ஆஷாட குப்த நவராத்திரி வடமாநிலங்களில் தொடக்கம்

சென்னை: வட மாநிலங்களில் மிக விமர்சையாக வழிபாடு நடத்தப்படும் ஆஷாட குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) இன்று (6 july 2024) தொடங்கியது.
இது துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களை வழிபடும் புனிதமான காலமாக கருதப்படுகிறது.
இக்காலத்தில், ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் ஒரு வடிவத்தை பக்தர்கள் வழிபட்டு பூஜை செய்வார்கள். தேவியின் 9 உருவங்களும் நவ துர்கா என அழைக்கப்படுகிறது.
குப்த் என்றால் மறைந்திருக்கும் எனப் பொருள். மறைந்திருக்கும் அறிவைப் பெறுவதற்காக இதை கொண்டாடுகிறார்கள்.

துர்கா தேவி வழிபாடு

துர்கா தேவியை இக்காலத்தில் பூஜித்தால், மா அம்பையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதோடு, மா அம்பை அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.
இந்துமத நாள்காட்டியின்படி இது 4 புனித மாதங்களில் இவ்வாண்டு வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின் ஆகியவை ஆகும். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.

ஆஷாடா, மாக்

சைத்ரா மாதத்தில் வரும் நவராத்திரியை பசந்த என்றும், அஷ்வின் மாத நவராத்திரியை ஷார்திய என்றும் அழைப்பார்கள்.
இவ்விரு பண்டிகைகளுக்கும் இடையே 6 மாதங்கள் உள்ளன. ஆஷாடா மற்றும் மாக் மாதங்களில் மீதமுள்ள இரண்டும் குப்த என அழைக்கப்படுகிறது. தந்திர மந்திரத்தை கற்று பயிற்சி பெற்றவர்கள் குப்த நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறார்கள்.
துர்காதேவி இந்த 9 நாள்களிலும் ஒவ்வொரு நாள் ஒரு உருவத்தில் காட்சியளிக்கிறாள். முதல் நாள் மா ஷைல்புத்ரியாக காட்சி அளிக்கிறாள்.
அடுத்து பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, குஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, கல்ராத்ரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்ற உருவங்களோடு பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

மகா வித்யாக்கள் வழிபாடு

அத்துடன், தாரா, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, காளி, பைரவி, தூமாவதி, பக்லாமுகி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய 10 மகா வித்யாக்களின் வழிபாடும் அடங்கும். காலையிலும், மாலையிலும் துர்கா சப்தகதியை பாராயணம் செய்வது முக்கியமானதாகும்.

விரதம் இருந்து பூஜை

ஆஷாடா குப்த விழாக் காலங்களில் 9 நாள்களும் விரதமிருந்து வழிபடுவார்கள். இவ்வாண்டு, குப்த கால வழிபாடு வரும் ஜூலை 16-ஆம் தேதி வரையிலான 10 நாள்கள் நடைபெறுகிறது.

10 நாள் துர்கா தேவி வழிபாடு

ஜூலை 6-ஆம் தேதியான இன்று ஷைலபுத்ரிதேவியை வழிபாடு செய்தார்கள். 7-இல் பிரம்மச்சாரிணிதேவி பூஜையும், 8-இல் சந்திரகாண்டாதேவிக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது.

கூஷ்மாண்டா தேவிக்கு சடங்கு ஜூலை 9-இல் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் சதுர்த்தி திதியையொட்டி தேவிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது.

11-ஆம் தேதி ஸ்கந்தமாதாதேவிக்கும், 12-இல் காத்யாயனிதேவிக்கும், 13-இல் கல்ராத்ரிதேவிக்கும் பூஜை நடைபெறுகிறது.

அஷ்டமி திதியான ஜூலை 14-இல் மகாகௌரி தேவி வழிபாடும், மறுநாள் இறுதியாக சித்திதாத்ரி தேவி வழிபாட்டுடன் நவராத்திரி பூஜை நிறைவு பெறுகிறது.