புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதைகள் 5 – மற்றும் கண்ணின்று எனத் தொடங்கும் புறங்கூறுதல் தொடர்பான குறளின் விளக்கமும் இடம்பெறுகிறது.

புறங்கூறுதல் அழகா?

நகைமுகன், புதிய தலைமையாசிரியர் மலரவனை வரவேற்றார். நகைமுகனைத் தொடர்ந்து பல ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தலைமையாசிரியரை வரவேற்றனர்.

மலரவனுக்கு துணைத் தலைமையாசிரியர் என்ற முறையில் நகைமுகன் அனைத்து ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தினார்.

பின்னர், ஆசிரியர்கள் அனைவரும் தம் தம் வகுப்பிற்குச் செல்லலாயினர்.

ஆனால், நகைமுகனோ வகுப்பிற்குச் செல்லாமல் பிற ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறத் தொடங்கினார்.

அவர் கூறியதைக் கேட்ட மலரவன் பேசத் தொடங்கினார்.

குறை சொல்லாதீர்கள்

தயவு செய்து யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள். உங்கள் பணியை மட்டுமே நீங்கள் செய்யுங்கள். எல்லோரும் நல்லவர்களே.

அனைத்து ஆசிரியர்களும் இருக்கும் போது அவர்களை வானளாவப் புகழ்ந்து கூறினீர்கள் இப்போது இகழ்ந்துரைக்கின்றீர்களே…

வழிப்பாட்டுக் கூடத்தில் மாணவன் ஒருவன் கூறிய குறளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்

குறள் கூறும் கருத்து

கண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க

முன்னின்று பின் நோக்காச் சொல்

(குறள் -184)

பொருளையும் நானே கூறுகிறேன் கேளுங்கள், நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம்,

மற்றவர் நேரில் இல்லாத போது பின் விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் சொல்லக் கூடாது என்றார் தலைமை ஆசிரியர்.

நகை முகன் தலைக் குனிந்தவாறு அவ்விடத்தை விட்டு அகன்றார்.