ரமலான் பண்டிகையில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது ஏன்?


சென்னை: இஸ்லாத்தில் முக்கிய 5 கடமைகளில் ஒன்றுதான் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பதாகும்.

அது ஏன் தொடங்கப்பட்டது? அதன் பலன்கள் என்ன? எப்போது தொடங்கப்பட்டது? என்பதை நாம் பார்க்கலாம்.

நோன்பு காலங்களில் ஏன் நோன்பு கஞ்சி தென்னிந்திய பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

ரமலான் நோன்பு

இஸ்லாத்தில் நோன்பு இருத்தல் அந்த மதம் வேகமாக பரவும் முன்பே இருந்து வந்த ஒன்று. அந்த நோன்பு முறை இன்றைக்கு கடைபிடிப்பதுபோன்று இல்லை.

முகமது நபி நோன்பை ஆரம்பததில் கடைப்பிடித்தார். ஆனால், அவருடைய நண்பர்களுக்கு அதை அவர் கட்டாயப்படுத்தவில்லை.

5 கடமைகள் என்னென்ன?

மெக்காவில் வசித்து வந்த முகமது நபி மதினாவுக்கு சென்றபிறகு கிபி.624-இல் இஸ்லாத்தில் ரமலான் நோன்பு இருத்தல் முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியது.

கலிமா

அதாவது இறை நம்பிக்கை. இது இஸ்லாத்தின் அடிப்படை கடமை. ஒருவர் இறைநம்பிக்கையுடையவராக இருந்தால்தான் அவர் முஸ்லிமாக மாறுகிறார்.

5 வேளை தொழுகை:

நாள்தோறும் 5 நேரங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகை செய்ய வேணடும்.

பஜ்ர் எனப்படும் அதிகாலை தொழுகை, லுஹர் – நண்பகல் தொழுகை, அஸ்ர் – பிற்பகல் தொழுகை, மஃரிப் – மாலை நேர தொழுகை, இஷா – இரவு நேர தொழுகை ஆகியன 5 வேளை தொழுகைகள் ஆகும்.

நோன்பிருத்தல்:

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஆண், பெண் முஸ்லிம்களின் கடமை. சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறைவு வரை எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும். நோன்பை முறிக்கும் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது.

இந்த தொழுகை இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவர் தொழுதால் அவருக்கு இறைவனிடம் இருந்து நன்மைகள் கிடைக்கும். தொழுகை செய்யாவிடில் இறை தண்டனை கிடைக்கும்.

ஸகாத்:

செல்வம் படைத்தவர்கள் தனது செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முறைப்படி ஏழை, எளியவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். இது எல்லோருடைய கடமை அல்ல. குறிப்பிட அளவுக்கு மேல் செல்வம் படைத்தவர்கள் செய்ய வேண்டிய கடமை.

ஹஜ்:

சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரத்தை நோக்கி துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வது. இதுவும் எல்லோருக்கும் கட்டாய கடமை அல்ல. ஹஜ் யாத்திரை மேற்கொள்ள தேவையான உடல் தகுதியும், பொருளாதார தகுதியும் இருப்பவருக்கே இது பொருந்தும்.

வாழ்வில் ஒரு முறையாவது இக்கடமையை வசதி படைத்தவர்கள் செய்ய வேண்டும். வசதி படைத்திருந்தும், உடல் தகுதி பெற்றிருந்தும் இந்த கடமையை ஆற்றாதவர்கள் இறைவனின் தண்டனைக்கு உரியவர்கள்.

நோன்பு தோன்றிய விதம்:

அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே நோன்பிருக்கும் பழக்கம் இருந்தது. முகமது நபி மெக்காவில் தங்கியிருந்த காலத்தில் மாதம் 3 நாள்கள் நோன்பிருப்பாராம்.

மதினாவுக்கு அவர் சென்ற பிறகு முஹரம் மாதம் 10-ஆம் நாளான ஆஷுரா நாளில் நோன்பிருப்பதைக் கண்டார். அதையடுத்து அவரும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தன் தோழர்களையும் அவர் கடைபிடிக்க வலியுறுத்தினார்.

பின்னாளில் ரம்லான் மாதத்தில் நோன்பிருப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டில் ரம்லான் மாதத்தில் கடமையாக மாற்றப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பேரிட்சம் பழம், தண்ணீர், இறைச்சி, பால் போன்றவற்றை விரதம் தொடங்கும் முன்பும், பின்பும் சாப்பிடலாம்.

நோன்புக் கஞ்சி என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கும் இது பகிர்ந்து தரப்படுகிறது.