ஆர். ராமலிங்கம்
நிருபராக பணிபுரிவது ஒன்றும் எளிதானது அல்ல. அத்துடன் ஒரு ஆளும் கட்சியை எதிர்த்து செய்திகளை வெளியிடுவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமும் அல்ல என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தவன். அந்த வகையில், நான் ஒரு நிருபராக பணியாற்றிய காலத்தில் புழுத்த அரிசி புளுகு மூட்டை உள்ளிட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களை ஒரு நிருபரின் டைரி பேசுகிறது தலைப்பில் தொடராக வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.
உள்ளடக்கம்
பகுதி 1 – புழுத்த அரிசி புளுகு மூட்டை
இடம்: விழுப்புரம்
நாள்: 26 ஜூன் 2001
நான் விழுப்புரத்தில் தினமணி நாளிதழின் மாவட்ட நிருபராக பணியாற்றிய நேரம்.
2001-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆளும் கட்சியாக அதிமுக அமர்ந்திருந்தது.
இன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அன்றைக்கு விழுப்புரம் சட்டப் பேரவை உறுப்பினர். முன்னாள் அமைச்சர். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதம் கடந்திருந்தது.
விழுப்புரம் பொன்முடியின் திமுக அலுவலகத்தில் இருந்து நிருபர்களுக்கு பிற்பகலில் அழைப்பு வந்தது.
திமுக விழுப்புரம் அரிசி சேமிப்பு கிடங்கில், புழுத்த அரிசி கொண்டு வந்து திமுக ஆட்சியில் அடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டை ஆளும் கட்சி வைத்துள்ளது.
உண்மை என்னவென்று அறிவதற்காக எம்எல்ஏ என்ற முறையில் பொன்முடி அரசு கிடங்குக்கு சென்று சோதனையிடப் போகிறார். உடனடியாக வாருங்கள் என அழைப்பு வந்தது.
பொன்முடியின் திமுக அலுவலகம்
பொன்முடியின் திமுக அலுவலகத்துக்கு நான் உடனடியாக புறப்பட்டுச் சென்றேன். அப்போது சன் டி.வி நிருபராக இருந்து வந்த சுரேஷ், தினமலர் சார்பில் நிருபர் சுந்தரராஜன், புகைப்படக்காரர் வெங்கட், மாலை முரசு நிருபர் ஜெயதேவன், தினகரன் நிருபர் பொயயாது மற்றும் தனியார் நிருபர் ஒருவரும் இருந்தனர்.
பொன்முடியும், அவரது கட்சி நிர்வாகிகள் சிலரும், நகராட்சி கவுன்சிலர்களும் என இருபத்துக்கும் மேற்பட்டோர் அரிசி கிடங்கை நோக்கை புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் நான் உள்பட சிலரும் சென்றோம்.
அரசுக் கிடங்கில் பொன்முடியுடன் சென்ற நிருபர்கள்
பொன்முடி அன்றைய தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் காசிநாதனை சந்தித்தார். காசிநாதன் எதற்காக கூட்டமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்க, எம்எல்ஏ என்ற முறையில் கிடங்கை சோதனையிட வந்திருக்கிறேன் என்றார்.
தன்னுடைய வட்டார மேலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பின்னர் உள்ளே சென்று ஆய்வு செய்யுங்கள். ஆனால் அரிசி மாதிரியை வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று நிபந்தனை விதித்தார்.
காட்சிகளை பதிவு செய்தோம்
இவர்களின் பேச்சை அப்படியே சன் டிவி நிருபர் விடியோவில் பதிவு செய்தார். நான் நிருபராக இருந்தாலும், அவ்வப்போது எனக்குத் தேவையான புகைப்படங்களை நானே எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதனால் கிடங்கில் எனக்குத் தேவையான காட்சிகளை புகைப்படங்களாக நான் பதிவு செய்துகொண்டேன்.
காசிநாதன் பொன்முடி உள்ளிட்ட சிலரையும், செய்தி சேகரிக்கச் சென்ற எங்களையும் கிடங்குக்குள் அழைத்துச் சென்றார்.
கிடங்கில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளில் மாதிரிக்காக அரிசியை ஊழியர் இருவர் குத்தூசி கரண்டி மூலம் எடுத்து காட்டினர்.
அவை அனைத்தும் தரமான அரிசியாக இருப்பதைப் பார்த்த பொன்முடி, காசிநாதனை பார்த்து இதுவரை பார்த்ததில் புழுத்த அரிசியே கிடைக்கவில்லையே. வேறு ஏதாவது மூட்டைகள் இருக்கிறதா? என்று கேட்டார்.
தவித்த அரசு சேமிப்புக் கிடங்கு அதிகாரி
அவருடைய கேள்விக்கு காசிநாதன் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். இருந்தாலும் அவர் இங்கு 2 ஆயிரம் டன்னுக்கு மேல் அரிசி இருக்கு. இதில் புழுத்த அரிசி எதுவும் இல்லை.
3 நாள்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளை மட்டும் தரமற்ற அரிசி என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள் என்றார் காசிநாதன் அப்பாவித்தனமாக.
நாங்களும் எங்கள் பங்குக்கு அரிசியை சோதித்து பார்த்தோம். அரிசியில் துர்நாற்றம் ஏதும் வரவில்லை. புழுக்கள், வண்டுகள் இருக்கிறதா என்றும் பார்த்தோம். அதுவும் இல்லை. ஆனால் திரட்டப்பட்ட அரிசியில் உமி தென்பட்டது.
பொன்முடி நிருபர்களிடம் உங்களுக்கு புழுத்த அரிசி இருப்பதுபோல் தெரிகிறதா என்று கேள்வியை சிரித்தப்படியே கேட்டுவிட்டு, மாதிரியில் இருந்து சிறிது எடுத்து சுவைத்து பார்த்துவிட்டு, எங்களிடமும் கொடுத்தார்.
கிடங்கை சோதனையிட்ட கையோடு, நிருபர்களிடம் அங்கேயே பேட்டியும் அளித்தார். அப்போது அவர், புழுத்த அரிசி மூட்டைகள் விழுப்புரம் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆளும் கட்சி சொல்கிறது.
ஆனால் சோதனையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று சொன்னதை குறிப்பெடுத்துக் கொண்டோம்.
புழுத்த அரிசி இல்லை என்ற தெம்போடு தன்னுடைய வாகனத்தை நோக்கி சென்ற பொன்முடி, கிடங்கின் வளாகத்தில் சில மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகத்தோடு அங்கு சென்றார்.
ஆனால் அப்போது அந்த அதிகாரி, ரேஷன் கடைகளுக்காக இவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று பதில் அளித்தார்.
சிக்கிய அதிகாரி – சிக்க வைக்கப்பட்ட பொன்முடி
அந்த நேரத்தில் காசிநாதனுக்கு அவரது அறையில் உள்ள தொலைபேசிக்கு அழைப்பு வந்திருப்பதாக ஊழியர்கள் வந்து சொல்லவே அவர் புறப்பட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார்.
அப்போது ஒரு புகைப்படக்காரர், ஊழியர் கையில் வைத்திருந்த குத்தூசியை வாங்கி பொன்முடியிடம் கொடுத்து நீங்கள் அரிசி மூட்டையை சோதிப்பதுபோல் போஸ் கொடுங்கள் என்றார்.
பொன்முடியும் அப்படியே செய்தார். புகைப்படங்களை எடுத்து முடிந்த நிலையில், காசிநாதனை சந்திக்க அவரது அறையை நோக்கி புறப்படவே, அவரே பதட்டத்தோடு எதிர்கொண்டு வந்தார்.
சார் உங்களை அரிசி கிடங்குக்குள் விடக் கூடாது என்று தொலைபேசியில் உயர் அதிகாரி சொல்கிறார். உங்களால் நான் பிரச்னையில் மாட்டிக் கொண்டேன் என்று அவர் சொன்னார்.
உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன நடவடிக்கை தேவையோ அதை செய்துகொள்ளுங்கள்.
நாங்கள் இப்போது கிடங்கில் புழுத்த அரிசி இல்லை சோதித்து தெரிந்துகொண்டு விட்டோம். அது போதும் என்று சிரித்தபடியே அவரிடம் விடை பெற்றார் பொன்முடி.
நாங்கள் அரிசி கிடங்கு சோதனைப் பற்றிய செய்தியை அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்ப புறப்பட்டுச் சென்றுவிட்டோம்.
கைது செய்யப்பட்ட பொன்முடி
அன்றிரவு இரவு 7 மணி அளவில் காமராஜர் சாலை அருகே திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொன்முடி பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அரிசி கிடங்கு விவகாரத்தை கையில் எடுத்திருந்தார்.
வழக்கமாக கட்சிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாரின் எண்ணிக்கை அந்த கூட்டத்தின்போது சற்று அதிகமாக இருந்தது.
நிருபர்கள் சிலர் அந்த கூட்டத்தில் பொன்முடி பேசுவதை குறிப்பெடுக்க சென்றிருந்த நிலையில், இரு திமுக நிர்வாகிகள் அரிசி கிடங்கினுள் சென்ற விவகாரத்தில் கைதானதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
திமுக கொள்கை இணைச் செயலர் எஸ்.எஸ். பன்னீர்செல்வம் (இவர் ஏற்கெனவே அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்தவர்), விழுப்புரம் நகரச் செயலர் பஞ்சநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டிருந்தனர்.
கூட்டம் நடைபெறும்போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பேச்சை வேகமாக நிறைவு செய்த பொன்முடி கீழே இறங்கும்போது காவல்துறை அதிகாரிகள் அவரை சுறறி வளைத்து உங்களை கைது செய்கிறோம் என்றார்கள்.
ஏன் என பொன்முடி கேள்வி கேட்க, அரிசி கிடங்கினுள் நீங்கள் அத்துமீறி நுழைந்திருக்கிறீர்கள் என காவல் நிலையத்துக்கு புகார் வந்திருக்கிறது என்றதும் அவர் ஜீப்பில் ஏறவில்லை. நானே காவல் நிலையத்துக்கு உங்களுடன் நடந்து வருகிறேன் என்று சொல்லி காவல் நிலையத்தை அடைந்தார்.
(தொடரும்)
நிதி அயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது சரியா?
அடுத்து வருவது – ஏன் சன் டிவி செய்தியாளர் கைது செய்யப்பட்டார்?