விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு சரியா?

சென்னை: அதிமுக விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது சரியா? என்ற கேள்விக்கு கட்சி தொண்டர்கள் பலரும் அதிருப்தியான பதிலையே தருகிறார்கள்.
அதிமுக எந்த நேரத்தில் எந்த இடத்தில் அரசியல் களத்தில் உத்வேகமாக இருக்க வேண்டுமோ அந்த நேரத்தில் இதுபோன்ற தவறான முடிவை எடுப்பது அக்கட்சிக்கு மேலும் சரிவையே ஏற்படுத்தும். இதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

தொண்டர்கள் தோல்விகளால் துவண்டார்களா?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தாலும், தொண்டர்களிடத்தில் எந்தவித பாதிப்பையும் இந்த தோல்விகள் ஏற்படுத்தவில்லை.

ஆனால் தற்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக கட்சித் தலைமை அறிவித்திருப்பதை மேல்மட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், அடிமட்ட தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் டீக்கடை பேச்சுக்களில் இருந்து தெரிகிறது.

பாஜக அல்லாத கூட்டணியை அமைத்து கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த அதிமுக தோல்வியை தழுவியது.

இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிமுக மூன்றாவது இடத்துக்கும், 4-ஆவது இடத்துக்கும் கூட தள்ளப்பட்டது.

பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் அக்கட்சி 2-ஆவது இடத்தை பெற்றிருக்கிறது.

எடப்பாடியின் நோக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பல பிரிவுகளாக பிரிந்து போனது. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா ஆதரவாளர்கள் தனித்து நின்றார்கள்.

டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் தனிக் கட்சியை தொடங்கினார்.

இருந்தாலும் பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து வந்தபோது நடைபெற்ற இடைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தலின்போது கட்சி தோல்வியை தழுவும் நிலைதான் ஏற்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வெற்றிவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய கணிசமான வாக்குகளை அதிமுக இழந்திருந்ததுதான்.

2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப் பேரவை தேர்தல்களில் அமமுக அணி பெற்ற வாக்குகளை அதிமுக பெற்ற வாக்குகளோடு இணைத்தால் பல இடங்களில் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் வருவதே இதற்கு சான்று..

2019-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

அக்கட்சி 18.48 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. அத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டு 22 லட்சம் வாக்குகளை பெற்றது.

இந்த வாக்குகள்தான் அதிமுகவை தோல்விப் பாதைக்கு தள்ளியன என்பதை இன்னமும் அதிமுக உணரவில்லை.

ஓபிஎஸ் – இபிஎஸ்

2021 சட்டப் பேரவை தேர்தலின்போது அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழச்சாமிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதனால் கட்சித் தலைமையை கைப்பற்றுவது, இரட்டை இலையை யார் கைப்பற்றுவது என்ற போட்டிகளில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் கவனம் செலுத்தினார்கள்.

இறுதியில் பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலர் பதவி மற்றும் இரட்டை இலையை கைப்பற்றினார்.

அதன் பிறகு கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் எடப்பாடி பழனிச்சாமி கவனம் செலுத்தி வருவது ஒரு பலவீனம்தான்.

அத்துடன் சில சமாதானங்களையும், சமரசங்களையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் தவறு செய்தால் கண்டுகொள்வதில்லை.

கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக சில நிர்வாகிகள் இருப்பதை கண்டிப்பதில்லை. கட்சித் தொண்டர்கள் சொல்லும் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை.

இது அவருடைய தலைமையின் மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் தவறான முடிவு

edapadi palanisamy

ஓ. பன்னீர்செல்வம் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதிலும், இரட்டை இலையை தன்வசம் வைத்துக்கொள்ளவும் தவறிய நிலையில் அவர் தனித்து விடப்பட்டிருக்கிறார்.

அவருக்கான ஆதரவாளர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதை தற்போதைய நிலையில் கணிக்க முடியவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜவுடன் போட்டிப்போட்டு கூட்டணி அமைப்பதில் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை விட்டார்.

இதனால் வடமாவட்டங்கள் சிலவற்றில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருந்த பாமக, பல கணக்குகளுடன் பாஜக அணியில் சேர்ந்தது.

போதாக்குறைக்கு பாஜக பல இடங்களில் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கிய நிலையில், அத்தொகுதிகளில் அதிமுக பலம் பொருந்திய வேட்பாளர்களை நிறுத்தவும் தவறிவிட்டது.

இதனால்தான் இந்த இடங்களில் 3-ஆவது, 4-ஆவது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.

தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்

இதை பெரிய சரிவாக இரட்டை இலையை தன்வசம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் தொண்டர்கள் கருதவில்லை. அதிமுகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை.

வலிமையான கூட்டணியை ஏற்படுத்துவதில் தவறியது ஒன்றுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்பதுதான் அதிமுக விசுவாசிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்த சூழலில் விக்கரவாண்டி சட்டப் பேரவைக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாது என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது தொண்டர்களை வெகுவாக பாதித்திருக்கிறது.

அவர்களில் பெரும்பாலோர் அதிருப்தி அடைந்திருப்பது நண்பர்களோடு டீக்கடைகளிலும், பொழுதுபோக்கு பொது இடங்களிலும் பேசிக்கொள்வதில் இருந்து இதை உணர முடிகிறது.

பாஜக தமிழகத்தில் வளர்ந்தால், அது கிராவிடக் கட்சிகளுக்கு ஆபத்தாக அமையும். அதிலும் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழலில் பாஜக அணியில் இடம்பெற்றிருக்கிற பாமக வேட்பாளர் விக்கிரவாண்டியில் வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்கு வங்கியை பெறும் சூழலில் அதை பாஜக தனது சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

ஒருவேளை பாமக வெற்றி பெற்றுவிட்டால், மிக சுலபமாக ஆளும் கட்சிக்கு எதிரான வலிமையான நிலையில் பாஜக தலைமையிலான அணி இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கப்படும்.

அத்தகைய வாய்ப்புக்காகவே பல ஆஸ்தான வித்தகர்களும், ராஜதந்திரிகளும், வாட் ரூம் பிரசாரகர்களும் காத்துக் கிடக்கிறார்கள் என்பதை ஏனோ எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பழனிச்சாமி ஏன் இந்த முடிவை எடுத்தார்?

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக அணி மீண்டும் போட்டியிட்டாலும், ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தையும், முழு பலத்தையும் பிரயோகித்து வெற்றி பெறும். அந்த தொகுதியில் பாமகக்கு கணிசமான நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது.

போதாக்குறைக்கு திண்டிவனம் அருகிலேயே இத்தொகுதி அமைந்திருப்பதால் பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ், அன்புமணி, பாஜக சார்பில் முக்கியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் சூழலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தை நிச்சயமாக பிடிக்கும்.

இப்படிப்பட்ட நிலையில், அதிமுக கடந்த மக்களவைத் தேர்தலின்போது, அத்தொகுதியில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் மேலும் சரிவை சந்திக்கும்.

இதை ஊடகங்களும், தங்களின் எதிரிகளாக இருக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஊதி பெரிதாக்குவார்கள்.

தொடர்ந்து தன்னுடைய தலைமையிலான அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்து வருவதை ஊடகங்களும் பெரிதுபடுத்தும் என்பதை மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது அனுதாபிகள் கூறுகிறார்கள்.

இதனால்தான், “மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்க விடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

இப்போது தமிழகத்தில் புதிய அரசியல் கட்சிகளும் தோன்றுவதற்கு தயாராகிவிட்டன. இந்த சூழலில் தோல்வியை தழுவினாலும் அது வெற்றியின் படிக்கட்டாக நினைத்தே தொண்டர்கள் பயணிப்பார்கள்.

கருணாநிதியே உதாரணம்

இதற்கு முன்னுதாரணம் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுக தலையெடுக்க முடியாமல், 13 ஆண்டுகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

ஆனால் அந்த காலக்கட்டத்தில் மறைந்த மு. கருணாநிதி அரசியலில் எந்த இடத்திலும் அதிமுகவுக்கு சவால் விடுவதில் பின்வாங்கவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒரு எம்ஜிஆர், ஜெயலலிதா அளவுக்கு தன்னை நினைத்துக் கொண்டோ அல்லது உயர்த்திக்கொண்டோ இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்திருக்கிறார் என்பதுதான் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்ட பலரின் வருத்தமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பலவும் அதிமுகவின் முடிவு, பாஜகவின் மேலிடத் தலைமையின் அழுத்தம் காரணமாகக் கூட இருக்கலாம் என விமர்சிக்கின்றன. அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி இப்போது இடம் கொடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக முடிவு, தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரான பாமகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதற்கான தெளிவான சான்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சசிகலா விமர்சனம்

வி.கே. சசிகலா செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர், விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பது சரியல்ல. தவறான முடிவு என்றும் விமர்சித்திருக்கிறார்.

அதிமுக தொடர்ந்து தோல்வியை தழுவினாலும், அதன் தொண்டர்களிடத்தில் காணப்படும் உற்சாகத்தை குலைக்காமல் இருக்கவாவது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுவதாக அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், சரியான நேரத்தில் தவறான முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

விக்கிரவாண்டியை பொறுத்தவரை அத்தொகுதியில் பாமகவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகம். விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கெனவே திமுகவை சேர்ந்தவர் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் இத்தேர்தலில் மீண்டும் அத்தொகுதியை திமுக தக்க வைப்பதற்காக தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து ஆளும் கட்சிக்கு எதிராக சவால் விடக் கூடியவராக இருக்க வேண்டிய சூழலில் இருந்து பின்வாங்குவது அவரது தலைமை மீது தொண்டர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி ஏற்படவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழ் இலக்கியங்கள் சொல்வது என்ன?

ஒரு வீரனுக்கான அழகாக இலக்கியங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? எதிரி பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், அவனோடு மோதினால் தோற்போம் என்று தெரிந்தும் மோதி, மார்பில் விழுப்புண்ணோடு உயிர் துறப்பதுதான் வீரமாக கருதப்படுகிறது.

எதிரியைக் கண்டு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடுபவனை இலக்கியங்கள் வீரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் கோழையாக வர்ணிக்கப்படுகிறான்.

இன்றைய அரசியலிலும் தமிழ் மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன் – அண்ணாமலை பஞ்சாயத்து முடிந்தது!

சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்துக்கு ஸ்வீட் பாக்ஸுடன் சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்று சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பாஜகவில் சலசலப்பு

தமிழக பாஜகவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் சலசலப்பு ஏற்பட்டது. இது வழக்கமாக எல்லா கட்சிகளிலும் காணப்படும் பலவீனம்தான். அது பாஜகவிலும் தோன்றியது.

தேர்தலில் தமிழிசை சௌந்திரராஜன் தோல்வியை சந்தித்தப் பிறகு ஊடகங்களிடம் அவர் பேசும்போது ஒருசில கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினார்.

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு சரியான கூட்டணி அமைக்காமல் போனதுதான். ஒருவேளை பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் பல இடங்களை தமிழகத்தில் கைப்பற்றியிருக்கும் என்று கூறினார்.

இது மறைமுகமாக அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்பதாக சூசகமாக அவர் தெரிவித்தது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அத்துடன், தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பேட்டியில், எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தபோது சிலரை கட்சிக்குள் அனுமதிக்கவில்லை.

அதாவது சமூக விரோத ரௌடிகள் போல் இருப்பவர்களை கட்சிக்குள் விடவில்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. கட்சியில் இப்போது ரௌடிகள் சேர்ந்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
இதனால் அண்ணாமலை தரப்புக்கும், தமிழிசை சௌந்தரராஜன் தரப்புக்கும் சமூகவலைதளங்களில் மோதல் போக்கு நீடித்தது.

இனி கண்ட இடத்தில் பேட்டி இல்லை-அண்ணாமலை

இந்த நிலையில் திடீரென தில்லிக்கு சென்ற அண்ணாமலை திரும்பி கோவைக்கு வந்தார். அப்போது நி்ருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, நான் இனி செய்தியாளர்களை கோவை அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன். கட்சியில் எல்லாவற்றையும் முறைப்படுத்தவுள்ளோம்.
இனி தலைவர்கள் யாரும் பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதுமெல்லாம் பேட்டி கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்.

அமித் ஷா என்ன சொன்னார்?

இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்பாராத ஷாக்கை அமித் ஷா கொடுத்தார்.
அங்கே மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை அழைத்த அமித் ஷா, அவரிடம் ஏதோ கைகளை அசைத்து காரசாரமாக பேசினார். இது அனைத்து ஊடகங்களிலும் பல யூகங்களுடன் செய்திகளாக வெளி வந்தன.
அந்த அளவுக்கு, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமித்ஷா சைகைகள், முகபாவங்கள் எல்லோருக்குமே புரிய வைத்தது.
தமிழிசை சௌந்தரராஜனை அருகில் அழைத்த அமித் ஷா, கட்சி விவகாரங்களை வெளிப்படையாக பேசக் கூடாது. தற்போதைய தலைமையை ஏன் விமர்சித்தீர்கள் என அவர் கேட்டிருக்கலாம்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தோல்விக்கான பொதுவான காரணங்களையே தான் பேசியதாகவும், இதில் யாரையும் தவறாக பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கலாம்.

யூகச் செய்திகள் என்ன சொல்கின்றன

அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த அமித்ஷா, முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் பேசாதீர்கள். கட்சித் தலைமை இருக்கும்போது நீங்கள் ஏன் பேட்டி அளிக்கிறீர்கள். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும்.
இனி நீங்கள் உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக் கூடாது என்று அவர் கண்டித்திருக்கலாம். அதற்கு சரி என்று தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துவிட்டு நகர்ந்திருக்கலாம் என்ற யூக செய்திகள் பரவின.
அத்துடன், பதவி ஏற்பு விழாவை அடுத்து சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை பத்திரிகையாளர்கள் அணுகியபோது, பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றதும் இந்த தகவலை ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தியது.
இந்த நிலையில், அமித்ஷா கட்சி ரீதியாக சில அறிவுறுத்தல்களைத்தான் தன்னிடம் கூறியதாக தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து ஊடகங்களின் யூகங்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு ஆசிர்வாதம்

அண்ணாமலை மேலிடத்தின் ஆசிர்வாதத்துடன் தமிழக பாஜக தலைவராக வந்தவர். அவர் மீது கடந்த காலங்களில் அவர் மீது புகார் தெரிவிக்கப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர்.

கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்களும் ஏராளம். பொதுவாக அண்ணாமலையைப் பற்றி யார் புகார் தெரிவித்தாலும், அதை மேலிடத்தில் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

யார் புகார் தெரிவித்தார்களோ அவர்களே அதிக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது தமிழிசை சௌந்தரராஜன் சேர்ந்திருக்கிறார்.
ஊடகங்கள் பல்வேறு யூகங்களை அடுக்கி வந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலை சென்று பார்த்து வந்தார்.

அத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமித் ஷா எல்லோரையும் குடும்ப உறுப்பினர்களாக நினைப்பவர்.

அவர் அன்பாகத்தான் கட்சியினரிடம் பேசுபவர். அவர் அன்போடும், அரவணைப்போடும்தான் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசியிருக்கிறார். இதில் மற்றவர்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை.
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உழைப்பு பாஜகவுக்கு என்றைக்கும் தேவைப்படுகிறது என்று சொல்லி கட்சியின் உள்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை.