மகாராஷ்டிரா ஹீட் ஸ்ட்ரோக்: நாட்டை உலுக்கிய சம்பவம்


சென்னை: மகாராஷ்டிரா நவி மும்பை பகுதியில் மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் விழாவில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

திறந்தவெளி மைதானத்தில்,வெயிலில் நீண்ட நேரம் பார்வையாளர்களாக பங்கேற்ற மக்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் இந்த வெப்பத்தால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து நேரிட்டு விடுகிறது. இதைத்தான் மகாராஷ்டிரா சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.

விழா நடைபெற்ற இடத்தில்

வெப்ப அலை வட மாநிலங்களில் வீசத் தொடங்கிய சூழலில், மகாராஷ்டிராவில் ஏப்ரல் 16-ஆம் தேதி நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் விழா நடந்தது.
விழா 306 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீ சதாஸ்யா ஆதரவாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கிறார்கள்.
விழாவி்ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடும் வெயில்

முக்கிய விஐபிகள், உயர் அதிகாரிகள், ஊடகங்கள் போன்றவற்றுக்கு மட்டுமே நிழல் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
விழாவில் பங்கேற்றவர்களில் பலர் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இருந்து நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வந்தவர்கள். இவர்கள் கடும் வெயிலில், பல மணி நேரம் திறந்தவெளி இருக்கையில் காத்திருந்திருந்துள்ளனர்.
நிகழ்ச்சி 11.30 மணிக்கு தொடங்கி ஒரு மணிக்கு நிறைவடைந்துள்ளது. மைதானத்தில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை வீசியுள்ளது.

இதில் 120-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் உயிரிழப்பை சந்தித்தனர்.

அரசியல் கட்சிகளுக்கு பாடம்

சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.
வெப்ப பக்கவாதம், நீர்ச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட பலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
இது மகாராஷ்டிர அரசுக்கு மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாடமாக அமைந்துள்ளது.

அரசியல் கூட்டங்களையும், தேர்தல் நேர பிரசார கூட்டங்களையும் உச்சி வெயிலில் திறந்தவெளியில் மக்களை திரட்டி நடத்தும் அரசியல் தலைவர்கள் பலருக்கும் இயற்கை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலுதவி என்ன

உடலில் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்பு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதில் நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள், வேலை செய்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயக்கம் அடைவது வெப்ப மயக்கம் (Heat Syncope) என அழைக்கப்படுகிறது. இதை பொதுவாக ‘சன் ஸ்ட்ரோக்’ என்றே அழைக்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் தோலில் உள்ள ரத்தக் குழாய்கள் அதிகமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிவகை செய்துவிடுகிறது.

இதனால் இதயத்துக்கு ரத்தம் செல்வதும் குறைந்து விடுகிறது. ரத்தம் அழுத்தம் குறைகிறது. மூளைக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல் போவதால் மயக்கம் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுபவருக்கு அவசர சிகிச்சை அவசியம். இல்லாவிட்டால், மூளை, இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
ஹீட் ஸ்ட்ரோக்கில் ஒருவர் பாதிக்கப்பட்டதை அறிந்தால், உடனடியாக அவரை நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பான்ஞ்ச் நனைத்து அவரது உடல் பாகங்களில் ஒத்தடம் தர வேண்டும்.
குளிர்ந்த காற்று அவர் மீது படச் செய்ய வேண்டும். ஐஸ் பேக் அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த டவல்களை கழுத்து, இடுப்பு, அக்குள் போன்ற இடங்களில் வைக்க வேண்டும்.

காற்றுப்புகாத உடைகளை அவர் அணிந்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மயக்கம் தெளிந்ததும், தண்ணீர், பழச்சாறு, நீர்மோர் போன்றவை கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்புக்கு அந்த நபரை கட்டாயம் உட்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்ப்பது எப்படி?

வெயிலில் வெளியில் செல்லும் நேரங்களில், வெப்பத்தை உள்ளிழுக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது. தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்,
தலையில் நேரடியாக வெயிலின் தாக்கம் ஏற்படுவதைத் தடுக்க குடை பிடித்துக் கொள்வது, தொப்பி அணிந்து செல்வது நல்லது. வெயில் நேரத்தில் தாகம் அதிகரிக்கும் சூழலில் குளிர்ச்சி தரும் பழ வகைகளை சாப்பிடலாம். கண்களை வெப்பம் தாக்குவதைத் தவிர்க்க கூலிங் கிளாஸ் அணியலாம்.

வெயில் நேரத்தில் வெளியில் நீண்ட தூரம் இருசக்கர வாகனங்கள் அல்லது நடந்து செல்பவர்கள் குளிர்ச்சி தரும் பழச்சாறுகளை பருகுவது நல்லது.