கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

சென்னை: சென்னையில் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவியரிடம் பாலியல் சீண்டல்களை செய்வதும், கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பேராசிரியர் ஒருவர் மீது முதல்கட்டமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த பேராசிரியர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கலாசார அடையாளங்களில் ஒன்று

கலாஷேத்ரா ஃபவுண்டேஷன் தமிழகத்தின் தலைநகரின் முக்கிய கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இங்கு பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகியன பயிற்றுவிக்கப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கான இப்பட்டயச் சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு இங்கு மாணவ, மாணவியர் போட்டிப்போட்டு சேருவதுண்டு.

கலாஷேத்ரா, 1936ஆம் ஆண்டில் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் அடையாறில் உள்ள பிரம்மஞான சபையின் தோட்டத்தில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1962-ஆம் ஆண்டில் திருவான்மியூர் தற்போது செயல்படும் இடத்துக்கு மாற்றப்பட்டது.
1993-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த கலாக்ஷேத்ரா நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என அங்கீகரிக்கப்பட்டது.

கலாக்ஷேத்திரா மாணவியர்


கலாக்ஷேத்ராவில் அவ்வப்போது சில குற்றச்சாட்டுகள் எழுந்து மறைவதுண்டு. ஆனால் இம்முறை மாணவியரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக செய்தி பரவி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கலாக்ஷேத்ராவில் பணியாற்றும் நான்கு ஆண் ஆசிரியர்கள் பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும்தான் மாணவியர் வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.


கடந்த சில நாள்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பிரத்யேக குழுக்களில் மட்டுமே கலாஷேத்தாரவில் ஒருசில குறிப்பிட்ட ஆசிரியர்கள் மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

முன்னாள் மாணவியர் புகார்

இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவியர் சிலரும் தாங்கள் படித்த காலத்திலும் இத்தகைய பாலியல் சீண்டல்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பிரபல நடனக் கலைஞர்கள் தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்த தகவலை கசியவிட்டதை அடுத்து இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

மார்ச் 21-ஆம் தேதி தேசிய பெண்கள் ஆணையமும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து டிவிட்டர் பதிவிட்டது.
இந்த சூழலில், கலாஷேத்ரா அமைப்பு மத்திய அரசு மூலம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், “இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய கலாசார அமைச்சகத்திற்கு இதுதொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தது.

உள்விசாரணைக் குழு

அத்துடன், கடந்த சில மாதங்களாகவே சமூக ஊடகங்கள் மூலம் சில ஆசிரியர்கள் குறித்தும், கலாக்ஷேத்ரா குறித்தும் அவதூறு பரப்பப்படுவதாக சொன்னது. கலாக்க்ஷேத்ராவில் மிகத் தீவிரமாக செயல்படும் உள்விசாரணைக்குழு தாமாக முன்வந்து விசாரித்ததாகவும் சொன்னது. ஆனால் அந்த புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் கூறியது.
இந்த நிலையில், உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின்போது, தொடர்புடைய மாணவியே புகாரை மறுத்திருக்கிறார்.

அதனால் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக பெண்கள் ஆணையம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தெரிவித்தது.

ஆனால், கலாக்ஷேத்ராவுக்கு தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவரிடம் பாதிக்கப்பட்ட மாணவியர் தனித்து பேச அனுமதிக்கவில்லை. என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

போராட்டத்தில் மாணவியர்

இந்த நிலையில்தான் வியாழக்கிழமை மாணவியர் போராட்டத்தில் வெளிப்படையாக ஈடுபடத் தொடங்கினர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றவர்களுக்கு முதலில் நிர்வாகம் அனுமதி மறுத்தது.

பின்னர் ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. அப்போது ஊடகங்களிடம் மாணவியர் வெளிப்படையாக சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

மாணவியரின் போராட்டம் தொடர்ந்த நிலையில், கல்லூரியை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மூடுவதாக கலாஷேத்ரா அறிவித்தது.

அத்துடன் விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவியர் இரண்டு நாள்களில் அவற்றை காலி செய்யவும் உத்தரவிட்டது.
இதனால் மாணவியர் ஒன்றுதிரண்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இப்போராட்டம் மார்ச் 31-ஆம் தேதியும் தொடர்ந்தது.

சட்டப் பேரவையில்

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, தி. வேல்முருகன், கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டவர்கள் கலாக்ஷேத்ரா தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் கூறினார்.

தமிழக பெண்கள் ஆணையத் தலைவி


இதற்கிடையில், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவி ஏஎஸ். குமாரி கலாக்ஷேத்ராவுக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

அதற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், “முதலில் இந்த விவகாரம் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்போவதாகவும், மாணவிகளைப் பொறுத்தவரை பாலியல் தொந்தரவு அளித்ததாக நான்கு பேரின் பெயர்களைச் சொல்கின்றனர்.

2008ஆம் ஆண்டிலிருந்தே இதுபோன்ற பாலியல் தொந்தரவு இருப்பதாகக் கூறியும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
புகார் தெரிவிக்கும் மாணவியரின் ரகசியம் காக்கப்படுமா என்ற அச்சம் காரணமாக கல்லூரியில் தற்போது பயிலும் மாணவியர் பலரும் புகார் தெரிவிப்பதில் தர்மசங்கடம் ஏற்பட்டதோடு, பெற்றோர் தரப்பிலும் கல்வி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில், முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் அடிப்படையில், போலீஸார் கலாக்ஷேத்ராவின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடிக்கி விட்டனர்.
அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக ஊடகங்களில் முன்கூட்டியே தகவல் பரிமாறப்பட்டதை அடுத்து ஹரிபத்மன் தலைமறைவானார்.

ஊடகங்கள் எப்போதுமே ஒன்றையோன்று முந்திக்கொண்டு செய்தி அளிக்கிறோம் என்ற பெயரில் யூகங்களைக் கூட எதிரிகளுக்கு சாதமாக்கி வேடிக்கை பார்ப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.

போதாக்குறைக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ, அதை செய்யபோகிறோம், இதை செய்யப் போகிறோம் என தகவல்களை போட்டிப்போட்டு கசிய விட்டு தங்களின் பெருமைகளை மாரத்தட்டிக் கொள்வதும் இன்னும் வழக்கத்தில் இருந்து மாறவில்லை.
இதற்கு உதாரணமாக 100 பவுன் கொள்ளை போய், அதில் 10 பவுனை மீட்டால் கூட அதை பிடித்தவர்கள் அந்த குற்றவாளியோடு நின்று நகைகளை வரிசைப்படுத்தி வைத்து, பண நோட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து போஸ் கொடுக்கும் வழக்கத்தை தமிழக காவல்துறை தலைவராவது ஒரு உத்தரவின் மூலம் விட்டொழிக்க வழி செய்ய வேண்டும்.

பெரும்பாலான வழக்குகளில் ஊடகங்களுக்கு சென்று சேரும் செய்தி அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் சென்று சேருவதில்லை என்ற புகார்கள் அடிக்கடி எழுந்து மறைவதையும் காவல்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவல் துறை பார்வைக்கு

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிக்காக ஊதியம் பெறுவோர் அதை விளம்பரப்படுத்தும் போக்கு எல்லா துறைகளிலும் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதையும் ஏனோ காவல்துறையினர் சிந்தித்து பார்க்க தவறிவிடுகிறார்கள்.

துறை ரீதியாக ஒரு அறிக்கையை அளிப்பதன் மூலமே காவல்துறை ஒரு குறிப்பிட்ட வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

உயர் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் தகவல்களை கசியவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கும் வழக்கமும் உருவானால் மட்டுமே குற்றவாளிகள் எளிதில் தப்புவதைத் தடுக்க முடியும். இதை இப்போதாவது தமிழக காவல்துறை உணர வேண்டும்.
அந்த வகையில் ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் எளிதில் காவல் துறை விசாரணையில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். அவ்வகையில் அந்த முயற்சியை ஹரிபத்மன் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தில் எதிரி எல்லா முயற்சிகளையும் செய்து, எதுவும் பலனளிக்காமல் கடைசியில் சரண்டர் ஆகும் வரை காவல்துறையினர் காத்திருக்காமல் இருந்தால் சரி.