குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதைகள் 2 – திருந்தாத உள்ளங்கள் தொடர்பான கதையும், குறள் வி்ளக்கமும் கொண்டிருக்கிறது.
உள்ளடக்கம்
குறளுக்கு அர்த்தம் தேவை
ஆனந்தன் தர்மநாதர் தாத்தாவை தேடி வந்தான்.
என்ன ஆனந்தா… தயங்கியவாறு வருகிறாய்? எனக் கேட்டார் தர்மநாதர்.
பக்கத்து வீட்டு அண்ணனுக்கு ஒரு குறளுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமாம் என்றான்.
அப்படியா… ஆனந்தா.. அவரை வரச் சொல். நீயும் தெரிந்துகொள் என்றார் தர்மநாதர்.
அவர்கள் இருவரிடம் எந்தக் குறளுக்கு அர்த்தம் தேவைப்படுகிறது என்றார்.
அச்சமே எனத் தொடங்கும் குறள்
திருக்குறளில் அச்சமே கீழ்கள எனத் தொடங்கும் 1075 பாடலுக்குத்தான் தாத்தா என்றான் ஆனந்தன்.
இந்தக் குறளுக்கு முதலில் பொருளை விளக்குகிறேன் கவனியுங்கள் என்றார் தர்மநாதர்.
கயவர்கள் அதாவது கீழ்மைக் குணமுடையவர்கள் இருக்கிறார்களே! அவர்களின் ஒழுக்கத்துக்கு காரணமாக இருப்பது அச்சம்தான்.
அவர்கள் பிறரிடமிருந்துப் பொருளைப் பெற விரும்பும் வரை மட்டுமே அவர்கள் பயந்தவர் போல் நடிப்பார்கள். .அப்போது மட்டுமே அவர்கள் நல்லவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.அவர்கள் எப்போதுமே திருந்தாத உள்ளங்கள் உடையவர்கள்.
தர்மநாதர் மேலும் தொடர்ந்தார். உங்கள் இருவருக்கும் புரியும் படியாக சொல்கிறேன்.
திருந்தாத உள்ளங்கள் யார்?
தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் சில சமயம் வலிமையானவர்களிடம் பணிந்து நல்லவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.
அது மட்டுமின்றி ஒரு பொருளைப் பெற வேண்டுமென்றால் அந்தப் பொருளைப் பெறுவதற்காக நன்னடத்தை உடையவர்களாக காண்பித்துக் கொள்வர். பொருளைப் பெற்ற பின்பு கயவர்கள் தன் பழைய குணத்துக்கு திரும்பிவிடுவர். இவர்கள்தான் திருந்தாத உள்ளங்கள்.
அதாவது அவர்கள் எப்போதும் போல் கீழ்மைக் குணமுடையவர்களாக இருப்பர் என்கிறார் குந்த குந்தர்.
பஞ்சபாண்டவர் கதை
இதைத்தான் திருவள்ளுவர்
“அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது“
என்ற குறட் பாவால் உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர்.
இதற்கு ஒரு கதையை சொன்னால் உங்களுக்கு நன்றாகப் புரியும்.
பாண்டவர்கள் அறிவுடையவர்களாகவும், வீரமிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை துரியோதனன் அறிவான்.
அவர்கள் அறிவுப்பூர்வமாகவும், வீரமாகவும் போரிட்டு வெல்வது கடினம். அதனால் அவர்களை வஞ்சமான வழியில்தான் வெற்றி கொள்ள முடியும் என்று தீர்மானிக்கிறான்.
வியசனம் என்றால் என்ன?
அதனால் ஏழு வியசனங்களில் ஒன்றாக இருக்கும் சூது மூலமே அவர்களை வெல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறான். பாண்டவர்கள் தோற்றால் அவர்களை நாட்டை விட்டே துரத்தி விடலாம் என்றும் கருதினான்.
தாத்தா, வியசனம் என்றால் என்ன.?
அதைக் கேட்கிறாயா?
கை விடுவதற்கு மிகவும் அரிதான தீய பழக்கமே வியசனம் ஆகும்.
இவை சூதாடுதல், திருடுதல், வேட்டையாடுதல், புலால் உண்ணுதல், கள் குடித்தல், பிறர் மனை நயத்தல், வேசையர் தொடர்பு என்று சொல்லலாம்.
சரி.. தாத்தா…
துரியோதனன் தீட்டிய திட்டத்தில் வென்றானா ? எனக் கேட்டான் ஆனந்தன்.
தாத்தா கதையைத் தொடர்ந்தார்.
துரியோதனன் கபட நாடகம்
துரியோதனன் தன்னுடைய கபட எண்ணத்தை வெளிக்காட்டாமல், பாண்டவர்களோடு விளையாடுவது மட்டுமின்றி, சகஜமாக பழகுவது, அவர்களோடு வேடிக்கைப் பேச்சுகளிலும் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
தருமனை விளையாட்டாக சூதாட்டத்தில் பங்கேற்க வைத்தான். சில நாள்கள் இவ்வாறே தொடர்ந்தது.
ஒரு நாள் இரு திறத்தாரும் விளையாடி வரும் வேளையில் துரியோதனன் தருமனைப் பார்த்து, நீங்கள் திறமையானவர்கள் என்பது உண்மையானால்? எங்களை நீங்கள் வெல்ல வேண்டும் என்று கூறுகிறான்.
ஒருவேளை நீங்கள் தோற்றுவிட்டால், நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்கிறான் துரியோதனன். தர்மர் தயங்கினார்.
தோற்று விடுவோம் என்ற பயமா? எனத் தர் மரை கேலியாகவும்பேசினான் துரியோதனன். வென்று விடுவோம் எனக் கருதிய தர்மர் போட்டிக்கு சம்மதித்தார்.
இறுதியில் ஒரு நொடியில் தர்மர் தோற்றார். பாண்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
அர்த்தம் புரிந்ததா?
உடனே துரியோதனன், நீங்கள் அனைவரும் நாட்டை விட்டேவெளியேற வேண்டும் என கட்டளையிட்டான் என்றார் தாத்தா தர்மநாதர்.
இப்போது நீங்கள் இருவரும் இந்த குரலின் அர்த்தத்தை புரிந்து கொண்டீர்களா?
கயவர்கள், நல்லவர்கள் போல் நடித்துத் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவார்கள் அதைத்தான் இந்தக் குறள் உணர்த்தியுள்ளது என்றார் தாத்தா.
நாங்கள் இருவரும் இந்தக் குறள் மூலமாக நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்ற நினைக்கும் கயவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டோம் என்று சொல்லி விடை பெற்றார்கள் இருவரும்.