திருநாகேஸ்வரம் திருக்கோயில் – ராகு கேது தலம்

குடந்தை ப. சரவணன்

திருநாகேஸ்வரம் கோயில் ராகு, கேது தலமாக விளங்குவதோடு, அது வழிபட வருவோர்க்கு ஆனந்தத்தை அளிக்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது.

ஆன்மிகவாதிகளில் 5 வகை

கடவுளை வணங்குபவர்கள் ஆன்மிகவாதிகளாக இந்த பூவுலகில் கருதப்படுகிறார்கள். இந்த ஆன்மிகவாதிகளில் 5 வகையானவர்கள் உண்டு.

ஆன்மிகவாதிகளில் இறையன்பிற்காக தவமாய் கிடப்பவர்கள் முதல் ரகம். சரீரத்தை விட்டு ஆன்மா பிரியும் காலத்தில் அது முக்தி அடைய வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக வணங்குபவர்கள் இரண்டாவது ரகம்.
தன்னுடைய துன்பத்தை போக்குவதற்காக வேண்டுபவர்கள் மூன்றாவது ரகம். தன்னுடைய ஆசைகளை, கனவுகளை பூர்த்தி செய்ய வேண்டுபவர்கள் நான்காவது ரகம்.
கடவுள் தமக்கு தேவைப்படும்போதோ அல்லது இவர் ஒரு கடவுள் பக்தர் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக வழிபடுவர்கள் கடைசி ரகம். அதுதான் ஐந்தாவது ரகம்.

ஆனந்தம் ஐந்து வகை

அதேபோல் ஐம்புலன்கள் மூலம் கிடைக்கும் நமக்கு ஆனந்தமும் 5 வகையாக இருக்கிறது. ஆனால் இவற்றில் ஒரு புலனுக்கு மட்டும் மனதுக்கு பேரானந்தத்தை தரும் சக்தி உண்டு.

என்ன வாசம், மூக்கை துளைக்கிறதே…. ஆனந்தமாக இருக்கிறது என்று சொல்ல வைக்கும் நாசி.

அடடா.. என்ன மாதிரியான சுவை.. என்று ருசியை பதம் பார்த்து நம்மை திருப்தி அடைய வைக்கும் நாக்கு.

வெப்பத்தில் புழுங்கும்போது, எங்கிருந்தோ நம் உடல் மீது உரசிச் செல்லும் குளிர்ந்த காற்ற உணர வைத்து ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என பாட வைக்கும் தோல்.

இனிய இசையை கேட்கும்போது அதில் லயித்து போக வைத்து ஆனந்தம் தரும் காதுகள்.

மனதுக்கு ரம்மியமான காட்சிகளை பார்த்து ஆனந்தப்பட வைக்கும் கண்கள்

இந்த ஐம்புலன்களில் கண்களுக்கு மட்டும் பேரானந்தத்தை தரும் சக்தி உண்டு.

இறைவா… உன்னை எப்போது காண்பேன்… உன் திருவடி பாதங்களை எப்போது தொழுவேன் என்று சதா சர்வ காலமும் ஏங்கும் பக்தர்களுக்கு பேரானந்தம் தருபவை திருக்கோயில்களில் நடைபெறும் உற்சவர் அலங்காரங்களும், சேவைகளும்தான்.

பேரானந்தம் தரும் உற்சவர் சேவைகள்

திருக்கோயில்களில் நடக்கும் உற்சவ சேவைகளை சிலர் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் பேரானந்தம் இருக்கிறதே… அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அருகில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வையும் தாண்டி மெய்சிலிர்த்து கண்ணில் நீர் வழிகிறதே அதற்கு காரணம் மனம் அடையும் பேரானந்தம்தான்.

திருநாகேஸ்வரம் திருக்கோயில் உற்சவர் சேவை

அத்தகைய பேரானந்தத்தை நீங்களும் அடைய விரும்பினால் அவசியமாக நீங்கள் கும்பகோணத்துக்கு நான் சொல்லும் திருக்கோயில்களுக்கு வந்து அந்த உற்சவர் சேவைகள் கண்டு பாருங்கள்.

குறிப்பாக, கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோவிலுக்கு நீங்கள் வரவேண்டும்.

இத்தலத்துக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 90-ஆவது தலமாக விளங்குகிறது.
காவிரி தென்கரைத் தலங்கள் 127-இல் 27-ஆவது திருத்தலமாக திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் பெயரில் விளங்குகிறது.

பதிகம் பெற்ற தலங்களில் இத்தலம் கிழக்கே இருப்பதால் கீழ்க்கோட்டம் எனப்படுகிறது.

குடந்தை கோயில் கருட சேவை

புராண வரலாறு

ஒருமுறை இந்த பூவுலகைத் தாங்கும் ஆதிசேஷன் பாரம் தாளமுடியாமல் சிவபெருமானிடம் முறையிடுகிறான். இந்த உலகை தாங்கும் சக்தியை தா என்று வேண்டுகிறான்.
சிவபெருமான் பிரளயக் காலத்தில் அமுதக் குடத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் நீ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தால் உனக்கு இந்த பூமியை தாங்கும் சக்தி கிடைக்கும் என்கிறார் சிவபெருமான்.
சிவபெருமானின் கட்டளையை ஏற்ற ஆதிசேஷன், குடந்தையில் அமுதக் குடத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் லிங்கத்தை நிறுவினான். அதற்கு பூஜை செய்தான். ஆயிரம் தலைகளையுடைய அவன் ஒரு தலையில் மட்டுமே பூமியை தாங்கும் சக்தியைப் பெற்றான்.
பிரளயத்தின்போது வில்வம் விழுந்த இந்த இடம் வில்வவனம் என பெயரானது. ஆதிசேஷன் பூஜை செய்ததால் இறைவன் நாகேஸ்வரர் என பெயரிடப்பட்டார் என்பது புராண வரலாறு.

பிரிந்த தம்பதியார் கூடுவர்

இந்த திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருவோருக்கு ராகு, கேது ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருநாகேஸ்வரம் கருவறை மேற்குப்புற தேவகோட்டத்தில் உள்ள உமையொரு பாகனை வழிபாடு செய்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.

திருநாகேஸ்வரம் தலத்துக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. மகா சிவராத்திரி அன்று முதல் காலம் ஆதிசேஷன் வழிபட்ட நாக தோஷ பரிகார தலமாகவும் திருநாகேஸ்வரம் விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களில் நடைபெறும் கருடசேவை போன்று திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறுகிறது.
கருட வாகனத்தில் வேணுகானம் இசைக்கும் ஸ்ரீ வேணுகோபாலர் வீதியுலா திருக்காட்சி உற்சவத்தைக் கண்டு நாம் பேரானந்தம் அடைவது உறுதி.
சிவ வைணவம் இணைந்து அருளும் இத்தலத்தில் ஸ்ரீஹரிஹர தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் ஆண்டுதோறும் விஷ்ணு அம்சமான அருள்மிகு ஸ்ரீவேணுகோபாலசுவாமி கருட வாகனத்தில் கருடசேவை சாதிப்பது மிகச் சிறப்பானது.
இந்த ஆலயத்தில் நடைபெறுவதை போன்று வேறு எந்த சிவாலயங்களிலும் கருடசேவை நடைபெறுவதும் இல்லை.

அப்பர் பெருமான் மனம் உருகிய காட்சி

ஆலயத்தில் உள்ள ஆனந்த சபாபதி சபையில் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் தனது திருக்கரங்களால் தாளமிடுகிறார். ஸ்ரீவேணுகோபால சுவாமி புல்லாங்குழல் வாசிக்கிறார். ஆனந்தமாக திருநடனமாடுகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான். இக்காட்சியைக் கண்ட அப்பர் பெருமான் குடந்தை கீழ்க்கோட்டக் கூத்தனாரே என்று பதிகம் பாடியிருக்கிறார்.

சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கமாகிச்
சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்;
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும் கடல்
நஞ்சம் உண்டு; இருண்ட கண்டர் போலும்;
மன் மலிந்த மணி வரைத் திண் தோளர் போலும்
மலையரையன் மடப் பாவை மணாளர் போலும்;
கொல் மலிந்த மூவிலை வேல் குழகர் போலும்
குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

என்ற பதிகம்தான் இது.

யார் இந்த குடந்த கீழக்கோட்டத்து கூத்தனார்?

இறைவா! நீ அரிய சொற்களால் ஆன நான்கு வேதங்களாக இருக்கிறாய். அந்த வேதங்களுக்கு அரணாக விளங்கும் ஆறு அங்கங்களாகவும் இருக்கிறாய்.

சொற்களையும், சொற்கள் உணர்த்தும் பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாக நீ இருக்கிறாய்.

மடிப்பு மலைகளாய், கற்களால் குவிக்கப்பட்ட இமயத்தில் வாழ்பவன் நீ. பாற்கடலில் இருந்து திரண்ட விஷத்தை உண்டு கண்டத்தில் தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தை உடையவனாய் இருக்கிறாய்.

மலை போன்று வலிமையாக மட்டுமின்றி பேரழகுடைய தோள்களை கொண்டவனாய் இருக்கிறாய்.

மலைக்கு அரசனாய் விளங்கிய இமவானின் மகள் அழகுக்கு இலக்கணமாய் என்றும் இளமை பெற்ற பார்வதியின் மணாளனே.

மூன்று இலைகள் சேர்ந்ததுபோல் அழித்தலுக்கு பயன்படும் சூலத்தை உடையவன் நீ. குடந்தை நகரின் கீழ்க் கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாய் வீற்றிருக்கிறாய் என்பதுதான் இதன் சுருக்க விளக்கம்.

தாயாருக்கு கருட சேவை

அதேபோல், 108 திவ்ய தேசங்களில் தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை விழா நடைபெறும் தலமும் இதுதான்.
அருள்மிகு ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத ஸ்ரீசாரங்கபாணி எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் இந்த கருட சேவை சிறப்பானது.
பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகோமளவல்லித் தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளி கருடசேவை சாதிக்கிறார்.