தேரான் தெளிவும் குறள் விளக்கக் கதை 31

குறளமுதக் கதைகள் வரிசையில் திருக்குறள் கதை 31 தேரான் தெளிவும் குறள் விளக்கக் கதையாக அமைந்திருக்கிறது.

ஆதரவு தேடி வந்த இளைஞன்

அவனுடைய பெயர் தீபன். ஆதரவற்ற இளைஞன். அவன் வேலை தேடி பல ஊர்களுக்குச் சென்று கடைசியாக அந்த ஊருக்கு வந்தான்.

அந்த ஊரின் செல்வந்தரைப் பார்த்து ஐயா… பிழைப்புக்காக வந்திருக்கிறேன். என்னை ஆதரிப்பார் யாரும் இல்லை. எனக்கு ஏதேனும் வேலை தந்தால், அதை திறம்பட செய்வேன் என்றான் அவன்.

அந்த செல்வந்தர், அவனை பார்த்து என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டார். நான் உயர்நிலை வகுப்பு வரை படித்திருக்கிறேன் என்றான் அவன்.

அப்படியானால், என் கடையின் வரவு, செலவு கணக்குகளை பார்த்துக் கொள்வாயா என்று கேட்டார். சரி என்று அவனும் உடனே ஒப்புக்கொண்டான்.

புதிய மனிதன்

என்னிடம் நீ நேர்மையாக இருப்பதில்தான் உன் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. உனக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை தருகிறேன்.

அழுக்கேறிய உன்னுடைய ஆடைகளுக்கு பதில் புதிய ஆடைகளை அணிந்துகொள். ஆடைகள் வாங்க இந்த பணத்தை வைத்துக்கொள் என்று ஒரு தொகையைத் தந்தார் அந்த செல்வந்தர்.

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட அவன், அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று புதிய ஆடைகளையும், புதிய காலணி ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.

அத்துடன் தன்னுடைய துணிகளை வைப்பதற்கு ஒரு தகரப் பெட்டியைும் கையோடு வாங்கிக்கொண்டு, செல்வந்தர் தனக்கு தங்குவதற்கு ஒதுக்கிய அறைக்கு சென்று புதிய மனிதனாய் மாறி கடைக்கு வந்து சேர்ந்தான்.

பாராட்டை பெற்ற இளைஞன்

செல்வந்தர் கொடுத்த வேலைகளை செம்மையாகச் செய்ததோடு நேர்மையாகவும் நடந்து கொண்டான்.

அவரும், தீபனின் வேலைத் திறமையையும், நேர்மையையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இதனால் அவருடைய அபிமானத்துக்கு உரியவனாக அவருடைய கடையின் தலைமை பதவிக்கே பணி அமர்த்தினார்.

அவனுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அவர் வழங்கியதால், அதில் பெரும் பகுதியை தன்னை போன்ற ஆதரவற்றோருக்கு உதவி வந்தான். இதனால் அந்த ஊர் மக்கள் எல்லோரும் அவனை பாராட்டத் தொடங்கினார்கள்.

செல்வந்தரும் அவனுடைய செய்கைகள் புதுமையாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

பொறாமை தீ

இதைப் பார்த்து பொறாமைப்பட்ட கடையின் மற்ற ஊழியர்கள் செல்வந்தரிடம் தனியாகச் சென்று தீபனை பற்றி தவறாக சொல்லத் தொடங்கினார்கள்.

அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தீபனைப் பற்றி புறம் கூறுவது நாளுக்கு நாள் அதிகரித்தது. அவன் தான, தர்மங்கள் செய்வது தன்னுடைய பணத்தை திருடி தானோ என்று செல்வந்தருக்கு ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்தது.

ஒரு நாள் திடீரென அவன் வசித்த அறைக்குள் புகுந்தார். அவர் வருவதை அவன் கவனிக்கவில்லை. அப்போது அவன் தான் வைத்திருந்த தகரப் பெட்டியைத் திறந்து எதையோ கையில் எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் பெட்டிக்குள் வைப்பதைப் பார்த்தார்.

சந்தேகத்தில் செல்வந்தர்

அவர் சட்டென அவன் அருகே சென்றபோது, தகரப் பெட்டியை அவசரமாக மூடினான். இதனால் அவருக்கு மேலும் சந்தேகம் வலுவடைந்தது.

என்னை கண்டதும் ஏன் அந்த தகரப் பெட்டியை மூடுகிறாய். நீ கடையில் பணத்தை திருடி சேர்த்து வைக்கிறாயா என்று அவன் அதிர்ச்சிக்குள்ளாகும்படி கேள்வி எழுப்பினார்.

அவன் எதுவும் அவரிடம் பேசாமல் அந்த தகரப் பெட்டியை திறந்து வைத்தான். அதில் கிழிந்த பழைய ஆடைகளும், ஒரு பழைய காலணியும் இருப்பதைக் கண்ட செல்வந்தர் அதிர்ச்சி அடைந்தார்.

இதை ஏன் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று கேட்டார்.

அவன் எந்த சலனமும் இல்லாமல், அய்யா… நான் உங்கள் கடைக்கு வரும்போது சில கிழிந்த ஆடைகளும், ஒரு பழைய நைந்துபோன காலணி மட்டுமே வைத்திருந்தேன்.

இவை என்னுடைய முந்தைய நிலையை அவ்வப்போது எனக்கு சுட்டிக்காட்டும் சாட்சிகளாக இருக்கின்றன.

விளக்கம் தந்த தீபன்

எனக்கு தாங்கள் அளவுக்கு அதிகமாகவே ஊதியம் தந்து வந்தீர்கள். அதனால் என்னுடைய தேவைக்கு போக மீதம் உள்ளதை என்னைப் போல் ஆதரவற்றவர்களாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தேன்.

எக்காலத்திலும் நமக்கு உதவியவர்களுக்கு துரோகம் செய்யும் மனப்பான்மை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி நான் இந்த தகரப்பெட்டியை திறந்து பழைய துணிகளையும், காலணியையும் எடுத்து பார்த்துவிட்டு வைப்பது வழக்கம்.

அதுபோல் இன்றைக்கும் இந்த தகரப்பெட்டியை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் திடீரென வந்ததை பார்த்து இவை தேவையின்றி உங்கள் கண்களுக்கு பட வேண்டாம் என்றுதான் அவசரமாக மூடினேன்.

நான் குற்றமற்றவன் என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். நீங்கள் என்னுடைய பூர்வீகம் என்ன, பெற்றோர் யார், எப்படி படித்தாய் என்று எந்த விவரமும் அறியாமல் நம்பிக்கை வைத்து வேலைக்கு சேர்த்தீர்கள்.

அந்த நம்பிக்கையை இன்று வரை காப்பாற்றியிருக்கிறேன். இனி வேறு எங்கு பணியில் சேர்ந்தாலும் என்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.

நீங்கள் இதுவரை எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என்று கூறிவிட்டு பெட்டியோடு வெளியே கிளம்பினான் தீபன்.

தீபனிடம் மன்னிப்பு கேட்டபோதும், அய்யா… உங்களை மன்னிக்க நான் யார்…. உங்களால் கடந்த சில ஆண்டுகளாக நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்தவன்.

தேரான் தெளிவும்

உங்களிடம் கற்றுக்கொண்ட பல நல்ல விஷயங்கள் என்னை நிச்சயமாக வாழ்க்கையில் உயர்ந்தும். எனக்கு விடை கொடுங்கள் அய்யா என்று சொல்லிவிட்டு அவரது காலைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றுவிட்டான் தீபன்.

தீபன் யார் என்று தெரியாமலேயே நம்பிக்கை வைத்த நிலையில், யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக ஆராயாமல் தவறு செய்து விட்டேனே என்று கண் கலங்கினார்.

அப்போது அவருடைய நண்பர் தருமர் வந்தார். அவரிடம் நடந்தவற்றை செல்வந்தர் கூறினார்.

இதைக் கேட்ட தருமர், குறளாசான் உங்களை போன்றவர்களுக்காகவே, தேரான் தெளிவும் என்று தொடங்கும் திருக்குறளை இயற்றியிருக்கிறார்.

திருக்குறள் கதைகள் சொல்லும் கருத்து

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்

(குறள் – 510)

தேரான் தெளிவும் என்பது ஆராயதவன் தெளிவு என்பது பொருள்.

ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அப்படி அமர்த்திய பிறகு அவன் மீது சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பம் தரும் என்பது அதன் அர்த்தம் என்றார் தருமர்.

இதைக் கேட்ட நண்பர் தேரான் தெளிவும் என்ற பாடல் வரிகள் என்னை செம்மை அடைய செய்துவிட்டது என்று சொல்லி புறப்பட்டார்.

இருவேறு வினைப் பயன்கள் திருக்குறள் கதை

சிறுவர் சேமிப்புத் திட்டம்