ஆன்மீகம் அறிவோம் | மூன்று சரீரங்கள் | 3 அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி

மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய ஆன்மீகம் அறிவோம் கட்டுரை இதில் இடம்பெற்றிருக்கிறது.

நண்பரிடம் கேட்ட கேள்வியும், அவரது பதிலும்

உங்களுக்கு எத்தனை உடல் இருக்கிறது? என்று ஒரு நண்பரைக் கேட்டேன். ஏன்
இப்படி கேட்கிறீர்கள்? என்று ஆச்சர்யத்துடன் பார்த்து, ‘ஒன்றுதான்’ என்றார்
உறுதியாக.

‘அய்யா ஒன்றல்ல மூன்று’ என்றதும் நண்பர் என்னை ஒரு மாதிரியாக அவநம்பிக்கையோடு பார்த்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு ‘கொஞ்சம் விளக்கமாகத்தான்
சொல்லுங்களேன்’ என்றார் அவர்.

ஆன்மீகம் அறிவோம்

கேளுங்கள். நாம் பார்க்கும், உணரும், வெளியே தெரியும் இந்த உடல் ஸ்தூல சரீரம்.
அதன் உள்ளே இன்னும் இரண்டு சரீரங்கள் மறைந்திருக்கின்றன.

அவை சூட்சும சரீரம், காரண சரீரம். இவை மூன்றும் சேர்ந்த கலவையே மனிதன் என்று
எடுத்துரைக்கின்றன நம் வேதங்கள். உலகின் மிகப் பெரிய அதிசயம் இது.

நாம் உணரும் இந்த ஸ்தூல சரீரம் என்பது பஞ்சபூதங்களால் (பூமி, நீர், காற்று,
நெருப்பு, ஆகாயம்) ஆனது.

ஸ்ரீ சங்கரர் தன்னுடைய ‘தத்வ போத’ என்ற நூலில், முற்பிறவிகளில் செய்த நல்ல கர்மங்களின் பலனாகவே மனித உடல் நமக்கு பரிசாகக் கிடைத்தது என்று இதை வர்ணிக்கிறார்.

உபநிஷத்துக்கள் சொல்வது என்ன?

சுக துக்கங்களை அனுபவிப்பதற்கும், அவைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும்,
முடிந்தால் நிரந்தரமாக அவைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும், அதையும் கடந்து,
நம் தெய்வீகத் தன்மையை புரிந்து கொள்ளவும்தான் இந்த மனித உடல் அளிக்கப்பட்டுள்ளது என்று உபநிஷத்துகள் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றன.

ஸ்தூல சரீரத்தின் இயல்பானப் பண்பே அது அழியும் வரை மாற்றங்களைச்
சந்திப்பதே.

இந்தச் சரீரம் அதன் வாழ்நாளில் ஆறு வகையான தொடர் மாற்றங்களைச்
சந்திக்கிறது.

அவை, கருவில் இருக்கும் நிலை (அஸ்தி), பிறத்தல் (ஜாயதே), வளர்தல்
(வர்ததே), பருவமடைதல் (விபரீணமதே), வயது முதிர்வு (அபக்க்ஷேயதே), இறப்பு
(விநாஷ்யதி).

இந்த உலகத்தோடு தொடர்பு கொள்ள, அனுபவங்கள் பெற ஸ்தூல சரீரத்தில் ஐந்து
புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, சருமம்) உள்ளன.

இது நான்கு பாகங்கள் (தலை, கழுத்திலிருந்து இடுப்பு வரை உள்ள முண்டம், கைகள், கால்கள்) கொண்டது. வெளியே தெரியும் இந்த சரீரத்தை பார்க்கமுடியும், உணரமுடியும், பிறராலேயும் பார்க்க முடியும்.

ஸ்தூல சரீரம்

ஸ்தூல சரீரத்தை அனுபவிக்கும் நமக்கு தற்காலிகமாக வாழும் வீடுதான். எந்த
நேரத்திலும் இந்த வீட்டை காலி செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் எந்த முன் எச்சரிக்கை இல்லாமலேயும், கால அவகாசம் வழங்காமலும் கூட.

இந்தச் சரீரம் நாம் உண்ணும் உணவால் பராமரிக்கபடுகிறது. பிராண சக்திகள் இது இயங்குவதற்கான ஆற்றலைத் தருகின்றன.

இயற்கையால் உருவானதால், இயற்கையின் மாற்றங்கள் அனைத்தும் சரீரங்களையும்
பாதிக்கின்றன. இந்த சரீரத்தின் முக்ய காரணமே, அது ஆரோக்யமாக வாழும் வரை,
அதை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ளவதே.

அதனுடைய இயக்கங்களுக்கு மரியாதை தந்து பராமரிக்க வேண்டும். ஆனால் கேளிக்கை அனுபவங்களுக்காக அதனுடனேயே ஒன்றிப் போய்விடக் கூடாது என்பதே வேதங்கள் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை.

சூட்சும சரீரம்

நாம் பார்க்க முடியாத, ஆனால் உணரக்கூடிய இன்னொரு சரீரமும் நமக்குள் மறைந்து
இருக்கிறது. இதை சூட்சும சரீரம் அல்லது லிங்க சரீரம் என்று நம் முன்னோர்கள்
அடையாளம் கண்டனர்.

இதுவும் பஞ்சபூதங்களால் ஆனது, ஆனால் ஸ்தூல சரீரத்தைப் போல வளர்வதுமில்லை, மடிவதுமில்லை, மாற்றங்களையும் சந்திப்பதும் இல்லை. இதுவும் முன்பிறவியில் செய்த நல்ல கர்மங்களின் பயனாக கிடைத்ததுதான் என்ற அடிப்படை ஆன்மீகம் அறிவோம்.

சூட்சும சரீரத்தின் தன்மை

ஸ்தூல சரீரத்தின் புலன்கள் வழியாக கிடைக்கும் அனைத்து தகவல்களும் இங்கேதான்
அனுபவங்களாகப் பகுத்தறியப் படுகின்றன.

இந்த சரீரத்தில் பத்து இந்த்ரீயங்கள் (எந்த்ரங்கள்) உள்ளன. அவை ஐந்து ஞானேந்த்ரீயங்கள், ஐந்து கர்மேந்த்ரீயங்கள். இவைகளைத் தவிர, ஐந்து தன்மாத்ரங்கள் உள்ளன.

ஸ்தூல சரீரத்தின் புலன்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்களான பார்த்தல், ருசித்தல்,
கேட்பது, வாசனை நுகர்தல், தொடு உணர்வு போன்றவைகளை நிர்வகிப்பது
ஞானேந்த்ரீயங்கள். ஞானேந்த்ரீயங்களுக்கு பக்க பலமாக பின்னின்று இயக்குபவை
ஐந்து கர்மேந்த்ரீயங்கள்.

ஸ்தூல சரீரத்தின் செயல்பாடுகளான பேசுவது, கைகளை இயக்கி பொருள்களைப் பிடிப்பது, கால்களை இயக்கி நடப்பது, கழிவுகளை வெளியேற்றுதல், இனப்பெருக்கம் செய்தல் ஆகிய செயல்பாடுகளை நிர்வாகம் செய்கின்றன.

புரியாத புதிர்!

இந்த இரண்டு வகையான இந்த்ரீயங்களின் பணிகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பார்த்தல், ருசித்தல், கேட்டல், தொடு உணர்வு போன்ற அனுபவங்களை ஸ்தூல சரீரம்
உள்வாங்கிக் கொள்கிறது.

இந்த அனுபவங்களை அவைகளால் திருப்பி வெளியே அனுப்ப முடியாது. இந்த அனுபவங்களுக்கு பதிலாக பேச்சு ஒன்றைத்தான் ஸ்தூல சரீரம் உலகிற்கு வெளியனுப்புகிறது.

பேச்சு எப்படி உருவாகிறது? எங்கிருந்து எண்ணங்களும், சப்தங்களும் ஒன்று கூடி நாக்கை இயக்குகின்றன? இது புரியாத புதிர். உண்மையில் இதுவே தெய்வீகம். இதுதான் ஆன்மீகம் அறிவோம் என்பதன் தொடக்கம்.

உள் வாயில், வெளி வாயில்

அதைப் போலவே கை கால்களைப் பயன்படுத்திக் காரியங்களைச் செய்தல்,
கழிவுகளை வெளியேற்றுதல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற வெளி
செயல்பாடுகளை ஸ்தூல சரீரத்தின் வழியாக நிறைவேற்றப்படுகின்றன.

ஆக, ஞானேந்த்ரீயங்கள் ஸ்தூல சரீரத்துக்கு அனுபவங்களை உள்ளே அனுப்பும்
நுழைவாயில்கள்.

கர்மேந்த்ரியங்கள் ஸ்தூல சரீரத்தின் செயல்பாடுகளை வெளிக்கொணரும் வெளிவாயில்கள்.

இந்த்ரியங்களின் ஒரு குழு உலக அனுபவங்களை உள் அனுப்புகிறது, இன்னொரு குழு அதற்கான பதில் செயல்பாடுகளைத் திருப்பித் தருகிறது. என்ன ஆச்சர்யம் பாருங்கள்!

இதில் இன்னொரு ஆச்சர்யம், இந்த இந்த்ரீயங்களின் செயல்பாடுகள் நமக்குள் நம்
கட்டுப்பாடின்றி தொடர்ந்து நடைபெறுவதுதான்.

5 தன்மாத்ரங்கள்

அடுத்தது ஐந்து தன்மாத்ரங்கள். இவைகளை அதிசூட்சும சக்திகள் அல்லது இயக்கிகள்
என்று சாஸ்த்ரங்கள் அடையாளம் காட்டுகின்றன.

ஒரு வாஹனத்துக்கு சக்கரங்கள் மற்றும் ஏனைய கருவிகள் இருந்தால் மட்டும் போதாது. இயக்க சக்தியும் ஆற்றலும் வேண்டுமல்லவா?

அதற்காக சூட்சும சரீரத்தில் ஐந்து இயக்க சக்திகளாக ப்ராண, அபான, ஸமான, உதான, வியான ஆகிய சூட்சும இயக்கிகள் சரீரங்களுக்குத் தேவையான சக்தியையும் ஆற்றலையும் தருகின்றன.

நம் உடலை ஒரு வாஹனமாகப் பாருங்கள். அதன் பாகங்களை சரிவர நிர்வகித்தால்
அல்லவா அது சரியாக இயங்கமுடியும்? அந்தப் பணியைத்தான் தன்மாத்ரங்கள் செய்கின்றன. அதுவும் நமக்குத் தெரியாமலேயே, நம் கட்டுப்பாடின்றி.

என்னென்ன பணிகள்

ப்ராண (மூச்சு-தலை, இதயப் பகுதியை நிர்வகிக்க), அபான (இடுப்புப் பகுதி- கழிவுகளை வெளியேற்றுதல்), ஸமான (தொப்புள் பகுதி-ஜீரணம்), உதான (கழுத்துப்பகுதி-வளர்ச்சி,பேச்சு, பாவனைகளை வெளிப்படுத்துதல், இதைத் தவிர சில மேல்நோக்கிக் கிளம்பும் கழிவுகளான வாந்தி, தும்மல் ஆகியவைகளை வெளியேற்றுதல், இறப்பு நேரத்தில் சூட்சும சரீரம் இதன் சக்தியைப் பயன்படுத்தியே வெளியேறுகிறது),

வியான( ரத்தம், உணவுச் சத்து,ஆற்றல் ஆகியவைகளை அனைத்து பகுதிகளுக்கும்
கொண்டு சேர்ப்பது) ஆகிய ஐந்து வகையான இயக்கங்களை தன்னிச்சையாகவே
நிர்வகிக்கின்றன.

இந்த ஐந்து தன்மாத்ரங்களும் ஸ்தூல சரீரத்துக்கு மட்டுமல்லாது, பத்து
இந்த்ரீயங்களுக்கும் பலவகைகளில் உதவுபவை. இந்தப் இந்த்ரீயங்களோடு மனஸ்,
புத்தி ஆகியவை சேர்த்து மொத்தம் பதினேழு அம்ஸங்களும் சேர்ந்தததுதான் சூட்சும
சரீரம்.

ஸ்தூல சரீரமும், சூட்சும சரீரமும்

இந்தச் சரீரம் இல்லாவிட்டால் ஸ்தூல சரீரம் தன்னிச்சையாக இயங்க முடியாது.
ஸ்தூல சரீரம் உருவாகக் காரணமாக இருந்த பஞ்ச பூதங்களே அதிசூட்சும வடிவில்
சூட்சும சரீரத்த்தை உருவாக்குகின்றன. இயக்குகின்றன.

இரண்டு சரீரங்களும் ஒரே விதமான ஆதி பொருள்களால் உருவானவை. ஆனால் வெவ்வேறு கலவையில், வெவ்வேறு அளவில், வெவ்வேறு காரணகளுக்காக உருவாக்கப்பட்டவை.

ஸ்தூல சரீரம் அழிந்தாலும் சூட்சும சரீரம் அழியாமல், தொடர்ந்து இன்னொரு உடலில் வாழத் தொடங்குகிறது.

ஸ்ரீசங்கரர் தரும் விளக்கம்

சூட்சும சரீரத்தில் உள்ள மனதை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மனஸ், நினைவுகள்
கொண்ட ‘சித்த’, மற்றும் சரீரங்களுக்கு எஜமான எண்ணத்தை உருவாக்கும்
‘அஹங்காரம்’ என மூன்று பகுதிகளாகப் பிரித்து, அதனுடன் புத்தியையும் சேர்த்து
மொத்தம் பத்தொன்பது பொருள்கள் அடங்கியது சூட்சும சரீரம் என்று ஸ்ரீ சங்கரர்
என்று இன்னொரு விளக்கம் தந்தார்.

உலகத்துடன் தொடர்புகொள்ளும் கருவி

உலகத்தோடு நாம் தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு முக்கிய கருவியாக
பின்னனியில் சூட்சும சரீரம் பயன்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஸ்தூல சரீரத்தை அனுபவிப்பவர் சூட்சும சரீரத்தின் வழியாகவேதான் உலக அனுபவங்களை உணரமுடியும்.

கண்கள் வழியாக ஒரு பொருளைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு ஒளியைத்தவிர வேறொன்றும் அடையாளம் தெரியாது. உருவங்களிலிருந்து பெறப்படும் ஒளியை சூட்சும உடலில் உள்ள இந்த்ரீயங்களால் மட்டுமே பகுத்து அவைகள் உருவங்களாகவும் பொருள்களாகவும்
உணர முடியும்.

அதுபோலவே மற்ற புலன்களிலிருந்து பெறப்படும் அனைத்துத் தகவல்களையும் இந்த்ரீயங்களால் மட்டுமே பகுத்து அனுபவங்களாக உணர வைக்கமுடியும்.

ஸ்தூல சூட்சும சரீர வியோக மரணம்

‘ஸ்தூல சூட்சும சரீர வியோக மரணம்’ என்று இறப்பை வேத சாஸ்திரங்கள் வெகு
அழகாக விளக்குகிறது.

அதாவது, ஸ்தூல சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் விலகிச் செல்வதே மரணம். ‘ஸ்தூல சூட்சும சரீர சம்யோக புனர்ஜன்மம்’.

அதாவது சூட்சும சரீரம் இன்னொரு உடலோடு சேர்வதையே பிறப்பு என்கிறது இந்த ஸ்லோகம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்தூல சரீரம் செய்யும்
அனைத்து செயல்பாடுகளின் விளைவுகள் அனைத்தும், நல்ல விஷயங்களை
புண்யமாகவும், தீய செயல்களை பாவமாவும் சூட்சும சரீரத்தில் மென்பொருள் போல
சதா பதிவேற்றுகிறது.

இன்னொரு உடலோடு ஐக்கியம் ஆகும்போது இந்த பாவ புண்யங்கள் பதிவுகள் புதிய உடலை கட்டுப்படுத்துகிறது.

அவித்யா

இதை ஸ்ரீசங்கரர் ‘அவித்யா’ என்று வருணிக்கிறார். சாதாரணமாக அவித்யா என்பது
அறியாமை. ஆனால் இங்கே வேதங்கள் சொல்லும் இன்னொரு உண்மையைச்
சொல்கிறார் ஸ்ரீ சங்கரர்.

அவித்யா என்பதை ‘உண்மை வெளிவராத நிலை’ என்று இங்கே விளக்குகிறார். என்ன உண்மை?

சூட்சும சரீரமும், ஸ்தூல சரீரமும் இணைவதற்ககுத் தேவையான அடிப்படை தகவல்களை, ஆதி உண்மைகளை, ரஹஸ்ய சங்கேதங்களை (ஒரு வீடு கட்ட தேவைப்படும் வரைபடம் போல) இந்தக் காரண சரீரம் தன்னுள் விதையாகத் தாங்கியுள்ளது.

காரண சரீரம்

இந்த இரண்டு சரீரங்களோடு இன்னொரு சரீரமும் மறைந்துள்ளது. இதுவே காரண
சரீரம். இதையும் பார்க்கவோ, உணராவோ முடியாது.

மற்ற இரண்டு சரீரங்களைப் போலவே இந்த சரீரமும் அதே பொருள்களால் உருவாக்கபட்டது.

ஆனால் இவைகளை விட இன்னும் வீரியமான அதிசூட்சும வடிவில், அளவில்,
செயல்பாடுகளில் மாறுபடுகிறது.

உதாரணமாக, ஒரு மரம் உருவாவதற்கான அத்துணை அடிப்படைத் தகவல்களையும்,
உயிர் சக்திகளையும் அதன் விதை தாங்கியுள்ளது அல்லவா? அது கருவாகி
உயிர்ப்பிக்கும்போதே மரம் உருவாகிறது.

மரம் மீண்டும் விதையை உருவாக்குகிறது. அதுபோல சரீரங்கள் உருவாகத் தேவையான அனைத்து அடிப்படைத் தகவகளையும் இந்த காரண சரீரம் தாங்கியுள்ளது.

சரீரங்கள் உருவானபின் மீண்டும் விதையாக சூட்சும சரீரத்தோடு சூட்சுமாக இயங்குகிறது.

காரண சரீரமே பிரதானம்

காரண சரீரம் இல்லாவிட்டால் மற்ற இரண்டு சரீரங்களும் உருவாகவே முடியாது.
ஆகவே சரீரங்களுக்கு அடிப்படைக் காரணமாக, அஸ்திவாரமாக இருப்பதால் இது
காரண சரீரம்.

இந்த மூன்று சரீரங்களையும் தனித்தனியே பிரிக்க முடியாது. அவைகளின் செயல்பாடுகளைத் தனித்தனியாகவும் உணர முடியாது.

அவை தனித்தனியாகவோ தன்னிச்சையாகவோ இயங்கமுடியாது. அவை கூட்டாக மட்டுமே இயங்க முடியும். இது தெய்வீக விந்தை.

தொடரும் அனுபவங்கள்

இந்த மூன்று சரீரங்கள் வழியாகவே நமக்கு தினமும் மூன்று நிலைகளில் அனுபவங்கள்
தொடர்ந்து கிடைக்கின்றன. இங்கேதான் பல ரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன.

முதல் நிலை நாம் விழித்திருக்கும் நிலை. அடுத்தது உறக்கநிலை. கடைசியில் ஆழ்ந்த
உறக்க நிலை. இந்த மூன்று நிலைகளையும் நாம் ஆன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து
உணர்ந்து வருகிறோம்.

ஆனாலும் இதைப் பற்றி பெரும்பாலும் நாம் யோசிக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ முயற்சிப்பது இல்லை.

நிரந்தர, தற்காலிக பதிவுகள்

விழித்திருக்கும் போது நம் புலன்கள் வழியாக இந்த உலகோடு தொடர்பு
கொள்கிறோம். இரண்டு நிகழ்வுகள் அப்போது நடைபெறுகிறது.

நமக்கு இந்த உலக அனுபவம் கிடைக்கிறது. இரண்டாவது, அனைத்து அனுபவங்களையும் (ரூபங்கள், சப்தங்கள், ருசிகள், வாசனைகள், தொடுஉணர்வுகள்) மனம் விடாமல் பதிவு செய்துக் கொள்கிறது.

நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில், தொடர்ந்து பிறந்தது முதல் இறக்கும் வரை பதிவு தொடர்கிறது.

சில பதிவுகள் மறக்காத நினைவுகளாகின்றன. சில பதிவுகள் தற்காலிகமான பதிவுகளாகின்றன.

அடுத்து வரும் பிறப்புகளுக்கும் இது தொடர்கிறது. இந்த பதிவுகளை எப்படி, எங்கே சேர்த்து வைத்துக் கொள்கிறது? எப்படி வெளிப்படுகிறது? தெரியாது.
இது தேவ ரகசியம்!

அதிசய உலகம்

நாம் தூங்கும்போது, உறக்க நிலையில் இன்னொரு உலகத்துக்கு செல்கிறோம். இது
நம் மனம் ஸ்ருஷ்டி செய்யும் அதிசய உலகம்.

அங்கே வெளி உலகம் மறைந்து விடுகிறது. ஸ்தூல சரீரம் உள்கொணரும் உணர்வுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஸ்தூல சரீரத்தின் வெளி புலன்களின் செயல்பாடு இல்லை. அடங்கிவிடுகின்றன.

இந்நிலையில், ஸ்தூல சரீரம் இருப்பதை மற்றவர்கள் காண முடியும். ஆனால் உறங்குபவர் அதைக் காணவோ உணராவோ முடியாது.

இந்த நிலையில் சூட்சு சரீரத்தின் முக்கிய அங்கமான மனம் மட்டுமே தொடர்ந்து
செயல்படுகிறது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் (சில நேரங்களில் சென்ற பிறவிகளின் அனுபவங்களும் சேர்த்து) மனத்திரையில் செயற்கையாகப் பிரதிபலிக்கும். அந்த உள் உலகத்தில், விழித்திருக்கும் நிலையில் உணர்ந்தது போலவே அனைத்தையும் உணர முடிகிறது.

ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் விழித்தவுடன் மறைந்து போகின்றன. சொல்லப்போனால், பெரும்பாலான நேரங்களில் விழித்திருக்கும் நிலையிலேயும் நாம் கற்பனை உலகில் அல்லவா சஞ்சரிக்கிறோம்?

இதுவும் மனம் ஸ்ருஷ்டிக்கும் ஒருவகையான கனவுலகம்தான். இதுவும் நிலையானது அல்ல!

உறக்க நிலையில் கனவுகள் மறைந்தவுடன் சில நேரங்களில் ஆழ்ந்த உறக்க
நிலைக்கும் செல்ல முடிகிறது.

மனம் அடங்கினால்

அங்கே மற்ற இரண்டு சரீரங்களின் வெளிப் புலன்களும், உள்புலன்களும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்கின்றன. மனம் அடங்கிவிடுவதால் எந்த நினைவும் பிரதிபலிக்கப் படுவதில்லை.

அப்போது ஸ்வாசித்தல், ரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற சில அத்யாவஸ்ய தேவைகள் மட்டும் ஸ்தூல சரீரத்தில் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் இரண்டு சரீரங்களும் முழுதும் ஆழ்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து விழித்தெழும்போதுதான் இரண்டு சரீரங்களும் மிகவும் புத்துணர்வுடன் வெளிப்படுகின்றன.

‘நான் ஒரு மரக்கட்டையைப் போல தூங்கினேன்’ என்று பலர் இந்த அனுபவத்தை
வெளிப்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். நாமும் உணர்ந்திருக்கிறோம்.

காரண சரீரத்தில் உருவாகும் விதை

இந்த ஆழ்ந்த உறக்க நிலையில் இன்னொரு விசேஷமும் நடக்கிறது. இங்கேதான்
காரண சரீரம் தன் பணியை செய்கிறது.

இந்த நிலையில் அத்துணை இந்த்ரீயங்களும் செயல்பாடுகளும், எண்ணங்களும், நினைவுகளும், அஹங்காரம் அனைத்தும் காரண சரீரத்ததுள் விதையாக தற்காலிகமாகக் கரைந்து விடுகின்றன.

அப்போது மற்ற இரண்டு சரீரங்கள் இருந்தாலும் உணர இயலாத ஒரு நிலை. ஆனால்
விழித்தெழும்போது, அனைத்தும், விதையிலிருந்து முளைத்து மீண்டும் பழைய
நிலைக்கு உயிர்த்தெழுகின்றன. என்ன ஒரு விந்தை பாருங்கள்!

விழித்திருக்கும் நிலையிலும், உறக்க நிலையிலும் நம் அனுபவங்கள் அனைத்தும்
நம்மால் மட்டுமே உணரப்படுபவை.

அவை அனைத்தும் நம் அனுபவங்களின் அடிப்படையில் உருவாகுபவை. அவை அனைத்தும் நம் அனுபவங்களில் புலப்படும் தோற்றங்கள். தோன்றி மறையும் தன்மை கொண்டவை. நிலையானவை அல்ல.

இதில் நாம் (அனுபவிப்பவர்) மட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் அனுபவங்களுக்குள் வந்து போகும் தோற்றங்கள்!

நாம் யார்?

இங்கே, இதில் கவனிக்க வேண்டியது ஒரு விஷயம். ‘நாம்’ என்று குறிப்பிட்டது
ஸ்தூல, சூட்சும காரண சரீரங்களையோ அல்லது அவைகளின் கலவையையோ
அல்ல.

இந்த மூன்று சரீர அனுபவங்களை உணர்த்தும், ஸ்வயமாக, கோடி சூர்யப்
பிரகாசமாக சதா ஒளிர்ந்துக்கொண்டிருக்கும் ஆத்மஜோதி. நம் உண்மை ஸ்வரூபம்.
இந்த ஜோதிக்குள் தொடர்ந்து பிரதிபலிக்கும் அனுபவக் குவியலே இந்த மூன்று
சரீரங்களும்.

கடஉபநிஷதம் இன்னும் ஒரு படி மேலே சென்று, வானத்தில் தெரியும் இந்த உலகிற்கு
ஒளி தரும், சூர்யனை அடையாளம் காட்டுவதே நம் ஆத்மஜோதி சூர்யனே என்று
போதனை செய்கிறது.

மூன்று சரீரங்களையும், மூன்று அனுபவ நிலைகளையும் நாம் பகுத்தறியும்போது, நம் ஆத்ம ஜோதியை உணரமுடிகிறது. இதுவே தெய்வீகம்.

இதுவே நம் உண்மையான இயல்பு. இதுவே வேதங்கள் கூறும் மோட்சம், முக்தி,
வாழும்போதே விடுதலை.

இனியும் விடை தேடலாமா?

இந்த உடல், மனம், எண்ணம் சேர்த்த கலவையே நாம் என்று நம்மை சிறுமைப்
படுத்திக்கொண்டு வெளியே தெரியும் உடலோடு சேர்ந்துகொண்டு ‘யாவத் ஜீவேத்,
சுகம் ஜீவேத்’ (வாழ்க்கையை சுகத்தில் அனுபவிப்பதே லட்சியம்) என்று தொடர்ந்து
பல தவறுகளை செய்கிறோம்.

நிலையில்லாத ஒரு தோற்றத்தை உண்மை என்று நம்பி, வாழ்க்கையை வீணடிக்கிறோம், அதனால் அதிக சோகத்தையும், துயரத்தையும் சந்திக்கிறோம், நிலை தடுமாறி நிற்கிறோம். விடை தேடி அலைகிறோம்.

நம்மைப் பற்றிய, நம் உண்மையான இயல்பைப் பற்றிய, நம் தெய்வீகத் தன்மையைப் பற்றிய தெளிவு ஏற்பட்டால் நாம் செய்து வரும் தவறுகள் புரியும். தெய்வீகத்தால் உருவாக்கப் பட்ட தெய்வீகப் பிறவிகள் நாம்.

ஆனால் மனித உருவில் இருந்துகொண்டு தெய்வீகத்தை தேடி அலையும் சாதாரணப் பிறவிகள் என்று வாழ்கிறோம்!

இந்த மூன்று நிலைகளிலும் விழித்திருக்கும் நிலையிலேயே கண் முன் தெரியும்
உலகத்தோடு நல்ல முறையில் உறவாட வாய்ப்பு கிட்டுகிறது.

வேதங்கள் இந்த நல்லமுறையில் உறவாடும் விதத்தை சனாதன தர்ம வழி என்று வர்ணிக்கிறது. இது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறது.

ஒன்று ‘பிரவர்த்தி’ அதாவது, நம் வெளி உலக வாழ்க்கையை எப்படி நல்ல முறையில் வாழ்வது? இரண்டாவது ‘நிவர்த்தி’ நம்மை, நமக்குள் இருக்கும் உள்உலகத்தை எப்படி உணர்ந்து எப்படி விடுதலை பெறுவது என்பது.

முதலில் வெளியுலக வாழ்க்கையை சமாளிக்க நம்மை தயார் படுத்திக்
கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவுதல், தான தர்மம் செய்தல், பக்தி, கனிவு, தன்னலமற்ற சேவை
போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், அவைகளுக்குள் மறைந்திருக்கும்
உண்மைகளை உணரவேண்டும். இது வேதங்கள் சொல்லித்தரும் எளிய வழி.

தெளிவு தரும் தான, தர்மம்

தெளிவு ஏற்பட்டால் அது நல்ல சிந்தனைகளை உருவாக்கும். நல்ல சிந்தனைகளை
செயல்படுத்தும் தைரியமும் நம்பிக்கையும் கிடைக்கும். இது மேலும் நல்லக்
காரியங்களைச் செய்யத் தூண்டும்.

தான, தர்மங்களில் ஈடுபடுவது, அனைவரிடமும் ஹிதமாக நடந்துகொள்வது போன்றவை அனைத்தும் நமக்கு புண்யங்களைச் சேர்ப்பவை.

அவை அனைத்தும் ஸ்தூல சரீரம் இறக்கும்போது, சூட்சும, காரண சரீரங்களில்
பதிவாகி, அடுத்த உடலுக்கு செல்கின்றன.

இது நாம் அடுத்த வேறு உடலுக்கு செய்யும் நேரடி தானம். ஒரு வேளை மீண்டும் நம்முடனேயே இந்த இரண்டு சரீரங்களும் சேரும் பட்சத்தில் புண்யங்களோடு புதிய வாழ்வு கிடைக்கிறது.

இல்லாவிட்டாலும் நம்மால் நிச்சயமாக நல்ல சிந்தனையுள்ள இன்னொரு தலைமுறையை உருவாக்க முடியும் அல்லவா?

குறைந்த பட்சம், மூன்று சரீரங்களும், மூன்று அனுபவ நிலைகளும் பற்றிய ஒரு
தெளிவு இருந்தால், ஸ்தூல சரீர சுகத்தைத் தேடும் உந்துதல்கள் குறையும் அல்லவா?

தர்ம சிந்தனைகளோடு, தார்மீக வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு
பக்குவம் கிடைக்குமல்லவா?

மீதமுள்ள வாழ்வு வளம்பெற வாய்ப்பு உருவாகுமல்லவா? இந்தப் பக்குவம் சாதாரணமாக கிடைப்பது இல்லை. இதற்கு கடுமையான பயிற்சி, முனைப்பு ஆகியவை தேவை.

இவை அனைத்தும் முற்றும் உணர்ந்த பிரம்மகுரு ஒருவரின் ஆசியுடன், வழிகாட்டுதலுடனும், படைத்தவனின் அருளாசியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

Spiritual thoughts

‘அடேயப்பா, இவ்வளவு அதிசயங்கள் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும்
நடந்துகொண்டிருக்கிறதா? ஒரே மலைப்பாக இருக்கிறது’ என்று அங்கலாய்த்தார்
நண்பர்.

‘என் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்த பின்னர், இவ்வளவு நல்ல விஷயங்களை ஆன்மீகம் அறிவோம் என்று நீங்கள் எனக்கு போதித்ததன் மூலம் இப்போதாவது தெரிந்துகொள்ள முடிந்தது. மீதி நாளிலாவது இந்த
உலகத்தோடு நல்ல முறையில் உறவாட முயல்கிறேன் என்று மிக அழுத்தமாகச் சொன்னார்.

முதலில் என் குடும்பத்தாற்கும் நண்பர்களுக்கும் இந்தத் தகவல்களைச் சொல்லி அவர்களையும் கரைசேர்க்கப் பார்க்கிறேன்’ என்று நன்றி சொல்லி புறப்பட்டார் அந்த நண்பர்.

ஒலிம்பிக் பின்னாள் மறைந்திருக்கும் அதிசயங்கள்

கண்ணால் காண்பதும் பொய் – நேரடி அனுபவம்

வாழ்க்கை பாடம்: நாம் எதைத் தேடுகிறோம்

வெ நாராயணமூர்த்தி 

நாம் வாழ்நாள் முழுதும் எதைத் தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நாம் இப்போது அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் (life lesson) இது.

வசதியான வாழ்க்கை

வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம், நல்ல ஆரோக்கியம், நல்ல உறவுகள்.

சில நேரங்களில் வளமான சமுதாயம், உலக அமைதி இத்யாதி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றில் சில பொதுநலத் தேவை, சில தனிமனிதத்
தேவைகள்.
ஆனால் நம் தேவைகளை உற்று நோக்கும்போது அடிப்படையில் நாம் தேடி அலைவதெல்லாம் நிலையான சுகம், திருப்தி, மன நிறைவு. இவைகளையே ‘சந்தோஷம்’ என்று பெயரிடுகிறோம்.
பட்டியலில் கண்ட கனவுகளை அடைந்தால் நமக்கு நிரந்தர சந்தோஷம் கிடைக்கும் என்ற நப்பாசை.

பிறப்பின் இயல்பு

சந்தோஷத்தை அடைவதற்காக பல விதமான தடங்கல்களை, கஷ்டங்களை,
சோகங்களைச் சந்தித்தாலும் சந்தோஷத்தை தேடுவதை மட்டும் நிறுத்துவதில்லை.
ஏன் சந்தோஷத்தை தேடி அலைகிறோம்? ஏனென்றால் துக்கங்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மாற்று மருந்தாக, நிவர்த்தியாக சந்தோஷத்தைத் தேடுகிறோம். இதுதான் நம் பிறப்பின் அடிப்படை இயல்பு. 

ஆனால் இந்த சந்தோஷத் தேடலில் எவ்வளவு பேர் வெற்றி அடைய முடிகிறது? உலகிலேயே அதிகமாக உழைத்து பணம் சம்பாதித்த செல்வந்தர்களாலோ, அதீத கல்வி, அதி உயர்ந்த பதவியால் புகழ் பெற்றவர்களோ, அதிக மனைவிகள், குழந்தைகளைக் கொண்டவர்கள் கூட அவர்கள் சந்தோஷமாக இருப்பதாகவோ அல்லது தங்கள் சந்தோஷத் தேடல் முடிந்து விட்டதாகவோ உறுதியாக சொல்லமுடியவில்லையே. ஏன்?

இதற்கு நாம் சரியான வாழ்க்கை பாடம் எது என்பதை அறியாமல் போனதுதான் காரணம். விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்தாலும்,  காலம்காலமாக மனிதன் தான் அனுபவிக்கும் துக்கங்களை களைய முடியவில்லை,

இதுதான் ஆனந்தம்

நிலையான சந்தோஷத்தையும் அடைய முடியவில்லை. ஆனாலும் இந்தத் தேடலை விடவும் முடிவதில்லை! ஏன் தெரியுமா?
நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது. நாம் நிரந்தரமற்ற அற்ப சந்தோஷம் அல்ல.
நிரந்தரமான பேரானந்தம் என்கிறது வேதாந்தம். வேட்கைகளிலிருந்து விடுதலை பெறுவது. நிலையான உண்மையை, ஆத்மனை உணர்வது. அதிலேயே திளைத்து இருப்பது. இதுதான் ஆனந்தம்.

நாம் சந்தோஷம் என்று எதை உண்மையில் நாடுகிறோம்?


‘விஷய இந்த்ரீய சங் யோகா’ என்று விளக்கம் அளிக்கிறது யோக சாஸ்த்ரம். நம் புலன்களும் நாம் இச்சைபடும் பொருள்களும் இணையும் போது உணரும் சுகத்தை சந்தோஷம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

இத்தகைய சுகத்தை ‘காம, காஞ்சன’ என்ற இரண்டு பாதைகளில் தேடுகிறோம் என்று நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

‘காம’ என்பது இச்சை, பிரேமை, சுகம், கேளிக்கை, மோகம், ஆசை. ‘காஞ்சன’ என்பது செல்வம், குடும்பம், பதவி, அந்தஸ்து, புகழ், மரியாதை இத்யாதிகள்.
காம காஞ்சன பாதையில் மிக எளிதில் நமக்கு சந்தோஷம் கிடைப்பதாக எண்ணி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இந்த வேட்கை போதையாக மாறுகிறது.

தாகமும், தேடலும்

இந்த இரண்டு பாதைகளும் நிச்சயமாக நம்மைத் தவறான இடத்துக்கு அழைத்து செல்வது மட்டுமல்லாது மேலும் பல இச்சைகளைத் தூண்டுகின்றன.

தாகம் அதிகமாகிறது. தேடல் தீவிரமாகிறது. சிக்கல்களும் அதிகமாகிறது. நம் வாழ்க்கை அனுபவங்களே இதற்கு ஆதாரம்.  
இந்த வழிகளில் நம் எதிர்பார்ப்பு நிறைவேறுவதாகத் தெரிவதில்லை என்பதை வெகுவிரைவில் உணர்கிறோம். நாம் சேர்த்த அத்தனை செல்வங்களும், அனுபவித்த சுகங்களும் நிலையற்றவை. இதுவும் வாழ்க்கை பாடம் சொல்லித் தருவதுதான்.

சந்தோஷ தாகத்தை தீர்க்கமுடியாதவை, நமக்கு பயன்படாதவை என்பதை காலம் கடந்தாவது நம்மில் ஒரு சிலர் புரிந்துகொள்கிறோம்.

மிஞ்சி நிற்பது என்னவோ ஏமாற்றம், சோகம், துக்கம், ரோகம், அமைதியின்மை, ஆதங்கம், பயம், பாதுகாப்பின்மை. இவைகளிலிருந்து விடுதலை பெற மீண்டும் விடை தேடி அலைகிறோம். 

சுழலும் சக்கரம்

அதில் மேலும் தவறுகளை செய்கிறோம், இன்னும் பெரிய பிரச்சனைகளில் சிக்குகிறோம். இந்தச் சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. சரி, சந்தோஷமோ, ஆனந்தமோ எவ்வளவு இருந்தால் திருப்தி? இதுவும் பலருக்கு வாழ்க்கை பாடம்தான்.

தங்கள் அறியாமையால் மனிதர்கள் தேடி அலையும் உலக சந்தோஷத்துக்கும், தேடி உணரவேண்டிய உண்மையான ஆனந்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தைதீரீய உபநிஷத்து அழகாக படம் பிடித்து காட்டுகிறது.
இளம் வயது, அழகான தோற்றம், பலம் பொருந்திய உடல்வாகு, மிக உயர்ந்த கல்வி, சர்வகலா ஞானம், ஆசையான குடும்பம், அளவுக்கு மீறிய செல்வம், மிகப் பெரிய பதவி, அதிகாரம், சமுதாய அந்தஸ்து, புகழ் ஆகியவை கொண்டு ஒரு இளைஞன் அனுபவிக்கும் சந்தோஷத்தை எண்ணிப் பாருங்கள்.

சந்தோஷத்தின் அளவீடு

இதை நமக்குத் தெரியாத, இதுவரை உணராத ஆனந்தத்தின் ஒரு அளவீடு என்று வைத்துக் கொள்வோம். 
இதைப் போல நூறு மடங்கு சந்தோஷத்தை மனுஷ கந்தர்வ லோகத்தில் (சில மானுடர்கள் தங்களின் நல்ல கர்ம உபாசனைகளின் பலன்களை அனுபவிக்க கந்தர்வளாகி இந்த லோகத்துக்கு செல்கின்றனர்) வாழ்பவர்களால் அனுபவிக்க முடியும்.

அதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவ கந்தர்வ லோகத்தில் வாழ்பவர்கள் அனுபவிக்கமுடியும்.

இதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை பித்ரு லோகத்தில் (நம் முன்னோர்கள் வாழும் லோகம்) வாழ்பவர்கள் அனுபவிக்க முடியும்.

நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை இதைவிட கர்ம தேவ லோகத்தில் (வேததர்ம கர்மங்களில் சிறந்தவர்கள் இங்கே செல்கின்றனர்) வாழ்பவர்கள் அனுபவிக்க முடியும்.

அதையும்விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் மந்த்ரிகளால்
(வசுக்கள், ருத்ரர்கள், அதித்யர்கள்) அனுபவிக்க முடியும்.

இதையும்விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் தலைவன் இந்திரனால் அனுபவிக்கமுடியும்.

இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு சந்தோஷத்தை தேவகுருவான ப்ருஹஸ்பதியால் அனுபவிக்கமுடியும்.

இவை எல்லாவற்றையும் விட நூறுமடங்கு சந்தோஷத்தை ஸ்ருஷ்டிகளின் தலைவனான ப்ரஜாபதியால் அனுபவிக்க முடியும்.

அப்பப்பா… இத்தனையும் தாண்டிய நூறு மடங்கு சந்தோஷத்தை சிருஷ்டி செய்யும் பிரம்மதேவனால் அனுபவிக்க முடியும். இதுவும் ஒரு வாழ்க்கை பாடம் தான்.

பிரம்மானந்தம்

ஆக, அனைத்து வகையான, மிக உயர்ந்த ஆனந்தங்களின் அளவிடக்கூடிய அளவீடு இது. ஆனால், இவையெல்லாவற்றையும் காட்டிலும், பல மடங்கு அளவிடமுடியாத பிரம்மானந்தமே.

பேரானந்தமேதான் நம் உண்மை சொரூபமான ஆத்மன் என்று நமக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது வேதங்கள். இதுதான் நமக்கு உண்மையான வாழ்க்கை பாடம்.

எது நிஜம்

இந்தப் பேரானந்த கடலே நாமாக இருக்கும்போது, இதை உணராமல் ஒரு
சிறு துளி அளவுக்கு நம் உடல், மனம், எண்ணம் அணுகும் உலக சந்தோஷத்தைப் பெரிதாக
நினைத்து அதில் நாட்டம் கொண்டு, அவைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கையை வீணடித்து வருகிறோம் என்றும் நம்மை பார்த்து வேதனைப்படுகின்றன வேதங்கள்.

இரவில் ஓடும் நீரில் காணும் சந்திர பிம்பத்தை நிஜவிளக்கு என்று எண்ணி அதைத் துரத்தி விளையாடும் மீன்கள்போல, நாமும் சந்தோஷங்களை நிஜம் என்று கற்பனை செய்துக் கொண்டு துரத்திக்கொண்டே இருக்கிறோம். அலுப்பில்லாமல்! இது பலரும் சந்திக்கும் வாழ்க்கை பாடம்.

நம்ப வைக்கும் உலகம்

வேதாந்தம் நம் தவறை சுட்டிக் காட்டுவதோடு நிற்கவில்லை. இதற்கான தீர்வையும்,
வழிமுறைகளையும் சொல்கிறது.

அடிப்படையில் நாம் மிகப் பெரிய தவறை தொடர்ந்து செய்து வருகிறோம். இது நம் உண்மை இயல்பைப் பற்றி நாம் தவறாக எண்ணிக்கொண்டிருப்பது.
இந்தப் பொருள் என்னுடையது, அது என்னுடையது, இந்த உடல் என்னுடையது என்று  நம்
இளம் வயதிலிருந்தே நம் மனதில் இந்த நிலைப்பாடு ஆரம்பிக்கிறது.

இந்த உடல், உள்ளம், எண்ணம், புத்தி சேர்ந்த சிறிய மனித உருவமே ‘நாம்’ என்று நினைத்துக் கொண்டு இந்த உலகை அணுகுகிறோம்.

இதற்கு முக்கிய காரணம் நம் புலன்கள் அனைத்தும் வெளி உலகை நோக்கிப்
பாயும் தன்மை கொண்டவை. அதனால் நம் உலகம் வெளியே என்று நம்மை நம்ப வைக்கின்றன. இதுவும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடம் தான்.

இன்னொரு உலகம் உண்டு

நமக்குள்ளே இன்னொரு உலகம், நம் உண்மையான உலகம் இருக்கிறது என்பதை நாம்
ஒருபோதும் யோசிப்பதில்லை. பழகியப் போக்கை விட்டு, நம் உண்மையான இயல்பு என்ன என்பதை ஆராய முயல்வதில்லை.

நாம் உண்மையில் யார்? நமக்கும் நாம் பார்க்கும் இந்த உலகிற்கும் என்ன தொடர்பு? இந்த அடிப்படையான, உண்மையான இயல்பை உணர்வதற்கான உள்நோக்கிப் பயணித்து நம்மைப் பற்றிய உண்மையை உணருவதே ‘ஆத்மஞானம்’. இந்த வாழ்கை பாடம் பலருக்கு புரிவதில்லை.

இந்த உயர்நிலை ஞானத்தைப் பெற நமக்கு துணை புரிகிறது வேதாந்தம்.  இது மிகப் பெரிய ரகசியம், நம் உண்மை இயல்பு நமக்குள் புதைந்து கிடக்கும் தேவரகசியம்.
உண்மையில் இந்த ரகசியத்தின் விடையைத் தேடித்தான், இதைத்தான் தேடுகிறோம் என்றுகூட தெரியாமல், சந்தோஷம் என்றோ அல்லது துக்கத்துக்கான நிவாரணமாகவோ தேடிக் கொண்டிருக்கிறோம்.
தெரிந்துகொண்டு விடை தேடுவது வேதாந்தம். தெரியாமல் தேடிக்கொண்டிருப்பது ஸம்சாரம்.
கரடுமுரடான நம் வாழ்க்கைப் பயணம். ஒரு சிலரால் மட்டுமே இந்த ரகசியத்துக்கான விடையை அறிய முடிகிறது. இதுதான் வாழ்க்கை பாடம் என்பதின் முதல்படி.

ஆனந்த ஸ்வரூபம்

அவர்கள் ஞானிகளாகி பெரும்பாலும் மனித சமுதாயத்தை விட்டு விலகிச்
சென்று விடுகின்றனர்.  நம் அடிப்படை இயல்பே ஆனந்த ஸ்வரூபம்தான் என்று வேதாந்தம் ஆணித்தரமாகக் கூறுகிறது.
அளவிடமுடியாத, எல்லையேயில்லாத, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வான, நிலையான, அனைத்தையும் கடந்த பேரானந்த ஸ்வரூபம்தான் உண்மையான ‘நாம்’. 

ஆத்மன். சத் சித் ஆனந்தம். தெய்வீகம். இது ஒன்றே இந்த உலகில் உண்மையானது, நிலையானது.

நம் உடல் புலன்கள் வழியாக நாம் அனுபவிக்கும் இந்த உலகம் (நம் உடலும் சேர்த்து) அவ்வப்போது தோன்றி மறையும் வெறும் தோற்றமே. கண்களால் பார்க்கும் இந்த உலகம் கண்களை மூடிக்கொண்டால் காணாமல் போகிறது. 

திரையில் பார்க்கும் உருவங்கள்

ஒரு சினிமா பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். திரையில் நாம் பார்க்கும் உருவங்கள் அனைத்தும் நிஜமாகவேத் தோன்றுகிறது. அவைகளை வெறும் ஒளிபிம்பங்கள் என்று எண்ணுவதில்லை.

பிம்பங்களே உண்மையான மனிதர்கள் என்று அவர்களை நாமாகவே பார்க்கிறோம். அவர்கள் சிரித்தால் சிரிக்கிறோம், அழுதால் அழுகிறோம், அடித்தால்
கைதட்டுகிறோம். காட்சி முடிந்ததும் எல்லாம் மறைந்துபோகிறது.

திரை ஒன்றே நிஜமாக நிற்கிறது. காட்சி தெரியும்போது திரை தெரிவதில்லை, திரையை உணரும்போது காட்சி வெறும் பிம்பங்களே என்ற உண்மை புரிகிறது.

பிம்பங்கள் திரையைச் சார்ந்தே உள்ளன. ஆனால் பிம்பங்களால் திரைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது போல நாம் காணும் இந்த உலகம் நம் மனத்திரையில் தெரியும் அனுபவ பிம்பங்கள்.

எது ஆன்மிகம்

ஆனால் நம் புலன்கள் இந்த அனுபவத் தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினைத்து, அவைகளிலேயே நாட்டம் கொள்கிறது. 
தூக்கத்தில் நம் மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் எப்படி விழிப்பு ஏற்பட்டதும் காணாமல் போகிறதோ அதுபோல விழித்திருக்கும் நிலையிலும் நாம் காணும் தோற்றங்கள், தூங்கும்போது காணாமல் போகிறது. நம் அனுபவங்களில் மறைந்துள்ள இந்த சூட்சும உண்மையை உணரும் தன்மையை வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம்.

ஒரு அன்னப்பட்சி எப்படி பாலையும் நீரையும் பிரித்து பாலைமட்டும் பருகிறதோ அதுபோல நாம் நம் புலன்கள் வழியாகப் பெரும் அனைத்து அனுபவங்களையும் பகுத்து, திரை வேறு, பிம்பங்கள் வேறு என்ற உண்மையை உணருவதே வேதாந்தம் சொல்லும் வழி. இதுதான் நம்மை வழிப்படுத்தும் வாழ்க்கை பாடம்.

அறியாமை

இது உலகைத் துறப்பதல்ல. வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதல்ல. உலகம் நம் திரையில் நாம் காணும் காட்சி. நமக்கும் காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காட்சி பிம்பங்களோடு ஒன்றிப்போகாமல், வெறுமனே கேளிக்கை தரும் காட்சியாகவே 
ரசிக்கப்படும்போது அவை நம்மை பாதிப்பதில்லை.
இதனால் என்ன பலன்? தற்போது நம்முடைய அறியாமையால், கற்பனையால், தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினத்துக்கொண்டு, புலன்கள் வழியாக இந்த உடல் அனுபவிக்கும் அனைத்து சுக துக்கங்களையும் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம்.
கடோபநிஷத்து இந்த உடலை ஒரு ரதமாகவும், உண்மையான நாம் (ஆத்மன்) அதில் பயணிக்கும் ஒரு பயணி என்றும் வருணிக்கிறது. இது நாம் அறிந்துகொள்ள வாழ்க்கை பாடம்.

ஆத்மனை உணராதபோது பயணியும் ரதமும் ஒன்றே என்று எண்ணி, ரதம் சந்திக்கும் சுக, துக்க அனுபவங்கள் அனைத்தும் பயணியுடையது என்று ஏற்றுக்கொண்டு கலங்குகிறோம்.

குழப்பம் ஏன்

ரதம் வேறு, பயணிக்கும் உண்மையான நாம் வேறு என்று உணரும்போது, ஒரு பெரிய பாரம் நம்மை விட்டு விலகுகிறது. 
சுகங்களும் துக்கங்களும் இந்த உலகப் பாதையில் ரதம் சந்திக்கும் பிரச்சனைகள். அவைகளைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது என்று சொல்ல வரவில்லை.

நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பழுது அடைந்துவிட்டால் அதை சரி செய்கிறோம். எதற்காக? அவை நமக்கு உதவி செய்யும் கருவிகள். பாராமரிப்பு, சீர் செய்யாவிட்டால் நமக்கு தேவையான சமயத்தில் உபயோகப்படாமல் போகலாம்.

அதற்காக இந்த கருவிகளே நாம்தான் என்று எப்போதாவது நாம் ஏற்றுக்கொள்கிறோமா?

ஆனால் நாம் பயன்படுத்தும் உடல், உள்ளம், எண்ணக் கலவையான இந்தக் கருவியை
மாத்திரம்தான் குழப்பத்துடன் அணுகுகிறோம். சில நேரங்களில் என்னுடைய உடல் என்கிறோம், இதற்கு காரணம் உண்மையான வாழ்க்கை பாடம் நமக்கு புரிவதில்லை.

சில நேரங்களில் இந்த உடலே நான்தான் என்கிறோம். இந்த அடிப்படைக் குழப்பம் தீரும்போது, கருவி எது, எஜமானன் யார் வித்தியாசம் தெரியும்.

கருவியின் பிரச்னைகளை எஜமானன் ஏன் ஏற்றுக் கொண்டு அவதியுற வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். 
இந்தத் தெளிவே அனைத்து துக்கங்களிலிருந்தும், சந்தோஷங்களிலிருந்தும்  நம்மை விலகி நிற்கச் செய்யும். இந்த அறியாமையிலிருந்து விடுதலை அடையும்போது, பரப்ரம்ம ஸ்வரூபமான, சதா ப்ரம்மானந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வப் பிறவியே நாம் என்பதை உணரமுடியும்.

எது ஆனந்தம்

பிறப்பு, இறப்பை அனுபவிப்பது உடல். ஆனால் ஆத்மனுக்கு அழிவே இல்லை. இந்த நிலையை வேதாந்தம் ‘மோட்சம்’, ‘ஜீவன் முக்தி’ என்கிறது. வாழும்போதே புலன் அனுபவ தொல்லைகளிலிருந்து விடுதலை. ஜென்ம ஸாபல்யம்.
அடிப்படையில் மனித உருவில், அருவமாக சஞ்சரிக்கும் தெய்வீகப் பிறவிகள் நாம். ஆனால் நாமோ சாதாரண மனிதர்களாக நம்மை கற்பனை செய்துகொண்டு, தெய்வீகத்தை வெளியே தேடி அலைகிறோம் என்கிற நம் தவறு புரியும். இது நாம் உணரும் வாழ்க்கை பாடம்.

இந்த தெய்வீக நிலையை சதா உணர்வதே ஆனந்தம். பேரானந்தம். முடிவு இல்லாதது (அனந்தம்). பரந்து விரிந்தது. எல்லையில்லாதது.  இந்த பேரானந்தத்தை சதா உணர்ந்து அதிலேயே திளைக்கும் திவ்யநிலையே, சத் சித் ஆனந்த நிலை. இந்த வாழ்க்கை பாடம் பலருக்கு கிட்டுவதில்லை.

பேரானந்த நிலை

இதுவே அனந்த நிலை, ‘கோடி’ நிலை. ‘தத் த்வம் அஸி’ (எதைத் தேடுகிறாயோ நீயே அது) என்ற வேத உண்மையை பிரகடனப்படுத்தும் நிலை. அற்ப சந்தோஷங்களை தேடி அல்லல்படுவதை விடுத்து உண்மையான எல்லையில்லாத ஆனந்தத்தை உணர்ந்து இறப்பை வெல்வதே நம் பிறப்பின் காரணமாக இருக்க வேண்டும். 
சந்தோஷத்தை தேடுவதை விட்டு விலகி, தெய்வீக நிலையான பேரானந்தத்தை உணருவதற்கான உண்மையான வாழ்க்கை பாடம் தொடர்பான பயிற்சிகளை அளிக்க முன் காலத்தில் ரிஷிகள், குருமார்கள் இருந்தனர்.

ஆஸ்ரமங்கள், குருகுலங்கள், வேத வித்யாலயங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை மறைந்துவிட்டன.
தற்போது சொல்லிதரவும் குருமார்கள் இல்லை. கற்றுக்கொள்ளவும் நமக்கு ஆர்வமோ நேரமோ இல்லை. ஆனால் ஸாஸ்த்ரங்களும், வேதஞானமும் என்றும் நிலைத்து நிற்பவை. காலத்தால் அழிவதில்லை.

உண்மையுடன், நம்பிக்கையுடன், பக்தி ஸ்ரத்தையுடன், முனைப்புடன் இந்தத்
தேடலில் முயல்வோருக்கு ஒரு ப்ரம்ம குருவின் அடையாளமும், அவரை அடையும் வழியும் கிடைக்கும் என்று நம் ஸாத்ரங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

இதை உணர்ந்து முனைப்புடன் தேடுவோருக்கு நிச்சயமாக மனிதப் பிறவிக்கான வாழ்க்கை பாடம் கிடைக்கும்.