Read in English / பிற மொழிகளில் படிக்க:
இடம்: கோலப்பன் வீட்டு வரவேற்பறை. அமைதியான ஞாயிறு காலைப் பொழுது.
கோகிலா: (காபியை மேசையில் ‘டப்’ என்று வைத்துவிட்டு) என்னங்க… இனிமேல் என்னை உங்க பிரண்ட்ஸ் முன்னாடியோ, சொந்தக்காரங்க முன்னாடியோ ‘என் பொண்டாட்டி சும்மா வீட்ல தான இருக்கா’னு சொல்லக் கூடாது. சொல்லிட்டேன்!
கோலப்பன்: (டிவியிலிருந்து கண்ணை எடுக்காமல்) ஏன் கோகி, இப்ப என்ன புதுசா பூகம்பம் வந்துச்சு? வேற எப்படிப் பந்தாவா கூப்பிடணுமாம்? ‘ஹோம் மினிஸ்டர்’னு அறிமுகப்படுத்தவா?

கோகிலா: சும்மா கிண்டல் பண்ணாதீங்க! நான் இனிமேல் ‘நேஷன் பில்டர்’ (Nation Builder). ஆமா, தேசத்தை உருவாக்குபவள்! சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடிச்சு. என் உழைப்புக்கு மாசம் குறைஞ்சது 30,000 ரூபாய் மதிப்பு இருக்குனு தீர்ப்பு கொடுத்திருக்கு. மொதல்ல இந்த மாசத்துக்கான முப்பாயிரத்தை எடுத்து வைங்க டேபிள்ல!
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsகோலப்பன்: (பதறிப்போய் டிவி ரிமோட்டை நழுவ விடுகிறார்) முப்பாயிரமா! எம்மா தாயே, நான் ஆபிஸ்ல பைல் பைலா தூக்கிப் போட்டு உழைக்கிறதே மாசம் நாற்பதாயிரத்துக்குத் தான். உனக்கு முப்பாயிரம் கொடுத்துட்டா, நான் எப்படி வீட்டு வாடகை, மளிகை சாமான், கரண்ட் பில் எல்லாம் கட்டுறது? டேய் ஜெகதீஷ், இங்க வாடா! உங்க அம்மா என்னமோ புதுசா சட்டம் பேசுறா, கூகுள்ல என்னனு ஃபேக்ட்-செக் (Fact-check) பண்ணு முதல்ல… சுப்ரீம் கோர்ட் மேல பழியைத் தூக்கிப்போடுறா… பாரேன்.
ஜென்Zee ஜெகதீஷ்: (காதில் இயர்பட்ஸ், கையில் ஸ்மார்ட்போனுடன்) டாடி… கூல்..! அம்மா சொல்றது 100% ஃபேக்ட். சுப்ரீம் கோர்ட் ஒரு மாஸ் ஜட்ஜ்மென்ட் கொடுத்திருக்கு. ஹவுஸ்வைஃப்-ஓட வேலையைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது. அவங்க குடும்பப் பராமரிப்பு வேலைக்கு மாசம் குறைஞ்சது 30,000 ரூபாய் வேல்யூ இருக்குனு சொல்லியிருக்காங்க! டாடி… இதை ஃபேக்ட் செக் பண்ணினதுக்கு எனக்கு இன்னைக்கு 500 ரூபாய் பாக்கெட் மணி கொடு… எனக்கு இன்னைக்கு பைக் வீலிங் சேலஞ்ச் (Bike wheeling challenge) இருக்கு!
கோலப்பன்: (தலையில் கை வைத்து) ஏய்… முதல்ல அவ பிரச்னையே முடியல… குறுக்க நீ வேற! சரி, மாசம் முப்பாயிரமா சொல்லியிருக்காங்க.. ஏம்மா கோகி, நான் உனக்கு மூணு வேளை சாப்பாடு, தங்க இடம், உடுத்த துணி, வருஷத்துக்கு ரெண்டு பட்டுப்புடவை தர்றேன். உடம்பு முடியலேன்னா ஸ்விக்கி, சொமேட்டோ ஆர்டர்.. மாசத்துல 2 சினிமா? இதுபோக சம்பளம் வேறயா உனக்கு?
கோகிலா: ஓ… அப்போ நான் என்ன உங்க வீட்ல வேலைக்காரியா? காலைல 5 மணிக்கு எழுந்து வாசல் தெளிக்கிறதுல ஆரம்பிச்சு, உங்களுக்கெல்லாம் டிபன் பாக்ஸ் கட்டி, துவைச்சு, பாத்திரம் தேய்ச்சு, நைட் நீங்க குறட்டை விட்டு தூங்குறப்ப என் காதுல பஞ்சை வச்சுக்கிட்டு தூக்கம் வராமல் புரண்டு படுத்து அதிகாலை எழுந்திருச்சு…. அப்பப்பா.. 24×7 டியூட்டி பாக்குறேனே! இதுவே வீட்டு வேலைக்கு ஆள் வச்சா எவ்வளவு ஆகும்னு தெரியுமா உங்களுக்கு?
ஜென்Zee ஜெகதீஷ்: (சிரித்துக்கொண்டே) டாட்… அம்மா கேக்குறது நியாயம் தானே… இந்த ஜட்ஜ்மெண்டுல இன்னொரு அப்டேட், அதையும் கேட்டுக்கோங்க. 30,000 ரூபாய் மட்டும் இல்ல, ஒவ்வொரு 3 வருஷத்துக்கும் 10% இன்கிரிமென்ட் வேற தரணும்!
கோலப்பன்: (கதிகலங்கி) அய்யய்யோ… எனக்கே என் கம்பெனில ஒழுங்கா இன்கிரிமெண்ட் தர்றது இல்ல. மூணு வருஷத்துக்கு ஒருக்கா 2% பிச்சை போடுறான். இதுல 10% இன்கிரிமென்ட் உன் அம்மாவுக்குக் கொடுத்தா நான் பேங்க்ல போய் தான் கொள்ளையடிக்கணும். டேய் ஜெகதீஷா, உனக்கு 500 ரூபா தரேன்… அந்த ஜட்ஜ்மெண்டல நிஜமாவே அப்படித் தான் சொல்லிருக்காங்களா? நல்லா பாருடா… வேற ஏதாவது ரூல்ஸ் & கண்டிஷன்ஸ் (Conditions apply) இருக்கான்னு பாத்துச் சொல்லு!
ஜென்Zee ஜெகதீஷ்: ஆமாப்பா, ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு. இந்த 30,000 ரூபாய் கணக்கு எப்ப வரும்னா… மோட்டார் வாகன விபத்துல இல்லத்தரசிகள் இறந்துட்டா, அவங்க குடும்பத்துக்கு இழப்பீடு கணக்கிடுவாங்க இல்லையா? அப்போ அவங்களோட மாதாந்திர வருமானத்தைக் குறைஞ்சது 30,000 ரூபாயா கணக்குல எடுத்துக்கணும்னு கோர்ட் சொல்லியிருக்கு.
கோலப்பன்: (பெருமூச்சு விட்டு, சோபாவில் சாய்ந்து) அப்பாடா! உசிரோட இருக்குறப்ப இல்ல… மோட்டார் விபத்து நடந்தா தான் இந்த முப்பாயிரம் கணக்கு. ரொம்ப தேங்க்ஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு! நல்ல வேளை என் தலை தப்பிச்சது!
கோகிலா: (கண்கள் சிவக்க, கோபமாக) என்னது ‘அப்பாடா’வா? ஓஹோ! அப்போ நான் செத்தா தான் என் உழைப்புக்கு மதிப்புனு சொல்றீங்களா? உங்களுக்குக் காசு மிச்சம் ஆகுதுனு சந்தோசப்படுறீங்களா? இருங்க, இப்பவே மெயின் ரோட்டுல போய் ஏதாவது கார் வரும்போது…
கோலப்பன்: (பதறிப்போய் கோகிலாவின் கையைப் பிடித்து) கோகிம்மா! கோபப்படாத… நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. ஏதோ சம்பளம் கொடுக்கிறதுல இருந்து தப்பிச்சேன்னு ஒரு அல்ப சந்தோஷம், அவ்வளவுதான். ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ… நீ இல்லனா இந்த வீடு சுடுகாடு ஆகிடும். நீ செய்ற வேலைக்கு முப்பாயிரம் என்ன, மூணு லட்சம் கொடுத்தாலும் பத்தாது. நீ இந்த தேசத்தின் ‘நேஷன் பில்டர்’ மட்டும் இல்லடி, என்னோட ‘லைப் பில்டர்’ (Life Builder)!
ஜென்Zee ஜெகதீஷ்: அடடா… வாட் எ ரொமான்டிக் பூமர்டா சாமி (Romantic boomer)! அப்படியே ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு ஒரு ரீல்ஸ் (Reels) போட்டா ஓகோன்னு லைக் அள்ளும்பா…
கோகிலா: (வெட்கத்துடன் புன்னகைத்து) ம்ம்… சரி சரி, ரொம்ப வழியாதீங்க. முப்பாயிரம் சம்பளம்லாம் ஒன்னும் தர வேண்டாம்.
கோலப்பன்: அப்பாடா… தப்பித்தேன்! எனக்குத் தெரியும் என் கோகி என்னைப் புரிஞ்சுக்குவான்னு!
கோகிலா: ஆனா ஒரு சின்ன கண்டிஷன்! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, ‘நேஷன் பில்டருக்கு’ ஒரு நாள் முழு லீவு. போங்க, போய் நேத்து ராத்திரி கிச்சன் சிங்குல (Kitchen Sink) போட்ட பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வைங்க! அப்புறம் மத்தியானம் எனக்குப் பிடிச்ச மட்டன் பிரியாணியை ஆர்டர் பண்ணுங்க… பக்கெட் பிரியாணியை யாரோ ஒரு யூடியூபர் தயார் பண்றானாமே… அதை ஆர்டர் போடுங்க!
ஜென்Zee ஜெகதீஷ்: டாட், நீங்க போய் ‘கிச்சன் பில்டர்’ ஆகுங்க! நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். பிரண்ட்ஸ் வெயிட்டிங்.. பை பை…
கோலப்பன்: (சலித்துக்கொண்டே) எல்லாம் என் நேரம்… வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருந்திருக்கலாம். கோகிம்மா, அந்தப் பாத்திரம் தேய்க்கிற ஸ்க்ரப்பர் எங்கம்மா இருக்கு? கொஞ்சம் எடுத்துக் கொடு…
கோகிலா: நல்லா தேடிப் பாருங்க… அதுகூடவா உங்க கண்ணுக்குத் தெரியல… (என்ற படியே டிவி ரிமோட்டை ஆன் செய்து… சீரியல் பார்க்க ஆரம்பித்தாள் கோகிலா).
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் என்ன?
இல்லத்தரசிகளின் அன்றாட உழைப்பைச் ‘சாதாரண வீட்டு வேலைதானே’ எனப் புறந்தள்ளும் சமூகத்திற்குச் சவுக்கடி கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு. அதன் முக்கிய அம்சங்கள்:
- குறைந்தபட்ச வருமானம்: மோட்டார் வாகன விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டைக் கணக்கிடும்போது, அவர்களின் மாதாந்திர உழைப்பின் மதிப்பை/வருமானத்தைக் குறைந்தபட்சம் ₹30,000 ஆகக் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
- நேஷன் பில்டர்ஸ் (Nation Builders): இல்லத்தரசிகளின் பங்கு ஒரு குடும்பத்தை மட்டும் உருவாக்குவதில்லை; அவர்கள் தேசத்தை உருவாக்குபவர்கள் (Nation Builders) என நீதிமன்றம் புகழாரம் சூட்டியுள்ளது.
- வருங்கால உயர்வு (Future Prospects): 30,000 ரூபாய் என்ற கணக்கோடு மட்டும் நின்றுவிடாமல், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் அவர்களின் இந்த அடிப்படை உழைப்பு மதிப்பில் குறிப்பிட்ட சதவீத உயர்வை (Increment) சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்