சென்னையில் மழை: போக்குவரத்து சீர்குலைவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை

வங்கக் கடலில் நகரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 17-ஆம் தேதி காலை நேரத்தில் காற்றத்தழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது.

சென்னையில் மழை

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இரு நாள்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்ற தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்வதால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

வாகனப் போக்குவரத்து சீர்குலைவு

சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து பல இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப் பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து சீர்குலைந்திருக்கிறது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் ஏற்கெனவே குண்டும், குழியுமாக இருக்கும் சூழலில், மழை நீர் தேங்கி எங்கு பள்ளம் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடதிசை நோக்கி நகர்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்தார்.
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விரைவு ரயில்கள் ரத்து

கனமழையை அடுத்து சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி விரைவு ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று பாலக்காடு, மேட்டுப்பாளையம், கோவை ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும். பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதை அடுத்து ஜோலார்பேட்டை, ஆலப்புழா விரைவு ரயில்கள் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

களத்தில் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டிய பணிகளை துரிதப்படுத்தினார்.
பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரி கரையோரத்திலும் அவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் பெய்து வரும் மழை நிலவரம், நிவாரணப் பணிகள், பேரிடர் மீட்புக் குழுக்கள் விவரம், மழைக்கால மருத்துவ முகாம்கள், மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடந்த ஆண்டு தந்த அச்சம்

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த மழையில் சென்னை மாநகரம் மிதந்தது. இதனால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தார்கள்.
மழைநீர் வடிகால் பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. இதனால் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம். கனத்த மழை பெய்த நிலையில், செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறக்கப்பட்டதால் வெள்ளக்காடாக சென்னை காட்சி அளித்தது.

இந்த நிலையில், சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்த தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக கடந்த ஆண்டில் பெய்த மழையில் தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தன. வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் உள்ள குடியிருப்புகளின் தரைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் மூழ்கின.

இதனால் கடந்த ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் ஓரமாக கார்களை நிறுத்தி வைத்தது சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அதாவது சுமார் 6 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை கடலை சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகியவற்றின் மூலமும், பக்கிங்ஹாம் கால்வாய் மூலமாகவும்தான் கடலை சென்றடைய முடியும்.

கடந்த ஆண்டைப் போல் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், 17-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையை கடப்பதால், நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

நல்லோர் சிறுகதை திருக்குறள்

சென்னை அருகே கடற்கரை திருக்கோயில்