தானத்தில் சிறந்தது எது? – திருக்குறள் கதைகள் 18

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 18) தானத்தில் சிறந்தது எது? என்பது குறித்த விளக்கக் கதையும், அதற்கான திருக்குறளையும் கொண்டிருக்கிறது.

தானத்தில் சிறந்தது எது?

ஒருவனின் புகழ் பார்சுவரும், விமலரும் தர்மரிடம் கர்ணனின் நிலைத்தப் புகழுக்குக் காரணம் தானமா? தர்மமா? அல்லது தானத்தில் சிறந்தது எது எனக் கேட்டனர்.
தர்மர் பேசலானார்,

கர்ணனுடைய புகழுக்குக் காரணம் தானம்தான். ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இடைவிடாமல் கர்ணனின் தானத்தை பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தார்.
இதனால் அர்ஜுனனுக்கு கோபம் வந்துவிட்டது. கர்ணனை விட தர்ம ராஜனே சிறந்தவர் என்று சொன்னான்.

மாறுவேடத்தில் கிருஷ்ணர்

அர்ஜுனனுக்கு தானத்தின் சிறப்பையும், கர்ணனின் கொடையையும் அறியச் செய்ய விரும்பிய கிருஷ்ணர், ஒரு நாள் என்னோடு நீயும் வா என்று அழைத்தார்.
இருவரும் அந்தணர் வேடம் பூண்டு தர்மரின் அரண்மனைக்குச் சென்றனர். கிருஷ்ணர் தர்ம ராஜனிடம் எங்களுக்கு 40 கிலோ சந்தன மரம் வேண்டும் என்று கேட்டார்.
வேலையாட்கள் மூலம் தேடி எடுத்து வரச் செய்தார். அவர்கள் தொடர் மழை பெய்து வருவதால் காய்ந்த மரக்கட்டைகள் கிடைக்கவில்லை என்றனர்.


கிருஷ்ணரிடம் தர்மர் தனக்கு இரண்டு கிலோவுக்கு மேல் சந்தனக்கட்டை கிடைக்கவில்லை. வேறு ஏதேனும் பொருள் வேண்டுமெனில் கேட்டால் தருகிறேன் என்றார்.
கிருஷ்ணரோ எமக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அர்ஜுனனோடு புறப்பட்டார்.

கர்ணன் அரண்மனையில்

இருவரும் கர்ணனின் அரண்மனைக்கு மாறு வேடத்தில் சென்றனர். அந்தணர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர் தர்ம ராஜனிடம் கேட்டது போலவே கர்ணனிடமும் சந்தனக் கட்டையை கேட்டார்.
கர்ணன் உடனே அருகில் இருக்கும் ஆசனத்தைக் காட்டி அமர்க என்றான்.
அவனுக்கும் 40 கிலோ அளவுக்கு நன்கு காய்ந்த சந்தனக் கட்டைகள் அப்போது கிடைக்கவில்லை. உடனே அந்த அரண்மனையை அலங்கரித்த கதவுகள், தூண்களை சிதைத்து அந்த அந்தணர் கேட்ட சந்தனக் கட்டைகளை எடைக் குறையாமல் கொடுத்தான்.
அப்போது கர்ணனைப் பார்த்த அந்த அந்தணர், “காய்ந்த மரக்கட்டைளுக்காகவா இவ்வளவு விலை மிகுந்த பொருட்களை அழித்தீர்கள்?” எனக் கேட்டார்.

வாழ்த்திய கிருஷ்ணர்

கர்ணன், அவரிடம் கைகளைக் கூப்பி வணங்கி இன்று நன்றாக மழை பொழிகிறது. இதனால் நீங்கள் கேட்கும் காய்ந்த மரக்கட்டைகள் கிடைக்காது.
“காய்ந்த சந்தன மரக்கட்டைகளை தேடி அலைந்தால் அதிக நேரமாகிவிடும். அதற்காக உங்களை காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படும். தூண்கள், கட்டில்கள் ஆகியவற்றை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். அதனால் அவற்றை அழித்தேன்”, என்றான்.
அது மட்டுமல்ல, “என்னிடம் வந்து கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்பதை தரவில்லையென்றால் அவர்கள் அடையும் துன்பம் என் இதயத்தை விட்டு நீங்காது” என்றான்.
கர்ணனை, இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறி விடைப் பெற்று திரும்பினார்.

கேள்வி கேட்ட கிருஷ்ணர்

அர்ஜுனனை நோக்கி, இப்போது சொல் தானத்தில் சிறந்தவன் தர்ம ராஜனா? கர்ணனா? என்று கேள்வி எழுப்பினார் கிருஷ்ணர்.
அர்ஜுனன் மௌனம் காத்தான்.
தர்ம ராஜனிடமும் இந்தப் பொருள்கள் இருந்தன. ஆனால் தானத்துக்காக எதையும் அழிக்க விரும்பவில்லை. அத்துடன் அதற்கான மனமும் வரவில்லை.
கர்ணனோ, தானத்துக்கு முன்பு விலை உயர்ந்த பொருள்கள் இந்த உலகில் இல்லை என்பது அவனுடைய முடிவு. அதனால் விலை மதிக்கத்தக்க பொருள்களை அழித்து விறகாகத் தர முன் வந்தான். அதனால் தான் கர்ணனைப் புகழ்ந்தேன் என்றார்.
இதைத்தான் திருவள்ளுவர்,

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

(குறள் – 232)


தன்னலமற்ற மனப்பான்மையோடு பொருளை அறவழியில் தருவோருக்கு நிலைத்தப் புகழ் உண்டாகும் என்பதுதான் இதன் பொருள்.
அதாவது, உலகத்தார் புகழ்ந்து பேசுவன எல்லாம் இரப்பார்க்கு ஒன்று தருபவர் மேல் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறுகிறார்.

தானத்தில் சிறந்தது எது? என்பதை இன்றைக்கும் கர்ணனுடைய புகழ் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது என்றர் தர்மர்.

அறத்தில் சிறந்தது எது – திருக்குறள் கதை

எச்சரிக்கை ஏகாம்பரம்