சென்னை ஐஐடி பறக்கும் கார் தயாரிப்பில் மும்முரம்

சென்னை: சென்னை ஐஐடி (Chennai IIT) வானில் பறந்து செல்லும் ட்ரோன் மாதிரியான பறக்கும் கார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி

இந்தியாவில் பறக்கும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதால், இந்தியாவில் வானில் பறக்கும் கார்களை நாம் பார்க்கக் கூடிய வாய்ப்பும், அதில் பறக்கக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

சீனா முன்னேற்றம்

உலக அளவில் முக்கியமான நகர்புறங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் நேரம் அதிகரிக்கிறது.

இதனால் பல்வேறு நாடுகளும் பறக்கும் கார்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனா இதில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

துபாயில் பறக்கும் டாக்சி

சமீபத்தில் கூட சீனாவை சேர்ந்த நிறுவனம் துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தியா உள்பட சில உலக நாடுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடர்ச்சியான புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அதேபோல் புதிய தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐஐடி நிறுவனம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பறக்கும் டாக்சியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த பறக்கும் டாக்சி முழுமையாக மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றால், உலகிலேயே முதல் பறக்கும் டாக்சியாக இதுதான் இருக்கும் என்கிறார்கள் இந்திய தொழில் வல்லுநர்கள்.