ஆயிரம் கண்ணுடையாள் பெயர் மாரியம்மனுக்கு ஏன் வந்தது?

குடந்தை ப. சரவணன்

கிராமப்புறங்களில், மாரியம்மன் வழிபாடு முக்கியத்துவமாக கருதப்படும் கடவுளர் வழிபாடுகளில் ஒன்று. இந்நிலையில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையாள் பெயர் எப்படி வந்தது என்பது பற்றிய கட்டுரைத்தான் இது.

முதல் கடவுள் அக்னி

நம் முன்னோர்கள் சூரியனை முதல் கடவுளாகவும், நிலம், நீர், விருட்சம் ஆகியவற்றை பிற கடவுளராகவும் வழிபாடு செய்து வாழ்ந்து வந்தது ஆதி வரலாறு.
உயிர்களின் மூலக்கூறாய் தொலை தூரத்தில் இருந்து ஒளிக்கதிர்களை வீசி காத்து வருவது அக்னி கடவுளான சூரியன்.
இந்த மண்ணில் ஒரு செல் உயிரி தோன்றி மனிதன் வரை பரிணாம வளர்ச்சி கண்டாலும், ஆதிகாலத்தில் தோன்றிய மரங்களும், செடிகளும் இந்த பூமியில் நிலை மாறாமல் நமக்கு பல்வேறு வகையிலும் உதவி வருகின்றன.

அரச மரமும் வேப்ப மரமும்

இவற்றில் முதன்மையானது அரசமரம் – இதை ஆணாக பாவிப்பதுண்டு. வேப்பமரம் – இதை பெண்ணாக பாவிப்பதுண்டு.
இந்த இரு மரங்களும் பல இடங்களில் ஒன்றாக இணைந்து வளரும். அப்படி வளர்ந்த மரங்களுக்கு விருட்சக விவாகம் என அழைக்கப்படும் திருமணம் செய்வது பண்டைகால பழக்க வழக்கங்களில் ஒன்று.
ஏன் இந்த விருட்சங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். நம்பிக்கைதான் காரணம்.
அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் இந்த மரங்களுக்கு கிராம மக்கள் திரண்டு திருமணம் செய்து வைப்பது இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது.
அப்படி திருமணம் செய்து வைத்தால், இளைஞர்கள், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும் என்பதுதான் அந்த நம்பிக்கை.

ஆயிரம் கண்ணுடையாள்

வேப்ப மரம் கிராமத்து தேவதை ஸ்ரீமகா மாரியம்மனின் மறு உருவமாகக் கருதி தமிழர்கள் தொன்றுதொட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
கிராமம்தோறும் கோயில்கள் இருந்து வரும் சூழலில் அவை பெரும்பாலும் மாரியம்மனின் பெயரை தாங்கியதாகத்தான் அமைந்திருக்கும்.
இப்படி வழிபாடு நடத்தப்படும் அம்மன் ஒரு பெயர்தான் ஆயிரம் கண்ணுடையாள் என்பதாகும்.
கிராமப்புறங்களில் வளரும் வேப்ப மரங்களில் இருந்து உதிரும் வேப்பம் பழங்களில் இருந்து வெளிவரும் விதைகள் எல்லாம் மரத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான கன்றுகளாக வளரத் தொடங்கும்.
இதனால்தான் வேப்ப மரத்தை முன்னோர்கள் ஆயிரம் கண்ணுடையாள் என்று பெயர் வைத்து மாரியம்மனாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆதாரங்கள் கிடைக்கவில்லை

வேப்ப மர இலைகளுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு. கடந்த நூற்றாண்டு வரை மனித சமுதாயத்தை பரவலாக அச்சப்படுத்தி வந்த அம்மை நோய்க்கு அருமருந்தாக இந்த வேப்பிலையைத் தான் பயன்படுத்தினார்கள்.
உடல் முழுவதும் முத்து முத்தாக அம்மை பரவியிருக்கும் சூழலில் இந்த வேப்பிலைதான் அந்த புண்களை ஆற்றும் வல்லமைப் படைத்ததாக இருந்து வருகிறது.
ஆனால் இடைப்பட்ட ஆண்டுகளில் ஆயிரம் கண்ணுடையாள் என்பது ஆயிரம் கண்களை உடையவள் என உருவகப்படுத்தி சித்திரங்களை வரைந்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

படங்கள் குடந்தை ப. சரவணன்

இதனால் ஆயிரம் கண்ணுடையாள் என்ற உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவர் என்ற ரீதியில் இப்போதெல்லாம் மாரியம்மன் கோயில்களில் வெள்ளிக் கவசங்கள் மற்றும் அலங்காரங்கள் கண்கள் நிறைந்தவையாக இடம்பெறுகின்றன.

ஆனால் பல நூற்றாண்டுகளாக கடவுளர் சிலைகளையும், சிற்பங்களையும் தாங்கி நிற்கும் திருக்கோயில்களில் மாரியம்மனுக்கு உடல் முழுவதும் கண்கள் இருப்பதுபோன்ற சித்தரிப்பு காட்சிகள் நமக்கு இதுவரை ஆதாரங்களாக கிடைக்கவில்லை.

கடவுளரின் புராண வரலாறுகள் பல செவிவழியாய் காலம் காலமாக இருந்து வரும் சூழலில், ஆயிரம் கண்ணுடையாள் என்பதற்கான புராண வரலாறுகளும் இல்லை.