நாம் வாழும் இந்த பூமி, அதன் உயிரோட்டத்துக்கு காரணமான சூரியன் அதன் குடும்பம் இயற்கையின் படைப்புகளில் ஒன்று.
இந்த பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றியது எப்படி அதிசயமோ, அதே அதிசயத்தைக் கொண்டதுதான் இந்த அண்டவெளியும், சூரியனும், பூமியும் மற்றும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள், பல்லாயிரக்கணக்கான சிறு கோள்கள் உருவான விதம்.
இந்த சூரியனும், கோள்களும், நம் குடும்பத்தில் உள்ள வால்நட்சத்திரங்களும் எப்படி உருவாகின என்பதை பற்றிய அறிவியல்ரீதியான அதிசய நிகழ்வைப் பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
உள்ளடக்கம்
சூரியன் அதன் குடும்பத்தின் தோற்றம்
சூரிய குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கிரகங்கள், சூரியக் குடும்பத்தில் சுற்றிவரும் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்கள், தூசி மண்டலமாக சுற்றிவரும் சிறிய பாறைகள், வால் நட்சத்திரங்கள் எல்லாவற்றின் தோற்றமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நிகழ்வாகவே அமைந்திருக்கிறது.
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், அதாவது 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூரிய குடும்பம் என எதுவும் இந்த பால்வெளியில் தோன்றவில்லை.
அப்போது பால்வெளியில் சூரிய குடும்பம் தோன்றிய இடம் ஒரு இருள் சூழ்ந்த வெற்றிடமாகவே இருந்தது.
இந்த வெற்றிடத்தில் தூசிகளும், வாயுக்களும் கலந்த மேகக் கூட்டங்கள் திட்டுத் திட்டகாக இருந்திருக்கின்றன.
இப்படி இருந்த நிலைக்கு விஞ்ஞானிகள் சூரிய நெபுல்லா அல்லது சோலார் நெபுல்லா எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த சூரிய நெபுல்லாவில் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவை அதிக அளவில் இருந்தன. ஆனால் இந்த வாயுக்களும், தூசி மண்டலங்களும் எப்படி அண்டவெளியில் பிறந்தன என்பது இன்னமும் அறியப்படாத ரகசியமாக இருக்கிறது.
சூரிய நெபுல்லாவில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு
மில்லியன் கணக்கான ஆண்டுகள் இந்த மேகக் கூட்டம் இருளில் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த நிலையில், ஏதோ ஒரு மேகக் கூட்டத்தினுள் ஒரு பெரிய வெடிப்பு தோன்றுகிறது.
இந்த வெடிப்புக்கு சூப்பர் நோவா வெடிப்பு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த வெடிப்பு காரணமாக மேக கூட்டத்தினுள் மிகப் பெரிய அதிர்வலை ஏற்படுகிறது.
இதனால் மேக கூட்டத்தினுள் இருந்த வாயுக்களும், தூசிகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு ரசாயண விளைவு ஏற்பட்டு இணையத் தொடங்குகின்றன.
புரோட்டோ பிளானட்டரி டிஸ்க்
இந்த ஒன்றிணைவு தட்டையான அதே நேரத்தில் ஒரு வட்டு வடிவத்திலான சுழற்சியை இந்த எதிர்விளைவுகள் ஏற்படுத்துகின்றன. இதை புரொட்டோ பிளானட்டரி டிஸ்க் என்று அழைக்கிறார்கள்.
புரொட்டோ பிளானட்டரி டிஸ்க் மையத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தமும், அதனால் ஏற்பட்ட வெப்பமும் பிரகாசமான ஒளியை உருவாக்குகிறது.
புரொட்டோ ஸ்டார்
இப்படி ஒன்றிணைவில் நீண்டகாலமாக புரொட்டோ பிளானட்டரி டிஸ்க்கில் அழுத்தமும், வெப்பமும் தொடர்ந்து பிரகாசமான ஒளி அதிகரிக்கிறது. இந்த நிலைக்கு புரோட்டோ ஸ்டார் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
புரொட்டோ ஸ்டாரில் தொடர்ந்த அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அதன் மையத்தில் ஈர்ப்பு உருவாகிறது.
இதனால் சுற்றிலும் உள்ள அனைத்துப் பொருள்களும் வேகமாக புரொட்டோ ஸ்டாரின் மையப் பகுதியை நோக்கி பயணிக்கின்றன.
இந்த நிலையில், புரொட்டோ ஸ்டாரின் மையப் பகுதியில் அணுக்கரு இணைவு எதிர்வினைகள் ஏற்படுகின்றன. இந்த எதிர்வினையால் ஹைட்ரஜன் வாயு ஹீலியம் வாயுமாக மாறுகிறது.
இப்போதும் சூரியனில் இந்த எதிர்வினை நடந்து வருவதால்தான் நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும் சூரியன் தொடர்ந்து அளித்து வருகிறது.
இதன் காரணமாக சூரியனில் தொடர்ந்து 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கிறது.
சூரிய குடும்பம்
சூரிய நெபுலா பகுதியில் இருந்த வாயுக்கள், தூசிகளில் 99.8 சதவீதம் புரொட்டோ ஸ்டாரின் மையப் பகுதியில் சேர்ந்தன.
அதே நேரத்தில் இந்த வாயுக்களிலும், தூசிக்களிலும் கலந்திருந்த பனித்துளிகள் புரொட்டோ ஸ்டாரின் வெப்பத்தால் வெகு தொலைவுக்கு வெளியேற்றப்படுகின்றன.
அவை புரொட்டோ ஸ்டாரின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள தூசிக்கள், வாயுக்களுடன் சங்கமிக்கின்றன.
புரொட்டோ ஸ்டாரை நோக்கி பயணித்த மீதமுள்ள 0.2 சதவீதம் தூசிக்களும், வாயுக்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி சிறுசிறு தொகுதிகளாகவும், அந்த சிறுசிறு தொகுதிகள் பெரிய தொகுதிகளாகவும், அந்த பெரிய தொகுதிகள் மோதி நம் சந்திரன் அளவுடைய தொகுதிகளாக மாறின. இவற்றுக்கு புரொட்டோ பிளானெட்டுகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சூரியனும் கோள்களும்
அப்படி பரிணமித்த மிகப் பெரிய தொகுதிகள் நிறை மற்றும் அடர்த்தி காரணமாக பெற்ற பல்வேறு மாற்றங்களை பெற்று ஈர்ப்பு சக்தியை பெறுகின்றன. இதனால் இந்த புரொட்டோ பிளானெட்டுகள் சூரியனில் இணையாமல் தனித்து நின்று புரொட்டோ ஸ்டாரை சுற்றிவரத் தொடங்குகின்றன.
இப்படி உருவான கோள்களிலும் இணைய முடியாமல் போன சிறுசிறு தொகுதிகள் ஒருசில கோள்களின் சந திரனாக மாறுகின்றன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்களாகவும், வால்மீன்களாகவும், மில்லியன் கணக்கான சிறு பாறைகளாகவும், தூசிகளாகவும் புரொட்டோ ஸ்டாரின் வெளிப்புற அடுக்கில் சுற்றி வரத் தொடங்குகின்றன.
இப்படி ஒவ்வொரு தொகுதி அமைப்புகளின் மையப்பகுதி ஈர்ப்பு காரணமாக அவற்றை நோக்கி தூசித் துகள்கள் குவியும் முறையை அக்ரிஷன் என்று அழைக்கிறார்கள்.
இத்தகைய மாற்றத்தின் காரணமாகவே சூரியன், பூமி உள்ளிட்ட கிரகங்கள் உருவாகியிருக்கின்றன.
வானியல் ஆய்வில் தெரிய வரும் உண்மை
1969-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வானியலாளர் விக்டர் சஃப்ரோனோவ், தன்னுடைய தொடர் ஆய்வுகள் மூலம் சூரியனும், பூமி உள்ளிட்ட பிற கோள்களும் இப்படித்தான் தோன்றின என்பதை வெளியிட்டார்.
ஆனால் அவருடைய கருத்தை அன்றைய அறிவியல் அறிஞர்கள் கண்டுகொள்ளவில்லை.
1984-ஆம் ஆண்டில் தரவுகள் அடிப்படையில் வானியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், விக்டர் சஃப்ரோனோவ் தெரிவித்த கருத்துக்கள் உண்மை என்பதை அறிந்துகொண்டார்கள்.
நவீன தொலைநோக்கிகளின் உதவி
சமீப ஆண்டுகளில் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் எப்படி தோன்றுகின்றன என்பதை மிகத் தெளிவாக பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.
அவற்றின் மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும், விக்டர் சஃப்ரோனோவ் சொன்ன விஷயங்களுடன் ஒத்துப் போவதை அறிவியல் உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
விண்வெளியில் புதிதாக தோன்றும் நெபுலாக்களை தொலைநோக்கிகள் மூலம் உற்று நோக்கும்போது மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த நெபுலாக்களில் உள்ள தூசி துகள்கள் விரைவாக குவிந்து ஒருசில ஆயிரம் ஆண்டுகளில் ஒரு சென்டி மீட்டர் அளவில் சேர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.
அதேபோல், இத்தகைய சேர்க்கை வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதையும் விஞ்ஞானிகள் கவனித்து வருகிறார்கள்.
விண்கற்கள் சொல்லும் தகவல்
அத்துடன் பூமியின் மீது விழும் விண்கற்களை ஆய்வு செய்யும்போதும் சூரியன், பூமி மற்றும் பிற கோள்களின் தோற்றம் உறுதி செய்யப்படுகிறது.
இதற்கு காரணம் இந்த விண்கற்களில் உள்ள சிறிய துகள்களில் காணப்படும் யுரேனியம், ஹஃப்னியம் ஆகிய கதிரியக்க கூறுகள்தான்.
இந்த கதிரியக்க கூறுகள் மூலம் விண்கற்களின் வயதையும், தூசி துகள்களின் காலத்தையும் நம்மால் அறிய முடிகிறது.
ஆச்சரியமான தகவல்
பூமியில் காணப்படும் யுரேனியம் நம்முடைய சூரிய குடும்பத்தின் வயதைக் காட்டிலும் மிகப் பழைமையானது என்பது மற்றொரு ஆச்சரியமான தகவல்.
அதாவது இந்த யுரேனியத்தின் வயது 6 பில்லியன் ஆண்டுகள். அப்படியெனில் இந்த யுரேனிய துகள்கள் வேறு ஏதோ ஒரு சூப்பர்நோவாவில் உருவானவை என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
இந்த அளவீடுகளில் இருந்து பெறப்படும் தரவுகளை சேகரிப்பதன் மூலம் தூசி மற்றும் கோள்கள் மோதல்களின் உருவாக்கம் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.