ஆன்லைன் சூதாட்டம் தடை: தமிழக ஆளுநர் ஒப்புதல்

சென்னை: ஒருவழியாக தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவுக்கு ((online gambling ban) ஒப்புதல் அளித்துவிட்டார்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு தடையாக உள்ள சில விஷயங்களுக்காக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார்.

ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200 தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்துக்கள் அவருக்கு எதிராக திசை மாறியது.
இதை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டது. சட்டப் பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா காலதாமதத்துக்கு முடிவு தேடி தந்தது.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

ஆளுநர் ஆர்.என். ரவி, குடிமைப் பணி தேர்வை சந்திக்கவுள்ள மாணவர்களிடையே சமீபத்தில் பேசினார். அப்போது மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அது அவருக்கு எதிராக அமைந்தது.

ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று அவர் பேசினார். இது அவருக்கு எதிரான அம்பாக மாறியது.

இதனால் சட்டமன்ற பேரவை விதிகள் 92/7 மற்றும் 287 ஆகியன தளர்த்தப்பட்டு, ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தலைகளை எண்ணும் வாக்கெடுப்பு நடத்தப்படடு சட்டமன்ற பேரவை விதிகள் தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

ஏற்கெனவே இத்தகைய நடைமுறையை 2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பாடு உள்ளது. சட்டசபை மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்ய வேண்டும்

ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும். இவை அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த தனித் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, ஆளுநர் ரவி மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.11.30 கோடி ஆளுநரின் சொந்த கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிதியை அரசுக்கு தெரியாமல் செலவிட்டுள்ளனர். பெட்டி செலவுக்கு இவ்வளவு நிதியா என்று கேள்வியை எழுப்பினார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி,சில மணி நேரங்களில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இது உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம்

“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புடைய அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை. அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம். அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை. அல்லது ரூ.5 லட்சம் அபராதம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

10 லட்சம் அபராதம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இல்லாவிடில், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கலாம்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தவறு செய்தால் தண்டனை உண்டு. ஓர் ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. அத்துடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

திமுக வாக்குறுதிகள் 202 நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் தேர்தல் நேர திமுக வாக்குறுதிகள் 202 நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க. ஸ்டாலின் வெளியிட்ட விடியோ

முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பது:

மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால்தான் நான் முதல்வர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன்.

நீங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்கும் நான் இன்று கோட்டையில் உட்கார அடித்தளமாக அமைந்துள்ளது. நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டோம். அப்போது, கருணாநிதி பாணியில் சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்றேன்.

ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 மாதங்கள் கடந்துள்ளன. இந்த 4 மாதங்களில் திமுக வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை செய்துள்ளோம்.

தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகளை அளித்தோம். மே 7-இல் பதவியேற்ற சில மணி நேரங்களில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

ஆவின் விலை குறைக்கப்படும்

2 கோடியே 9 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீட திட்டத்தில் அரசு ஏற்பு ஆகிய 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. உழவர்கள் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க, முதன்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கப்படுகிறது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

பத்திரிக்கையாளர்கள், 8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு எதிராக போடப்பட்ட 5,570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

சட்டப் பேரவையில் தீர்மானம்

3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது என 4 மாத சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.

கண்ணால் காண்பதும் பொய் – நேரடி அனுபவம்

எம்ஜிஆர், கருணாநிதி எப்படி சாதிக்க முடிந்தது?

தமிழ்நாடு சட்டப் பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் 2021

ஆர். ராமலிங்கம்

சென்னை: கடந்த 2021 ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 13 வரை நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை (Tn assembly) முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் பல சுவாரஸ்மான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது.

இக்கூட்டத் தொடர் திமுகவின் தேர்தல் நேர வாக்குறுதிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளைத் தாங்கியதாக அமைந்தது எனலாம்.

தமிழ்நாடு சட்டப் பேரவை முதல் கூட்டம்

முத்தாய்ப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டுவரப்பட்டபோது, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்த அதிமுக பெயரளவில் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியது.

திமுக தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கான விலக்கை சட்டரீதியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அதன் படிப்படியான நகர்வு வெளிப்படுத்துகிறது.

நீட் தேர்வு விலக்கு சட்டப் போராட்டத்தில் திமுக ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமைந்துவிடும்.

அந்த பயம் அதிமுகவிடம் இருப்பது தமிழ்நாடு சட்டப் பேரவை நிகழ்வுகளிலும், வெளியில் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் நன்றாகவே வெளிப்பட்டது.

அதிமுக உள்ளூர நினைப்பது திமுக நீட் தேர்வு விவகாரத்தில் எவ்வகையிலும் சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.

ஆனாலும் மக்கள் பெரும்பாலோரின் விருப்பத்துக்கு எதிராக நடந்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதால் அதிமுக பெயரளவில் மசோதாவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது எனலாம்.

சோதனைக் காலம்

சட்டப் பேரவை கூட்டத் தொடங்கியது முதலே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சோதனைகாலம் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது.

வெள்ளை அறிக்கை தொடங்கி, கொடநாடு கொலை விவகாரம் வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பதற்றமான செயல்பாடுகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ரசித்து வருவது அவரது முகக் கவசத்தையும் தாண்டி  வெளிப்படையாகத் தெரிந்தது.

எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கில் பதற்றமாக இருப்பது கட்சிக்காரர்களுக்கே அவர் மீதான ஒரு மரியாதையை கொஞ்சம் குறைக்கத்தான் செய்தது.

எதற்கும் அஞ்சாத சிங்கமாய் திகழ்ந்த ஜெயலலிதா இருந்த இடத்தை பிடித்துவிட்டதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது தற்போதைய பேச்சுகள், பேட்டிகள், குறைந்தபட்சம் 100 நாள்களாக ஒரு புதிய அரசுக்கு காலஅவகாசம் கொடுத்து விமர்சிக்க வேண்டும். அந்த அரசியல் நாகரிகத்தை அவர் புறம்தள்ளியதற்கு காரணம் கொடநாடு விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றமே என்கிறார்கள் அதிமுகவினர்.

திமுகவின் செயல்பாடு

திமுகவின் தற்போதைய செயல்பாடுகள், ஏற்கெனவே திமுகவை விமர்சித்து வந்த நடுநிலை சிந்தனையாளர்களிடையே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொண்ட பதற்றத்தை, ஓ. பன்னீர்செல்வத்தை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது.

அவரது நிதானமான பேச்சு, திமுக கொண்டு வந்த ஒருசில நல்ல முயற்சிகளுக்கு பாராட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலம் பார்க்க முடிந்தது.

கூட்டத் தொடங்கியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான பதில்கள் வரை அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதங்கள் ஆரோக்கியமான சட்டப் பேரவை நகர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்ப தன் மீதான புகழுரையைக் குறைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் அதை ஒருசில சட்டப் பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் கண்டுகொள்ளாமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.

உதயநிதிக்கு முக்கியத்துவம்

சட்டப் பேரவையில் புதிய உறுப்பினராக வந்துள்ள முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட, கொடுக்கப்படும் முக்கியத்துவம், புகழுரைகள் திருவாளர் பொதுஜனங்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கருணாநிதி நினைவிடம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது,  பாஜக, பாமக ஆகியன வரவேற்றன. 

ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், ஒருபடி மேலே போய், “என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் பராசக்தி பட வசனப்புத்தகம் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரததில் நாங்கள் எடுத்துப் பார்த்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்று ஒரு போடு போட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, இப்படி அவர் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாகும்.

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின்

YOU MAY ALSO LIKE THIS VIDEO

நல்லோர் திருக்குறள் – கதையும் விளக்கமும்