திரட்டு பிள்ளையார் – திருட்டு பிள்ளையார் எது சரி?

குடந்தை ப. சரவணன்

ஒரு கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு பிள்ளையார் சிலை முதலில் நிறுவப்பட வேண்டும். அதுவும் அந்த பிள்ளையாரை திருடிக் கொண்டு வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை வழக்கத்தில் இருக்கிறது.

இந்த நடைமுறை சரியா? தவறா? என்பதைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகர் சுழி

நம் நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் முதற்கடவுளான விநாயகருக்குத் தான் முதல் வழிபாடு நடத்துவது வழக்கத்தில் இருக்கிறது.

எந்த நல்ல காரியத்தையும், பிள்ளையார் சுழியிட்டு தொடங்குவது தொன்றுதொட்ட தமிழர் மரபின் மற்றொரு சிறப்பு.

இந்த விநாயகர் வழிபாட்டில் நம் முன்னோர்கள் ஒரு வழிமுறையை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

திரட்டு விநாயகர்

வெறும் மண்ணிலோ அல்லது மஞ்சள் பொடியிலோ அல்லது பசுஞ்சாணத்திலோ சிறிதளவு நீர் விட்டு பிசைந்து கையால் பிடித்து வைப்பர். அந்த பிடி விநாயகருக்கு எளிதில் கிடைக்கக் கூடிய அருகம்புல், தும்பைப் பூ, எருக்கம் பூ என இவைகளில் ஏதேனும் ஒன்றை சாத்துவர்.

இந்த விநாயகர்தான் திரட்டு பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இவரைத் தான் வழிபாட்டுக்குரியவராக நம் முன்னோர்கள் கண்ட வழிமுறை.

அவரை வழிபட்டாலே நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் அருளுவார். எந்த விஷயத்திலும் வெற்றியை தருவார் என்ற நம்பிக்கை உண்டு.

கர்நாடக மாநிலம், ஆனெகுடே விநாயகர் கோயில் தரிசனம்

விடியோவை காணுங்கள்

திருட்டு பிள்ளையார்

காலப் போக்கில் இந்த திரட்டு பிள்ளையார் திரிந்து திருட்டு பிள்ளையாராக மாறிப் போனார். இதற்குக் காரணம் ஆன்மிகத்தை முழுமையாக தெளிந்துணராதவர்கள் உச்சரிப்பை மாறியதால் இப்படி ஒரு நிலை உருவாகிவிட்டது.

இதனால்தான், ஒரு கோயில் கட்ட வேண்டும் எனில் முதலில் ஒரு விநாயகரை திருடி வந்து வைக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஆகம விதிகளும் இத்தகைய நடைமுறையை பின்பற்றச் சொல்லவில்லை. ஆனால், இன்றைக்கும் சிலர் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவது அறியாமையின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது..

புராணக் கதை

திரட்டு விநாயகர் என கையினால் மண்ணையோ, மஞ்சளையோ பிடித்து வைப்பதற்கு ஒரு ஆன்மிக புராணக் கதையும் உண்டு.

கிடா முட்டு கல்வெட்டுகள் சொல்லும் தகவல்

படித்துவிட்டீர்களா?

அன்னை மகாசக்தி, பரமனை கஜமுகாசூரனின் அன்புச் சிறையில் இருந்து மீட்டெடுக்க தன் சக்தியை அதிரிக்க தவம் செய்ய முற்படுகிறாள். தன்னுடைய தவத்துக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக அன்னை ஒரு காரியம் செய்கிறாள்.

தன் உடலில் பூசப்பட்டிருக்கும் மஞ்சளை திரட்டுகிறாள். அப்படி திரட்டிய மஞ்சளை பிடித்து வைக்கிறாள். அதற்கு பரமனின் ஆற்றல் கலந்த தன்னுடைய சக்தியைத் திரட்டி அதற்கு உயிரூட்டுகிறாள்.

அப்படி மஞ்சள் திரட்டப்பட்டு பரமனின் ஆற்றலையும், தனது சக்தியையும் தாங்கிய அந்த வீரனையே தன் தவம் களையாமல் இருப்பதற்காக பாதுகாவலனாக நிறுத்துகிறாள்.

அப்படி உருவானவர்தான் இன்றைக்கு நாம் வணங்கும் விநாயகர். அன்னை மகாசக்தி மஞ்சளை திரட்டி உருவம் கொடுத்ததால் திரட்டு விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.