பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

சென்னை: பங்களாதேஷ் நாட்டின் பிரதமரை தங்களுடைய போராட்டங்கள் மூலம் அகற்றி அந்த நாட்டுக்கு இடைக்கால அரசை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பினர்

15 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய சர்வாதிகார ரீதியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டவர் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா. அவர் ஒரு இடஒதுக்கீடு விவகாரம் மாணவர்களிடையே போராட்டமாக மாறி, தன்னுடைய பதவியை இழக்கச் செய்துவிடும் என கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரு நாட்டில் ஒரு தனி நபரின் சர்வாதிகாரமும், வேலைவாய்ப்பு பிரச்னையும் தலைத்தூக்கினால் இளைய சமுதாயம் விழித்துக் கொண்டு அந்த நாட்டின் தலைமையை மாற்றக் கூடிய வல்லமை படைத்தது என்று பங்களாதேஷில் நடந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் என அழைக்கப்படும் வங்க தேசம் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டது.
நாடு விடுதலை அடைவதற்கு முன் ஏற்பட்ட வங்காளப் பிரிவினையின்போது இதனுடைய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்தியா விடுதலை அடைந்தபோது, பாகிஸ்தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் உருவெடுத்தது.
கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முழு சுதந்திரத்தை விரும்பியவர்களாக இருந்த நிலையில், அவர்கள் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள்.

ராணுவ ஆட்சி

இந்த நிலையில், 1970-இல் அந்த நாட்டின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பிரதமராக இருந்தவர் முஜ்புர் ரஹ்மான். தற்போதைய நாட்டை விட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனாவின் தந்தை.
அவர் உள்பட அவரது குடும்பத்தினர் பெரும்பாலோர் அப்போது கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் பங்களாதேஷ் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்கள்.

மீண்டும் மக்களாட்சி

1971-ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் துணையால், வங்காளதேசம் தனி நாடாக மலர்ந்தது. அரசியல் களத்தில் ஏற்பட்ட மாறுதலால் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. பேச்சுரிமை மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1991-ஆம் ஆண்டு அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்தது.
சுமார் 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாக, உலகின் 8-ஆவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக பங்காளாதேஷ் உள்ளது.
வங்க தேசம் உருவானப் பிறகு இந்தியாவின் வங்கதேச எல்லையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக மாறின.
இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து வந்த முஜ்புர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா 1981-இல் வங்கதேசத்துக்கு திரும்பி ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிற அரசியல் கட்சிகளுடன் கைக்கோர்த்து மக்கள் எழுச்சியை உருவாக்கினார்.
அவர் 1996-இல் முதன்முறையாக பங்களாதேஷில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். மீண்டும் ஹசீனா 2009-இல் நடந்த தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். ஆனால், அவர் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.

வங்க தேசத்தின் தற்போதைய நிலை

ஷேக் ஹசீனா, தன்னுடைய ஆட்சியில், நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு வங்கதேசம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கத் தொடங்கியது. வேலையின்மை அதிகரித்து வந்தது.
அவரது ஆட்சியில் சர்வாதிகாரப் போக்கு கடந்த சில ஆண்டுகளாக தலைதூக்கியது. அவரும், அவரது கட்சியினரும் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலுக்கு பயன்படுத்தினார்கள்.
குடிமக்களுக்கு அடிப்படை வாக்குரிமை மறுக்கப்படும் நிலை சில நேரங்களில் உருவானது. அவருடைய சர்வாதாரப் போக்கு இளம் தலைமுறையினரிடையே அதிருப்தி ஏற்பட வைத்தது.

ஹசீனாவின் ஆத்திரமூட்டிய பேச்சு

அண்மையில் ஷேக் ஹசீனா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பங்களாதேஷ் நாட்டின் ஒதுக்கீடு சீர்திருத்த முறையைப் பற்றி பேசினார்.
அப்போது அவர் அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பீடு செய்து பேசினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்கிறார்கள். அப்படியெனில், பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்களுக்கு ஒதுக்கீடு தர வேண்டுமோ என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

மாணவர்களின் போராட்டம்

ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பாக பங்களாதேஷ் நாட்டின் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷேக் ஹசீனா பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹசீனாவின் கருத்துக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
காவல்துறை, உயரடுக்கு பாதுகாப்பு படையினர், ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் படைகள் என எல்லாமும் மாணவர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்டன.
அத்துடன் ஹசீனாவுக்கு எதிராக போராடியவர்களை இச்சந்தர்ப்பத்தின் ஹசீனாவின் ஆதரவு மாணவர் பிரிவு தாக்குதல் நடத்தியது.
இதனால் நாடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. 3 நாள்களில் பங்களாதேஷ் நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.

மக்கள் எழுச்சியாக மாறிய போராட்டம்

ஒரு கட்டத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டாக்காவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் இறங்கினார்கள்.
இனி நாங்கள் தோட்டாக்களுக்கு அஞ்சப் போவதில்லை என்ற அவர்களின் முழக்கம் மக்கள் எழுச்சியாக உருவெடுத்தது.
இதனால் வேறு வழியின்றி ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என பங்களாதேஷ் ராணுவம் அழுத்தம் கொடுத்தது.
ஒரு கட்டத்தில் பிரதமரின் இல்லத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிடத் தொடங்கியது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ராணுவம் தலையிட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி ஷேக் ஹசீனாவுக்கு 45 நிமிடம் கால அவகாசத்தை ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான் விதித்தார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகி ஹசீனா

ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தன்னை பிரதமர் பதவியில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவர் வேறு எந்த நாட்டுக்கு செல்வார் என்று தெரியவில்லை.
இதுவரை வேறு எந்த நாடும் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் சொல்லவில்லை.

அழுத்தம் கொடுத்த மாணவர்கள்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அதிபர் முகமது ஷகாபுதீன் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
வங்கதேச பாராளுமன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்தார். உடனடியாக இடைக்கால அரசை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, வங்கதேச போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மாணவர்கள், மீண்டும் ராணுவத்தின் தலைமையிலான ஆட்சியை ஏற்க மறுத்தார்கள்.
பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியலில் மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் முக்கியம் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினார்கள்.

முகமது யூனுஸ் தலைமையில் நிர்வாகம்

அதிபர் முகமது ஷஹாபுதீன், ராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இடைக்கால அரசின் தலைவராக 84 வயதான முகம்மது யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் யூனுஸுடன் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களான நஹித் இஸ்லாம், ஆசிஃப் முகமத் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் கடந்து வந்த வரலாறு

யார் இந்த முகமது யூனுஸ்

வங்கத்தேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றிருக்கும் முகமது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் ஏழைகளின் வங்கியாளர் என்றும் அழைக்கப்படுகிறார்.
வங்க தேசத்தின் குறுகிய கால கடன் பயன்பாட்டின் முன்னோடியாக விளங்குகிறார். அவர் 1983-இல் தொடங்கிய கிராமின் வங்கி மூலம் வங்கதேச ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்.
அவரது கிராமின் வங்கி ஏழை மக்கள் சிறுதொழில்கள் நடத்துவதற்கான குறுகிய கால கடன்களையும் நீண்டகால கடன்களையும் வழங்கியது.
அவரது செயல்பாட்டை பாராட்டி, 2006-ஆம் ஆண்டில் முகமது யூனுஸ் மற்றும் கிராமின் வங்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வங்க தேசத்தில் எழுப்பப்பட்டதும் உண்டு. அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு வயதைக் கடந்து கிராமின் வங்கியில் பணிபுரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2011-ல் வங்கதேச அரசியல்வாதிகள் மீது அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்பட்டது.
தொழிலாளர் சட்டங்களை அவர் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 6 மாத சிறைத் தண்டனையும் கூட அவருக்கு வழங்கப்பட்டது.

மாணவர் இயக்கம் நம்பிக்கை

முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால அரசை சிறப்பாக வழிநடத்துவார் என புரட்சியில் ஈடுபட்ட மாணவர் இயக்கம் நம்புகிறது.
வங்கதேச மக்களைப் பொறுத்தவரை, நாட்டில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். உடனடியாக சட்டம் ஒழுங்கை பராமரிக்க தொடங்க வேண்டும். நாட்டின் வேலையின்மை பிரச்னைக்கும், பொருளாதார தேக்க நிலைக்கும் முடிவு காண வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இது சர்வாதிகாரத்துக்கு எச்சரிக்கை

வங்க தேசத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒரு விஷயத்தை நாட்டை ஆள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் மறைமுகமாக விடுத்திருக்கிறது.
நாட்டில் தனிநபர் சர்வாதிகார போக்கும், மக்களுக்கு எதிரான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும் அரசுகளையும் எதிர்ப்பதற்கு இன்றைய இளைய தலைமுறை தயாராகி விட்டதை உலகுக்கு பறைசாற்றியிருக்கிறது.

கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து மீட்க முடியுமா?