கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு சொல்லும் உண்மை!

கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து செல்ல ஆசைப்படுவோர் ஏராளம்.
அப்படி என்ன இந்த கோயிலில் அதிசயம் இருக்கிறது? உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனஸ்கோ அறிவித்தது எப்போது?

இந்த கோயில் என்ன காரணத்திற்காக கட்டப்பட்டது? இந்த கோயில் கட்டுமானத்தின் சிறப்பு அம்சம்தான் என்ன என்பதை பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

கங்கை கொண்ட சோழபுரம் எங்கிருக்கிறது?

250 ஆண்டுகள் ஒரு மிகப்பெரிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்து வந்த கங்கை கொண்ட சோழபுரம் இன்றைக்கு தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூராக இருக்கிறது.
விழுப்புரம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அணைக்கரை-மீன்சுருட்டிக்கு இடையே அமைந்திருக்கும் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை தாங்கிய கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது.

ஏன் கங்கை கொண்ட சோழபுரம் உருவாக்கப்பட்டது?

ராஜேந்திர சோழன் மன்னரான சில ஆண்டுகளில் தன்னுடைய தலைநகராக தஞ்சாவூருக்கு பதில் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றினான். இந்த கங்கை கொண்ட சோழபுரம் பிற்கால சோழ பேரரசின் தலைநகராக 256 ஆண்டுகள் நீடித்தது.
ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதும் அவன் செய்த முதல் செயல் சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கியதும், தஞ்சையில் தனது தந்தையால் கட்டப்பட்ட பெருவுடையார் கோயிலைப் போன்று ஒரு கோயிலை கட்டியதும்தான்.

ஏன் இந்த கோயில் கட்டப்பட்டது?

ராசேந்திரன் சோழன் மன்னரான பிறகு மேலை, கீழை சாளுக்கிய தேசங்கள், ஈழம், பாண்டிய, சேர தேசங்களை வெற்றி கண்டான்.
அதைத் தொடர்ந்து 1019-ஆம் ஆண்டில், தனது படையை இந்தியாவின் வடபகுதிகளை நோக்கி வழிநடத்தினான்.
புனித நதியான கங்கையில் இருந்து தண்ணீர் எடுத்து வர வழிநடத்தப்பட்ட இந்த படை வழியில் தங்களை எதிர்த்து போரிட்ட அனைத்து எதிரிப் படைகளையும் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது.
இதனால் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழன் என்ற பெயரும், கங்கையை வென்றவன் என்ற புனைப் பெயரும் உருவானது.
கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி கண்டதை அடுத்து அதன் நினைவாக 1023-இல் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரை உருவாக்கத் தொடங்கினான். அதைத் தொடர்ந்து, நாம் இப்போது காணும் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலை கட்டி சிவனுக்கு அர்ப்பணித்தான்.

மூலவருக்கு கங்கை நீரால் அபிஷேகம்

தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் பெயரான பிரகதீஸ்வரர் என்ற பெயரையே இந்த திருக்கோயில் மூலவருக்கு ராஜேந்திர சோழன் சூட்டினான். .இக்கோயில் தாயாருக்கு பெரியநாயகி என்ற பெயரும் சூட்டப்பட்டது.
தன்னிடம் போரில் தோற்றுப்போன மன்னர்களின் தலையில் கங்கை நீரை சுமந்து வரச் செய்து, அந்த நீரை இந்த கோயில் மூலவரான பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தான்.
அத்துடன் அபிஷேகம் செய்த கங்கை நீரை கோயிலுக்குள் ஒரு கிணறு தோண்டி அதில் தேங்கச் செய்ததோடு, அதன் மீது தனது சின்னமான சிங்கத்தின் தலையை வடிவமைத்து வைத்தான். அதுதான் நாம் இக்கோயிலில் பார்க்கும் சிங்கக் கிணறு.

ராஜேந்திர சோழனின் வழிபாடு

ராஜேந்திர சோழன் இத்திருக்கோயிலுக்கு வரும்போதெல்லாம் இங்குள்ள கங்கை நீரை தலையில் தெளித்துகொண்ட பிறகே சிவ தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்வான்.
ராஜேந்திர சோழன் கோயிலுக்குள் வந்ததும், முதலில் துர்க்கையை வழிபட்ட பிறகே சிவனை வணங்கச் செல்வான். துர்க்கைதான் அவனுடைய குலதெய்வமாக இருந்ததே இதற்கு காரணம்.

கல்வெட்டுகள் தரும் தகவல்

ராஜேந்திர சோழன் கி.பி.1036-ஆம் ஆண்டில் இக்கோயிலை கட்டியதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளிலும், கல்வெட்டு ஆய்வுகள் மூலமாக தெரியவந்திருக்கின்றன.
அவன் தன்னுடைய ஆட்சியின் 24-ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு பல கிராமங்களை தானமாகக் கொடுத்த விவரம் கி.பி.1068-ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்த வீரராஜேந்திர சோழன் தொடர்புடைய கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற இடங்களில் இருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள், போர் நினைவுப் பரிசாக இந்த கோயிலிலும், அருகில் உள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கருவறையில் சந்திரகாந்தக் கல்

சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறை பகுதி வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தரையில் சந்திரகாந்தக் கல்லை ராஜேந்திர சோழன் பதித்திருக்கிறான்.
ராஜேந்திர சோழனின் குலதெய்வம் துர்க்கை. அதனால் திருக்கோயிலில் துர்க்கை 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
இத்தகைய கோலத்தை காண்பது மிக அரிது. இந்த துர்க்கை மங்கள சண்டி என்று அழைக்கப்படுகிறாள்.
ராஜேந்திர சோழன் கோயிலுக்குள் சென்றதும் முதலில் துர்க்கையை வழிபட்ட பிறகே மூலவரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இதே நடைமுறை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பிறகு சிவனை தரிசிக்க செல்லும் வழக்கத்தை பக்தர்களால் பின்பற்றப்படுகிறது. இந்த சந்நிதி கோயிலின் இடதுபக்கம் அமைந்திருக்கிறது.

கோயில் விமானமும் சுற்றுப்பகுதி கட்டுமானமும்

கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோயிலின் பிரதான கோபுரம் 55 மீட்டர் – அதாவது 180 அடி உயரமுடையதாக இருக்கிறது.
இந்த கோபுரம் முழுவதும் கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.
அத்துடன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் போன்றே இக்கோயில் ஒரு உயரமான கட்டுமான அமைப்பின் மீதே கட்டப்பட்டிருக்கிறது.
கட்டமைப்பின் முக்கியப் பகுதி 341 அடி உயரமும், 100 அடி அகலமும் கொண்டதாக அமைந்திருக்கிறது.

பிரம்மாண்ட உயரமுடைய மூலவர்

மூலவர் சிவலிங்கத்தின் உயரம் 13 அடி. லிங்கத்தின் அடிப்பகுதியின் சுற்றளவு 58 அடி. இந்த மூலவரே தமிழகத்தில் கருவறைகளில் காணப்படும் லிங்க மூலவர்களில் மிகப் பெரிய அளவுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருவறை முன் இருபுறமும் 6 அடி உயரமுடைய துவார பாலகர் சிலைகள் காணப்படுகின்றன.
கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கி மிகப் பெரிய நந்தி அமைந்திருக்கிறது. இது முழுமையாக சுண்ணாம்புக் கல்லில் உருவானது.
சூரிய உதயம் முதல் மறையும் வரை நந்தி நெற்றியில் படும் சூரியக் கதிர்கள் 200 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கருவறையில் வீற்றிருக்கும் லிங்கத்தின் மீது படரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு.

பெரியநாயகி அம்மன்

தெற்கு நோக்கிய அம்மன் சந்நிதியில் உள்ள பெரியநாயகி அம்மன் வீற்றிருக்கிறாள். இதன் உயரம் 9.5 அடி. பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றிலும் 5 கருவறைகளும், சிம்மக் கிணறும் அமைந்திருக்கின்றன.
சிவனின் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராஜர் போன்ற சிவனின் திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பிரம்மன், துர்க்கை, திருமாலை, சரசுவதி என 50-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலில் உள்ள சந்தேஷ்வர அனுக்கிரக மூர்த்தி, சரஸ்வதி ஆகியவை காணக்கிடைக்காத அரிய சிற்பங்களாக இருக்கின்றன.
இக்கோயிலில் உள்ள சரஸ்வதி, லட்சுமி உருவங்கள் தியானக் கோலத்தில் காட்சியளிப்பதால், ஞான சரஸ்வதி, ஞானலட்சுமி என அழைக்கப்படுகின்றன.
கோயில் கட்டுமானப் பணிக்கு, தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய கட்டடக் கலைஞர்களையும், சிற்பிகளையும் ராஜேந்திர சோழன் பயன்படுத்தியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இலக்கியங்களில் கங்கை கொண்ட சோழபுரம்

அக்காலத்தில் அழகிய தலைநகராக வி்ளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துபரணி ஆகிய இலக்கியங்களில் காணப்படுகிறது.
தக்கயாகப் பரணி நூலிலும், சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் இக்கோயிலின் பெருமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
11-ஆம் நூற்றாண்டில் கம்பர் இயற்றிய கம்ப ராமாயணத்தில், அவரது அயோத்தி நகர வருணைகளுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தின் நகரமைப்பே முன்மாதிரியாக இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கங்காபுரி என்று அழைக்கப்பட்ட நகரம்

கல்வெட்டுகளில் இருந்தும், அகழ்வாராய்ச்சிகளில் இருந்தும் கிடைத்த சில தகவல்கள் கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.
கோட்டை சுவர்கள், அரண்மனைகள், இவற்றின் நடுவில் அமைந்த இந்த கங்கை கொண்ட சோழபுரம், சிவன் கோயில் என நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் இருந்து கி.பி.1279-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சோழர் வம்சத்தின் கடைசி மன்னர் காலம் வரை சுமார் 256 ஆண்டுகள் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம் இருந்து வந்திருக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பல பெயர்களும் உண்டு. அவற்றில் பண்டைய புலவர்கள் குறிப்பிட்ட பெயர்கள் கங்காபுரி, கங்கை மாநகர், கங்காபுரம் ஆகியவை முக்கியமானவை.
13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டிய பாண்டியர்கள் அவர்களை பழித் தீர்க்கும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் நகரை முழுமையாக அழித்திருக்கிறார்கள். இதில் கோயிலின் சிலப் பகுதிகளும் கூட சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

யுனெஸ்கோ அங்கீகாரம்

கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆகியவற்றை அடுத்து கங்கை கொண்ட சோழபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக 2004-இல் பட்டியலிடப்பட்டது.


தஞ்சை பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயிலும்

தஞ்சை பெருவுடையார் கோயிலைப் போன்று கிட்டத்திட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டிருந்தாலும், அதற்கும் இதற்கும் சில வேறுபாடுகள் உண்டு.
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறை மீதுள்ள விமானத்தின் உயரம் 180 அடி. இது தஞ்சை பெருவுடையார் கோயில் விமானத்தை விட 9.8 அடி உயரம் குறைவாகும்..
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கத்தின் உயரம் 13.5 அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்டதாக இருக்கிறது.
தஞ்சை பெருவுடையார் கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும் 55 அடி சுற்றளவும் கொண்டதாக உள்ளது.
தஞ்சாவூரில் உள்ள சிவலிங்கம் ஆணின் அம்சமாக உரல் வடிவில் அமைந்திருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் பெண்ணின் அம்சமாக உடுக்கை வடிவத்தில் அமைந்திருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் விமானம் 4 பக்கங்களைக் கொண்டது. கங்கை கொண்ட சோழபுரம் கோயில் 8 பக்கங்களைக் கொண்ட விமானத்தை உடையதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கோயில் நிர்வாகம்

தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கோயிலில் நாள்தோறும் நான்குமுறை சேவை முறைப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிலும் அலங்காரம், நெய்வேதனம், தீபாராதனை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
நாள்தோறும் இக்கோயில் காலை 6 முதல் 12.30 வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.
மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, ஐப்பசியில் பௌர்ணமி, மார்கழியில் திருவாதிரை நாள்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

உத்தண்டி பெருமாள் கோயில் தரிசனம்

தஞ்சாவூர் பெரிய கோயில் அதிசயம்