செவ்வாய் கிரகத்தின் நிலத்தடியில் மிக ஆழத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாசா 2018-இல் செவ்வாய்க்கு மார்ஸ் இன்சைட் லேண்டர் என்ற விண்கலத்தை அனுப்பியது. அது 4 ஆண்டுகள் தொடர்ந்து நிலஅதிர்வுகளை பதிவு செய்தது.
அந்த பதிவின் மூலம், நில அதிர்வு அலைகள் எவ்வளவு வேகமாக எந்த பொருளின் வழியாக கடத்தப்பட்டது என்பதை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தார்கள்.
வழக்கமாக பூமியில் நிலப் பரப்புகளில் தண்ணீர் அல்லது பெட்ரோலியம், எரிவாயு போன்றவற்றின் இருப்பை அறிய இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அந்த பகுப்பாய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தின் அடியில் திரவ நிலையில் நீர் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த திரவ நீரின் அளவு கிரகத்தின் மேற்பரப்பில் அரை மைலுக்கும் கூடுதலாக ஆழமான ஒரு அடுக்கை உருவாக்கும் அளவுக்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த திரவ நீர், நிலப்பரப்பில் இருந்து 10 முதல் 20 கி.மீட்டர் ஆழத்தில் இருப்பதால், அதை மேற்பரப்புக்கு கொண்டு வருவது என்பது மிகப் பெரிய சவாலான விஷயம்.
ஏற்கெனவே செவ்வாய் கிரகத்தின் துருவங்களில் உறைந்த நீர் இருப்பதும், வளிமண்டலத்தில் நீராவி இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நிலத்தடியில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.