குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 37) நமக்கு துன்பம் தருபவரையும் மன்னித்து அவர்களை வெட்கப்படச் செய்யும் குணம் சிறந்தது என்பது குறித்த கதையும், திருக்குறளும் இடம்பெறுகிறது.
உள்ளடக்கம்
பழிவாங்க துடித்த ஆனந்தன்
வழக்கம்போல தாத்தா வாசலில் அமர்ந்திருக்க, ஆனந்தன் மிக வேகமாக தாத்தாவிடம் வந்தான்.
தாத்தா… நான் சைக்கிளில் சென்றபோது, ஒருவன் வேண்டுமென்றே குறுக்கே வந்து என்னை கீழே விழச் செய்துவிட்டான்.
இதனால் எனக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டு விட்டது. பதிலுக்கு ஒரு நாள் அவன் சாலையில் சைக்கிளை ஓட்டி வரும்போது நான் அவனை கீழே தள்ளி விட்டால்தான் என் ஆத்திரம் அடங்கும் என்று புலம்பினான்.
ஆனந்தா… முதலில் நீ உள்ளே போய் காயம் அடைந்த பகுதியை சுத்தம் செய்து மருந்து தடவு. அதற்கு பிறகு என்னிடம் வா… நான் ஒரு கதை சொல்கிறேன். அந்த கதையை கேட்ட பிறகு உன்னை கீழே தள்ளிவிட்டவனை என்ன செய்யலாம் என்று முடிவு என்றார் தாத்தா.
சரி என்று உள்ளே சென்ற ஆனந்தன், சிறிது நேரம் கழித்து திண்ணையில் வந்து அமர்ந்தான்.
தாத்தா… சொல்லுங்கள். அந்த கதையை என்றான்.
துறவியும் துன்பமும்
துறவி ஒருவர் சரயு நதியைக் கடப்பதற்காக படகு ஏதாவது தென்படுகிறதா என்று கரையோரத்தில் நடந்து சென்றார்.
நீிண்ட தூரம் நடந்த அவர் மாலை நேரம் இருட்டத் தொடங்கியதால், இன்று இரவுக்குள் நாம் சரயு நதியை கடக்கும் வாய்ப்பு இழந்துவிடுமோ என நினைத்தபடியே நடந்தார்.
இறைவா.. இன்று இரவு சரயு நதியைக் கடந்து அயோத்தியில் ராமர் ஜலசமாதி அடைந்த குப்தர் படித்துறையை அடைய வேண்டும் என்று எண்ணுகிறேன். நீதான் அருள் புரிய வேண்டும் என வேண்டினார் துறவி.
என்ன ஆச்சரியம். அவருடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறியது. அவரின் கண்ணெதிரே ஒரு படகு கரையோரத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது.
மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கிவிட்டதால், கடைசி படகு சவாரி அது என்பதால் எண்ணிக்கைக்கு மேல் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இரு படகோட்டிகள் படகை துடிப்பு போட்டு நகர்த்த தயாராகினர். இதைக் கண்ட துறவி, அவர்களை நோக்கி இருகரம் கூப்பி, என்னையும் இந்த படகில் ஏற்றிக் கொண்டால் நான் எண்ணிய கடமையை நிறைவேற்ற முடியும் என்று அந்த படகோட்டிகளிடம் கூறினார்.
அந்த துறவியின் தீர்க்கமான பார்வையைக் கண்டு பக்தி உணர்வோடு கைக்கூப்பி வாருங்கள்… அழைத்துச் செல்கிறோம் என்று படகை திரும்பவும் கரையோரம் நிறுத்தினார்கள்.
படகில் இருந்தவர்களோ, இப்போதே அதிகப்படியானவர்கள் படகில் இருக்கிறோம். இதில் அந்த துறவியையும் ஏற்றுவது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதை இரு படகோட்டிகளும் பொருட்படுத்தாமல், துறவியை அமர வைத்துக்கொண்டு படகை எதிர்கரை நோக்கி புறப்பட்டார்கள்.
துறவி மிகக் குறுகிய இடத்தில் அமர்ந்து கை, கால்களை நீட்ட முடியாமல் தவித்தார். இருந்தாலும் படகில் இருந்தவர்கள் அவருக்கு இடம் தரக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்ததால், அந்த குறுகிய இடத்தில் முடங்கியவாறு பயணிக்க வேண்டியிருந்தது.
ஆற்றி நீர் அப்போதே மிகவும் குளிர்ந்து போயிருந்தது. அப்போது படகில் இருந்த சிலர் வேண்டுமென்றே துறவியின் மீது அந்த தண்ணீர் பட வேண்டும் என்ற நோக்கத்தில் கையால் வாரி இறைத்தார்கள்.
தன் மீது குளிர்ந்த நீர் பட்டதால் அவருக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. காரணம் அதற்கு அவர் பல காலமாக பழகியவர் என்பதால் அதை பொருட்படுத்தாமல் பயணத்தை தொடர்ந்தார்.
படகோட்டிகள் எவ்வளவோ கண்டித்தும் பலனில்லை. ஒரு கட்டத்தில் பலரும் தண்ணீரை வாரி அடித்ததால் படகுக்குள் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. அதுவரை அசைந்தாடி எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் சென்ற படகு ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது.
படகு கவிழ்ந்தால் இந்த துறவியால்தான் கவிழும். அவருடைய அதிக பாரத்தை தாங்காமல்தான் படகு தள்ளாடுகிறது. அவர் சாவதோடு நம்மையும் சாக வைத்துவிடுவார் போலிருக்கு என்று கூக்குரலிட்டார்கள்.
அப்போது, ஒரு அசரீரி வானில் இருந்து கேட்டது. துறவி உங்கள் படகில் வருவதால்தான் அது கவிழாமல் இருக்கிறது. அவர் இந்த படகில் ஏறாமல் இருந்தால் இந்த படகை கவிழ்த்து உங்கள் எல்லோர் உயிரையும் பாசக் கயிற்றால் கட்டி எமலோகம் இழுத்துச் சென்றிருப்பேன். தப்பிவிட்டீர்கள் என்றது அசரரீ.
இதைக் கேட்ட பயணிகள் எல்லோரும் மிரண்டு போய் அமைதியாக அமர்ந்து விட்டார்கள். துறவியோ கண்களை மூடிய தியான நிலையிலேயே பயணித்ததால், அவர் காதுகளில் அசரீரி விழவில்லை.
கரையை நெருங்கியபோது அந்த துறவிக்கு புறவுலக நினைவு வந்தது. அவருக்கு இடம் தராமல் நெருக்கடி கொடுத்தவர்கள் அவரை விட்டு தள்ளி பயபக்தியோடு அவரை பார்த்து கும்பிட்டபடி இருந்தார்கள். துறவிக்கு ஒன்றும் புரியவில்லை.
படகில் இருந்து முதலில் இறங்குவதற்கு எல்லோரும் வழிவிட்டார்கள். அவர் இறங்கி படகோட்டியிடம் நன்றி சொல்லி புறப்பட்டார்.
அதற்குள் படகில் வந்தவர்கள் எல்லோரும் விழுந்தடித்து ஓடி வந்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள்.
அவர் சிரித்தபடியே, நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். இறைவன் உங்களை காப்பாற்றுவார். தீர்க்காயுள் பவ. என்று சொல்லி ஆசிர்வதித்து விடைப் பெற்றார் என்று சொல்லி முடித்தார் தாத்தா.
சரி.. இந்த கதையில் இருந்து நீ என்ன தெரிந்துகொண்டாய் என்று தாத்தா இப்போது கேள்வி எழுப்பினார்.
திருக்குறள் கதை 37 சொல்லும் கருத்து
தாத்தா… அடிப்பட்டதால் ஏற்பட்ட காயத்தால் அவனை பழி வாங்குவேன் என்று சொல்லிவிட்டேன். அவன் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்பதை இந்த கதை மூலம் புரிந்துகொண்டேன் என்றான் ஆனந்தன்.
இந்த கதையையொட்டிய ஒரு திருக்குறள் இருக்கிறது அதையும் சொல்லி விடுகிறேன்.
இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
(குறள் 314)
தீமை செய்தவர்களை நாம் பதிலுக்கு தண்டிப்பது தவறு. அவர்களுக்கு தீமைக்கு பதில் நன்மை செய்து, தன் தவறை உணர்ந்து வெட்கமடையச் செய்ய வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.
திருக்குறள் கதை வழியில், உன்னை கீழே தள்ளிவிட்டவனுக்கு நன்மை செய்து அவனை வெட்கபடச் செய்ய வேண்டும் என்றார் தாத்தா.
நிச்சயமாக தாத்தா.. உங்களுடைய திருக்குறள் கதை என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றான் ஆனந்தன்.