துறவறம் என்றால் என்ன? இல்லறத்தில் ஈடுபாடு காட்டுபவர் உடனடியாக துறவறம் மேற்கொள்வது எளிதா? என்பதோடு இதனோடு தொடர்புடைய “தலைப்பட்டார் தீரத் துறந்தார்” என்ற குறளுக்கான பொருள் விளக்கமும் இதில் இடம்பெறுகிறது.
உள்ளடக்கம்
நீண்ட நாளைய நண்பர் வருகை
மோகன்லாலை வாங்க, வாங்க என அழைத்தார் தர்ம நாதர்.
தர்ம நாதரை பார்த்து கைக்கூப்பி வணக்கம் செலுத்திய மோகன்லால்… நீண்ட நாள் ஆச்சு… நலமா?என்றார்.
எல்லோரும் நலம்தான். உட்காருங்க.. என்று தனக்கு எதிரே இருக்கும் நாற்காலியை சுட்டிக் காட்டினார் தர்ம நாதர்.
துணைவியார் நலமா… எங்கே… உங்கள் சுட்டிப் பேரன் ஆனந்தன்.. பேத்தி தீபா.. என்றபடியே தர்ம நாதர் கையில் ஆப்பிள், ஆரஞ்சு அடங்கிய பையை கொடுத்தார் மோகன்லால்.
பையை வாங்கியபடியே… ரெண்டு பேரும் முதல் பருவத் தேர்வு முடிஞ்சதும், லீவு விட்டதாலே.. உறவினர் வீட்டுக்கு போயிருக்காங்க… இன்னும் 2 நாள்லே வந்துடுவாங்க… என்றார் தர்ம நாதர்.
உபசரிப்பு
என்ன சாப்பிடுறீங்க… என்று கேட்டபடியே தர்ம நாதர் துணைவியார் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் மோகன்லாலிடம்.
அதை வாங்கி சிறிது குடித்துவிட்டு அருகில் வைத்த மோகன்லால், இப்போதைக்கு ஒண்ணும் வேண்டாம்… சிறிது நேரம் கழித்து மோர் கொடுங்க போதும் என்றார் மோகன்லால்.
பேசிக்கிட்டிருங்க… இதோ வந்துட்டேன் என்று உள்ளே சென்றாள் தர்ம நாதரின் மனைவி.
தர்ம நாதரும், மோகன்லாலும் நீண்ட நாள் விஷயங்களை சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
திருக்குறள் புத்தகம் மீது விழுந்த பார்வை
அப்போது, தரும நாதர் மேஜையில் இருந்த திருக்குறள் புத்தகத்தை பார்த்த மோகன்லால், அதை எடுத்து சில பக்கங்களை புரட்டிக் கொண்டே..
என் பேரன் சில நாளைக்கு முன் தலைப்பட்டார்… என்று ஒரு திருக்குறளை படித்து விளக்கம் கேட்டான்.
எனக்கு பொருள் புரியவில்லை. இதில் அதற்கான விளக்கம் இருக்கிறதா? என்றபடியே மீண்டும் சில பக்கங்களை புரட்டினார் மோகன்லால்.
தர்ம நாதர் திருக்குறளை கரைத்து குடித்தவராயிற்றே… சும்மா விடுவாரா என்ன?
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
(குறள் – 348)
என்னும் குறளை நீங்கள் கேட்கிறீர்கள்.
துறவறம்
திருக்குறளின் 35-ஆவது அதிகாரத்தில் இக்குறள் வருகிறது. இந்த குறளின் பொருள் புறப்பற்று, அகப்பற்று உள்ளிட்ட அனைத்தையும் துறந்த துறவறம் கொண்டவர்களே மேலான நிலையினர் ஆவர்.
அவ்வாறு முற்றிலும் பற்றை துறக்காதவர்கள், அறியாமை ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் ஆவர் என்பதாகும்.
இளவயதில் துறவு மேற்கொண்ட இளவரசன்
இந்த குறளை நினைவில் வைத்துக் கொள்வதற்கு துறவறம் பற்றிய ஒரு கதைக் கூட சொல்கிறேன் கேளுங்கள் என்று பீடிகை போட்டார் தர்ம நாதர்.
சொல்லுங்க… சொல்லுங்க.. என்று மோகன்லால் ஆர்வத்தோடு கேட்டக் தொடங்கினார்.
மகத தேசத்தை சிரேணிகன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்தரசி சேலினி. இவர்களுடைய ஒரே புத்திரன் பாரீசன். எதிர்காலத்தில் இளவரசன் பட்டத்துக்கு வர வேண்டிய அவர் சுகபோக வாழ்வை துறந்து இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்டார்.
அவரது இளம் வயது துறவறம், அரசத் தம்பதிக்கு கவலையை அளித்தது. இருப்பினும் இறைவனின் விருப்பம் அதுவே என்பதால் மகனின் துறவறத்தை அனுமதித்தார்கள்.
துறவறம் பூண்ட பாரீசன், பல நாடுகளுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து மகத தேசத்துக்கு திரும்பினார்.
துறவியாக ஆசைப்பட்ட நண்பன்
அப்போது தன்னுடன் குருகுலத்தில் படித்த பழைய நண்பனை காண நேரிடுகிறது. அவனுடைய பெயர் புட்படாலன்.
புட்படாலன் தன்னுடைய இல்லத்துக்கு வந்து சில நாள்கள் தங்கும்படி வேண்டுகிறான். அவனுடைய விருப்பப்படி பாரீசன் சென்று தங்குகிறார்.
அவருடைய போதனைகளையும் சில நாள்கள் கேட்ட நிலையிலேயே, தானும் அவரைப் போல் துறவறம் பூணுவது என முடிவு செய்தான்.
ஒரு நாள் தன்னுடைய அன்னிய தேசங்களுக்கான பயணத்தை தொடர பாரீசன் முற்படுகிறார்.
அப்போது அவரிடம் புட்படாலன் தன்னுடைய விருப்பத்தைச் சொல்கிறான்.
துறவறம் ஏதோ ஆடைகளில் ஏற்படும் மாற்றம் அல்ல. உள்ளத்திலும், உணர்விலும், ஏன் உடலிலும் மாற்றத்தை காண வேண்டிய உன்னதமான விஷயம்.
இல்லறத்தில் ஈடுபாடு கொண்டுள்ள நீ, அதை விட்டு வெளியில் வருவது கடினம். நீ அந்த இல்லற வாழ்க்கையின் ருசியை அனுபவித்தவன் என்பதால் அது சற்று கடினம். எதற்கும் ஒரு வாரகாலம் அவகாசம் தருகிறேன். யோசித்து முடிவு என்று சொல்லிவிட்டு அடுத்த தேசம் நோக்கி பயணித்தார் பாரீசன்.
சில நாள்கள் பயணத்தை அடுத்து ஒரு நகரத்தையொட்டி காட்டுப் பாதையில் உள்ள குடிலில் தங்கி தவம் செய்யத் தொடங்கினார்.
அப்போது அவர் முன் புட்படாலன் வந்து நின்று, நான் முடிவு செய்துவிட்டேன். உங்களை குருவாக ஏற்று துறவியாகிறேன் என்றான்.
புட்படாலன் துறவு நிலையில் சந்தித்த சங்கடம்
லேசான புன்னகையை பூத்த பாரீசன், சரி… உன்னுடைய வழக்கமான ஆடைகளை துறந்து, துறவறத்துக்கே உள்ள ஆடைகளை உடுத்திக் கொள் என்று சொல்லிய அவர் தன்னுடைய நடவடிக்கைகள் இனி பின்பற்று என்று சொல்லி தியானத்தில் ஆழ்ந்தார்.
மறுநாள் அதிகாலை துறவி பாரீசன் எழுந்து தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். பாரீசனும் எழுந்து அந்த பனிப்பொழிவு வேலையில் தியானத்தில் அமர்ந்தபோது அவனுடைய உடல் இடம் கொடுக்கவில்லை. குளிரில் நடுங்கியது.
அன்றைக்கு உபதேசம் செய்த பாரீசன், நீ உன் உடலின் மீது பற்று வைத்திருக்கிறாய். அதனால்தான் அது குளிரை தாங்கத் தயாராக இல்லை. உன் உடல் மீதான நாட்டத்தை விட்டு ஞானத்தை பெறுவதற்கான வழியை நோக்கி உன் மனதை செலுத்து என்று அறிவுறுத்தினார்.
அவருடைய அறிவுரையை பின்பற்றி அவன் நடப்பதற்கு சில வாரங்கள் ஆகின. ஒருவழியாக அவனுடைய உடல் கடும் குளிரையும் தாங்கும் சக்தியை மெல்ல பெற்றது.
சலனத்தில் புட்படாலன்
இப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் நாம் சந்திக்க வேண்டியது தேவைதானா… துறவு வாழ்க்கைக்கு நாம் அவசரப்பட்டு விட்டோமோ…
என்னுடைய மனைவி அங்கே எப்படி தனித்து வாழ்வாளோ தெரியவில்லையே… அவளை விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாது என்று மனதுக்குள் அவன் நினைப்பதுண்டு.
அவனுடைய எண்ண ஓட்டத்தை துறவி பாரீசன் உணர்ந்திருந்தார். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு நாள் அவனையும் அறியாமல் குருவே மகத தேசத்துக்கு மீண்டும் நாம் போவதற்கு வாய்ப்பு உண்டா என்று புட்படாலன் கேட்டான்.
அவனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த பாரீசன், அடுத்த வாரத்தில் மகததேசம் செல்லப்போகிறோம் என்று சொன்னபோது அவனுடைய முகம் பிரகாசம் அடைந்ததை துறவி பாரீசன் கவனிக்கத் தவறவில்லை.
மகதத்தில் துறவி பாரீசன்
மகத தேசத்துக்கு மீண்டும் துறவி பாரீசன் வருவதை அறிந்து மன்னர் சிரேணிகனும், அவனது மனைவியும் எல்லையில் வந்து வரவேற்று செல்கின்றனர். அவருடன் புட்படாலனும் சென்றான்.
அரண்மனைக்கு சென்று சிறிதுநேரம் அமர்ந்திருந்த துறவி பாரீசன் எந்த சலனமும் இன்றி மன்னரிடமும், அவரது துணைவியாரிடம் விடைபெற்று புறப்பட்டார்.
அரச வாழ்க்கையும், சுகபோகத்தையும் விட்டு பற்றற்றவராக பாரீசனால் எப்படி இருக்க முடிகிறது என்று மனதுக்குள் வியந்தபடியே… மகதத்தில் சில நாள் தங்கிவிட்டு செல்லலாமே என்கிறான்.
அதற்கு அவசியமில்லை. இப்போது உன் இல்லத்துக்கு சென்றுவிட்டு புறப்படலாம் என்று துறவி சொன்னதும் அவனுக்கு ஆனந்தக் களிப்பு ஏற்பட்டது.
புட்படாலனும் அவனது மனைவியும்
புட்படாலனின் இல்லத்தை அடைந்தபோது, அவனுடைய மனைவி கண்ணீர்மல்க வரவேற்றாள்.
கணவரை பிரிந்திருந்த அவள் மிகவும் மெலிந்திருந்தாள். இதைக் கண்ட புட்படாலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் துறவி முன்பு அவளிடம் கேட்பதற்கு அச்சமாக இருந்தது.
இதை உணர்ந்த துறவி, நான் அருகில் இருக்கிற நந்தவனத்துக்கு சென்று வருகிறேன். நீ சிறிதுநேரம் இங்கே இருந்துவிட்டு வா… என்று சொல்லி புறப்பட்டார்.
துறவியின் தலை மறையும் வரை காத்திருந்த புட்படாலன், மனைவியை கட்டித் தழுவி அழுதான். நான் தவறு செய்துவிட்டேன். உன்னை விட்டு பிரிந்து சென்றது என்னுடைய தவறு.
ஞானத்தை பெறும் துறவு மிக எளிது என தவறாக கணக்கிட்டு உன்னை விட்டு பிரிந்து சென்றேன். ஆனால் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
துறவியிடம் என்னுடைய இக்கட்டான நிலையை எப்படி சொல்வது என்று புரியவில்லை என்று புலம்பினான் புட்படாலன்.
துறவியை காணாமல் கலங்கிய புட்படாலன்
அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஆனதை அறியாமல் பேசிக் கொண்டிருந்தனர். மாலை நெருங்கிய வேளையில், துறவி தனக்காக நந்தவனத்தில் காத்திருப்பார். நான் வருகிறேன் என சோகத்தோடு மனைவியிடம் அவன் விடை பெற முற்பட்டான்.
ஆனால் அவளோ, உங்களோடு நான் நந்தவனம் வரை வருகிறேன் என்று சொல்லி உடன் சென்றாள்.
நந்தவனத்தில் துறவி பாரீசனை காணவில்லை. அய்யோ… நீண்ட நேரம் ஆனதால் துறவி நம்மை தவறாக நினைத்துவிட்டிருப்பாரோ என்ற அச்சம் ஒருபுறம்… அவர் மீண்டும் ஒருவேளை அரண்மனைக்கு சென்றிருக்கலாமோ என்ற சந்தேகம் ஒருபுறம்.
நந்தவனத்தை சுற்றி வந்த அவன் கண்ணில் அவன் பார்வையில் படும்படி ஒரு ஏதோ எழுதப்பட்ட ஓலையும் அது பறக்காமல் இருக்க துறவியின் சிறிய கல்லும் இருப்பதை பார்த்து அதை எடுத்து படித்தான்.
ஓலை தந்த செய்தி
புட்படாலனே… நீ என்னை தேடி வந்து இந்த ஓலையை மாலை இருட்டும்போதுதான் படிக்க முடியும் என்று அறிவேன்.
துறவறத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள முடியாது. புறப்பற்று, அகப்பற்று ஆகியவற்றை துறந்த மனநிலை ஒரு துறவிக்கு முக்கியம்.
அது இல்லாத துறவு வாழ்க்கையில் ஞானம் பெற முடியாது. நீ சுகபோகங்களை அனுபவிக்க சில ஆண்டுகள்தான் ஆகிறது. அவ்வளவு எளிதில் நீ அதில் இருந்து விடுபட முடியாது.
அதற்கென ஒரு காலம் உண்டு. அப்போது நீ என்னை தேடி வா… இப்போது நீ உன் இல்லறத்தில் நல்லறம் காண பழகு.
கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பும், மதிப்பும் கொடுத்து, குடும்பத்தை சிறப்பாக நடத்துங்கள். அன்பும், மரியாதையும் செலுத்துங்கள் அதுவே உங்களை எதிர்காலத்தில் உயர்ந்த இடத்துக்கு இட்டுச் செல்லும். நான் வருகிறேன்… என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்த புட்படாலன் அந்த நந்தவனத்தில் மண் தரையில் துறவி பாரீசனின் காலடிகள் பதிந்த இடத்தில் கீழே விழுந்து வணங்கி, மனைவியோடு வீடு திரும்பினான் என்று கதையை சொல்லி முடித்தார் தர்ம நாதர்.