நியூயார்க் நீதிமன்றத்தில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அதானி குழுமம் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
இந்திய கோடீஸ்வர் கௌதம் அதானி ஒப்பந்தம் பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்கள் அதாவது 2100 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்க ஒப்புக் கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு பதிவாகியுள்ளது.
உள்ளடக்கம்
அதானி யார்?
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் கௌதம் அதானி. துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை கௌதம் அதானி தனது சாம்ராஜ்ஜியத்தை விரித்து உலகெங்கும் வியாபித்து வருகிறார்.
அவர் இன்றைய ஆளும் பாஜக அரசுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு சில ஆண்டுகளாகவே தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருப்பதால் அவரது பல செயல்களை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனமும் உண்டு.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பாதித்த அதானி
அதானி பங்குகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட அறிக்கை அதானியை பாதித்ததோடு, இந்திய பங்குச் சந்தையிலும் திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன் எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவை அதானி விவகாரத்தில் விமர்சிக்கத் தொடங்கின.
உலக பணக்காரர் பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருந்த அதானி சறுக்கினார். சில மாதங்களில் அவரது தொடர் முயற்சியால் மீண்டும் தனது பழைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
அடுத்து இவ்வாண்டில் செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஒன்றை ஹிண்டன்பர்க் நிறுவனம் வைத்தது. அதிலும் அதானியின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டது.
தற்போது, புதிதாக ஒரு குற்றச்சாட்டு அதானி மீது எழுந்திருக்கிறது. அதுதான் ஒரு ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்திருக்கிற புகார்.
இது தொடர்பான ஒரு வழக்கு நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை அன்று அதானி உள்ளிட்ட 7 பேர் மீது பதிவானது.
அதைத் தொடர்ந்து அந்த நீதிமன்றம் கௌதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமம் தொடர்புடைய பங்குகள் மிகப் பெரிய சரிவை சந்தித்தன.
அதாவது துறைமுகம், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் பாதிப்பை சந்திக்கத் தொடங்கியுள்ளன.
குற்றப் பத்திரிகை சொல்வது என்ன?
20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தன்னுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்கு அதானி முயற்சித்திருக்கிறார்.
அப்போது கௌதம் அதானியும், அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த அமெரிக்க பங்குச் சந்தை வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி இருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை அதானி குழுமம் ரத்து செய்திருக்கிறது.
நியூயார் வீட்டில் சோதனை
சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சிப்பதாக எழுந்த புகாரை அடுத்து 2023-இல் அமெரிக்க எப்பிஐ கவுதம் அதானி, உறவினர் சாகர் அதானி ஆகியோரின் நியூயார்க் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறது.
அதானி க்ரீன் எனர்ஜி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 8 ஜிகாவாட் சூரிய சக்தியை வழஹ்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதேபோல் அஸூர் பவர் நிறுவனம் 4 ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான டெண்டரை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்த ஒரு கனடிய பொது ஓய்வூதிய நிதி மேலாளரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவல்படி, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் அதானி மற்றும் பலர் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, மின் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது ஒரு மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கை வெளியிட்டது. அப்போதே அதானி நிறுவனம் அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பின் கீழ் வந்தது.
நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையை பணயம் வைத்து லாபம் பெற விரும்புபவர்களிடம் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் காரணமாகவே இந்த வழக்கு என்று அமெரிக்க நியூயார்க் அரசு வழக்கறிஞர் பிரையன் பீஸ், ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு குற்றச்சாட்டு
இதற்கிடையில், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அதானி மற்றும் இருவர் அமெரிக்க பத்திரச் சட்டங்களின் மோசடி தடுப்பு விதிகளை மீறியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்த இரு வழக்குகளும் புரூக்ளினில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு
அதானி குழுமத்தின் பங்குகள் பங்குச் சந்தை வர்த்தகத்தின்போது பெரும் சரிவை வியாழக்கிழமை சந்தித்தது. இதையடுத்து அதானி குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அமெரிக்க நீதித்துறை கூறுவதைப் போல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதிதான் என்று மேற்கொள் காட்டி, இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறது.
கென்யாவில் அதானி ஒப்பந்தங்கள் ரத்து
அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளை அடுத்து கென்ய அதிபர், கௌதம் அதானி குழுமத்துடனான பல கோடி டாலர் மதிப்பிலான விமான விரிவாக்கத் திட்டம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்கிறார்.
அதானி குழுமம் எதிர்நோக்கவிருக்கும் சிக்கல்கள்
தற்போதைய சூழலில் அமெரிக்க நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், உடனடியாக அவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.
இருப்பினும் அதானி குழுமத்திடம் அந்நிய முதலீடுகள் இனி வருவது கடினம். இதுவரை வந்த முதலீடுகள் கூட வெளியேறும் வாய்ப்புகளும் அதிகம்.
இதன் காரணமாக வரும் வாரங்களில் பங்குச் சந்தையில் பெரிய பின்னடைவை அதானி குழுமம் சந்திக்க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
தற்போதைய நிலையில் அதானி பல நாடுகளில் சர்ச்சைக்குரியவராக மாறியிருக்கிறார். 2017-இல் அதானி எண்டர்பிரைசஸ் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன.
2022-இல் இலங்கை மின்வாரியத்தின் தலைவர் பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவின் முன் அளித்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் மின் திட்டங்களை அதானி குழுமத்துக்கு வழங்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபட்சேவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார்.
ராகுல்காந்தி கருத்து
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல்காந்தி தில்லியில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது முக்கியம்.
பிரதமர் மோடியால் எதுவும் தற்போது செய்ய இயலாது. அதானியின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார். அதானியுடன் பிரதமருக்கு தொடர்பு இருப்பதால் அதானி கைது செய்யப்பட மாட்டார் அல்லது விசாரணையை எதிர்கொள்ள மாட்டார் என்று ராகுல்காந்தி சொல்லியிருக்கிறார்.
அதானி குழுமம் அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கிறது.
அதானி குழுமம் வரலாறு சுருக்கம் என்ன?
அதானி குழுமம் பல்வேறு துறைகளில் காலடி வைத்திருக்கும் ஒரு முக்கியமான இந்திய நிறுவனம். பொது பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்கள் மூலம் போக்குவரத்து மற்றும் பயன்பாடு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் வேளாண் வணிகம் போன்ற முக்கியமான துறைகளில் கணிசமான அளவில் தன்னுடைய இருப்பை தக்க வைத்திருக்கிறது.
அதானி குழுமம் நன்கு அறியப்பட்ட கார்ப்பொரேட் நிறுவனம். அத்துடன் இது சமீப ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகவும் இருக்கிறது. முதலில் விவசாயம், ஜவுளியைக் கையாண்டது. அடுத்து 1990-களில் மூலப்பொருள்கள் இறக்குமதி, ஏற்றுமதியில் இறங்கியது.
அடுத்து ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பிற தொழில்களில் நுழைந்தது. 1998 இல் நிறுவனம் தனது முதல் தனியார் முந்த்ரா துறைமுகத்தை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து அது சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கத் தொடங்கியது.
2000-களில், அதானி குழுமம் எரிசக்தி துறையில் முன்னணியில் நின்று, நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளராக மாறியது.
சில ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணி பெயர்களில் இதுவும் இருந்தது. காற்று மற்றும் சூரிய ஆற்றலில் அதிக கவனம் செலுத்தி, நிறுவனம் விரைவில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
அத்துடன் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. நிறுவனம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழில்கள் முழுவதும் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
எலுமிச்சை ஜூஸ் பயன்கள் – உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த தீர்வு