மோடி ஆட்சி மாறிப் போச்சு! தேர்தல் முடிவு மாறிப்போச்சு!


சென்னை: இரண்டு முறை மக்களவையில் பலம் மிக்க பிரதமராக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி

பிரதமரோடு 71 அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கிறார்கள். அவர்களில் 11 பேர் 9 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இம்முறை பாஜக தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகள், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகள் பெற்றுள்ளன.

இதுதவிர 4 சுயேட்சைகள் அல்லது சிறு கட்சிகளின் ஆதரவு என்ற நிலையோடு அறுதிப் பெரும்பான்மை கூட்டணியாக ஆட்சியில் பாஜக அமர்ந்திருக்கிறது.

பாஜக பாணியில் சொல்ல வேண்டுமானால் இது ஒரு நெல்லிக்காய் மூட்டை ஆட்சியாக உருவெடுத்திருக்கிறது.
ஆனால் முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலோர் அதே துறைகளுடன் பொறுப்பேற்றிருப்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய பாஜக அரசு தன்னிச்சையாக இதுவரை எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தனித்து எடுத்து வந்தது. இனிமேல் கூட்டணி கட்சிகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பாஜகவுக்கு ஒரு பின்னடைவுதான்.
முந்தைய இரு தேர்தல்களிலும் என்டிஏ கூட்டணியில் தோழமை கட்சிகள் இருந்தாலும் கூட, தனி மெஜாரிட்டியில் பாஜக ஆட்சி அமைந்ததால், அவர்களை எதற்காகவும் கலந்து ஆலோசிக்கவில்லை.

பலம் மிக்க பிரதமராக ஒரு சர்வாதிகார போக்கில் தனக்கு தோன்றியதையெல்லாம் செய்து வந்த மோடிக்கு இத்தேர்தல் நல்ல பாடம் கற்பித்திருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டங்களைக் கூட நாம் நினைத்தால் திருத்தலாம் என்ற மனப்போக்கை அவர் கொண்டிருந்ததற்கு கிடைத்த அடியாக இத்தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

காஷ்மீர் பிரச்னை

உதாரணமாக, காஷ்மீர் மாநிலப் பிரச்னையை பாஜக அரசு கையாண்ட விதத்தை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காஷ்மீர் பிரச்னையில் எந்த முடிவை எடுத்தாலும், அந்த மாநில சட்டப் பேரவையின் முடிவை தெரிந்துகொண்டே மத்திய அரசு முடிவு எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

இதனால் அந்த மாநில சட்டப் பேரவையை பாஜக அரசு கலைக்க வைத்தது.
அடுத்து தேர்தல் நடத்த வாய்ப்பு இருந்தும் அது நடத்தப்படவில்லை.

ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்த ஆளுநர் மூலம் ஒரு கடிதம் பெற்று அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதை ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடு என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தார்கள்.
இதுபோன்ற அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை திருத்த தயங்காது என்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மாநில உரிமைகள்

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல மாநிலங்களின் நலன்கள் பறிக்கப்பட்டன. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டன. நிதிப் பகிர்வில் சர்வாதிகார மனப்பான்மை பின்பற்றப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் புல்டோசர் ஆட்சி என்ற அளவுக்கு 4 ஆயிரம் இந்துக்களின் கட்டடங்கள் புல்டோசர்கள் மூலம் வேட்டையாடப்பட்டன.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த மோடி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்று பிரசாரம் செய்தது அவருக்கு எதிராகவே திசைத் திரும்பியதையும் உணர முடிகிறது.
உத்தரபிரதேசத்தில் மக்கள் பாஜகவை தோற்கடித்திருக்கிறார்கள்.

ராமர் கோயில் அமைந்த தொகுதி

குறிப்பாக ராமர் கோயில் அமைந்திருக்கும் தொகுதியைச் சேர்ந்த மக்களே பாஜகவுக்கு தோல்வியை அளித்திருக்கிறார்கள்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.
மோடியை பார்த்து பாஜகவின் மூத்த தலைவர்களே அச்சப்பட்டு வந்த நிலை இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.

இதனால் கட்சிக்குள் மோடியின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் பழிவாங்குவதற்கு சரியான தருணத்துக்காக காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

தேர்தல் பத்திரம் போன்ற திரைமறைவு ஊழல்கள்

பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் திரைமறைவில் நடந்த பல ஊழல்கள் நிச்சயமாக என்டிஏ சர்க்கார் ஆட்சி காலத்திலேயே வெளியாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதில் நீதிமன்றங்களும் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசியலில் பாஜகவுக்கு எதிரான மாற்றம், உத்தரபிரதேசத்தில் யோகி அதித்யாநாத் மற்றும் பாஜகவுக்கு எதிரான அரசியல் மாற்றம் நிகழும் வாய்ப்புகளும் இப்போது அதிகரித்திருக்கிறது.

அதிகார துஷ்பிரயோகமா?

மோடியை பொறுத்தவரை, வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் சூழல் நிலவுகிறது. காரணம் வாரணாசி வாக்கு எண்ணிக்கையில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதுதான்.
அதேபோல் மதத்தை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி பயன்படுத்திய விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறிய நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மோடிக்கு எதிராக அமைந்தால், இந்திராகாந்தி எமர்ஜென்சிக்கு முன்பு சந்தித்த பாதிப்பைக் கூட ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள்.
பதவி பிரமாணத்தின்போதே, ஒரு மக்களவை உறுப்பினரை வைத்துக்கொண்டிருக்கிற அஜித்பவார் கட்சி ஆரம்பத்திலேயே கேபினட் அந்தஸ்தில் பதவி கொடுங்க.. இல்லாவிட்டால் வேண்டாம் என்று அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எந்தக் கட்சி வாக்குறுதிகள் டாப்

கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்பி சுரேஷ்கோபி அமைச்சராக மத்திய அமைச்சரவையில் பதவியேற்ற 12 மணி நேரத்துக்குள் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். நான் தொடர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.
இந்த தேர்தல் முக்கியமான ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளது. பல பிரபல ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் போலியானவை என்பதையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

அவை இப்போது மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி மோடி நேருவின் சாதனையை சமன் செய்துள்ளதாக மீண்டும் வால் பிடிக்க தொடங்கியிருக்கின்றன.
மூன்றாவது முறையாவது ஒரு ஜனநாயக ரீதியான மக்கள் ஆட்சியாக அமைவதற்கு மோடி செயல்படுவாரேயானால் அதுதான் அவருக்கு பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் அவர் மீதான பழிகளை இந்த பூமி சுமந்து சென்று வரலாற்று பக்கத்தில் எழுதி வைக்கும்.