சென்ற இடத்தால் திருக்குறள் – மனதை கட்டுப்படுத்தும் வித்தை கதை

குறளமுதக் கதைகள் வரிசையில் சென்ற இடத்தால் திருக்குறள் விளககமும், அது தொடர்பான ராவணன் அழிவுக்கு காரணம் எது? சிறுகதையும் இடம்பெறுகிறது.

பார்சுவரும், தர்மநாதரும்

தர்மநாதர் வீட்டிற்கு பார்சுவர் போகலாம் என முடிவு செய்தார். அவர் வழக்கமாக வெளியில் செல்லும்போது தோளில் துண்டு போட்டு செல்வது வழக்கம். அதனால் துண்டை அவர் தேடினார்.
அவர் கண்ணுக்கு புலப்படவில்லை. அதனால் மனைவி கமலத்தை அழைத்து துண்டை எடுத்துத் தா என்று கேட்டார்.
கமலமும் துண்டை தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு, வெளியில் எங்கே போறீங்க என்று கேட்டார்.
தர்மநாதர் வீடு வரை போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டார் பார்சுவர். அவர் தர்மநாதர் வீடுக்கு போகும் வழியில் மற்றொரு நண்பரான விமலரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் பாரசுவர்.

வரவேற்ற தர்மநாதர்

பார்சுவரையும், விமலையும் பார்த்து மகிழ்ச்சி பொங்க நாற்காலியில் இருந்து எழுந்து இருவரின் கைகளைப் பிடித்து வரவேற்றார் தர்மநாதர்.
வாசலில் தர்மநாதரின் நண்பர்களின் குரலைக் கேட்ட தர்மநாதரின் மனைவி குமாரி உல்ளே இருந்து வெளியே வந்து வாங்க… வாங்க… என்று சொல்லிவிட்டு அருந்த தண்ணீர் கொடுத்தார்.
மெல்ல மூவரின் பேச்சும் உலக விஷயங்கள் பக்கம் போனது. அப்போது மனம் பற்றிய கருத்துக்களை அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.
அப்போது தர்மநாதர் சொன்னார். குரங்கு ஒரு இடத்தில் இருக்காது. அது கிளைக்கு கிளை தாவும். அங்கேயும் இங்கேயும் ஓடும். அதுபோலத்தான் மனிதனின் மனதும். ஒரு விஷயத்தையும் ஒழுங்காக சிந்திக்காது. எப்போதும் அலை பாய்ந்துகொண்டே இருக்கும் என்றார்.
இதைக் கேட்ட பார்சுவர், புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினால் மனம் அதில் கவனம் செலுத்தி தேவையில்லாத விஷயங்களை எண்ணுவதை விட்டுவிடுவதை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன் என்றார்.

சென்ற இடத்தால் திருக்குறள்


அலைபாயும் மனத்தை கட்டுப்படுத்த நல்ல நூல்களை படிப்பது அவசியம். அது நம்முடைய தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்கள் உருவாக உதவுகின்றன.
மனதை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்ற இடத்தால் … என்ற ஒரு திருக்குறள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறது.


சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.


(குறள் – 422)


மனதை அது போகும் போக்கில் செல்ல விடாமல் தடுத்து தடுத்து, தீமைகளிலிருந்து விலக்கி, நல்லவற்றில் செல்ல விடுவதே அறிவாகும் என்று குறளாசிரியர் மேற் கண்ட குறள் மூலமாக எடுத்துரைத்துள்ளார்.
நண்பர்களே ! எந்த ஒரு பொருளையும் நாம் பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் பார்ப்பதுதான் ஆன்மாவின் இயல்பு அறிதலும், பார்த்தலும் ஆகிய செயல்களை ஆன்மா பார்க்கிறது. அதில் விருப்பு, வெறுப்பு சேரும் போது வினை பந்தத்திற்கு காரணமாகி வி்டுகிறது. அதில் விருப்ப உணர்வு சேரவே ஒன்றை அடைய வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது.
அணு விரதங்கள் ஐந்தில் ஒன்று பிறனில் விழையாமை. இதனை இல்லறத்தார் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். அதாவது தன் மனைவியைத் தவிர மாற்றாரின் மனைவி மேல் விருப்பங் கொள்ளக் கூடாது. இது இல்லறத்தார்க்கே உரிய பிரம்மச்சரியம்.
இதைப் பற்றிய கதையை நீங்கள் கேளுங்கள்.

இலங்கை மன்னன் ராவணன்

இராவணன் வனத்தில் தனித்திருக்கும் இராமனின் மனைவியான சீதையைப் பார்க்கிறான். அவளை எப்படியாவது அடைய வேண்டும் என எண்ணுகிறான்.
அதனால், தன்னுடைய அரச போகம், மானம், மரியாதை அனைத்தையும் இழந்து விடுவோம் என்று எண்ணாமல் அவளைக் கவர்ந்து வருகிறான்.
இராவணன் சீதை மேல் கொண்ட மோகத்தால் அவளைச் சிறைப்படுத்துகிறான். அவளோ இவனை வெறுப்புற்று ஒதுக்குகிறாள். இராமன் சீதையை மீட்க இராவணனோடு போரிட்டு வெல்கிறான்.


இராவணன் தன் அரசையும், உயிரையும் இழக்கிறான். இப்போது புரிந்து கொண்டீர்களா? மனதை அது செல்லும் புலத்தின் கண் செல்லவிடாது தடுத்தல் வேண்டும்.

நல்ல வழியே அறிவுடைமை

தீய வழிகளில் செல்லாது நல்ல வழியில் செல்லுதலே அறிவுடைமை என்பதைக் குறளாசிரியர் புலப்படுத்தியுள்ளார்.
ஜீவனானது தனது எல்லையானப் பார்த்தல், அறிதல் ஆகிய செயல்களிலிருந்து மீறக்கூடாது. அவைகளை மீறினால் பிறவித் தொடர்ச்சியை நீளச் செய்யும் என்பதை உணர வேண்டும். அதுவே நமக்குப் பல பிறவிகளிலும் துன்பம் தரக் கூடியதாக அமையும்.
ஆகவே, இந்த ஜீவன் பல பிறவிகளிலும் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும். எவனொருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறானோ? அவன் தன் மனதை செல்லுகின்ற திசையெல்லாம் செல்லவிடாது நல்ல வழியில் செல்ல வைக்க வேண்டும். அதுவே நல்ல அறிவுடையச் செயலாகும் என்று கூறி முடித்தார் தர்மநாதர்.
இன்றைய பேச்சு நல்ல கருத்துக்களை உடையதாக அமைந்தது என்று சொல்லி விடைப் பெற்று சென்றார்கள் பார்சுவரும், விமலரும்.

இந்த துர்கா தேவியை தரிசனம் செய்தால் வீட்டில் தங்கமழை பொயும்!

பிற உயிர்களிடத்தில் அன்பு திருக்குறள் கதை