புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியர்களுக்கு பலன் தருமா, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலைப்பாடு என்ன?

சென்னை: யுபிஎஸ் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (unified pension scheme) என்ற தேசிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.

டிவி சோமநாதன் கமிட்டி பரிந்துரைகளை ஏற்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போதைய மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

இந்த புதிய திட்டத்தில், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு நிலையான பங்களிப்புகளை செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த நிதியில் இருந்தே ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சேவைக் காலத்தை கணக்கிட்டும் ஓய்வூதியம் மாறுபடுகிறது.

அத்துடன் கடைசி மாத ஊதியம், சராசரி ஊதியம் ஆகியனவும் கூட ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தை நிர்ணயிக்கின்றன.

என்ன கணக்கீடு?

ஒரு ஊழி்யர் மத்திய அரசுப் பணியில் 30 ஆண்டுகள் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் கடைசி மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் பெறுகிறார் எனில் அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும்.

இது தவிர அகவிலைப்படியும் கிடைக்கும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் இரண்டிலுமே அகவிலைப்படி இணைகிறது. அதனால் பணவீக்கம் அதிகரிக்கும்போது அகவிலைப்படியும் உயரும்.

இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தோருக்கு 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.

ஓய்வூதியரின் மரணத்துக்கு பிறகு அவரது வாழ்க்கை துணைக்கு 60 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும்.

என்பிஎஸ் (New Pension scheme) திட்டத்துடன் உள்ள வேறுபாடுகள்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் மாத ஊதியத்தில் 10 சதவீத பங்களிப்பையும், நிர்வாகம் 14 சதவீதம் பங்களிப்பையும் அளிப்பது நடைமுறையில் உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் ஊதியத்தில் 10 சதவீதமும், நிர்வாகத்தின் சார்பில் 18.5 சதவீதமும் பங்களிப்பாக அமைகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் முதலீடு செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு இல்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு முதலீடு திட்டமாக இருக்கிறது. இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடு சந்தையுடன் இணைக்கப்படுகிறது.

அதன் காரணமாக, நிலையான ஓய்வூதியத்துக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் வழி வகுக்கவில்லை.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறைந்தபட்ச ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அத்துடன் அகவிலைப்படியாக கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மொத்த நிதியில் 60 சதவீதம் வரை ஓய்வுபெறும்போது ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு எந்த வருமான வரியும் கிடையாது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்கு ஒரு மொத்தத் தொகை வழங்கப்படும். இது ஒவ்வொரு 6 மாதமும் நிறைவடைந்த சேவைக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 1/10 விகிதத்தில் இது கணக்கிடப்படும்.

ஓபிஎஸ் (Old Pension scheme) திட்டத்துடன் உள்ள வேறுபாடு

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அகவிலைப் படி மூலம் நேரடியாக விலைவாசி உயர்வுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது. அதேபோல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணவீக்கத்தை சமாளிக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பொதுவாக ஊழியர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதமும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் அகவிலைப்படியையும் பயனாளிகள் பெற்று வருகின்றனர். இத்திட்ட பயனாளிகள் பணிக்காலத்தில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் ஓய்வூதிய நிதிக்கு நிலையான பங்களிப்புகளை செய்ய வேண்டியுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை காலம் நிறைவு செய்தவர்களுக்கே ஓய்வூதியம் கிடைக்கும்.

புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலை என்ன?

தமிழ் நாடு அரசு 2003-இல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த பிறகு, சிபிஎஸ் என அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தற்போது மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அதை தமிழ் நாடு அரசு அமல்படுத்த முன் வருமானால், தமிழ் நாடு அரசு ஊழியர்களின் முடிவு எதுவாக இருக்கும்?.

இந்தக் கேள்வி தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினருமான செ.நா. ஜனார்த்தனிடம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்க மாட்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று திரவிட மாடல் அரசான திமுக கடந்த தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்தது.

அத்துடன், ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்திருக்கிறார் என்றார் செ.நா.ஜனார்த்தனன்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் எப்படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது?

பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியரிடமிருந்து பங்களிப்பு இல்லாதது மற்றும் மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் 1972 இப்போது 2021 இன் படி உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக அது இருக்கிறது.

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை எவ்வளவு?

சுமார் 7.13 லட்சம் பேர் தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழகத்தில் பலனடைவோர் எண்ணிக்கை எவ்வளவு?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தற்போது சுமார் 3.15 லட்சம் பேர் பலனடைந்து வருகிறார்கள்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் விரும்பாதது ஏன்?

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்களின் 10% பங்களிப்பும், அரசு பங்களிப்பு 14 சதவீதமும் இருக்கிறது. இத்திட்டத்தில் ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ஓய்வு பெறும் நாளில் திருப்பி தரப்படுகிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தாலும், திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்ப வழங்கப்பட மாட்டாது.
இதற்கு மாற்றாக, 10% ஊழியர் ஊதியத்தை, அதாவது, பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை அரசு வழங்குகிறது.
இதனால் ஓய்வுபெறும் நாளில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்தத் தொகை திருப்பித் தரும் நிலை இல்லாததால் இதை அரசு ஊழியர்கள் ஏற்க விரும்பவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் விரும்புவது ஏன்?

பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய திட்டத்திற்காக எந்த தொகையும் பிடித்தம் செய்யவில்லை. மாறாக பொது வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்பட்டு அவை வட்டியுடன் ஓய்வு பெறும் நாளில் முழுவதும் திரும்ப வழங்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் கட்அவுட் சிறுகதை

ஹிண்டன்பர்க்-அதானி-செபி பற்றிய சிறுகதை விளக்கம்