ஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம்

குடந்தை ப. சரவணன்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் செல்ல வேண்டும்.

இந்த மண்ணுலகம் உள்ள வரை எல்லோருடைய நெஞ்சில் நிலைத்திருக்கும் வண்ணம் கலைகளுக்கு உயிரூட்டியவன் இரண்டாம் ராஜராஜ சோழன்.
அவனுடைய ஆட்சிக் காலம் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த காலம் என்றுகூட சொல்லலாம்.
இவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஐராவதீஸ்வரர் கோயில் கலைகளின் பொக்கிஷமாக உருவெடுத்தது.
உள்ளூரில் அல்லது தமிழகத்தில் இருக்கும் நமக்குத்தான் நம்முடைய கோயில்களின் கலைநுட்பங்களை ரசிப்பதற்கு நேரமோ அதற்கான ஆர்வமோ இல்லை.
ஆனால், இந்த கோயிலில் உள்ள சிற்பங்களின் கலை வடிவத்தைக் காண இன்றைக்கும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வருவதை நாம் நேரில் காணலாம்.

தாள ஓசை தரும் படிகள்

இந்த ஆலய நுழைவாயில் பகுதியில் நந்தி தேவர் மண்டபத்துக்கு அருகே அமைந்திருக்கும் பலி பீடத்தில் ஏறுவதற்கு 10 படிக்கட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு படிக்கட்டுகளாக மட்டுமல்ல, தாள ஓசைகளைகளை தருபவைகளாகவும் இருக்கின்றன.
ஆமாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
இந்த படிகளில் ஒரு கல்லால் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு படியிலும் ஒரு தாள ஓசை நம் காதில் தேனாய் பாய்கிறது.


அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்

ஆலய கொடி மரத்துக்கு அருகே கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். காணக் கிடைக்காத அரிய சிற்பம்.
சூரிய பிரபையுடன் சிவன் ,விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வங்களின் சிரசுகளுடன் கூடிய எட்டு கரங்களுடன் அமைந்திருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

1. கைலாய மலையைத் தூக்கிச் செல்லும் ராவணன், 2. தேவாதி தேவர்கள் மற்றும் உயிரினங்கள் பரமனை நோக்கி வேண்டுதல், 3. ஈசன் தனது திருப்பாத பெருவிரலால் கைலாயத்தை அழுத்தும் காட்சி 4. தான் செய்த தவறை உணர்ந்து அடைக்கலம் வேண்டி வணங்கும் இராவணேஸ்வரன். ( படங்கள் ப. சரவணன்)


மெருகூட்டும் மெருகூட்டிய சிலைகள்

ஐராவதீஸ்வரர் கோயில் ராஜகம்பீர மண்டபத்தில் செப்புச் சிலைகளோ என வியக்கும் வண்ணம் கல்லால் ஆன அதிகார நந்தி, கண்ணப்பர், யோக சரஸ்வதி, மகாலட்சுமி, கங்காதேவி என தெய்வத் திருமேனிகள் மற்றொரு பொக்கிஷம்.
ஐராவதீஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் ஒரு அங்குலம் அளவே உடைய நர்த்தன விநாயகர், அம்மையப்பன், வேழம் (யானை), சிம்மம். தட்சிணாமூர்த்தி, பூதகணங்கள், கஜசம்ஹாரமூர்த்தி ஆகிய சிற்பங்களைக் காண கலைக் கண்கள் கோடி வேண்டும்.

குடந்தை முருகன் கோயிலில் சடாரி

ஈசனின் சிற்பங்கள்

பரம்பொருளான ஈசனின் திருவிளையாடல்களை விளக்கும் ஒரு அடி அளவே உடைய சிற்பங்களுக்கும் பஞ்சமில்லை.

மகிஷனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தினி, ராமாயண காவியக் காட்சிகள் காணக் கிடைக்காதவை.
கிருஷ்ணன் மட்டும் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்த நம் கண்கள், இங்கு சிவபெருமானும் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்து மயங்கும்.
ஆடு, மாடு, யானை, சிங்கம், பன்றி ஆகிய 5 வகையான மிருகங்களின் உடல் பாகங்களைத் தாங்கிய எட்டு யாளித் தூண்களுடன் தேர் போன்று வடிவில் அமைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபமும், அதை இழுத்துச் செல்லும் யானைகள், குதிரைகளின் அற்புத சிற்பங்களும் உங்களை வியக்க வைக்கும்.
திருக்கோயிலின் திருச்சுற்றில் அமைந்திருக்கும் 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாற்றுச் சிற்பங்கள், தென்திசை நோக்கி உள்ள உதயாதி சரபர் பகவானை நரசிம்மர், தேவாதிதேவர்கள், பக்த பிரகலாதன் வணங்கும் சிற்பம் ஆகியவையும் காணத்தக்கவை.

வியப்புக்குரிய சிற்பங்கள்

ஒரே கல்லில் அமைந்த, ஒருமுக தோற்றத்தில் இரு மிருகங்களின் உடல் உருவங்கள் அமைந்திருக்கும் குஞ்சாரக் காளை (யானை மற்றும் காளை) சிற்பமும் நம்மை வியக்க வைக்கும்.
வடக்கு பிரகார திருசுற்று திருமாளிகை பத்தி மண்டபத்தில் மிக நுட்பமாக செதுக்கிய சாளரங்கள், ஆண்,, பெண் முகங்களைத் தாங்கிய யாளி சிற்பங்கள் பார்க்க வேண்டியவை.
சிவ ஆகமங்களை பின்பற்றி நெறியுடன் வாழ்ந்த தேவார பாடல்கள் பாடும் நூற்றியெட்டு பிடாரர்களின் திருஉருவங்களையும் இங்கே சிலைகளாக காணலாம்.
இன்றைக்கு ஒரு கோயிலுக்கு நீண்ட குழல் விளக்கு வாங்கித் தந்தாலும் கூட, அந்த குழல் விளக்கு பட்டையில் அன்பளிப்பாளரின் முகம் தவிர வாழ்க்கை குறிப்பையே பறைசாற்றும் விளம்பரத்தை பார்த்து சலிக்கும் நமக்கு ஒரு வியப்பு காத்திருக்கிறது.
ஆமாம்… பரதநாட்டியக் கலையின் 108 கர்ணங்களைப் படம் பிடித்து காட்டும் நடன மங்கையரின் உயிரோட்டமான புடைப்பு சிற்பங்கள் அந்த சிற்பக் கலைஞனின் கைவண்ணத்தை மட்டுமே நமக்கு காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வியக்காமல் என்ன செய்வது?

யுனெஸ்கோ அங்கீகாரம்

மேற்கட்டி கூரை விதானத்தில் அமைந்துள்ள சதுரம், செவ்வகம், வட்டம் என பல்வேறு வடிவமைப்புகளில் கற்றளி புடைப்பு சிற்பங்கள் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டிருப்பதும் ஐராவதீஸ்வரர் கோயில் சிறப்புகளில் ஒன்று.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஐராவதீஸ்வரர் கோயில் சிற்பங்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது.
மிகவும் பழைமையான , மிக நுட்பமான, சிற்பங்கள் பல தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஐராவதீஸ்வரர் கோயில் நிர்வாகம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த திருக்கோயில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் இந்த திருக்கோயில் காலை 7 முதல் பிற்பகல் 12-30 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.
படித்தவர்கள் பார்க்கத் தவறாதீர்கள். பார்த்தவர்கள் இதன் பெருமையை மற்றவர்களுக்குச் சொல்லத் தவறாதீர்கள்.

தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி திருக்கோயில் தரிசனம்

ஐராவதீஸ்வரர் திருக்கோயில் எங்கிருக்கிறது?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் அமைந்திருக்கும் தாராசுரம் என்ற ஊரில் Airavatheeswarar temple அமைந்திருக்கிறது.

இந்தக் கோயில் எத்தனை ஆண்டுகள் பழைமையானது?

ஐராவதீஸ்வரர் திருக்கோயில் (Airavatheeswarar temple) 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இத்திருக்கோயில் பற்றி ஏதேனும் விரிவான ஆய்வு நூல்கள் உண்டா?

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் – Airavatheeswarar temple (இராசராசேச்சரம்) என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியண் எழுதியிருக்கிறார்.