்.

இருந்தாலும், வித்யாதரன் அவனுக்கு ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. அதனால் வேறு வழியின்றி வித்யாதரனுக்கு சமையல் கலைஞனாக தவசு தொடர்ந்து இருந்து வந்தான்.

தவசுக்கு தண்டனை

ஒரு நாள் அரசனுக்கு சமைத்த உணவில் உப்பு போட சமையல்காரன் தவசு மறந்துவிட்டான். அதை சாப்பிடத் தொடங்கிய அரசன் உணவில் உப்பு இல்லாததை அறிந்து ஆத்திரமடைந்தான்.

தவசு உடனடியாக, உணவில் உப்பை சேர்த்து மீண்டும் பரிமாறியும் அரசனுக்கு அந்த உணவு பிடிக்கவில்லை. இதனால் தவசு செய்த தவறுக்கு எல்லோருக்கும் வழங்கும் தண்டனையை வழங்க முடிவு செய்தான்.

வழக்கம்போல அரச சபையை அரசன் கூட்டினான். சமையல் கலைஞன் தவசுவை குற்றவாளி கூண்டில் ஏற்றினான்.

அப்போது தவசு, அரசே எனக்கு வயதாகிவிட்டது. ஞாபக மறதியால் உணவில் உப்பு போட மறந்துவிட்டேன். அது தவறுதான். மன்னித்து விடுங்கள்.

40 ஆண்டுகளாக உங்கள் இல்லத்தில் சமையல் கலைஞனாக இருந்து வந்திருக்கிறேன். அதனால் எனக்கு குறைந்த தண்டனை தாருங்கள். சிங்கத்திடம் என்னை இரையாக்க வேண்டாம் என்று கெஞ்சினான்.

அரசன், தவசுவின் குற்றத்துக்கு குறைவான தண்டனை தர தயாராக இல்லை. தவசுவை சிங்கத்துக்கு இரையாக்க உத்தரவிட்டான்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் மிகவும் வருந்தினார்கள். அரசனுக்கு பல ஆண்டுகளாக ருசியான உணவு சமைத்து கொடுத்தவனுக்கே இந்த தண்டனையை தருகிறானே. இவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லையா என்று பேசிக் கொண்டார்கள்.

மனிதனும் மிருகமும்

தவசு எவ்வளவோ மன்றாடி கேட்டும் பலனில்லை. காவலர்கள் தவசுவை பாதாள அறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் இருந்த கூண்டுக்குள் தள்ளிவிட்டு பாதாள அறையை சாத்தினார்கள்.

தினமும் சிங்கத்துக்கு பாதாள அறையின் மேலே இருந்த சன்னல் வழியாக மாமிச துண்டுகளை வீசும் காவலன் வழக்கம்போல் மாமிசத் துண்டுகளை வீசி வந்தான்.

ஒரு காலம் கடந்த நிலையில், பாதாள அறையில் வழக்கமாக சிங்கம் கர்ஜித்துக் கொண்டிருப்பது ஒரு வாரமாகவே குறைந்து போயிருந்தது. இதனால் காவலனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது.

அதனால் அவன் அந்த பாதாள அறை சன்னல் வழியாக உள்ளே குனிந்து பார்த்தபோது அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மனிதனும் மிருகமும் ஒரு மேடையில் அமர்ந்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான். ஆமாம்..

அங்கே ஒரு மேடையில் சமையல் கலைஞர் தவசு அமர்ந்திருந்தார். அவரது மடியில் சிங்கம் தலையை வைத்து படுத்திருந்தது. அதன் தலையை அவர் தடவிக்கொடுத்தபடி ஏதோ அதனிடம் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த காவலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வேகமாக பாதாள அறையை விட்டு வெளியேறி அரசனிடம் ஓடோடி வந்த காவலன், அரசே… என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. அந்த சமையல் கலைஞர் தவசு உயிருடன் பாதாள அறையில் இருக்கிறார். அந்த மனிதனும் மிருகமும் ஒன்றாக இருப்பதை நம்ப முடியவில்லை.

சிங்கம் அவரது மடியில் படுத்திருந்ததை என் கண்களால் பார்த்தேன் என்றான் படபடப்போடு.

இதைக் கேட்ட அரசன் சிரித்தான். உனக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா… சமையல்காரன் எப்போதோ சிங்கத்துக்கு இரையாகியிருப்பான். அவனுடைய எலும்புகள் மட்டும்தான் பாதாள அறையில் மிச்சம் இருக்கும்.

நீ எதையோ பார்த்துவிட்டு உளறுகிறாய் என்று சொன்னான். ஆனால் காவலனோ… அதை மறுத்து இல்லை அரசே நீங்களே அந்த அதிசயத்தை நேரில் பாருங்கள் என்று அழைத்தான்.

அதிர்ந்து போன அரசன்

சிங்கம் எப்படி தவசுவை விட்டு வைத்தது என்ற ஆச்சரியம் மேலிட, அரசன் பாதாள அறைக்கு சென்றான்.

அங்கு கம்பிகளுக்கு அப்பால் சமையல் கலைஞர் தவசு சிங்கத்தோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிசயித்தார்.

சமையல் கலைஞரை அருகே அழைத்த அவர், எப்படி சிங்கம் உன்னோடு உறவாடுகிறது என்று கேட்டார்.

நான் உங்கள் தந்தை உயிரோடு இருக்கும்போது இந்த பாதாள அறைக்கு வந்திருக்கிறேன். அப்போது இது மிகச் சிறிய குட்டியாக இருந்தது.

அதை சில நாள்களுக்கு நான் பராமரித்து வந்தேன். அதன் பிறகு அதனுடைய மூர்க்க குணத்தைக் கண்டு இந்த பாதாள அறைக்குள் அடைத்தார்கள். அதன் பிறகு நான் இதை பார்க்கவில்லை.

மனிதனும் மிருகமும்

என்னை காவலர்கள் பாதாள அறைக்குள் தள்ளியபோது, அருகில் வந்த சிங்கம், பழைய நினைவுகளுடன் என்னை கொஞ்சி விளையாடியது.

ஒரு வாரமாக அதற்காக மேலிருந்து வீசப்படும் இறைச்சியை பக்குவப்படுத்தி கொடுத்து வருவதை அமைதியாக சாப்பிடுகிறது.

அது மிருகமாக இருந்தாலும், மனிதனைப் போல் நன்றி கெட்டு நடந்துகொள்ளவில்லை என்று சொன்னான் தவசு.

அரசன் தன்னுடைய தவறை உணர்ந்து அவனை விடுதலை செய்தான். அத்துடன் இனி எனக்கு சமையல்காரனாக இருக்க வேண்டியதில்லை.

இந்த சிங்கத்தை வெளியில் கொண்டு வருகிறேன். அதை பராமரிப்பவனாக இரு போதும் என்று சொல்லி பொன்னும், பொருளும் வாரிக் கொடுத்தான் அரசன்.

சிறுவனுக்கு ஓவியம் தந்த பரிசு

கிரிக்கெட் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் இவர்

சிறுவனுக்கு ஓவியம் தந்த பரிசு!

திறமையும், மதிநுட்பம் இருந்தால் வெற்றி காண முடியும் என்பதை சிறுவனுக்கு ஓவியம் தந்த பரிசு சிறுகதை விளக்குகிறது.

ஓவியம் வரையும் போட்டி

ஒரு நாட்டின் அரசன் வீரம் மிகுந்தவன். அவன் நாட்டை காப்பாற்ற பல போர்களைக் கண்டான்.

ஒரு கட்டத்தில் அவன் ஒரு போரில் வலது காலையும், முகத்தின் வலது பக்கத்தில் மிக ஆழமான தழும்புகளையும் பெற்றான். இதனால் அவனுடைய முகம் விகாரமடைந்தது.

அவன் ஒரு நாள் தன்னை அழகாக ஓவியம் வரைந்து பார்க்க ஆசைப்பட்டான். அதனால் அவன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

என் உருவத்தை அழகாக வரைந்து யார் தருகிறார்களோ, அவர்களை என்னுடைய அரச சபையின் ஆஸ்தான ஓவியராக நியமிக்க உள்ளேன் என்று அறிவித்தான்.

தயங்கிய ஓவியர்கள்

அரசவையின் ஆஸ்தான ஓவியராக மாறுவதற்கு ஆசை இருந்தும், அரசனின் விகாரமான முகத்தை எப்படி அழகாக வரைவது என்ற யோசனையால் எந்த ஓவியருமே அரசவைக்கு செல்லவில்லை.

அரசவையில் அன்றைக்கு அரசன் யாராவது ஓவியர் வருகிறார்களா என்று ஆவலோடு காத்திருந்தான். மாலை வரை காத்திருந்தும் யாரும் வரவில்லை. இதனால் மனம் சோர்வடைந்தான்.

அரசனை சந்தித்த சிறுவன்

அவன் அரசவையில் இருந்து புறப்பட்டத் தயாரானபோது, ஒரு சிறுவன் அரசனை காண வந்திருப்பதாக மெய்க்காவலர் சொல்லவே, அரசன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.

நாட்டில் பல சிறந்த ஓவியர்கள் இருப்பதை அறிவேன். அவர்களில் யாராவது ஒருவர் உங்களை வரைவார் என்று எதிர்பார்த்தேன்.

அதனால்தான் சிறுவனாக இருக்கும் நான் மாலை வரை வரவில்லை. நான் ஓரளவு ஓவியம் வரைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் இப்போது உங்களை வரைய வந்திருக்கிறேன் என்றான் சிறுவன்.

பெரிய பெரிய ஓவியர்களே, நாம் விகாரமான முகம், ஊனமுற்ற காலுடன் இருப்பதைக் கண்டு எப்படி அழகாக வரைவது என்று யோசித்துவிட்டு வராமல் போய்விட்டார்கள்.

இந்த சிறுவனோ நம்பிக்கையோடு என்னை வந்து பார்த்து கேட்கும்போது நான் ஒப்புக்கொள்வதுதான் நியாயம் என்று நினைத்து சரி… என்னை வரையத் தொடங்கு என்றான் அரசன்.

அரசரே… நீங்கள் ஒரு குதிரை மீது ஏறி அமருங்கள் என்றான். அவன் சொல்படியே அரசனும் ஏறி அமர்ந்தான்.

மதிநுட்பம் வரைந்த ஓவியம்

குதிரையில் அமர்ந்திருந்த அரசனை சில முறை சுற்றிசுற்றி வந்தான். அதன் பிறகு அரசன் குதிரையோடு பக்கவாக்காட்டில் நிற்கும் காட்சியை வரையத் தொடங்கினான்.

அரசனின் வலப்பக்க கால் ஊனமடைந்திருந்தது. அதேபோல் அவனுட்டு வலதுபக்க கன்னம் முழுமையாக சேதமடைந்திருந்தது.

இதனால் குதிரையில் ஏறி அமர்ந்திருந்த அரசனின் இடதுபக்கவாட்டு தோற்றத்தை தேர்வு செய்து வரையத் தொடங்கினான்.

சில மணி நேரத்தில் அரசன் குதிரையில் அமர்ந்திருக்கும் அழகான ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டது.

அந்த ஓவியத்தைக் கண்ட அரசனுக்கு ஒரே ஆச்சரியம் காரணம். அவன் குதிரையில் அமர்ந்திருக்கும் இடதுபக்க தோற்றத்தில் வலதுபக்க கால் மறைந்து போயிருந்தது. அவனுடைய விகாரமான வலதுபக்க கன்னமும் மறைந்து போயிருந்து. அதனால் அவன் கம்பீரமாக வாளுடன் குதிரை மீது அமர்ந்திருக்கும் ஓவியம் அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

குதிரையில் இருந்து கீழே இறங்கிய அவன், சிறுவனை உச்சி முகர்ந்து நீ சிறுவனாக இருந்தாலும், நீ சிறந்த ஓவியனாக இருக்கிறாய் நீதான் என் அரசவையின் ஆஸ்தான ஓவியன் என அறிவித்தான்.

ஒரு சிறுவனிடம், உனக்கு என்னை அழகாக வரைய முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது என்று கேட்டான் அரசன்.

சிறுவன் சொன்ன ரகசியம்

அப்போது அந்த ரகசியத்தை சிறுவன் சொன்னான். ஒரு நாள் நான் ஒரு பானை படத்தை பயிற்சிக்காக வரையத் தொடங்கினேன். அது சரியாக அமையவில்லை.

அப்போது என் பாட்டி ஒரு பக்கம் உடைந்த பானையை கொண்டு வந்து கொடுத்து அதைப் பார்த்து வரைந்து பார் என்று சொல்லிவிட்டு போனாள்.

ஒருபக்கம் உடைந்த பானையை பார்த்து எப்படி வரைவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாட்டி என்னை பார்த்து இன்னுமா நீ பானையை வரையவில்லை என்று கேட்டாள்.

என்ன பாட்டி கிண்டல் செய்கிறாய். நீ கொடுத்ததோ உடைந்த பானை… அதை வைத்து எப்படி ஒரு நல்ல பானையை வரைவது என்றேன்.

அவள் சொன்னாள். ஒரு பக்கம் உடைந்தால் என்ன. மறுபக்கத்தில் இருந்து அந்த பானையை பார் முழுதாக அந்த பானை தெரியும் என்று சொன்னாள்.

அது என் பயிற்சி காலத்தில் நினைவில் பதிந்து விட்டது. அந்த நுட்பத்தைத் தான் உங்கள் படத்தை வரைய பயன்படுத்தினேன் என்று சொன்னான் சிறுவன்.

மனிதனும் மிருகமும் குட்டிக் கதை

இன்னைக்கு பள்ளிக் கூடத்துக்கு லீவா… அய்யய்யோ

அரசியல்வாதிகள் கட்-அவுட் காமெடி சிறுகதை

அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர். இதை மையமாக வைத்து நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான் இந்த அரசியல்வாதிகள் கட்-அவுட் காமெடி சிறுகதை.

அரசியல்வாதிகள் விமானப் பயணம்

ஒரு விமானத்தில் அரசியல்வாதிகள் இருவர், மதவாதி, சமூக ஆர்வலர், பொருளாதார நிபுணர், சினிமா நடிகர் ஆகிய 6 பேர் பயணம் செய்தார்கள்.

நன்றாக சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் என்ஜின் இயங்காமல் நின்றுபோய்விட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்தவர்களை விமானி எச்சரித்தார்.

விமானம் மெல்ல கீழே விழுந்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய விமானத்தில் 4 பாராசூட்டுகள் இருக்கின்றன.

உங்கள் 6 பேரில் யாராவது 4 பேர் அதன் மூலம் உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

சினிமா நடிகர்

இதைக் கேட்ட சினிமா நடிகர் நான் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றை முடித்து கொடுக்காவிட்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள். மக்கள் ஏமாற்றமடைவார்கள். அதனால் நான் ஒரு பாராசூட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அதை எடுத்துக் கொண்டு குதித்துவிட்டார்.

மதவாதி

மதவாதியோ, இன்னும் நான் மக்களுக்கு நல்ல பல கருத்துக்களை சொல்ல வேண்டியிருக்கிறது.

நான் இப்போது செல்லும் நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு பாராசூட்டை எடுத்துக் கொண்டு குதித்துவிட்டார்.

பொருளாதார நிபுணர்

பொருளாதார நிபுணரோ, என்னுடைய ஆலோசனையை நம்பியை இந்த நாடு இருக்கிறது. நான் ஒருவேளை இறந்துவிட்டால், நாடே பொருளாதாரத்தில் பின்தங்கிவிடும்.

அதனால் நான் ஒரு பாராசூட் எடுத்துக் கொள்கிறேன் என்று அவரும் எடுத்துக் கொண்டு குதித்து விட்டார்.

அரசியல்வாதிகளும் கட்-அவுட்டும்

நாங்கள் இருவரும் இந்த சமூகத்துக்கு தேவையானதையெல்லாம் இன்னும் செய்து முடிக்கவில்லை. இதுவரை நாங்கள் இருவரும் சேர்த்த கோடிக்கணக்கான மதிப்பு சொத்துக்களை இன்னமும் அனுபவிக்கத் தொடங்கவில்லை. எனவே மீதியிருக்கும் ஒரு பாராசூட் எடுத்துக் கொண்டு இருவரும் குதித்து விடுகிறோம் என்று ஒரு பாராசூட்டை எடுத்துக்கொண்டு இருவருமே குதித்துவிட்டார்கள்.

கடைசியாக ஒரு பாராசூட் மிச்சம் இருந்தது. இதை பார்த்த சமூக ஆர்வலர், மீதம் ஒரு பாராசூட் இருக்கு. நீங்க 4 பாராசூட்டுதான் இருக்குன்னு சொன்னீங்களே என்று விமானியை பார்த்து கேட்டார்.

விமானி அதை பார்த்துவிட்டு, அடடா… ஒரு தவறு நேர்ந்துவிட்டது. கடைசியாக குதித்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அவசரத்தில் பாராசூட் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக படம் வரைந்து வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டை எடுத்துக்கொண்டு குதித்துவிட்டார்கள்.

அதனால் அந்த பாராசூட்டை எடுத்துக்கொண்டு நாம் இருவரும் குதித்துவிடுவோம் வாருங்கள் என்று சமூக ஆர்வலரிடம் சொன்னார் விமானி.

பதஞ்சலி தந்த மந்திரம் இதுதான்

டாக்டரை அலற விட்ட பெண்

துறவரம் பூண்ட வட்டி கடை வைத்தி

ஒரு ஊரில் வைத்தி என்பவன் வசித்து வந்தான். அவன் வட்டிக் கடை வைத்திருந்தான்.

ஏழைகள் பலரும் அவனிடம் நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். அவன் அதிக வட்டி வசூலித்ததால் பல நேரங்களில் ஏழைகளின் நகைகள் வட்டி உயர்ந்ததால் மூழ்கி போய்விடும்.

அதை அவனே எடுத்து வைத்துக் கொள்வேன். இப்படியாக ஏராளமான தங்கம், வெள்ளி நகைகளைச் சேர்த்து வைத்திருந்தான்.

யார் உதவிக் கேட்டு வந்தாலும், அவர்களிடம் பலனை எதிர்பார்க்காமல் உதவ மாட்டான். அப்படிப்பட்டவனுக்கு இரு மகன்கள் இருந்தார்கள்.

இருவருமே சோம்பேறிகள். தந்தையின் வட்டித் தொழிலைக் கூட கவனிக்க தகுதி அற்றவர்களாக இருந்தார்கள்.

சோதித்த கடவுள்

வைத்தி வட்டித் தொழிலில் செய்கிற பாவம் நம்முடைய பிள்ளைகளை பாதிக்கிறதே என்ற வருத்தத்தில் வைத்தியை விட்டு தனித்து சென்றுவிட்டாள்.

இப்படி வட்டித் தொழிலில் அவன் ஏராளமான பணம், பொருள்களை சேர்த்து வைத்த அவன் மாதம்தோறும் திருப்பதி கோயிலுக்கு போவதில் மட்டும் தவற மாட்டான்.

வட்டியில் தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க வேண்டிய திருப்பதி உண்டியலில் சொற்பத் தொகையை போட்டுவிட்டும் வருவான்.

வைத்திக்கு சோதனை தந்தால்தான் அவன் இனி திருந்துவான் என கடவுள் முடிவு செய்தார். அதனால் அவர் துறவி வேடத்தில் அவனை ஒரு நாள் சந்தித்தார்.

உதவிக் கேட்டு வந்த துறவியை பார்த்த அவன், அவருடைய கழுத்தில் வெள்ளி பூணுடன் காணப்பட்ட உருத்திராட்சத்தைப் பார்த்துவிட்டான்.

பெரியவரே… நீங்கள் அந்த உருத்திராட்சத்தை கழட்டி கொடுத்தால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்றான்.

துறவியும் அவன் கேட்டபடியே உருத்திராட்சத்தை கழட்டித் தந்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இந்த உருத்திராட்சம் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் என ஆசிர்வதித்து சென்றுவிட்டார்.

தொட்டதெல்லாம் பொன்னான விந்தை

உருத்திராட்சத்தை வாங்கிக் கொண்டு வந்த அவன் பூஜை அறையில் அதை வைத்துவிட்டு, அதன் கதவை சாத்தினான்.

என்ன ஆச்சர்யம்… அந்த கதவு தங்கக் கதவாக மாறியது. அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

பூஜை அறையில் இருந்த பொருள்களை தொட்டபோது அவையும் தங்கமாக மாறிப்போயின.. அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இல்லாமல் போனது.

இந்த அதிசயத்தை உடனே யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று துடித்தான். ஒரு அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த இரு மகன்களையும் தட்டி எழுப்பி இந்த அதிசயத்தை சொல்ல ஓடிப்போனான்.

உள்ளே கட்டிலில் தூங்கிய இரு மகன்களையும் தட்டி எழுப்பினான். உங்கள் இருவருக்காக நான் சேர்த்த சொத்துக்கள் போதாது என்று எனக்கு ஒரு அதிசய சக்தியும் இப்போது கிடைத்திருக்கிறது என்று சொன்னான்.

தூங்கிக் கொண்டருந்த இரு மகன்களும் எழுந்திருக்கவில்லை. அவர்களுடைய உடல் மெல்ல தங்கச் சிலைகளாக மாறிப்போயின.

துயரத்தில் ஆழ்ந்த வைத்தி

அய்யோ… என்னுடைய இரு மகன்களும் சிலையாகிவிட்டார்களே.. நான் என்ன செய்வேன் என்று இப்போது புலம்பத் தொடங்கினான்.

பைத்தியம் பிடித்தது போல் அங்கிருந்த பொருள்களையெல்லாம் தொடவே, எல்லாமே தங்கமாகிக் கொண்டிருந்தன. அவன் வெறுப்பின் உச்சிக்கே சென்றான்.

இனி நான் வாழ்ந்து பயனில்லை. இறக்க வேண்டியதுதான் என எண்ணி புலம்பினான்.

வீட்டுக்குள் அவன் சேர்த்து வைத்த நகைகளையெல்லாம் தெருவில் வீசியெறிந்தான். தெருக்களில் நின்று வேடிக்கை பார்த்த மக்கள் தங்களுடைய நகையை அந்த வட்டிக்கடைக்காரன் திருப்பித் தருவதாகக் கருதி அவரவர் நகைகளை எடுத்துக் கொண்டார்கள்.

வீடே தங்கமாக ஜோலித்தது. வீட்டினுள் இருந்த பொருள்களில் வெள்ளி பூண் போடப்பட்டிருந்த அந்த உருத்திராட்சம் மட்டுமே எந்த மாற்றமும் இன்றி இருந்தது.

அதைப் பார்த்த போது, தன்னிடம் அந்த உருத்திராட்சத்தை தந்த துறவி, “இது உங்களிடம் இருக்கும் வரை தொட்டதெல்லாம் பொன்னாகும்” என ஆசிர்வதித்தது நினைவில் வந்தது.

உடனே அந்த உருத்திராட்சத்தை எடுத்துக்கொண்டு துறவி இருக்கும் இடத்தைத் தேடி ஓடினான். நாள் முழுதும் தேடியும் அந்த துறவி கிடைக்கவில்லை.

மனமுடைந்த அவன் ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, அந்த துறவி ஆற்றில் மூழ்கி எழுந்திருப்பதைக் கண்டான்.

மன்னித்த துறவி

துறவியே… தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்.

இந்தாருங்கள் நீங்கள் கொடுத்த உருத்திராட்சை. நீங்கள் எனக்கு அளித்த ஆசிர்வாதத்தை திரும்பப் பெறுங்கள் என கெஞ்சினான்.

துறவி சிரித்தபடியே, உருத்திராட்சத்தை வாங்கிக் கொண்டு, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனை கடந்து சென்றார்.

இப்போது அவனை பீடித்திருந்த பேராசையும், சுயநலமும் விலகியிருந்தது. இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான அறிவு தோன்றியது.

துறவியாக மாறிய வைத்தி

வீட்டை நோக்கி அவன் நடந்தான். வீடு பழைய நிலைக்கு மாறிப் போயிருந்தது. வீட்டு வாசலில் நின்ற இரு மகன்களும் அவனை வரவேற்றார்கள்.

அவரவர் நகைகளை எடுத்துக் கொண்ட ஏழைகள், வைத்தியை பார்த்து நன்றி சொல்ல காத்திருந்தார்கள்.

வட்டித் தொழிலை கைவிட்ட அவன் தன் மகன்களை வேறு தொழில்களை புரிந்து அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவிடுங்கள் என்று அறிவுரை வழங்கினான்.

தன்னுடைய ஆடம்பர ஆடைகளைக் களைந்து துறவரம் பூண்டு, துறவி காட்டிய பாதையில் நடந்து சென்றான் வைத்தி.

அரசன் சோதித்த இறையருள் சிறுகதை

சாமியாருக்கு எப்படி பொறுமை வந்தது எப்படி? ஒரு நிமிட காமெடி கதை

அரசன் சோதித்த இறையருள்

ஒரு நாட்டை ஆண்ட மதிமாறன் என்ற அரசன் எல்லாம் இறையருள் என்கிறார்களே அதை என்னால் மாற்ற முடியும் என்ற இருமாப்பில் இருந்தான். ஆனால் இறையருள் யாராலும் மாற்ற முடியாதது என்பது ஒரு அனுபவத்தில் உணர்ந்த கதைதான் அரசன் சோதித்த இறையருள்.

இறையருள் சோதனையில் அரசன்

அரசன் மதிமாறன் மாறு வேடத்தில் அன்றைக்கு நகரை வலம் வந்தான். அவனுக்கு எப்போதும் தான் ஒரு அரசன் என்பதை விட, தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற இருமாப்பும் இருந்து வந்தது.

ஒரு கோயில் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் பிச்சை எடுத்தார்கள். அதை அவன் பார்த்தான்.

ஒருவன் கடவுளின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் பிச்சை எடுத்தான். மற்றொருவனோ, நான் ஊனமுற்றவன், நடக்க முடியாதவன். எனக்கு பிச்சைப் போடுங்கள் என்றான்.

இவர்களை பார்த்ததும், இன்றைக்கு பிச்சைக்காரர்களாக இருக்கும் இவர்களை நாளைக்கு பணக்காரராக்கி பார்க்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்பினான்.

பூசணிக்காய் தந்த அரசன்

மறுநாளும் மாறுவேடத்தில் அரசன், அதே கோயில் வாசலுக்கு வந்தான். கையில் இரண்டு சிறிய பூசணிக்காய்களை எடுத்து வந்தான்.

அந்த பூசணிக்காய்க்குள் பெரிய தங்கக் கட்டிகளையும், வைரங்களையும் கொட்டி மூடி எடுத்து வந்திருந்தான்.

அவனை பார்த்த இரு பிச்சைக்காரர்களும் பிச்சை தட்டை ஏந்தினார்கள். இருவரிடமும் என்னிடம் காசு இல்லை. இந்தாருங்கள்.

ஆளுக்கு ஒரு பூசணிக்காயை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்துவிட்டு திரும்பினான்.

இரண்டு வாரம் கழித்து நகர் வலம் புறப்பட்ட அரசனுக்கு, முன்பு இரு பிச்சைக்காரர்களுக்கு தங்கமும், வைரமும் நிறைந்த பூசணிக்காய்களை கொடுத்தோம்.

அவர்கள் இந்நேரம் அவற்றை விற்று காசாக்கி பணக்காரர்களாக மாறியிருப்பார்கள். அவர்கள் நம் கண்ணுக்கு படுகிறார்களா என்று பார்ப்போம் என்று நினைத்தபடியே நகர் வலம் வந்தான்.

வழக்கமான பாதையில் வரும் அந்த கோயிலை அரசன் வந்தடைந்தபோது அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.

அதிர்ச்சி அடைந்த அரசன்

அதே பிச்சைக்காரர்கள் கோயில் வாயிலில் பிச்சை எடுப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான்.

உடனே, அரண்மனைக்கு திரும்பிய அரசன், அந்த இரு பிச்சைக்காரர்களையும் காவலர்களை விட்டு அழைத்து வரச் சொன்னான்.

இரண்டு பிச்சைக்காரர்களும் அரண்மனையில் அரசன் முன்பு கைக்கட்டி நின்றார்கள்.

அரசன் பேசத் தொடங்கினேன். இரு வாரம் முன்பு இருவருக்கும் தலா ஒரு பூசணிக்காய் கொடுத்தேனே… அதை என்ன செய்தீர்கள் என்று கோபமாகக் கேட்டான்.

அப்போதுதான், பூசணிக்காயை தந்துவிட்டு போனது அரசன் என்பது தெரிந்தது.

ஊனமுற்ற பிச்சைக்காரன் பதற்றமாக அரசனை பார்த்து, அரசே, நீங்கள் கொடுத்த பூசணிக்காயை நான பிச்சைக்காரன் என்பதால் யாரும் வாங்கவில்லை.

அதனால் அதை அருகில் உள்ள கோயில் குளத்தில் உள்ள நீரில் விட்டெறிந்துவிட்டேன் என்றான்.

மற்றொருவன் ராஜாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டான். அரசே, என்னை மன்னித்து விடுங்கள்.

நீங்கள் தந்த பூசணிக்காயை இறைவனே எனக்கு அளித்ததாக நினைத்து நான் தங்கியிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று இறைவனுக்கு படைத்து அதை உடைத்தேன்.

அதில் வைரக் கற்களும், தங்கக் கட்டிகளும் இருப்பதை பார்த்து நகர் முழுவதும் கொடுத்தவரை தேடினேன். அது நீங்கள் என்பது எனக்குத் தெரியாது.

அதனால் அவை இறைவனுக்கே சொந்தம் என நினைத்து அந்த கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன் என்றான்.

இறைவனிடம் வருந்திய அரசன்

இப்போது அவன் இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்ந்து மனதார இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.

எதற்கும் பயன்படாது என நினைத்து பூசணிக்காயை தூக்கி எறிந்த பிச்சைக்காரனை அந்த கோயில் காவலாளியாக ஆக்கினான்.

கோயில் உண்டியலில் தங்கத்தையும், வைரத்தையும் சேர்த்த பிச்சைக்காருக்கு பொன்னும், பொருளும் வாரித் தந்து அந்த கோயிலின் தர்மகர்ததாவாக்கினான்.

சிறு தவறு கற்றுத் தந்த பாடம்

மனைவியை புரிந்துகொண்ட கணவர்

தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை

சிறிய தவறு கற்றுத் தந்த பாடம் என்ற இந்த சிறுகதை பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், பள்ளிக் குழந்தைகளும் படிக்க வேண்டிய ஒன்று.

கீதாவிடம் காணப்பட்ட பழக்கம்

கீதா படிப்பில் ஆர்வமுடைய சிறுமி. அவளுடைய பெற்றோரும் அவளிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அவளுடைய தாயார் அதிக செல்லம் கொடுப்பதும் உண்டு.

இப்படிப்பட்ட அந்த சிறுமியிடம், ஒரு தவறான பழக்கம் தொற்றிக் கொண்டிருந்தது. அவள் பள்ளியில் பயிலும் சக தோழிகளின் புதிய பென்சில்கள், ரப்பர் போன்றவற்றை அவர்களுக்கு தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்து விடுவாள். இது தவறு என்பதை அவள் உணரவில்லை.

ஒரு நாள் அம்மாவுக்கு, அலுவலகத்தில் பரிசாகத் தந்திருந்த வெள்ளிப் பேனாவை பார்த்துவிட்டாள். அம்மா… இன்னைக்கு ஒரு நாள் அந்த பேனாவை எடுத்துச் சென்று வருகிறேனே என்று கேட்டாள்.

அது விலை உயர்ந்தது என்பதோடு, தன்னுடைய பணியை பாராட்டு தரப்பட்ட பரிசு மகளே… எடுத்துச் சென்றுவிட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் சரியா.. என்று அம்மா பீடிகை போட்டு அந்த பேனாவை கீதாவிடம் கொடுத்தாள்.

பள்ளியில் தோழிகளிடம் அந்த பேனாவை காட்டி, மிக விலை உயர்ந்த பேனா இது. என் அம்மாவுக்கு பரிசாக கிடைத்தது என்று பெருமையாக சொல்லி காண்பித்துவிட்டு புத்தகப் பையில் பத்திரப்படுத்தி வைத்தாள்.

அவள் வீட்டுக்கு வந்ததும் பேனாவை அம்மாவிடம் கொடுக்க மறந்துபோனாள். அம்மாவுக்கும் மறுநாள் காலை கீதா பள்ளிக்கு புறப்படும்போதுதான் தன்னுடைய மகளிடம் வெள்ளிப் பேனாவை கொடுத்தது ஞாபகம் வந்தது.

உடனை அவளிடம் நேற்று நான் கொடுத்த பேனாவை கொடு என்றாள் அம்மா. இதோம்மா… என்று புத்தகப் பையில் கையை விட்ட அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதிர்ச்சியில் கீதா

புத்தகப் பையில் உள்ள புத்தகங்கள், பேனா, பென்சில் எல்லாவற்றையும் கொட்டி தேடினாள் கீதா. ஏமாற்றமே மிஞ்சியது.

மகள் பள்ளிக்கு போவது கெட்டுப் போய்விடும் என்பதால், சரி… வீட்டில் வைத்திருக்காயா என்று பார்க்கிறேன். எந்த பொருளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும் பழக்கமே இல்லை. முதலில் நீ பள்ளிக்கு புறப்பட்டு போ என்று கோபமாக சொன்னாள் அம்மா.

எப்போதும் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் அவள், அம்மா திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டாள்.

அம்மா வீட்டில் கீதா பயன்படுத்திய மேஜை டிராயரை திறந்து அதில் பேனா இருக்கிறதா என்று தேடியபோது, விதவிதமான புதிய பென்சில்கள், ரப்பர்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மகள் தவறு செய்திருக்கிறாள் என்பதை அம்மா உணர்ந்தாள்.

மாலையில் வீடு திரும்பிய கீதாவிடம், அந்த பென்சில்கள், ரப்பர்களை காட்டினாள். இதெல்லாம் நான் வாங்கித் தந்தவையாக தெரியவில்லை. நீ ஏதோ தவறு செய்திருக்கிறாய் என்றாள் அம்மா.

அம்மாவின் கோபப் பார்வையை பார்த்த கீதா, தயக்கத்தோடு, இவையெல்லாம் என் தோழிகளுடையது. சும்மா ஒரு ஜாலிக்காக… அவர்களுக்கு தெரியாமல் நான் எடுத்து வந்தவை என்றாள்.

அம்மாவின் அறிவுரை

மகள் ஒருபுறம் தவறு செய்திருக்கிறாள் என்பதோடு மற்றொருபுறம் உண்மையை மறைக்காமல் சொன்னாளே என்ற காரணத்தால், அவளுக்கு ஆத்திரப்படாமல் அறிவுரை வழங்கினாள்.

கீதா உனக்கு அன்பான அப்பாவும், அம்மாவும் இருக்கிறோம். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வாங்கித் தருகிறோம்.

ஆனால் நீ ஜாலிக்காக ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இது மன்னிக்கக் கூடிய விஷயம் அல்ல. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன்னுடைய எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.

தோழியின் கதையை சொன்ன அம்மா

உனக்கு நான் நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன் கேள். என்னுடைய பள்ளித் தோழி ஒருத்திக்கு இதேபோன்ற பழக்கம் இருந்தது.

பல நேரங்களில் அப்படி திருடிய பொருளை என்னிடம் கொண்டு வந்து காட்சி, சில தோழிகளின் பெயர்களைச் சொல்லி சுட்டுட்டு வந்துட்டேன் என்பாள். அப்போது அவளை கண்டிப்பேன்.

நாங்கள் கல்லூரிகளில் சேர்ந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனோம். அங்கே ஒரு அழகான விலை மதிப்புமிக்க ஹேர் கிளிப்பை பார்த்திருக்கிறாள்.

அதை அவள் அதை எடுத்து ஆடைக்குள் மறைத்துக் கொண்டாள். இது எனக்குத் தெரியாது. இருவரும் நாங்கள் வாங்கிய பொருள்களை பில் செய்தோம்.

அப்போது பெண் ஊழியர் ஒருவர், என் தோழியை கொஞ்சம் வருமாறு அழைத்து தனி அறைக்கு சென்றார். இதைக் கண்ட எனக்கு ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர முடிந்தது.

சில நிமிடங்களில் நானும் அந்த இடத்துக்கு சென்றபோது அந்த பெண் ஊழியர் என் தோழியை அட்வைஸ் செய்வதையும், அவள் அவமானம் தாளாமல் அழுதுகொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ளவர்கள் நாகரீகமாக நடந்துகொண்டதால் அவர் திருட்டு பழிக்கு ஆளாகி பொதுவெளியில் அவமானப்படுதில் இருந்து தப்பித்தாள்.

பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டா உன் வாழ்க்கை வீணா போயிடும். திருட்டு பழிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற நிலை என் மகளுக்கு வரவேண்டுமா? என்று கேள்வியை எழுப்பினாள் அம்மா.

திரும்பக் கிடைத்த வெள்ளிப் பேனா

தவறை உணர்ந்து அழுத கீதா, இனிமேல் தவறு செய்ய மாட்டேன் அம்மா என்று மன்னிப்பு கேட்டாள்.

நாளைக்கே நீ, இந்த பொருள்களை உரிய தோழிகளிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு வர வேண்டும் சரியா? என்றாள் அம்மா.

சரி என்று தலையாட்டிய கீதா, மறுநாள் அம்மா சொன்னபடி, தோழிகளிடம் தான் எடுத்த பென்சில்கள், ரப்பர்களை கொடுத்து மன்னிப்பு கேட்டாள்.

தோழிகளில் ஒருத்தி அப்போது கீதாவிடம் வந்து, நானும் தவறு செய்துவிட்டேன் கீதா. என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது புத்தகப் பையில் வைத்திருந்த வெள்ளப் பேனாவை கீதாவிடம் தந்தாள்.

காணாமல் போன விலை உயர்ந்த அம்மாவின் பொருள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி கீதாவுக்கு.

பள்ளி விட்டதும், ஓடோடி வந்து அம்மாவிடம், அந்த வெள்ளிப் பேனாவை நீட்டி, பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னாள் கீதா.

துறவரம் பூண்ட வட்டிக் கடை வைத்தி

வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் செடிகளை வளர்க்கலாமே

இந்திய ஹாக்கி – ஒரு வெற்றி வரலாற்றின் கதை

உலக விளையாட்டு அரங்கில் இந்திய ஹாக்கி (hockey india) அணிக்கு ஒரு தனி இடம் உண்டு.

1980-ஆம் ஆண்டுக்கு பிறகு உலக அளவில் ஹாக்கி அணி பின்தங்கியிருந்தாலும், அது சுமார் 50 ஆண்டுகள் வரலாற்றில் தொடர்ந்து கோலோச்சி இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு.1928-இல் முதன்முதலில் இந்திய அணியை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

மறக்க முடியாத தயான்சந்த்

இந்த அணிக்கான வீரர்களை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்தது. கடைசியில் இந்திய ராணுவத்தில் இருந்து வீரர்கள் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இப்படித்தான் இந்தியாவின் முதல் ஹாக்கி அணி உருவெடுத்தது. அந்த அணியில்
23 இளைஞர் தயான்சந்த் இந்த அணியில் இடம் பெற்றார்.

இப்படி உருவான இந்திய அணி வீரர்கள் காலில் ஷூ கூட அணியாமல் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்த்த மேலை நாட்டு அணிகள் கேலியும், கிண்டலும் கூட செய்தன.

அதையெல்லாம் இந்த அணி பொருட்படுத்தவில்லை. ஹாக்கி போட்டியில் எப்படி ஒலிம்பிக் போட்டிக்கு தயார் ஆவது என்பது பற்றித்தான் இந்த அணியின் 24 மணி நேரமுமான சிந்தனையாக இருந்தது.

இந்த அணியின் ஆர்வத்தை அடுத்து இங்கிலாந்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டார்கள்.

ஒலிம்பிக்கில் தங்கம்

என்ன ஆச்சர்யமான விஷயம். இங்கிலாந்தின் உள்ளூரை சேர்ந்த அத்தனை அணிகளையும் இந்த வீரர்கள் தோற்கடித்தார்கள். இதைக் கண்டு இங்கிலாந்தே வியந்து போனது.

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் வென்று வந்த இங்கிலாந்து அணி 1928 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தவிர்த்தது.

முதன் முறையாக ஒலிம்பிக் போட்டியில் கால் பதித்த இந்தியாவின்

அணி, அன்றைய உலகின் ஜாம்பாவான்களை மண்ணை கவ்வ வைத்தது.

இறுதியாக தங்கப் பதக்கத்தை தட்டிக் கொண்டு இந்தியா வந்தடைந்தது. இப்படி ஆற்றல் மிக்க அணியாக உருவெடுத்த இந்திய அணியின் ஆதிக்கம் 1980 வரை நீடித்தது.

தமிழ்த் தாய் வாழ்த்து கடந்து வந்த பாதை!

பொன்மகன் சேமிப்பு திட்டம் உதவும்

ஆண் குழந்தை இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்

சென்னை: பொன்மகன் சேமிப்பு திட்டம். இது ஆண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டம். குறிப்பாக படிப்புக்காக உதவும் திட்டம்.

பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியபோது ஆண் குழந்தைகளுக்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கத் தொடங்கியவர்கள் எண்ணிக்கை ஏராளம்.

இந்த சூழலில்தான் தமிழக அரசு 2015-ஆம் ஆண்டு பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பதை தொடங்கியது. இது ஆண் குழந்தைகளுக்கான பிரத்யேகத் திட்டமாக இருக்கிறது..

பொன்மகன் சேமிப்பு திட்டம்

பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிப்பு தொகை செலுத்த முடியும்.

ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு இத்திட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஒருவர் குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.500 செலுத்தத் தொடங்கினால் 15 ஆண்டுகளில் அவர் செலுத்திய தொகை ரூ.90 ஆயிரமாக இருக்கும்.

இதன் முதிர்வு தொகை 1.83 லட்சம் கிடைக்கும்.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்குத் தொடங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவர்கள் பெயரிலேயே கணக்குத் தொடங்க முடியும்.

இத்திட்டத்தில் சேமிக்க வயது வரம்பு கிடையாது. இத்திட்டத்தில் சேர சில ஆவணங்கள் தேவை.

சிறுவனின் பிறப்புச் சான்றிதழ், புகைப்படம், பெற்றோரின் ஆதார் எண், பான் கார்டு, சரியான முகவரி ஆகியவை தேவைப்படுகிறது.

சொத்துப் பத்திரம் காணாமல் போனால் கவலை வேண்டாம் .. மாற்று வழி இருக்கு

படித்தீர்களா?

திட்ட சேமிப்பு காலம்

திட்டத்தின் சேமிப்பு காலம் 15 ஆண்டுகள். 7-ஆவது ஆண்டில் 50 சதவீதத் தொகையை பெறுவதற்கு வசதி இருக்கிறது.

15 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்கிறது.

வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு உண்டு. வட்டிக்கும் வரி விலக்கு உண்டு.

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள

காணொலியை காணுங்கள்

பொன்மகன் சேமிப்புத் திட்டம், இதர சேமிப்புத் திட்டங்கள் குறித்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலக கிளையை நாடினால் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விடை அளிப்பார்கள்.

மோடி ஆட்சி மாறிப் போச்சு! தேர்தல் முடிவு மாறிப்போச்சு!


சென்னை: இரண்டு முறை மக்களவையில் பலம் மிக்க பிரதமராக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி

பிரதமரோடு 71 அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கிறார்கள். அவர்களில் 11 பேர் 9 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இம்முறை பாஜக தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகள், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகள் பெற்றுள்ளன.

இதுதவிர 4 சுயேட்சைகள் அல்லது சிறு கட்சிகளின் ஆதரவு என்ற நிலையோடு அறுதிப் பெரும்பான்மை கூட்டணியாக ஆட்சியில் பாஜக அமர்ந்திருக்கிறது.

பாஜக பாணியில் சொல்ல வேண்டுமானால் இது ஒரு நெல்லிக்காய் மூட்டை ஆட்சியாக உருவெடுத்திருக்கிறது.
ஆனால் முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலோர் அதே துறைகளுடன் பொறுப்பேற்றிருப்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய பாஜக அரசு தன்னிச்சையாக இதுவரை எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தனித்து எடுத்து வந்தது. இனிமேல் கூட்டணி கட்சிகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பாஜகவுக்கு ஒரு பின்னடைவுதான்.
முந்தைய இரு தேர்தல்களிலும் என்டிஏ கூட்டணியில் தோழமை கட்சிகள் இருந்தாலும் கூட, தனி மெஜாரிட்டியில் பாஜக ஆட்சி அமைந்ததால், அவர்களை எதற்காகவும் கலந்து ஆலோசிக்கவில்லை.

பலம் மிக்க பிரதமராக ஒரு சர்வாதிகார போக்கில் தனக்கு தோன்றியதையெல்லாம் செய்து வந்த மோடிக்கு இத்தேர்தல் நல்ல பாடம் கற்பித்திருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டங்களைக் கூட நாம் நினைத்தால் திருத்தலாம் என்ற மனப்போக்கை அவர் கொண்டிருந்ததற்கு கிடைத்த அடியாக இத்தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

காஷ்மீர் பிரச்னை

உதாரணமாக, காஷ்மீர் மாநிலப் பிரச்னையை பாஜக அரசு கையாண்ட விதத்தை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காஷ்மீர் பிரச்னையில் எந்த முடிவை எடுத்தாலும், அந்த மாநில சட்டப் பேரவையின் முடிவை தெரிந்துகொண்டே மத்திய அரசு முடிவு எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

இதனால் அந்த மாநில சட்டப் பேரவையை பாஜக அரசு கலைக்க வைத்தது.
அடுத்து தேர்தல் நடத்த வாய்ப்பு இருந்தும் அது நடத்தப்படவில்லை.

ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்த ஆளுநர் மூலம் ஒரு கடிதம் பெற்று அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதை ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடு என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தார்கள்.
இதுபோன்ற அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை திருத்த தயங்காது என்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மாநில உரிமைகள்

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல மாநிலங்களின் நலன்கள் பறிக்கப்பட்டன. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டன. நிதிப் பகிர்வில் சர்வாதிகார மனப்பான்மை பின்பற்றப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் புல்டோசர் ஆட்சி என்ற அளவுக்கு 4 ஆயிரம் இந்துக்களின் கட்டடங்கள் புல்டோசர்கள் மூலம் வேட்டையாடப்பட்டன.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த மோடி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்று பிரசாரம் செய்தது அவருக்கு எதிராகவே திசைத் திரும்பியதையும் உணர முடிகிறது.
உத்தரபிரதேசத்தில் மக்கள் பாஜகவை தோற்கடித்திருக்கிறார்கள்.

ராமர் கோயில் அமைந்த தொகுதி

குறிப்பாக ராமர் கோயில் அமைந்திருக்கும் தொகுதியைச் சேர்ந்த மக்களே பாஜகவுக்கு தோல்வியை அளித்திருக்கிறார்கள்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.
மோடியை பார்த்து பாஜகவின் மூத்த தலைவர்களே அச்சப்பட்டு வந்த நிலை இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.

இதனால் கட்சிக்குள் மோடியின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் பழிவாங்குவதற்கு சரியான தருணத்துக்காக காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

தேர்தல் பத்திரம் போன்ற திரைமறைவு ஊழல்கள்

பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் திரைமறைவில் நடந்த பல ஊழல்கள் நிச்சயமாக என்டிஏ சர்க்கார் ஆட்சி காலத்திலேயே வெளியாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதில் நீதிமன்றங்களும் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசியலில் பாஜகவுக்கு எதிரான மாற்றம், உத்தரபிரதேசத்தில் யோகி அதித்யாநாத் மற்றும் பாஜகவுக்கு எதிரான அரசியல் மாற்றம் நிகழும் வாய்ப்புகளும் இப்போது அதிகரித்திருக்கிறது.

அதிகார துஷ்பிரயோகமா?

மோடியை பொறுத்தவரை, வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் சூழல் நிலவுகிறது. காரணம் வாரணாசி வாக்கு எண்ணிக்கையில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதுதான்.
அதேபோல் மதத்தை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி பயன்படுத்திய விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறிய நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மோடிக்கு எதிராக அமைந்தால், இந்திராகாந்தி எமர்ஜென்சிக்கு முன்பு சந்தித்த பாதிப்பைக் கூட ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள்.
பதவி பிரமாணத்தின்போதே, ஒரு மக்களவை உறுப்பினரை வைத்துக்கொண்டிருக்கிற அஜித்பவார் கட்சி ஆரம்பத்திலேயே கேபினட் அந்தஸ்தில் பதவி கொடுங்க.. இல்லாவிட்டால் வேண்டாம் என்று அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எந்தக் கட்சி வாக்குறுதிகள் டாப்

கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்பி சுரேஷ்கோபி அமைச்சராக மத்திய அமைச்சரவையில் பதவியேற்ற 12 மணி நேரத்துக்குள் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். நான் தொடர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.
இந்த தேர்தல் முக்கியமான ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளது. பல பிரபல ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் போலியானவை என்பதையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

அவை இப்போது மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி மோடி நேருவின் சாதனையை சமன் செய்துள்ளதாக மீண்டும் வால் பிடிக்க தொடங்கியிருக்கின்றன.
மூன்றாவது முறையாவது ஒரு ஜனநாயக ரீதியான மக்கள் ஆட்சியாக அமைவதற்கு மோடி செயல்படுவாரேயானால் அதுதான் அவருக்கு பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் அவர் மீதான பழிகளை இந்த பூமி சுமந்து சென்று வரலாற்று பக்கத்தில் எழுதி வைக்கும்.