முள்ளங்கி பன்னீர் பொரியல்

சுவையான முள்ளங்கி பன்னீர் பொரியல் செய்வதற்கான பொருள்கள் அதன் செய்முறை விளக்கத்தை இப்பக்கத்தில் நீங்கள் அறியலாம்.

தேவையான பொருள்கள்

முள்ளங்கித் துருவல் – ஒரு கப்

துருவிய பன்னீர் – 2 டேபிள்ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை

ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய்,

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயை குறைந்த அளவு தீயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, முள்ளங்கித் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் கழித்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி நன்றாக வேக விடவேண்டும்.

அதைத் தொடர்ந்து பன்னீர் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து சீராக கிளறி இறக்கி வைக்கவும்.

முள்ளங்கியின் பயன்கள்

இதில் விட்டமின் சி.இ.பி6, ஃபோலேட்டுகள் அதிக அளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 ஆகியவையும் காணப்படுகின்றன.

தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.

இதை உண்ணும்போது குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.

இக்காயில் நார்ச்சத்து, அதிக அளவு நீர்ச்சத்தும் இருக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இக்காய் சேர்க்கப்பட்ட உணவை தொடர்ந்து எடுப்பது நல்லது.

இந்த காய் கல்லீரல், செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சை நீக்க உதவுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

இரத்தத்தில் பிலிரூபினின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கல்லீரல், பித்தப்பையை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சீர்செய்து கல்லீரல், பித்தப் பை செல்களை நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது.