எல்லாம் கடந்து போகும் நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவன் ஒருவனுக்கும் வந்தது. அதைப் பற்றித்தான் இந்தக் கதை சொல்கிறது.
உள்ளடக்கம்
குருகுல மாணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்
முன்னொரு காலத்தில் குருகுலத்தில் பயின்ற மாணவன் ஒரு கிராமத்தின் வழியே நடந்து சென்றான்.
அப்போது ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்கேயோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த மாணவன், அருகில் நின்றவரிடம் ஏன் இந்த பெரியவர் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அவனுக்கு சித்த பிரமை பிடித்திருக்கிறதா என்று கேட்டான்.
எல்லாம் கடந்து போகும் நிலை
அதற்கு அருகில் சென்றவர் சொன்னார். அந்த மனிதர் எல்லாம் கடந்து போகும் நிலையில் இருக்கிறார் என்று சொல்லி விட்டு சென்றார்.
இதற்கான அர்த்தம் புரியாமல் குழம்பிய அவன், குருகுலம் சென்றடைந்ததும், குருவை பார்த்து, எல்லாம் கடந்து போகும் நிலை என்கிறார்களே அது என்ன என்று கேட்டான்.
சிவ-பார்வதி குட்டிக் கதை
குரு இப்போது அந்த மாணவனின் எல்லாம் கடந்து போகும் நிலைக்கான சந்தேகத்தைப் போக்க ஒரு குட்டிக் கதையை சொன்னார்.
ஒரு சிவபக்தர் குடிசை வாயிலில் அமர்ந்து தன்னுடைய கிழிந்த வேட்டியை ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தார்.
வானத்தில் சிவபெருமானுடன் சஞ்சாரம் செய்துகொண்டிருந்த பார்வதி தேவி இக்காட்சிக் கண்டு வேதனைப்பட்டார். உடனடியாக சிவனிடம் அவருக்கு நாம் உதவலாமே என்றாள்.
சிவபெருமான் சிரித்தபடியே சரி என்றார். உடனே இருவரும் சிவபக்தர் முன்பு மனித ரூபத்தில் தோன்றினார்கள்.
“சிவபக்தரே, நாங்கள் இருவரும் அம்மை-அப்பன். உனக்கு உதவ வந்திருக்கிறோம்” என்றார் பார்வதி.
மோர் தந்து உபசரித்த சிவபக்தர்
இதைக் கேட்டதும் அந்த சிவபக்தர் ஆனந்த கூத்தாடுவார் என்று பார்வதி எதிர்பார்த்தார். ஆனால், அந்த சிவ பக்தரோ, அப்படியா.. சந்தோஷம். இந்த திண்ணையில் அமருங்கள். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த ஓலைக் குடிசைக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில், இருவரும் அருந்துவதற்கு மோர் எடுத்து வந்து தந்தார். பார்வதி பரந்தாமனை பார்த்தார். பரந்தாமன் சிரித்தபடியே, பக்தன் தருவதை அன்போடு பருகு என்று சொல்லி அந்த மோரை பருகினார்.
இதைக் கண்ட பார்வதியும் அந்த மோரை பருகினார். பிறகு சிவபக்தரை பார்த்து நாங்கள் உண்மையிலேயே அம்மை-அப்பன்தான்.
சிவபக்தரான உங்களை மகிழ்விக்கவே நாங்கள் வந்தோம். வேண்டும் வரத்தை கேளுங்கள். நாங்கள் தருகிறோம் என்றாள் பார்வதி.
அந்த சிவபக்தர் சிரித்தபடியே, அவர்கள் இருவரையும் உற்று நோக்கினார். பார்வதியோ இந்த சிவபக்தர் நம்மை நம்பவில்லை. நாம் இருவரும் அம்மை-அப்பனாகவே காட்சி தருவோம் என்றான் பரந்தாமனிடம்.
அதற்கும் பரந்தாமன் சிரித்தபடியே, சரி என்றார்.
இறைவனும், மனிதனும் எனக்கு ஒன்றே
இருவரும் அம்மை-அப்பனாக விஸ்வரூப தரிசனம் தந்தார்கள். அவர்களை எந்த சலனமும் இல்லாமல் பார்த்த அந்த சிவபக்தர் மீண்டும் உள்ளே சென்று பருகுவதற்கு மோர் எடுத்துக் கொண்டு வந்து தந்தார்.
மீண்டும் பரந்தாமன் அந்த மோரை வாங்கிக் குடிக்க. பார்வதிக்கு கோபம் வந்து, “சிவபக்தரே உமக்காக நாங்கள் கீழே இறங்கி வந்து வரம் தருகிறோம் என்றால் அலட்சியம் செய்கிறீர்களே” என்றாள்.
அப்போது அந்த சிவபக்தர் சொன்னார். நீங்கள் மனித ரூபத்தில் வந்தாலும், இறைவனாக வந்தாலும் எனக்கு நீங்கள் ஒரு விருந்தினர்தான். என்னுள் சதாசர்வ காலமும் நான் வணங்கும் சிவன் சஞ்சரித்து கொண்டிருப்பதால் எனக்கு தேவை எதுவும் ஏற்படவில்லை.
தேவை இருந்தால் தானே வரம் கேட்பதற்கு. சந்தோஷமாக போய் வாருங்கள் என்றார் அந்த சிவபக்தன்.
இந்த கதையில் இருந்து என்ன தெரிந்துகொண்டாய் என்று மாணவனை நோக்கி குரு கேள்வியை எழுப்பினார்.
சந்தேகம் தெளிந்த மாணவன்
குருவே… இப்போது எனக்கு “எல்லாம் கடந்த நிலை என்பது என்ன” என்பது தெளிவாகி விட்டது.
நான் வரும் வழியில் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தன்னை மறந்து அண்ணாந்து பார்த்து ஆனந்த சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது ஏன் என்பதை தெரிந்து கொண்டேன் என்றான் அந்த குருகுல மாணவன்.