கிடா முட்டு – கல்வெட்டுகளில் பண்டை கால விளையாட்டுக்கான ஆதாரம்

குடந்தை ப. சரவணன்

கிடா முட்டு. இந்த பெயரை சிலர் இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படக் கூடும். பண்டைய வீர விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிய கிடாய்முட்டு விளையாட்டு தற்போது மெல்ல மறைந்து வருகிறது.

கல்வெட்டுகள் தரும் தகவல்

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது. இதன் மூலம் தமிழின் பழமையை நாம் உணர முடிகிறது.

பண்டைய காலம் முதல் இக்காலம் வரையில் அவர்தம் பண்பாட்டு மரபுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன.
முந்தைய காலத்தில், தமிழர்கள் தாம் வாழ்ந்த நிலப்பகுதிகளை அதன் இயற்கை நிலையை ஒட்டி ‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை’ என்று பகுத்தனர்.

இந்த நிலங்களில் அவர்கள் வாழ்வு நிறைவாக இருந்தது. ஐவகை நிலமும் ஒவ்வொரு இனச்சமூகத்தை குறிப்பிடுவதாகும். காடும் காடு சார்ந்த பகுதியும் “முல்லை” என அழைக்கப்படுகிறது.

வாழ்வியல் எச்சம்

திருநெல்வேலி மாவட்டத்தை சூழ்ந்துள்ள வனப்பகுதிகளில் ஆயர்பாடிகளை அமைத்து அரசாண்ட குறுநில மன்னர்களான ஆயர்கள், பாண்டிய மன்னர்களால் உயர்குடி மக்கள் என அழைக்கப்பட்டார்கள்.
இவர்களின் தொழில் ‘கால்நடை மேய்த்தல்’. இவர்களை ஆயர், இடையர், கோவலர், ஆய்ச்சியர், பொதுவர், அண்டர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்.
இவர்களில் எருமைகளை வளர்ப்பவர்கள் ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்கள் ‘கோவினத்தார்’ என அழைக்கப்பட்டார்கள்.

ஆடுகளை வளர்ப்பவர்கள் ‘ஆட்டினத்தார்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
காலம் காலமாகத் தொடரும் முல்லை நில ‘ஆட்டிடையர்கள்’ வாழ்வியலின் எச்சமானது இன்று வரை தமிழகத்தில் மட்டுமின்றி, உலகளாவிய பல்வேறு இடங்களில் தொடர்ந்து பிரதிபலிக்கிறது.
இவர்களின் வாழ்வியல் தேவைகள் 4 வகையாக இருந்தன. வீரியமான பயிர்களின் விதைகளை தேர்வு செய்ய முளைப்பாரி என்னும் முறை.
வீரியமான காளைகளை ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டு மூலம் அறிதல். வீரியமான கோழிகளை தேர்வு செய்ய சண்டைச் சேவல் வளர்ப்பு முறை. வீரியமான ஆடுகளை தேர்வு செய்ய கிடாய் சண்டை.
இவற்றின் மூலம் தரமானவற்றை தேர்வு செய்து அவைகளை பாதுகாத்து வரும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததைத்தான் வரலாற்று சுவடுகள் நமக்கு சொல்கின்றன.
முல்லை நில மக்களுக்கு மனம் தளர்வுற்ற காலங்களில் மகிழ்ச்சி அளித்து வந்தவை போர் முறை விளையாட்டுகளே.

இந்த போர் முறை வீர விளையாட்டுகள்தான் இவர்களின் வீரச்சிறப்பை மேம்படுத்துவதற்குத் தூண்டுகோலாக அமைந்திருந்தன.
சில மன்னர்கள் போரின்போது கிடா படையையும் ஒருசில போர்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கிடா முட்டு

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் அதாவது மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் “கிடா முட்டு” விளையாட்டும் ஒன்று. .
இது தகர்ச் சண்டை அல்லது கிடாக்கட்டு என்னும் ஆட்டுக்கிடாய் சண்டை தமிழர்களின் (ஆயர்களின்) வீர விளையாட்டுகளில் ஒன்றாக விளங்குகிறது.
இவ்விளையாட்டில், குறிப்பாக கமுதி, கம்பம், எட்டயபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைகட்டி கருப்புக் கிடா, ராமநாதபுரம் கண் கருப்புக் கிடா ஆகிய வகைகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவார்கள். இதில் அதிகபட்சம் 50 முட்டல்கள் நடக்கும்.

மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாங்கி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும். இதைத்தான் கிடா முட்டு அல்லது கிடாய் சண்டை என்கிறார்கள்.

கிடாய் முட்டு சிற்பங்கள்

மதுரை மண்டலத்தில் வரலாற்று சிறப்புடைய கிடாய் முட்டு சண்டை நடைபெறும் நிலையில், இது பற்றிய அரிய வகை சிற்பம் தாராசுரத்தில் இருக்கிறது.

தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சிறப்புமிக்க ஆட்சியில் தான், தாராசுரம் ஐராதீஸ்வரர் திருக்கோயில் கலைவடிவத்தோடு உருவானது.
அந்த திருக்கோயில் இன்றைக்கும் பண்டைய தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை தாங்கி நிற்கும் கலைநயமிக்க சிற்பங்களோடு நம்மை வரவேற்கிறது.

இக்கோவிலில் உள்ள கலாச்சாரச் சுவடுகள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் வாயிலாக நாம் தமிழர்களின் வாழ்வியலை அறிய முடிகிறது.