சிம் கார்டுகள் உங்கள் பெயரில் எத்தனை இருக்கின்றன

இணையதளத்துக்கு சென்று இப்போதே தெரிந்துகொள்வது நல்லது


சென்னை: நம்முடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் (sim cards) இருக்கின்றன என்பதை இப்போது நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நம்முடைய பெயரில் 9 கார்டுகளுக்கு மேல் இருக்குமானால் அதனால் நமக்கு தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் தண்டனை கிடைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

SIM CARDS

சிம் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெறுவதால், அதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி ஒருவர் அதிகபட்சமாக 9 ஸிம் கார்டுகளை மட்டுமே தன்னுடைய பெயரில் வைத்துக் கொள்ள முடியும்.
இந்த விதியை மீறுவோருக்கு தொலைத் தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் சிறைத் தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிககப்படும்.

சமூக விரோதிகள் நம் பெயரை பயன்படுத்தியிருக்கலாம்

பெரும்பாலான சமூக விரோதிகள் ஏராளமான எண்ணிக்கையில் ஸிம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றி மோசடியை அரங்கேற்றுகிறார்கள். சில நேரங்களில் நமக்கு தெரியாமல் நம்முடைய ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தியும் ஸிம் கார்டுகளை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிகபட்சம் எத்தனை ஸிம் கார்டுகள் வைத்திருக்கலாம்

அதிகபட்சமாக இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் 9 ஸிம் கார்டுகள் வரை வைத்திருக்கிற அனுமதி உண்டு.
காஷ்மீர், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருப்பவர்கள் அதிகபட்சம் 6 சிம் கார்டுகளை மட்டுமே தன் பெயரில் வைத்துக் கொள்ள முடியும்.

விதிகளை மீறினால் அபராதம்

தன்னுடைய பெயரில் 9-க்கும் மேற்பட்ட ஸிம் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், விதியை தொடர்ந்து மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் செலுத்தும் நிலை ஏற்படலாம்.

தகவல் அறியும் இணையதள முகவரி

நம்முடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய மொபைல் போனில் கூகுள் தேடுபொறியிலோ அல்லு வேறு தேடுபொறிகளிலோ, https://sancharsaathi.gov.in/ இணையதள முகவரியிலோ அல்லது TAFCOP என தட்டச்சு செய்தோ அல்லது https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ முகவரியிலோ நாம் நுழைந்து நம்முடைய 10 இலக்க செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்பில்லாத எண்களாக இருந்தால்…

அதைத் தொடர்ந்து திரையில் காட்டப்படும் Enter Captcha-வை பதிவு செய்ய வேண்டும். அடுத்து Validate captcha-வை அழுத்தினால் 6 இலக்க OTP (ஓடிபி) வரும்.
அதைOTP என குறிப்பிட்டிருக்கும் இடத்தில் பதிவு செய்து LOGIN-ஐ அழுத்தினால் இப்போது திரையில் உங்கள் பெயரில் உள்ள சிம்கார்டுகளின் எண்களின் முதல் 4 இலக்கங்களும், கடைசி 4 இலக்கங்களும் திரையில் வரும்.
இவை அனைத்தும் உங்கள் எண்களாக இருந்தால் பிரச்னை இல்லை. அந்த பக்கத்தில் இருந்து வெளியேறிவிடலாம்.
ஒரு வேளை உங்களுக்கு தொடர்பில்லாத எண்ணாக இருந்தால், not my number என்பதை கிளிக் செய்து REPORT என்பதை அழுத்த வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாவிட்டால்…


நீங்கள் பயன்படுத்தி தற்போது பயன்பாட்டில் இல்லாத எண்ணாக இருந்தால் not required என்பதை தேர்வு செய்து ரிப்போர்ட் பட்டனை அழுத்துங்கள்.


இப்போதே நீங்கள் செய்யத் தொடங்கிவிட்டீர்களா….


நல்லது. நீங்கள் இதை உடனடியாக செய்வதே சிறந்தது. காரணம், காலம் தாழ்த்தினால் சில நேரங்களில் நாம் இதை மறந்துவிடுவோம். அதனால் சில பாதிப்புகளும் நமக்கு வந்துவிடும்.

எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே!