குடந்தை ப. சரவணன்
மகாபாரதம் மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் ஒரு புராண காவியமாக விளங்குகிறது.
“தேர் ஓட்டி மகன் என்பதாலும், மணிமுடி இல்லை என்பதாலும் உனக்கு வில் போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை”. இப்படிச் சொல்லி மாவீர புருஷர்களான பாண்டவர்கள், கௌரவர்களின் குருநாதர்கள் கொண்ட சபையினர் ஒருவனை
அவமானம் செய்தார்கள்.
அவன்தான் கொடுத்துக் கொடுத்து கை சிவந்த கர்ணன் என்ற புகழின் உச்சியை பின்னாளில் பெற்றவன்.
உள்ளடக்கம்
மாவீரன் கர்ணன்
கர்ணன் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட மாமன்னன் துரியோதனன் தனது அதிகாரத்தில் உள்ள ஒரு நாட்டின் மன்னனாக பதவி தந்து மாவீரன் கர்ணனை அச்சபையினர் முன்னே மணிமுடி சூட்டி மகிழ்ந்தான்.
ஆயுள் விருத்தி தரும் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மகிமை
மகாபாரதம் திரௌபதி சபதம்
திரௌபதி தன் சபதம் நிறைவேறும் வரை தன் சிகையை முடிய மாட்டேன் என்று சொல்கிறாள். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனான மன்னன் ஜயத்ரதன், திரௌபதி மீது ஆசைக் கொண்டு அவளை கடத்தி செல்ல முயற்சி செய்கிறான்.
அதனால், பாண்டவர்கள் அவனைப் பிடித்து இழுத்து வந்து அவனின் தலையில் உள்ள சிகையை ஐந்து சிறு சிறு குடுமிகளாக பிரிக்கிறார்கள்.
பிறகு வெட்டப்பட்டு மற்ற முடிகளை மழித்து அதையே தண்டனையாக வழங்கினார்கள். இது மகாபாரத இதிகாசத்தில் வரும் மணிமுடி, முடி தொடர்பான சில நிகழ்வுகள். இதுதான் மகாபாரதம் போருக்கு வழி வகுக்கிறது.
சிரஞ்சீவிகள்
அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் ஆகிய ஏழு பேரும் சிரஞ்சிவிகள் ஆவர்.
மகாபாரத காவியத்தில் உலா வரும் ஒருவன் தான் இந்த சிகை இழந்த சிரஞ்சீவி அஸ்வத்தாமன். இவனே மாவீரர் துரோணரின் மகன்.
கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. அந்த போரின் 17-ஆம் நாள் போர்க் களத்திலுள்ள பாசறையில் துரியோதனன் பீமனால் தாக்கப்படுகிறான்.
கால்கள் உடைந்துபோனதால், உடல் வலியும், மனவலியும் அவனை துன்பத்தில் துடிக்க வைத்தது. அப்போது அவனை துரோணர் மகன் அஸ்வத்தாமன் சந்திக்கிறான்.
அப்போது அவன், தங்களை இந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை, எனது தந்தையை கொன்றவர்களை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று சொல்லிச் செல்கிறான்.
அன்றைய நள்ளிவு நேரத்தில், பாண்டவர்களின் பாசறைக்குள் ஒரு கள்வனைப் போல் நுழைகிறான். அங்கு பாண்டவர்கள் போல் தோற்றம் கொண்ட உபபாண்டவர்கள் ஐவரும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
அவர்களை பாண்டவர்கள் என நினைத்து அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினான் அஸ்வத்தாமன்.
வெட்டியத் தலைகளை எடுத்து வந்து துரியோதனின் காலடியில் வைத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகச் சொல்கிறான்.
இதைக் கண்ட துரியோதனன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். நேர்மையான முறையில் நீ போரில் இதை செய்திருந்தால் நன்று.
ஆனால் நீ அவர்களை தூங்கும் போது வஞ்சகமாக வெட்டி வீழ்த்தியது யுத்த தர்மத்துக்கு எதிரானது. அதற்கான தண்டனையை நீ அடைவாய் என்று நிந்தித்து திருப்பி அனுப்பினான்.
உபபாண்டவர்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. இதைக் கண்ட அர்ஜுனன் அஸ்வத்தாமானின் ஈனச் செயலுக்காக அவனது சிரசைக் கொய்து உங்களின் காலடியில் வைக்கிறேன் என சூளுரைக்கிறான்.
அதைத் தொடர்ந்து அவன் ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட்டு சிறைப்பிடித்து வந்து திரௌபதி முன் நிறுத்துகிறான்.
மன்னிப்பும், தண்டனையும்
தலைக்குனிந்து நின்ற அஸ்வத்தாமனின் அவல நிலையைப் பார்த்த திரௌபதி மனம் இறங்கி இவன் தங்களின் குருவின் புதல்வர். புதல்வர்களை இழந்து தவிக்கும் என் மனவேதனை இவனின் தாயாருக்கு வர வேண்டாம். அதனால் இவனை மன்னித்து விடலாம் என்கிறாள் திரௌபதி.
அவளுடைய கருத்தை தருமர் உள்பட அனைவருமே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், பீமசேனன் மட்டும் இதை ஏற்கவில்லை.
பல உயிர்களை வஞ்சகமாக கொன்றவனின் உயிரை எடுத்தாக வேண்டும் என உறுதியாக சொல்கிறான். இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணர் ஒரு கருத்தை இப்படி சொல்கிறார்.
“ஒருவனின் மானத்திற்கு சமமாக கருதப்படுவது உயிர், அந்த உயிருக்கு சமமாக கருதப்படுவது தலையில் உள்ள சிகை (முடி). அதனால் அஸ்வத்தாமனின் உயிரை எடுப்பதற்கு பதில் அவனுடைய சிகையை எடுப்பது உயிரை பறிப்பதற்கு சமம்”
என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதன்படி, மரணமே இல்லாத சிரஞ்சீவியான அஸ்வத்தாமனின் உயிருக்கும், மானத்திற்கும் சமமான சிகை முடியையும், அதனுடன் சேரத்து ரத்தினத்தையும் வாளால் வெட்டி திரௌபதி காலடியில் சமர்ப்பிக்கிறான் அர்ஜுனன்.
சிரஞ்சீவி என்றாலும் தவறு செய்தால் இறைவன் சபையில் மரணத்திற்கு நிகரான தண்டனை உண்டு. இதை உலகுக்கு உணர்த்தவே, கிருஷ்ண பகவான் நடத்திய லீலையே இது.
இதனால்தான் இன்றைக்கும், ஒருசில ஊர்களில் மன்னிக்கக் கூடிய குற்றங்களுக்காக, தவறு செய்தவர்களைத் தண்டிக்க, மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தும் வழக்கம் இருக்கிறது. அத்துடன் கழுதை மீது ஏற்றி ஊரை சுற்றி வரச் செய்வதை மிகப்பெரும் தண்டனையாகக் கருதி செய்கிறார்கள்.