அஞ்ச வேண்டிய நட்பு எது? திருக்குறள் கதை 17

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 17) அஞ்ச வேண்டிய நட்பு எது என்பதை உணர்த்தும் சிறுகதையும், வாள்போல் பகைவரை.. என்ற தொடங்கும் குறட்பா விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

தாத்தாவும் பேரனும்

தாத்தா எப்போதும்போல் பேரனை அழைத்தார்.

ஆனந்தா… ஆனந்தா..

ஏன் கூப்பிட்டீங்க தாத்தா? என்ற படியே ஆனந்தன் அவர் அருகே வந்தான்.

ஆனந்தா.. தினமும் ஒரு திருக்குறள் கதை கேட்பாயல்லவா… நான் இன்றைக்கு நீ கேட்பதற்கு முன்பே ஒரு கதையை சொல்லத்தான் அழைத்தேன். இன்றைக்கு அஞ்ச வேண்டிய நட்பு எது என்பதை உனக்கு சொல்கிறேன் என்றார்.

பகைவர் யார் தெரியுமா?

முதலில் இந்த திருக்குறளையும் அதன் அர்த்தத்தையும் பார்க்கலாம். சரிதானே… என்றார் தாத்தா.

சரி… சொல்லுங்க என்றான் ஆனந்தன்.

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு

(குறள் – 882)

வாள் இருக்கிறதில்லையா…

ஆமாம்… அந்தக் காலத்தில் சண்டைக்கு பயன்பட்டது வாள். இப்போது நீண்ட கத்தியாக வைத்துக் கொள்ளலாம் சரியா… தாத்தா..

ஆமாம்.

வெளியில் தெரியும் ஆபத்தான ஆயுதம். அதேபோல் நமக்கு தெரிந்த ஆபத்தான பகைவர்களைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.

ஆனால் அன்பு காட்டுவதாக நம் உறவுகள் போல் உட்பகை கொண்டிருப்பவர்களின் நட்பு நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

சீவக சிந்தாமணியில் ஒரு கதை

சமண இலக்கியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வரும் சச்சந்தன், கட்டியங்காரனே இதற்குச் சான்று.

ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தை ஆண்டு வந்தவன்தான் சச்சந்தன்.
அவனுடைய வீரத்தைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்கள் அவனோடு போரிடுவதைத் தவிர்த்தார்கள்.

சில காலம் சென்ற பிறகு, நாட்டை ஆளும் பொறுப்பில் அக்கறையின்றி அரசியுடன் காலம் கழித்து வந்தான்.

அவனுடைய அமைச்சர்களுள் ஒருவனான கட்டியங்காரன் அரசனிடம் நல்லவன்போல் நடித்து நெருங்கிய நட்பை வைத்திருந்தான்.

இந்த நிலையில், தனக்காக சில காலம் அரசப் பொறுப்பை கவனித்துக் கொள்ள அந்த கட்டியங்காரனை நியமித்தான்.

கட்டியங்காரன் இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி, சச்சந்தனைக் கொன்று தானே அரசனாவது என முடிவுக்கு வந்தான்.

அதனால் அவன் சச்சந்தனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினான். திடீரென ஒரு நாள் அரண்மனையை அவன் படையுடன் சூழ்ந்தான். தனித்து விடப்பட்ட சச்சந்தன் அவனோடு போரிட்டு மாண்டான்.

இப்போது புரிகிறதா? அண்டை நாட்டு மன்னனைக் கண்டு அஞ்சாமல் ஆட்சி புரிந்த ஒருவன், தன்னுடைய விசுவாசமான அமைச்சர்களில் ஒருவனாக நடித்த ஒருவனை நம்பி ஆட்சியை ஒப்படைத்து கடைசியில் அவனால் வீழ்த்தப்பட்டதை என்றார் தாத்தா.

தாத்தா… புரிந்துவிட்டது. நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று.

போய் வருகிறேன் தாத்தா என்று வெளியில் காற்றென பறந்தான் ஆனந்தன்.

அறம் செய்ய விரும்பு – திருக்குறள் கதை 17

தம்பதியின் காமெடி கதை