கர்நாடகா காங்கிரஸ் கட்சி வெற்றி ரகசியம்!

சென்னை: கர்நாடக மாநில அரசியலில் கர்நாடகா காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி தென்மாநிலங்களில் பாஜக ஆட்சி புரிந்த அந்த ஒற்றை இடத்தை காலி செய்துள்ளது.
இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல, கர்நாடக மாநில மக்களுக்குக் கிடைத்த வெற்றி.

வார்த்தை ஜாலங்களில் வல்லவர் மோடி

காரணம் மத்தியில் ஆட்சிபுரியும் பாஜக அரசு ஒட்டுமொத்த பலத்தையும் கர்நாடக தேர்தலில் பிரயோகம் செய்ததை நாடே அறியும்.

பிரதமர் மோடி எப்போதுமே பேச்சுத் திறனில் வல்லவர். சாதாரண விஷயத்தை பிரம்மாண்டப்படுத்துவதும், பிரம்மாண்ட விஷயத்தை சாதாரண விஷயமாகவும் வார்த்தை ஜாலங்களில் மாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்.

தன்னையோ, தன் கட்சியையோ பாதிக்கும் விஷயங்கள் பற்றி பேசப்பட்டால், அதை கண்டுகொள்ளாமல் செல்லும் அவரது பாணியும் கூட, பல நேரங்களில் அவருக்கு வலிமை சேர்த்து வருவதும் கண்கூடு.

மோடி பிரசாரம்

அப்படிப்பட்ட மோடி கர்நாடக மாநிலத்தில் நடத்திய Road Show மக்களிடத்தில் எடுபடவில்லை. அத்துடன் அதுவே அவர் மீதான வெறுப்புணர்வை அதிகரித்தது என்று கூட சொல்லலாம்.

பிரதமர் மோடியின் பிரசாரம், அவரது நிழலாக விளங்கும் அமித்ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பிரசாரம், திரைப்பட நடத்திரங்களின் பிரசாரம் என களைக்கட்டியது கர்நாடக மாநில பாஜக தேர்தல் பிரசாரம். இது ஒரு வகையில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதுதான்.

இது உண்மையில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்க வேண்டும். ஆனால் அந்த கட்சியின் மாயாஜால வித்தைகள் இம்முறை கர்நாடகத்தில் எடுபடவில்லை என்பது சற்று வருத்தமான விஷயமே.

ராகுல் காந்தியின் ஒற்றை ஒற்றுமை நடை பயணத்துக்கு முன் அவை எடுபடாமல் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் உள்பட.

இன்றைக்கு பெரும்பாலான ஊடகங்கள், பத்திரிகைகள், தொழிலதிபர்கள் செல்வாக்கைப் பெற்ற கட்சியாக, ஆட்சியாக பாஜக அரசு விளங்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, கடந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைப் பட்டியல்களை கணக்கில் கொண்டால், அவற்றில் பெரும்பாலானவை காற்றுபோன பலூன்கள் போன்ற அறிவிப்புகளும், திட்டங்களுமாகவே இருக்கின்றன.

தனியார்மயக் கொள்கை

நாட்டின் வளர்ச்சியை அரசு நிறுவனங்களைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கக் கூடிய போக்கு கடந்த 9 ஆண்டுகளில் மெல்ல மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

மோடி அரசின் தனியார்மயக் கொள்கை மக்களிடமும், மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோரிடமும் அதிருப்தியையே தொடர்ந்து அளித்து வருகிறது.

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஊழல்வாதிகளைக் கொண்டே அரசியல் நடத்தும் போக்கு இன்றைக்கு அதிகரித்துவிட்டது. அதில் பாஜக மட்டும் விதிவிலக்காக அமையவில்லை.

கர்நாடக தேர்தல் உணர்த்தும் பாடம்

நேர்மையான ஆட்சியை தருவதாகச் சொல்லிவிட்டு, நேர்மைக்கு மாறான விஷயங்களில் கவனம் செலுத்துவோரை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தவறானது என்பதை கர்நாடக தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

போதாக்குறைக்கு, சட்டவீரோத நடவடிக்கைளில் ஈடுபடுவோர் பலரும் இன்றைக்கு தங்களின் புகலிடமாக ஆளும் பாஜகவை பயன்படுத்திக் கொள்வது அக்கட்சிக்கு மிகப் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.

இதை அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உணர்ந்திருந்தாலும், மேல்மட்டத் தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை புறக்கணித்தல் அல்லது அந்த மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூலம் தொடர்ந்து பிரச்னைகளை ஆளும் அரசுக்கு ஏற்படுத்துதல், ஜனநாயகத்துக்கு முரணாக அதிகாரத்தை பங்கீடு செய்வதில் மோதல் போக்கை கடைப்பிடித்தல் போன்ற அணுகுமுறை ஆளும் மத்திய பாஜக அரசின் மீதான நம்பகத்தன்மையை மக்களிடம் இழக்கச் செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லும் நல்ல நிர்வாகம், பாரபட்சமற்ற நீதி வழங்கக் கூடிய நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஆளும் அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டுவோரை எதிரிகளாக எண்ணாமல், அதை ஆலோசனையாக கருதக் கூடிய பண்பாடு மிக்க அரசியல் தேவை.

மொழிவாரியாக பல மாநிலங்களாக நாடு பிரிந்திருந்தாலும், இந்தியன் என்ற ஒற்றைச் சொல் இந்திய ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் தூண் என்பதை இதுவரை உணராதவர்கள் இப்போதாவது உணரத் தொடங்க வேண்டும்.

காங்கிரஸ் கர்நாடகத்தில் பெற்ற வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களையும், தலைவர்களின் வாழ்த்துக்களையும் பார்க்கும்போது தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் வெற்றியை அடுத்து வரும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பும் உருவெடுத்துள்ளது.
தொழிலதிபர்கள் எப்போதுமே புத்திசாலிகள். அவர்களை பொருத்தவரை ஆட்சியில் யார் அமர்ந்தால் என்ன, நம்முடைய வளம், தொழில் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலையை கொண்டவர்களாகவே இருப்பர்.

இதுவரை காங்கிரஸை பொருட்படுத்தாத தொழிலதிபர்கள், நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலை மனதில் கொண்டு புத்திசாலித்தனமாக செயல்படுவதற்கு இந்த தேர்தல் வழிவகுத்துள்ளது.
ஒரே ஆட்சி தொடர்ந்து ஒரு மாநிலத்தையோ, ஒரு நாட்டையோ ஆள்வது என்பது சர்வாதிகார பாதைக்கு கொண்டுச் சென்றுவிடும்.

அதனால் ஆட்சி மாற்றங்கள் மாநிலங்கள்தோறும் நடைபெறுவது அவசியம். அதேபோல் மத்திய ஆட்சியிலும் மாற்றம் இருந்தால்தான், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும்.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வரவேற்கத்தக்க ஒன்று.