செந்தில் பாலாஜி விவகாரம்: அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதே நல்லது


சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து, செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை விலக்குவது மூலம் தனது முதல்வர் பொறுப்புக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக மற்றும் தோழமைக் கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி


செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்த்த காரணத்தால் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை.
அவரிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோரிடம் பிரித்தளிக்கப்பட்டன.
ஆனாலும், செந்தில்பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதற்கு ஆளுநர் அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தமிழக அமைச்சரவையில் நீடிப்பார் என்று கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நீதிமன்றம் கருத்து


அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது புழல் சிறைச் சாலையில் இருக்கிறார். இந்த சூழலில், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

வழக்கறிஞர் ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அப்போது செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தது.
அதே நேரத்தில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொறுப்பில் இருந்து நீக்குவது நல்லது


தமிழக முதல்வர் அந்தஸ்தில் உள்ள மு.க. ஸ்டாலினுக்கு நாகரிகமான வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதே நல்லது என்பதைத்தான் நீதிமன்றம் இந்த கருத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் பதவியில் இருக்கும் மு.க. ஸ்டாலின், அதன் மாண்பை காத்திடும் வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதே சிறந்தது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிடிவாதத்தை தொடர்வது கட்சிக்கு நல்லதல்ல.

அது அவருக்கும், அவரது கட்சிக்கும் நிச்சயமாக களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அடிமட்டத் தொண்டர்கள் பலரும் ஒரு தனி நபருக்காக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்.

தொடர்ந்து செந்தில் பாலாஜி விவகாரத்தில் காட்டும் பிடிவாதத்தைத் தளர்த்தி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை கட்சித் தொண்டர்கள் மட்டத்தில் இருக்கிறது.