கோலாப்பூர் காலணி: காலத்தால் அழியாத கலை

எல். பாலு

சென்னை: கோலாப்பூர் சப்பல் (Kolhapuri chappal). இந்த பெயர் நம்மில் சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் இந்த கோலாப்பூர் காலணி பாரம்பரிய இந்திய காலணி வகையைச் சேர்ந்தவை.

இவை கையால் தயாரிக்கப்படும் செருப்புகள். அத்துடன் இயற்கை சாயங்களைக் கொண்டு வண்ணம் பெற்றவை.
இந்த செருப்புகள் பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.

கோலாபுரி காலணிகள்

இந்த வகை செருப்புகள் 13-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருப்பவை.
தொடக்கத்தில் மகாராஷ்டிரர சமூகத்தினர் கலை மற்றும் கைவினை நுட்பத்துடன் கூடிய இத்தகைய காலணியை அணிந்து வந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் காணப்படும் கடுமையான வெப்பநிலை, மலைப்பாங்கான நிலப்பரப்புகளை சமாளிக்கும் திறன்மிக்கவையாக இவை இருந்ததும் மற்றொரு காரணம்.

அடையாளம் பெற்ற சப்பல்கள்

அக்காலத்தில் இந்த செருப்புகளை கபாஷி, பைதான், கச்சி, பக்கல்நலி, பக்ரி என்றெல்லாம் எந்த கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்டதோ அந்த கிராமங்களின் பெயர்களில் அழைத்து வந்தனர். பின்னாளில் கோலாப்பூர் செருப்புகள் என்ற அடையாளத்தை பெற்றன.

உற்பத்தி

இத்தகைய செருப்புகளை தயாரிப்பதில் பல கட்டங்கள் உண்டு. ஆரம்ப காலத்தில் இந்த செருப்புகள் எருமை தோலில் தயாரிக்கப்பட்டன. இதனால் செருப்புகளின் எடை 2 கிலோ வரையிலும் கூட இருந்திருக்கிறது.
பின்னாளில் தோல் தேர்வில் மேம்பட்ட தொழில்நுட்பம், கட்டிங் முறைகள், தையல் முறை, அலங்கரிப்பு செய்தல், முடித்தல், மெருகூட்டுதல் போன்ற அம்சங்கள் இடம்பெறத் தொடங்கின.
இதனால் நீடித்த உழைப்புடன், பயன்படுத்த மென்மையானவையாகவும், எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் உருவாகத் தொடங்கின.

கூட்டு முயற்சியில் உருவாகும் காலணிகள்

தொடர்ந்து பல கைவினைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த செருப்புகள் நீண்ட நாள் உழைக்கக் கூடிய தகுதியை பெற்றவை.

எடை குறைவாகவும், அலங்காரங்களைக் கொண்டதாகவும் இப்போது இது சந்தைப்படுத்தப்படுகிறது.

கைவினைத் திறன்

பெரும்பாலும் சிக்கலான எம்பிராய்டரி மற்றும் அலங்காரங்களுடன் செய்யப்படும் கைவினைத் திறனை பிரதிபலிக்கும் செருப்புகள் தலைமுறை தலைமுறையாக செய்யப்படுகின்றன.
இவை ஏராளமான கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரமாக இன்றைக்கும் இருந்து வருகிறது.

புவிசார் குறியீடு

தற்போது இந்த செருப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. கோலாப்பூர் பகுதியில் இருந்து உருவான தனித்துவமான தயாரிப்பு என்ற அங்கீகாரத்தை இதன் மூலம் பெற்றிருக்கிறது.
சப்பல் என்ற பெயரில் கோலாப்பூர் செருப்புகளை பல கைவினைஞர்கள் ஒருங்கிணைந்து இத்தொழிலை செய்து வருகிறார்கள். இவை பல்வேறு வண்ணங்களில், பெண்கள் அணியும் வடிவமைப்புடன் பிரான்சுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.