ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?

வெ நாராயணமூர்த்தி

இன்றைக்கு பணத்துக்காகவும், பதவிக்காகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் ஆன்மீக சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வை இப்போதாவது பெறுவது அவசியமாகிறது.

ம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான
எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள்
அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும்.

ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய உயர்நிலை சிந்தனை
(இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்).

இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்).

இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

ஆன்மீக சிந்தனைகள்

பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மீக சிந்தனைகள் அல்லது தெய்வீகத்தைப் பற்றிய சிந்தனைத்தான்.

இது கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள்,
தானம், தியானம், நல்லோர் நட்பு போன்றவையாக இருக்கலாம்.

பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்க்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக ஆன்மீக சிந்தனைகள் இருக்கலாம்.

இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.

இவையே நம்மை இயக்குகின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்கைப் பயணமும் அமைகிறது.

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் நாம், நம் குடும்பம், உறவுகள், நம்மைச் சுற்றியுள்ள உலகம், ஆசைகள், வேட்கைகள், நல்லவை, கெட்டவை, தேவை, தேவையில்லாதவை, பயன்படக்கூடியவை, பயனில்லாதவை. போன்ற உலக பொருள்களில் மோகம் கொண்டு ஒரு சிறிய, ஸம்ஸார வட்டத்துக்குள் சிக்குகிறோம்.

இத்தகைய சிந்தனைகளால், இந்த குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறோம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

நம்மை இப்படி தடுத்து சீர்குலைக்க வைக்கும் எட்டு நாசக் காரணிகளைப் பற்றி ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.


த்யாயதோ விஷயா புன்ஸ சங்க தேஷுபஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமாத் க்ரோத அபிஜாயதே

க்ரோதாத் பவதி சம்மோஹ சம்மோஹாத் ஸ்மிருதி விப்ரமஹ
ஸ்மிருதி ப்ரன்ஷாத் புத்தி நாஷஹ, புத்தி நாஷாத் ப்ரநாஷ்யதி

(ஸ்ரீமத் பகவத் கீதை, அத்யாயம் 2, ஸ்லோகம் 62,63)

“புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது
(த்யாயதே), நம் சிந்தனை அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது (சங்கமமாகிறது).

சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது. ‘அது எனக்குக் கிடைத்தால்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத்
(காமம்) தூண்டுகிறது.

இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப் போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது.

ஆசை பேராசையாக மாறுகிறது. அது தடைபடும்போதோ, கிடைக்காமல்
போகும்போதோ ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத் (க்ரோதம்)
தூண்டுகிறது.

கோபம்

கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது. முதலில் தெளிவாக யோசிக்கும்
திறமையை மூடி மறைக்கிறது (சம்மோஹத்-மறைத்தல்). பின் குழப்பத்தை ஏற்படுகிறது. (விப்ரமஹ-குழப்பம்).

இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிக சிந்தனை
உட்பட) மறந்துபோகின்றன (ப்ரன்ஷாத்-மறப்பு). இதனால் புத்தி தடுமாறுகிறது (புத்தி
நாசம்). சரியான முடிவு எடுக்கமுடியாமல் நாசவாலையில் சிக்கிக் கொள்கிறோம்.

ஆன்மீக சிந்தனைகள் தடைபடுகின்றன. தவறான பாதையில் சிக்கிக் கொண்டபிறகு நாம் சந்திக்கும் பிரச்னைகள் பெரிதாகும்போது சீரழிவை நோக்கி நகர்கிறோம்.

இந்நிலையிலிருந்து மீள்வதே முக்கியமாகி இதற்கான விடைதேடுவதே நம் முதல்
பணியாகிறது.

ஆன்மீக சிந்தனைகளை அடையும் முயற்சி

இந்த முயற்சியில் அவ்வப்போது ஆறுதல் கிடைக்க முதலில் எளிய வகையில் உடனடி
நிவாரணம் தரும் ஆன்மிக வழிகளைத் தேடுகிறோம்.

எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காதபோது ஆன்மீக சிந்தனைகள் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது.

இதனால்தான் நம்மில் பெரும்பாலோர் ஆன்மீக சிந்தனைகளில் முழு ஈடுபாடு கொள்ளமுடிவதில்லை.

நாம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவோ, உணரவோ முடிவதில்லை.

ஏன் இத்தகைய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்? இதை எப்படி சரி செய்வது
என்பதை பார்ப்போம்.

வேத சாஸ்த்ரங்கள் விடை

வேத சாஸ்த்ரங்கள் இதற்கு விடை அளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான ஸக்தி உயிரோட்டங்கள் உள்ளன. இவை அவனுக்குள் சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன.

அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே அவன் உள், வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், உணர்ந்துகொள்ளுதல்
போன்ற இவை அனைத்தும் ஞான உயிரோட்டத்தால் ஏற்படுவது.

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் விதம் பற்றிய வரையறைகளை தேர்வு செய்வது கர்ம உயிரோட்டம். நாம் பிறக்கும்போதே நமக்குள் பிரத்யேகமாக உருவான உள்நிலை
பரிவர்தனைகளை (பாவனைகளை) வெளிக்காட்டுவது ஸ்வபாவ உயிரோட்டம்.

ஸ்வபாவ உயிரோட்டம்

இங்கே ஸ்வபாவ உயிரோட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்வது அவசியம். இதை
‘ஸம்ஸ்க்காரம்’ என்று குறிப்பிட்டு சொல்கின்றன வேதங்கள்.

இது ஒரு வகையான எண்ணச் சுமைகள் (நினைவுச் சுவடுகள்) கொண்டவை. நல்லவை, தொல்லை தருபவை சேர்ந்த ஒரு கலவை.

பிறந்ததிலிருந்து நாம் பார்த்த அனுபவங்கள், சில நிகழ்வுகள், ஆறாத வடுக்கள், சோகம் அல்லது சுகம் தரும் நினைவுகள் (சென்ற பல பிறப்புகளிலிருந்தும் கூட இருக்கலாம்) ஆகியவை நம்முள் ஆழப் பதிந்து கிடக்கின்றன.
இவை ஆழ்மனதில் சேமிப்பாக, பத்திரமாக பாதுகாக்கப் படுகிறது. இந்த எண்ணச்
சுவடுகளின் தாக்கங்கள்தான் செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன.

இது ஒரு ஸ்திர நிலை. சாதாரணமாக மாற்றிக்கொள்ளவோ அழிக்கவோ முடிவதில்லை.
தேவைப்படும்போது இவை ஆழ்சேமிப்பிலிருந்து எண்ணங்களாக அவ்வப்போது
கொப்பளித்து வெளிவருகிறது. இது ஸ்வபாவ சக்ரம்.

புத்தியின் முடிவு

சிலர் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவது, சந்தேகப்படுவது, ஆதங்கப்
படுவதைப் பார்க்கிறோம்.

சிலர் எதற்கும் அசராமல், மிகப் பெரிய இன்னல்களையெல்லாம் கூட சர்வ சாதாரணமாக கையாள்வதையும் பார்க்கிறோம்.
கூச்சம், குறும்பு, கிண்டல், அமைதி, உரக்கப் பேசுவது, மென்மையாகப் பேசுவது,
கூர்ந்து கவனிப்பது, மரியாதையான நடத்தை, பக்திமார்கத்தில் நாட்டம், சிரித்துப்
பேசுவது,

இப்படி ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனிப்பட்ட பாவனை (ஸ்வபாவம்)
இருக்கிறது. இதை சாதாரணமாக அழிக்கவோ அல்லது அதன் பிரதிபலிப்பிலிருந்து
விடுபடுவதோ சுலபமான காரியம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் ஸம்ஸ்க்காரங்களின் உந்துதல்படியேதான் புத்தி முடிவு
எடுக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே நாம் பல காரியங்களை தெரிந்தோ தெரியாமலோச் செய்கிறோம், பின்னர் அவைகளின் (நல்ல அல்லது தீய) விளைவுகளையும், பலன்களையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம்.

செம்மைபடாத நம் எண்ணங்களே நமக்கு எதிராகத் திரும்பி, எப்படி நம்மை
அழிக்கின்றன பார்த்தீர்களா?

இவைகளை பிராரர்த கர்மவினைகள் என்கிறது வேதங்கள். ஆக நமக்குள்ளே சேர்த்து வைத்திருக்கும் இந்த ஸ்வபாவங்களை எப்படி சீர்ப்படுத்துவது? செம்மைப்படுத்துவது?

ஸ்ரீமத் மஹாபாரத புராணம்

செம்மை படாத ஸ்வபாவம் எப்படி ஆபத்தானது என்பதை துரியோதனின் மனப்
போக்கை உதாரணமாக வைத்து விளக்குகிறது ஸ்ரீமத் மஹாபாரத புராணம். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும்.

மஹாபாரத புராணத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாகக் கேள்விப்பட்ட ஒரு நாத்திக நண்பர் ஒரு கேள்வி கேட்டார். மிகப் பெரிய ஞான தத்துவங்களை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் போதிக்கவேண்டும்?

சாதுவான, சாத்வீகமான அர்ஜுனனுக்கு இது பெரிதாகப் பயன்படப் போவதில்லை. இவ்வளவு தத்துவக் குவியல்களையும் நியாய தர்மங்களையும் இந்தக் கதையின் முக்கிய வில்லனான துரியோதனனுக்கு சொல்லியிருந்தால் ஒரு வேளை அவன் மனம் மாறி, யுத்தமும் அழிவும் இல்லாமல் தவிர்த்திருக்கலாமே?

இது உங்களுக்கு நியாயமான கேள்வியாகப் படுகிறது அல்லவா?

இது பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தெரியாதா?

ஏற்க மறுத்த துரியோதனன்

யுத்தத்துக்கு முன்னரே துரியோதனனைச் சந்தித்து அவனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் துரியோதனின் ஸ்வபாவம் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதது.

‘நீ சொல்லும் தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கேட்டது எல்லாம் எனக்கும் தெரியும் கண்ணா! நானும் குருகுலத்தில் கற்றவனே.

ஆனால் தர்மத்தையும், நியாயத்தையும், நல்லவைகளையும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறதே! என் மனம் சொல்லும் அதர்ம, அநியாய, கெட்ட விஷயங்களை, அவைகளின் உந்துதல்களை என்னால் எதிர்க்க முடியவில்லையே!

என் மனம் எடுக்கும் முடிவுதான் என்னுடையது’ என்று ஆணித்தரமாக அத்துணை போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

ஸாட்ஷாத் பரம்பொருளே வந்து நல்லவைகளை போதித்தாலும், அவன் ஸ்வபாவம்
அவனை எப்படி தடுக்கிறது பாருங்கள்!

இந்த பாவனைதான் அவன் அழிவுக்குக் காரணமானது. அதனால்தான் எண்ணங்களையும், புத்தியையும், பாவனைகளையும் கட்டுப்படுத்தும் திறமைகொண்ட அர்ஜுனனுக்கு ஞானபோதனை செய்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த போதனைகள் அர்ஜுனனுக்கு மாத்திரம் அல்ல, நம் எல்லோருக்கும் சேர்த்துதான்.

மனதைக் கட்டுப்படுத்த 8 வழிகள்

நல்ல வாழ்க்கையை கடைப்பிடிக்க கௌதம புத்தன் எட்டு வழிகளை (அஷ்டாங்க
மார்க்கம்) சொல்லிச் சென்றுள்ளார். மனதை கட்டுப்படுத்த எட்டு யோக (அஷ்டாங்க யோக) முறைகளை பதஞ்சலி முனிவர் சொல்லிச் சென்றுள்ளார்.

அதுபோல நம்மை ஆன்மீக சிந்தனைகள் கொண்டு செல்லும் பாதையில் முனைப்போடு செல்லத் தடையாக இருக்கும் இந்த எட்டு நாச காரணிகளிலிருந்து விடுபட வேண்டிய முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் வாயிலாகப் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அன்று துரியோதனன் பேசியது நிதர்சனமாக உண்மை. இது அவன் பிரச்சனை
மட்டுமல்ல. இன்று இதுவே நம் பெரும்பாலோரின் மிகப் பெரிய பிரச்சனை.

நாளடைவில் இது பழக்கமாகிவிடுகிறது. அதனால் பலவிதமான சிக்கல்களில் தொடர்ந்து சிக்கி அல்லல்படுகிறோம் என்பதையும் கண்கூடாக அனுபவிக்கிறோம்.

அப்படியென்றால் சதா இந்த ஸம்ஸ்க்கார மாயத்தில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்க
வேண்டியதுதானா? இதற்குத் தீர்வே இல்லையா?

ஆன்மீக சிந்தனைகள் தரும் நிவாரணம்

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வபாவம் என்பது நம்
உண்மையான இயல்பு அல்ல.

சில எண்ணங்களின் உந்துதலால் கட்டுப்படுத்தப்பட்டு மனதால் பிரதிபலிக்கபடும் ஒரு நிலை.

ஆனால் இது நம் உண்மையான இயல்பு அல்ல என்று உணர்ந்து இந்த நிலையிலிருந்து விடுபட நாம் முயல்வதே இல்லை. இது நம் உண்மையான இயல்பை நாம் உணரவே முடியாமல் தடுக்கும் மிகப் பெரிய தடை.

இதிலிருந்து மீள என்ன வழி? நம் உண்மை இயல்பை உணர்வது என்பது நம்
உண்மையான ஸ்வரூபமே தெய்வீகம் என்பதை உணருவது! இது எப்படி சாத்தியம்?

ஒரே ஸ்வரூபம்

நம் அறியாமையால் இந்த உடல், உள்ளம், எண்ணங்கள், நினைவு, புத்தி கொண்ட
கலவையே ‘நாம்’ என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ,

இதுவே நம் இயற்கையான இயல்பு என்றும் தவறாக நம்புகிறோம். இந்தப் புலன்களின்
கலவைகளால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நம்முடையது என்று
ஏற்றுக்கொண்டு மேலும் அல்லல்படுகிறோம்.

அதனால் தொடர்ந்து தவறு செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறோம் என்று சுட்டிக்காட்டுகின்றன வேதங்கள்.

நம் அனைவருக்கும் ஒரே ஸ்வரூபம்- தெய்வீகம். இது சத்சித்ஆனந்த நிலை. ஆத்ம
நிலை. ப்ரம்ம நிலை. ஆன்மீக சிந்தனைகள் தரும் உணர்வு.

ஆனால் இதை உணர முடியாமல் ஸ்வபாவத்தால் கட்டுண்டு மாறுபடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள எட்டு (நினைப்பு, இணைப்பு, காமம், க்ரோதம், மறைப்பு, குழப்பம், மறப்பு, புத்திநாசம்) காரணிகளுக்கும் அடிமையானவர்கள் இவைகளின் வெளிப்பாடான ஸ்வபாவங்களுக்கும் அடிமையாகிறார்கள்.

செம்மைபடாத ஸ்வபாவங்களிலிருந்து விடுபட வேதங்கள் பல வழிகளைக்
காட்டியுள்ளது.

அந்தக் காலத்தில் குருகுலங்கள் இதற்கான முறையான பயிற்சிகளை கற்றுத் தந்து வந்தன. இன்றைக்கு இவைகளைப் பற்றி படித்து தெரிந்துகொண்டாலும், விளக்கம் சொல்லவோ, ஆழமான பயிற்சி தரவோ தகுந்த குருகுலங்களோ, குருமார்களோ இல்லை.

கற்றுக்கொள்ள நமக்கு நேரமோ, ஆர்வமோ, முனைப்போ, வழிமுறைகளோ இல்லை. பிறகு என்னதான் வழி?

ஒன்று, நாமே போராடி முயன்று கற்றுக்கொள்வது. சாஸ்த்ரங்களைக் கற்றுக் கொள்ளலாம். வ்யாக்கானங்களை படிக்கலாம்.

வேதத்தைக் கற்றவர்களுடன் நட்பு கொண்டு பல விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு நம் வாழ்நாள் முழுதும் தேவைப்படலாம். இரண்டாவது, நம்மைப் படைத்தவன்
மட்டுமே செய்யக்கூடியது! இது இமைப் பொழுதிலும் நடக்கலாம்.

பயிற்சியும் முயற்சியும் தேவை

‘அவித்ய-காம-கர்ம’ என்பது ஒரு ஆபத்தான வாழ்வியல் வட்டம். அவித்ய (அறியாமை)
தேவை இல்லாத இச்சைகளை (காம) உருவாக்கும்.

இச்சைகளின் எதிர்மறை விளைவே கர்ம வினைப்பலன்கள். நாம் புலன்களால் பார்ப்பது, உணர்வது அனைத்தும் நம் உண்மை இயல்பு நிலை பற்றிய அறியாமையால் ஏற்படும் தோற்றங்கள்.

‘உண்மை நிலையை’ அறிந்து பிரித்து எடுக்க கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை.

எண்ணங்களை ஒருநிலைப் படுத்தும் தியானம், மந்த்ர ஸ்மரணை பக்தி வழிபாடு, ஸாத்வீக சிந்தனைகள், ஆன்மிக ஆன்றோர்களுடன் நட்பு, தர்மகாரியங்கள் செய்வது போன்ற பயிற்சிகள் ஆன்மீக சிந்தனைகள் மீதான பலனை தரும். ஆனால் இது போதாது. ஆரம்பம் மட்டுமே.

அவித்ய-காம-கர்ம வட்டத்திலிருந்து விடுதலை பெற அனைத்தும் உணர்ந்த ஒரு
பிரம்மகுருவின் உதவியும், ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் அவசியம்.

ஸ்ரீசங்கராச்சாரியார் சுட்டிக்காட்டும் விவேகம், வைராக்யம், உபரதி, திதிக்ஷை, ஷ்ரத்தை, சமாதான, முமுக்ஷத்வ (ஒரே சிந்தை) கொண்ட ஒழுக்கக் கட்டுப்பாடு நியதிகளுடன், முனைப்போடு கடும் முயற்சி செய்தால், அந்த குருவே அவரை அடையாளம் காணும் வழியைக் காட்டுவார்.

மேலும் அத்தகைய குருவருள் பெற இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியம், என்கிறது சாஸ்த்ரங்கள்.

ஆன்மீக சிந்தனைகள் மட்டுமே இந்த பிறப்பின் காரணத்தை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவி. ஆன்மீக சிந்தனைகள் இன்றி ஈடுபடும் எந்த செயலும் முழுமை அடைவதில்லை. ஆன்மீக சிந்தனைகள் என்பது இப்பிறவியில் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு பாதை.