பொய் பேசுதல் திருக்குறள் கதை 12

குறளமுதக் கதைகள் வரிசையில் – பொய் பேசுதல் திருக்குறள் கதை 12 என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க” என்ற குறள் விளக்கமாகவும் இது அமைகிறது.

துறவியான இளவரசன்

இராசக் கிருகம் என்னும் நாட்டை சிரேணிகன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்து அரசி சேலினி என்பவள் ஆவாள்.

இவர்களுக்கு பாரீசன் என்பவன் மகனாய்ப் பிறந்தான். அவன் நல்லொழுக்கங்களில் சிறந்து விளங்கினான். பாரீசன் உலக வாழ்வை வெறுத்து துறவியானான்.

ஒரு சதுர்த்தசி நாளில் பாரீசன் உண்ணாவிரதம் இருந்தான். அவன் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

பழி சுமந்த இளவரசன்

அப்போது தான் திருடிய முத்து மாலையுடன் ஓடி வந்த வித்தியத்தன் என்பவன், காவலர்கள் துரத்தி வருவதை அறிந்து அதை தியானத்தில் இருந்த பாரீசன் கழுத்தை நோக்கி வீசிவிட்டு மறைந்தான்.

காவலர்கள் முத்து மாலையுடன் பாரீசன் கண்களை மூடி அமர்ந்திருப்பதை பார்க்கிறார்கள். அவன்தான் முத்துமாலையை திருடி வந்தவன். நம்மை ஏமாற்றுவதற்காக தியானத்தில் இருப்பதுபோல் நடிக்கிறான் என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அதனால் பாரீசனை பிடித்து வந்து அரசன் முன்பு குற்றவாளியாக நிறுத்தினார்கள்.

கடமை தவறாத மன்னன், குற்றவாளியாக நிற்பது தனது மகன் என்பதை அறிந்தும், அவனை கொன்றுவிடும்படி உத்தரவு பிறப்பிக்கிறான்.

மாலையாக மாறிய வாள்

அதனால், பாரீசனை காவலர்கள் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தண்டனையை நிறைவேற்ற கொலைக் களத்தில் பாரீசன் கழுத்தின் மீது வாளை வீசியபோது, அது மாலையாக மாறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் பாரீசனை அரசன் முன்பு கொண்டு நிறுத்தினார்கள்.

தனது மகன் தவறு செய்யவில்லை என்பதை உணர்ந்த அரசன், தன்னுடைய தவறை பொறுத்தருளுமாறு பாரீசனிடம் கேட்டுக் கொண்டான்.

குற்றப் பழியை தனக்காக சுமந்த பாரீசன் மீது விழுந்த வாள் மாலையாக மாறியதை நாட்டு மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

திருக்குறள் கதை நேர்மையே சிறந்த கொள்கை

பூலோக சாமியார்கள்-ஒரு நிமிட விடியோ

தவறை உணர்ந்த திருடன்

தலைமறைவாக இருந்த முத்து மாலை திருடிய வித்தியத்தன், இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தான்.

தவறை உணர்ந்த அவன், அரசன் முன்பு ஆஜராகி, தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டான்.

பொய் பேசுதல் திருக்குறள் கதை சொல்வதென்ன?

பொய் பேசுதல் திருக்குறள் கதை மாதிரி, ஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை எனப் பொய்மையாய் வாழ்தல் தவறு. அவ்வாறு வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்திற்கு சாட்சியாய் இருந்து வருத்தும் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.

அக்குறள்தான்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

(குறள் – 293)