ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு

சென்னை: இப்போது நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம் 2700 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு என்ற தொன்மையை உடையது என்பதை பலரும் அறியாமல் இருக்கலாம்.
இந்த பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் எதற்காக தொடங்கப்பட்டன. எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. ஏன் இடைக்காலத்தில் தடை செய்யப்பட்டது. இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகள் பெற்றிருக்கும் மாற்றங்கள் என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

ஒலிம்பியா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள்

ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு 776 ஆண்டுக்கு முன்பு கிரேக்க நாட்டில் ஒலிம்பியா என்ற இடத்தில் முதன்முதலில் மாபெரும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடத்தப்பட்டன.
அப்போது இப்போட்டிகள் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே நடந்தது. இப்போட்டிகளை கிரேக்க கடவுளர்களான சீயஸ் (zeus) , ஹேரா (Hera) ஆகியோரை வழிபடும் வகையில் ஒரு அர்ப்பணிப்பு விழாவாக நடத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் போர்க் கலைகளில் பயன்படுத்திய ஒருசில பயிற்சிகளையும், அன்றாடம் பொழுதுபோக்கு மற்றும் வீரத்தை நிரூபிக்கும் வகையிலான விளையாட்டுகளையும் தொகுத்து இப்போட்டிகள் நடத்தப்பட்டன என்பதை வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஹீரோ பட்டம்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு நகரில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒலிம்பியா நகரில் கூடுவார்கள்.
போட்டிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆன கிரீடம் போட்டி நடத்துவோரால் அணிவிக்கப்படும்.
இந்த கிரீடத்தை அணிந்த வீரர்கள் தங்கள் நகருக்கு ஊர்வலமாக செல்வார்கள். அங்கு காத்திருக்கும் மக்கள் அவரை நகரின் ஹீரோவாக வரவேற்பார்கள்.

பெண்களுக்கு தடை

கிரேக்க நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக இருந்தது. திருமணமான பெண்கள், போட்டிகளில் பங்கேற்கவோ, பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை.
போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான பணிப் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.

பெண்களுக்கு தனிப் போட்டி

பெண்களுக்காக தனியாக ஹேரயா என்ற போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக அந்தக் காலத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.
கிரேக்க கடவுள் சீயஸ் மனைவியான ஹேரா பெயரில்தான் இப்போட்டிகள் ஹேரயா என அழைக்கப்பட்டு வந்தன.
மல்யுத்தம், ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல், எடை மிகுந்த கல்லை தூக்கி எரிதல், நீண்ட தூரம் ஓடும் மராத்தான் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் அக்காலத்தில் இடம்பெற்றிருந்ததும் வரலாற்று ஆவணங்களில் இருந்து தெரிகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஒரு நாள் போட்டியாக இருந்து வந்த இப்போட்டிகள் பின்னாளில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வழக்கமாக மாறியது.
அத்துடன் அக்காலத்தில் இப்போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கின் எல்லா போட்டிகளும் ஒலிம்பியா நகரில் உள்ள மாபெரும் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.
40 ஆயிரம் பேர் அமரக் கூடிய மாபெரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒலிம்பியாவில் இருந்ததற்கான ஆதாரங்களும், சிதைவுகளும் கிடைத்திருக்கின்றன.

அமைதி, சமாதானம்

இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்போது எந்த வன்முறையும், போரும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக போட்டியாளர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள்.
ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியா நகரில் இருந்து ஸ்போன்டோஃபோராய் என்று அழைக்கப்படும் ஈலிஸ் நகர் குடிமக்கள் ஆலிவ் இலைகளுடன் கிரீடம் அணிந்து ஒரு மாத காலம் கிரேக்கநாடு முழுவதும் சுற்றி வருவார்கள்.
அவர்கள் ஒலிம்பியா நகரில் புறப்பட்டதும், கிரேக்க நாடு முழுவதும் அமைதி, சமாதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாடு.
அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்கள் எவரும் எந்த பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அப்படி ஏதேனும் வன்முறை, கலகம் ஏற்பட்டால், அது கிரேக்க கடவுள் சீயஸை நிந்திப்பதாக அர்த்தம் என்பதால் எல்லோரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தார்கள்.

அத்லெட்ஸ்

கிரேக்க ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் ஆத்லோஸ் என்று அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் அந்த வார்த்தையை பயன்படுத்தி ஆங்கிலத்தில் அத்லெட்ஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
போட்டிகளில் பங்கேற்பவர்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதும் ஒரு விதி. நாட்டின் போர்ப் படை தளபதியும், பாலிம்னிஸ்டர் என்று அழைக்கப்படும் ஆடு மேய்ப்பவரும் எதிரெதிரில் போட்டி களத்தில் இறங்குவார்கள்.
இப்படி எல்லோரையும் சமமாக விளையாட்டில் பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில், ரோட்ஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்த டயாகுராஸ் என்பவரும், பாசிடோனிட அரசர் அமின்டாஸின் மகன் ஒருவரும் கூட கலந்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பேரரசர் அலெக்சாண்டரும், டெமாக்ரைட்டர்ஸ் என்ற தத்துவ ஆசிரியர் ஒருவரும் கூட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டிருப்பதை வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

தடை விதிப்பு

ஏசு பிறந்த பிறகு அதாவது கி.பி. 393-இல் இந்த விளையாட்டுப் போட்டிகளை மதநம்பிக்கை அற்றவர்களின் கலாசாரம் என்று சொல்லி கிரேக்க அரசன் தியோடோசியஸ் தடை செய்தான்.
போட்டிகள் தொடங்கி 1169 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்தன.
போட்டிகள் நடத்தப்பட்டு வந்த ஒலிம்பியா நகர் கேட்பாரின்றி தனது பொலிவை இழந்தது. போட்டிகள் நடத்த பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் காலத்தால் சிதைந்து போயின.

மீண்டும் உயிர் பெற்ற ஒலிம்பிக்

1766-ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் கர்டியஸ் என்பவர் ஒலிம்பியா நகரை உயிர்ப்பித்தார். அதனால் இன்றைக்கு முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக இது மாறியிருக்கிறது.
அத்துடன், ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட பழைமையான மைதானத்தில் சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆய்வுக் கட்டடம் எழும்பியது.
1894-இல் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை பியரி டி. கூபர்டின் என்பவர் மேற்கொண்டு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினார்.
அதனால் இவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார். இவர்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர்.

ஒலிம்பிக் கொடி

நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ஆம் ஆண்டில் முதன்முதலில் ஏதென்ஸ் நகரில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 280 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். இப்போட்டிகளை 60 ஆயிரம் பேர் பார்த்தார்கள்.
ஒலிம்பிக் கொடி 6 வண்ணங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. வெள்ளை நிறத்தை பின்புலமாகக் கொண்ட இந்த கொடியில், ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்.
இந்த வளையங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 5 கண்டங்களைக் குறிக்கின்றன.

பெண்களும் பங்கேற்ற முதல் போட்டி

1900-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களும் முதன்முதலில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது நடத்தப்பட்ட போட்டிகளில் 997 வீரர்களில் 22 பெண்கள் இடம் பெற்றிருந்தார்கள்.
1924-ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அறிமுகமானது. இதனால் ஏற்கெனவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த போட்டி கோடைக்கால ஒலிம்பிக் போட்டி என பெயர் மாற்றம் பெற்றது.
1992-ஆம் ஆண்டு வரை கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன.
பிறகு குளிர்காலப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், கோடைக்கால போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தும் வழக்கம் ஏற்பட்டது.
அதன்படி 2 ஆண்டுகள் இடைவெளியில் இப்போட்டிகள் மாறிமாறி நடத்தப்பட்டு வருகின்றன.

போட்டிகள் தடைப்பட்ட ஆண்டுகள்

கடந்த காலங்களில் 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை.
அதேபோல், 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜப்பானில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று உலகம் முழுவதையும அச்சுறுத்தியதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அப்போட்டிகள் 2021-இல் டோக்கியோவில் நடத்தப்பட்டன.
ஒலி்ம்பிக் போட்டி தொடக்க நாளில கோலாகலமாக நடத்தப்படும் விழா முதன்முதலில் 1908 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

ஒலிம்பிக் தீபம்

ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ஆம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்றப்பட்டது.
இந்த ஒலிம்பிக் தீபம் போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் ஏற்றப்படுவது வழக்கத்தில் உள்ளது,
அதைத் தொடர்ந்து அந்த தீபம் ஒரு டார்ச் ரிலே மூலம் பல நாடுகளில் பல்வேறு சாதனைப் படைத்த வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு இறுதியாக ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நேரத்தில் விழா மைதானத்தில் உள்ள ஒலிம்பிக் தீப மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்படுகிறது.

உலக ஒலிம்பிக் தினம்

ஆண்டுதோறும் நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்ட ஜூன் 23-ஆம் தேதியை உலக ஒலிம்பிக் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.
தடகளம், கூடைப்பந்து, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், ஃபிகர் ஸ்கேட்டிங், ஃபென்சிங், கால்பந்து, ஸ்கேட்போர்டிங், டென்னிஸ், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. போட்டியில் ஒரு நாட்டின் வீரர் வெற்றி பெறும்போது அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

ஒலிம்பிக்கில் இந்தியா

1900-ஆவது ஆண்டில் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது. உலகின் 26 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
அப்போது, இந்தியா இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்று உலக நாடுகளை வியக்க வைத்தது. காரணம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் கொல்கத்தாவை சேர்ந்த நார்மன் பிரிட்சார்டு என்பவர் மட்டுமே பங்கேற்றிருந்தார்.
அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், 200 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
1904, 1908, 1912-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை. அதன பிறகு நடந்த போடடிகளில் இந்தியா பஙகேற்றது. ஆனாலும் பதக்கம் எதுவும் பெறவில்லை.
1928-ஆம் ஆண்டில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை பெற்று அசத்தியது.

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட காரணம் என்ன?

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள்

இவ்வாண்டு பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10500 வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்முறை ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.
இம்முறை முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா ஒரு மைதானத்துக்குள் நடத்தப்படவில்லை. பாரிஸின் சென் நதியில் நடத்தப்பட்டது.
சுமார் 200 தேசிய பிரதிநிதிகளின் அணிவகுப்பு படகுகளில் நடந்தது. தொடக்க அணிவகுப்பு கி.மீட்டர் வரை சென் நதியை கடந்தை 3 லட்சம் மக்களை மகிழ்வித்தது.
இநத ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 32 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 329 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 5,804 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
உக்ரைன் போரில் பங்கேற்றுல்லதால் ரஷ்யாவும், பெலாரஸ் நாடும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாபா வங்காவின் கணிப்பு சொல்வதென்ன? ஒரு நிமிட விடியோ