முகுந்த் வரதராஜன் ஸ்டோரி அமரன் படத்தில் எப்படி மாறியிருக்கிறது?

நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரன் முகுந்த் வரதராஜன் ஸ்டோரி அமரன் திரைப்படத்தில் ஒருசில மாற்றங்களுடன் வந்திருக்கிறது.

திரைபக்கதை சுவாரஸ்யத்துக்காக நிஜக் கதையில் இருந்து எந்தெந்த காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் எவை என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

அமரன் திரைப்படம்

ஒரு வீரன் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்களையும், போர்முனையில் சந்தித்த சவால்களையும் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது அமரன் திரைப்படம்.

இது ஒரு ஆவணப்படமாக அமையாமல், திரைப்படங்களுக்கே உரிய பல கலவைகளுடன் வெகுஜன மக்கள் ரசித்து பார்க்கும் வகையில் வெளி வந்திருப்பது பாராட்டுக்குரியது.

4 சண்டைக் காட்சிகள், 4 பாடல்கள் அதில் ஒரு குத்துப்பாட்டு என்ற ஸ்டைலில் இன்றைக்கு பெரும்பாலான படங்கள் மக்களை சென்றடைந்து வருவது கண்கூடு.

இப்படிப்பட்ட சூழலில், நல்ல திரைப்படங்கள் எப்போதாவது மக்கள் அனைவரையும் சென்றடைவது உண்டு. அத்தகைய படங்களில் ஒன்றுதான் அமரன் திரைப்படம்.

இத்திரைப்படத்தை எடுப்பதற்கு ஆர்வம் காட்டிய கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி ஃபிலிம், படத்தை எடுக்க பெருமுயற்சியை எடுத்துக் கொண்ட இயக்குநர் குழு, நடிகர்கள் சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை மக்கள் அளித்து வருகிறார்கள்.

இந்திய சுதந்திரப் போர் தொடங்கி இன்றைக்கு நாட்டின் எல்லையை காக்க உயிர் கொடுத்து வருபவர்கள் என கணக்கில் அடங்காதவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதன் மூலமே நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த முடியும்.

அப்படிப்பட்ட ஒரு வீரனை இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்துக்கு பெருமை சேர்த்திருப்பதோடு, 10 ஆண்டுகளுக்கு முன் மறைந்த முகுந்த் வரதராஜனை இன்றைக்கு மக்கள் நினைவுபடுத்தி போற்றுவது உண்மையின் அந்த வீரன் இன்றைக்கு உயிர்த்தெழுந்ததுபோல் இருக்கிறது.

போர் முனையில் முகுந்த் வரதராஜன்

2014-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ராஷ்டிரீய ரைபில் படையின் மேஜர் முகுந்தின் 44 ஆர்ஆர் (RR J & K) காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டது.

அந்த பிரிவை தலைமை தாங்கி நடத்திய மேஜர் முகுந்த் வரதராஜன், அந்த மாவட்டத்தில் ஊடுருவல்காரர்களை ஒடுக்குவதை சவாலாக ஏற்று களத்தில் இறங்கியிருக்கிறார்.

பட்டாலியன் கமாண்டிங் அதிகாரியாக அப்போது இருந்தவர் கர்னல் அமித் சிங் தபாஸ். அவரது தலைமையகம் சோபியான் ஆப்பிள் நகரை அடுத்துள்ள ஜவோரோமன்லோ பகுதியில் இருந்தது.

இதனால் மேஜர் முகுந்த் வரதராஜன், களத்தில் வன்முறையாளர்களையும், தீவிரவாதிகளையும் ஒடுக்குவதில் எத்தகைய முனைப்பு காட்டுகிறார் என்பதை கர்னல் அமித் சிங் தபாஸ் நன்கு அறிந்திருந்தார்.

காஷ்மீரில் 2014-இல் தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், அப்பகுதியில் தீவிரவாதிகள் மக்களை பிரிவினைவாதத்துக்கு தூண்டியதோடு, அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி பல இடையூறுகளை ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒரு நாள் 3 தீவிரவாதிகளின் தாக்குதலில் ஒரு தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டார். 5 பேர் காயம் அடைந்தார்கள். இந்த நிலையில் அவர்களை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டது.

அவர்கள் மூவரும் சோபியான் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியான காசிபத்ரி கிராமத்தில் பதுங்கியிருப்பது தெரியவருகிறது.

அதையடுத்து தகவல் கிடைத்த அரை மணி நேரத்தில் – 2014 ஏப்ரல் 25-ஆம் தேதி அந்த இடத்துக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பிரிவான RR 44 படைப் பிரிவு சென்றடைந்தது.

ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டரான தீவிரவாதி அல்தாப் வானி உள்பட 3 பேர் இரண்டுக்கு மாடி வீடு ஒன்றில் தலைமறைவாக இருப்பதை அறிந்து அப்பகுதியை படைப் பிரிவினர் சுற்றி வளைத்தார்கள்.

இந்த கட்டடத்தின் முன்புறம் ஒரு பழத் தோட்டம், அத்துடன் இரண்டு அவுட் ஹவுஸ்களுடன் கூடிய விசாலமான வளாகத்தில் இருந்தது. இந்த இடத்தில் இருந்து தூரத்தில் வருபவர்களைக் கூட கண்காணிக்க முடியும்.

முதலில் இக்கட்டடத்தை முகுந்த் வரதராஜன் தலைமையில் சென்ற படை வீரர்கள் தூரத்தில் சுற்றி வளைத்து நின்றார்கள்.


ராணுவ வீரர்களைக் கண்ட தீவிரவாதிகள் வீட்டினுள் மறைந்திருந்து சரமாரியாக துப்பாக்கி குண்டுகளை பொழியத் தொடங்கினார்கள். சுமார் ஒரு மணி நேரம் இருதரப்பிலும் துப்பாக்கி மழை பொழிந்தது.

மாலை நேரமாக அது இருந்தது. அதனால் இருட்டும் வரை சமாளித்துவிட்டால், இருட்டில் எளிதாக தப்பிவிடலாம் என்பது தீவிரவாதிகளின் திட்டம்.

அதே நேரத்தில் முகுந்த் வரதராஜன், இருட்டுவதற்குள் அவர்களை ஒன்று பிடிப்பது அல்லது கொல்வதுதான் நல்லது. இல்லாவிட்டால் தப்பிவிடுவார்கள் என்பதை உள்ளூர உணர்ந்தார்.

இதனால் துணிச்சலாக ஒரு முடிவை அவர் எடுத்தார். அவருக்கு துணையாக அவருடன் சிப்பாய்களில் ஒருவரான விக்ரம் சிங் செல்கிறார். இருவரும் பழத்தோட்டத்தில் தவழ்ந்து மெல்ல வீட்டின் முன்புறத்தை அடைகிறார்கள்.

வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திடீரென உள்ளே புகுந்த இருவரும் அதிரடி தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

அப்போது தீவிரவாதி ஒருவனை தன்னுடைய கையெறி குண்டை வீசி முகுந்த் வரதாராஜன் கொன்றுவிடுகிறார்.

அல்தாப் வானியும் மற்றொரு தீவிரவாதியும் அவுட் ஹவுஸ் நோக்கி ஓடுகிறார்கள். அவர்களை துரத்திச் சென்றபோது தீவிரவாதிகள் சுட்டத்தில், விக்ரம் சிங் மீது இரு குண்டுகள் பாய்ந்து உயிரிழக்கிறார்.

இதைக் கண்டு வெகுண்டெழுந்த முகுந்த் வரதராஜன், தன் உயிரை பொருட்படுத்தாது அவர்களை தொடர்ந்து விரட்டிச் சென்று ஏகே 47 துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார். அதில் அந்த இரு தீவிரவாதிகளும் கொல்லப்படுகிறார்கள்.

அப்போதைய அதிரடி தாக்குதலின்போது, முகுந்த் வரதராஜன் மீதும் இரு இடங்களில் குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. வெற்றி வீரனாக கட்டடத்தினுள் இருந்து வெளியே வந்த அவர் வீரர்களை நோக்கி வெற்றி முத்திரை காட்டி கீழே விழுகிறார்.

அருகில் அவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோதுதான், அவர் குண்டு காயங்களால் மயங்கி விழுந்தது தெரியவருகிறது.

உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

சினிமாக் கதைகளில் வருவதுபோல நிஜ வாழ்க்கையில் ஒரு மாவீரன் சாதித்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவுகிறது. நாடே அவனுடைய வீரத்திற்கு தலை வணங்கியது. மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணத்தை எட்டியபோது வயது 31.

முகுந்த் வரதராஜன் நீண்ட நாள் காதலித்து மணந்த இந்து ரேபேக்கா வர்கீஸ் மற்றும் 3 வயது பெண் குழந்தை ஆகியவை விட்டு பிரிய மணமில்லாமல் அந்த உயிர் பிரிந்தது.

முகுந்த் வரதராஜன் உயிர் பிரியும்போது, தயவுசெய்து என் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான்.

முகுந்த் வரதராஜன் கல்லூரி காதல்

கல்லூரி பருவத்தில் நட்பாக பழகி காதலாக மலர்ந்து, முகுந்த் ராணுவத்தில் பணியாற்றத் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்துடன் போராடி அவரின் கரத்தை பற்றியவர்தான் இந்து ரேபேக்கா வர்கீஸ்.

உண்மையில், முகுந்த் வரதராஜனின் தந்தை இந்து அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர். பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்து வந்த அவர் கிழக்கு தாம்பரத்தில் பின்னாளில் வசிக்கத் தொடங்கினார்.

வரதராஜன், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்தபோது 1983 ஏப்ரல் 12-ஆம் தேதி பிறந்தவர்தான் முகுந்த். இவருக்கு 2 மூத்த சகோதரிகள் உண்டு.

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்த முகுந்த் வரதராஜன், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இதழியலில் பட்டயப் படிப்பை தொடர்ந்தார்.

அப்போது அதே கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்து ரெபேக்கா வர்கீஸ் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் முதுகலை படிக்க வந்திருக்கிறார்.

முகுந்த் வரதராஜனும், இந்துவும் முதலில் நல்ல நண்பர்களாக பழகியிருக்கிறார்கள். இவர்களின் நட்பு பிறகு காதலாக மாறியிருக்கிறது.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதல் திருமண வாழ்க்கையில் முடியுமா என்ற சந்தேகத்தோடுதான் காலத்தை கடத்தியிருக்கிறார்கள்.

முகுந்த் வரதராஜன் சற்று முரட்டுத்தனமானவராக தெரிந்தாலும், மென்மையான உள்ளமும், சிறந்த மனிதாபிமானியாகவும் இருந்ததால் அவரிடம் இந்து ரேபேக்கா வர்கீஸுக்கு ஈடுபாடு வந்திருக்கிறது.

ராணுவத்தில் வேலைவாய்ப்பு

முகுந்த் வரதராஜனின் உறவினர்கள் சிலர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்ததால் அவர் தானும் ஒரு ராணுவ வீரனாக வர வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அவரது விருப்பம் விரைவில் நிறைவேறியிருக்கிறது.

ராணுவத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைத்து சென்னை ஆபிசர்ஸ் டிரைனிங் அகாதெமியில் சேர்ந்தார்.

பயிற்சி காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பார்வையாளர்கள் முகுந்த் வரதராஜனை சந்திக்க முடியும். அந்த நேரங்களில் எல்லாம் முகுந்த் வரதராஜனை காண மணிக்கணக்கில் இந்து ரேபேக்கா வர்கீஸ் லாபியில் காத்திருந்திருக்கிறார்.

சென்னை ஆபிசர்ஸ் டிரைனிங் அகாதெமியில் பயிற்சியை நிறைவு செய்த முகுந்த் 2006-ஆம் ஆண்டில் லெப்டினென்டாக 22-ஆவது ராஜ்புத் ரெஜிமென்டில் இணைந்தார்.
காதலியை மணந்தார் முகுந்த்.

முகுந்த்தின் பெற்றோர் இந்து ரெபேகா வர்கீஸை ஏற்கக் கூடிய மனநிலைக்கு வந்திருந்த நிலையில், இந்து ரெபேகா வர்கீஸ் குடும்பத்தினர் முகுந்த் வரதராஜனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை.

இதற்கு மதம் தடையாக இல்லை. அவர் ஒரு ராணுவ வீரர் என்பதுதான் தடை. மகளின் பாதுகாப்பான வாழ்க்கையைக் கருதி முகுந்த் வரதராஜனை மணப்பதற்கு சம்மதிக்கவில்லை.

தொடர்ந்து முகுந்த் வரதராஜன் அந்த குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசி இறுதியாக அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இருவரின் திருமணம் முதலில் தேவாலயத்திலும் அடுத்து இந்து முறைப்படியும் நடத்தப்பட்டிருக்கிறது.

பெண் குழந்தை பிறந்தது

இவர்களுக்கு 2011-இல் பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு 5 ஆண்டுகளே உயிருடன் இருந்த முகுந்த் வரதராஜன் தம்பதியர் ஒன்றாக இருந்தது ஒருசில மாதங்கள்தான்.

இடைப்பட்ட காலத்தில் அவர், மத்திய பிரதேசத்தின் மோவில் உள்ள காலாட்படை பள்ளி, ஐக்கிய நாடுகள் சபையின் படையில் இந்தியா சார்பில் லெபானில் பணி என பல நிலைகளைக் கடந்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு குறுகிய காலத்தில் மேஜர் அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

மேஜர் அந்தஸ்தை பெற்ற அவர் 2012- டிசம்பரில் ராஷ்ட்ரிய ரைஃபிள்சில் இணைக்கப்பட்டார். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 44 ஆர்ஆர் படைக்கு தலைமை தாங்கி தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்படி 3 தீவிரவாதிகளை கொன்ற சம்பவத்தின்போதுதான் துப்பாக்கி குண்டு பாய்ந்து வீரமரணடைந்தார் முகுந்த் வரதராஜன்.

துயரத்தை சந்தித்த குடும்பத்தினர்

தீவிரவாத தாக்குதலில் பலியாவதற்கு சில நாள்கள் முன்பு முகுந்த் வரதராஜனின் 31-ஆவது பிறந்த நாள் வந்தது. அப்போது தந்தை வரதராஜன் வாட்ஸ்அப் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை மகனுக்கு அனுப்பி வைத்தார்.

அதற்கு பதில் தெரிந்த முகுந்த் வரதராஜன், தான் மே முதல் வாரத்தில் 10 நாள் விடுமுறையில் ஊருக்கு வரவிருப்பதாகவும், அம்மாவிடம் இப்போது சொல்ல வேண்டாம். திடீரென வந்து அவரை ஆச்சரியப்படுத்துகிறேன் என்று பதிவிட்டிருந்தாராம்.

ஆனால் அந்த நாள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு உயிரற்ற உடலாய்தான் முகுந்த் வரதராஜன் அடைந்தார்.

திரைப்படத்தில் என்ன மாற்றம்?

அமரன் திரைப்படத்தில் திரைப்படத்திற்கே உரிய விறுவிறுப்புடன் காட்சிகளை நகர்த்துவதற்காக சில சம்பவங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய வருகையை ரகசியமாக வைக்க தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவல் கதையில் தன்னுடைய மனைவிக்கு சர்ப்பிரைஸ் தருவதுபோல் மாற்றப்பட்டிருக்கிறது.

முகுந்த் வரதராஜன் அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதை திரைப்படத்தில் வெளிப்படையாக காட்டவில்லை. ஆனால் தந்தையை அவர் பல நேரங்களில் செல்லமாக நைனா என்றுதான் அழைப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதேபோன்றுதான் சில விஷயங்களை காட்சியின் சுவாரஸ்யத்துக்காக மாற்றப்பட்டிருப்பதை காண முடிகிறது.

அதனால்தான் இத்திரைப்படம் ஒரு ஆவணப்படமாக இல்லாமல் மக்கள் பார்த்து ரசிக்கும்படியான ஒரு காதல் மற்றும் சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கிறது.

ஒரு வீரனை உயிர்ப்பித்த திரைப்படம்

முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை தாங்கிய அமரன் திரைப்படத்தை இயக்குநர் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இயக்கியிருப்பதை பார்க்க முடிகிறது.

பின்னணி இசையும் போர்க்களத்தில் நாமும் ஒருவராக நின்று பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக சிவ கார்த்திகேயனும், சாய் பல்லவியும் பாத்திரங்களின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

திரைப்படத்தின் முடிவு இதுதான் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் படத்தை இறுதிக் காட்சி வரை குடும்பத்தோடு அமர்ந்து பார்த்துவிட்டு, ஆழ்ந்த சோகத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

ராணுவப் பணி ஒன்றும் அலுவலகப் பணி அல்ல. ஆபத்தான பணி என்பதை உணர்ந்து அதை ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவன் ஏற்றுக்கொண்டு, வழக்கமாக எல்லா குடும்பங்களிலும் உள்ள பந்த பாசங்களில் சிக்கித் தவித்து வரும் வேளையில், கடமை உணர்வுடன் நாட்டுக்காக உயிர்நீத்த ஒரு வீரனின் அர்ப்பணிப்பு உணர்வை அழகாக இத்திரைப்படம் படம் பிடித்து காட்சி இருக்கிறது.

எல்லா பெற்றோருமே, தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்று நினைப்பதுதான்.

அப்படிப்பட்ட பெற்றோர், நாட்டுக்காக ஒரு வீரனை போர்க்களத்துக்கு அனுப்பி, அவனுடைய உயிரற்ற சடலம் திரும்பி வந்தபோது அதைத் தாங்கிக் கொண்டு தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்வதையும், அவனுடைய நினைவுகளை சுமந்து மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் மனைவியையும் இத்திரைப்படம் பெருமைப்படுத்தியிருக்கிறது.

நடிகர் விஜய் நடத்திய அரசியல் மாநாட்டில் செய்த பெரிய தவறு என்ன?

நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு நல்லதா? கெட்டதா?