அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?: திருக்குறள் கதை 4

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 4) மற்றும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் குறள் வரிகளின் விளக்கமும் இடம்பெறுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்:

ஆனந்தன், ‘தாத்தா, தாத்தா என அழைத்தவாறு ஓடி வந்தான்.

தர்ம நாதர் வா, ஆனந்தா – பள்ளிக் கூடத்திற்கு இன்று போகலையா? எனக் கேட்டார்.

எங்க எதிர் வீட்டு அக்காவுக்கு கல்யாணம் அதுக்கு போயிட்டு வந்தேன்.

ஓ! அப்படியா! அதான் புது உடை அணிந்திருக்கிறாயா? எனக் கேட்டார்.

சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா?

பிரமாதம் தாத்தா…. ஆனா தாத்தா கல்யாணம் முடிந்தவுடன் பொண்ணு மாப்பிள்ளையுமா, ஊருக்குப் புறப்பட்டாங்க.

ஏன் அழுகை வந்தது?

திடீர்னு,.. அக்காவோட அம்மாவும், அப்பாவும் கண் கலங்கினாங்க.

அக்காவின் கண்களிலிருந்தும் ஏனோ கண்ணீர் திடீரென பொல பொலவென்று வந்தது என்றான் ஆனந்தன்.

பெண்ணை பெத்தவங்க அப்படி கண் கலங்கியது ஏன்னு கேட்கிறியா?

ஆமாம், தாத்தா.

அதுவா? தன் வீட்டில் ஓடி ஆடி விளையாடிய பெண் தன்னை விட்டுப் போகிறாளே என்ற ஆதங்கத்தில் தான் அப்பா, அம்மா கண்களில் இருந்து வந்த கண்ணீருக்கு காரணம்.

அந்த பெண் அழுதாளே… அதற்கு காரணம், இதுநாள் வரை நம்மை கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வளர்த்த தன் தாய், தந்தையைப் பிரிந்து போகிறோமே … என்ற ஏக்கம்தான்.

ஆனந்தா, அன்பிற்கு அடைத்து வைக்கக் கூடிய தாழ்ப்பாள் ஏதேனும் உள்ளதோ?அன்புடையவர்களின் சிறிதளவு கண்ணீரே பலர் அறிய வெளிப்படுத்தி விடும் எனக் குறளாசிரியர் கூறியது எவ்வளவு நிதர்சனமான உண்மை நினைத்துப் பார்த்தாயா…

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

(குறள் -71)

குறள் சொல்லும் செய்தி

அதாவது அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. தம்மால் அன்பு செய்யப் பட்டவருடைய துன்பங் கண்ட போதே அவருடைய கண்களிலிருந்து வரும் நீர்த்துளி பிறர் அறியும்படி செய்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.

தன் மகளுக்குத் திருமணம் முடித்த பெற்றோர். அவள் இனி வேறோர் இல்லத்திலேயே தங்கி விடுவாள் என்ற ஆதங்கத்திலே கண்ணீர் விட்டனர்.

அவளும் தந்தை, தாயை விட்டு கணவர் இல்லத்திற்குச் செல்கிறோம் என்ற நினைப்பில் கண்ணீர் சிந்தினாள்.

இப்போது புரிந்துகொண்டாயா ? ஆனந்தா என்றார்.

எனது சந்தேகத்தை தீர்த்து வைத்ததோடு, அதற்கேற்ற குறளையும் சொல்லியிருக்கிறார்கள் தாத்தா…

இனி இந்த குறள் என் வாழ்நாளில் மறக்காது என்று சொல்லி விடை பெற்றான் ஆனந்தன்.