சென்னை: சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
அதேபோல், பரங்கிமலையில் உள்ள அரசு நிலங்கள் மோசடி ஆவணப் பதிவுகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தொடர்பாகவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் சதுப்பு நிலங்களும், பரங்கிமலையில் உள்ள அரசு நிலங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
இவை மோசடி ஆவணப் பதிவுகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன என்று அரசுக்கு புகார்கள் வந்தன.
சென்னை மாநகரின் தென் பகுதியில் வங்கக் கடலில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் சுமார் 75 சதுர கி.மீட்டருக்கும் அதிகமாக சதுப்பு நிலங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த நிலப்பகுதி அமைந்துள்ள இடம்தான் பள்ளிக்கரணை. பள்ளிக்கரணை தென் சென்னைப் பகுதியின் முக்கிய நீர் வடிகால் பகுதியாக திகழ்கிறது.
1965-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அடையாறு மத்திய கைலாஷ் அருகே தொடங்கி மேடவாக்கம் வரை சுமார் 5,500 ஹெக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்திருந்தது.
ஆனால் 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது இதன் பரபரப்பளவு 600 ஹெக்டேராக சுருங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், பல இடங்களை அரசு நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்களும் ஆக்கிரமித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி குப்பைகளாலும், கழிவுகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
புகார்கள்
இந்த நிலையில்தான், தற்போது சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவணப் பதிவுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
இந்த விசாரணையை அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான தனித்தனி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் தெரிவித்திருக்கிறார்.
அரசு அறிக்கை
இதுகுறித்து தமிழக அரசு பிப்ரவரி 21, 2004 தேதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் அடங்கிய பல ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் நிலங்கள் மோசடி பத்திரப்பதிவு மூலம் பல்வேறு தனி நபர்களின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் பதிவுத் துறையில் பணிபுரியும் பல அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் புகார்கள் பெறப்பட்டு வகுகின்றன. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனி நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் முறைகேடாக ஆவணப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
இதற்காக உரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்யவும் தல ஆய்வு நடத்தவும், முறைகேடான பதிவுகள் இருந்தால், அதற்கு பொறுப்பான பதிவுத்துறை, பிற துறை அலுவலர்கள், தனி நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விசாரணைக் குழு
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் ஒரு விசாரணனைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அனுஷியா, சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது} எஸ். சரஸ்வதி, வட்டாட்சியர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
இக்குழு 30 நாள்களுக்குள் விசாரணை நடத்தி தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.
தென் சென்னை 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட, பரங்கிமலை கிராமத்தில் சுமார் 36 சர்வே எண்களில் கட்டுப்பட்ட நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்று ஆலந்தூர் வட்டாட்சியர் கடந்த 28.10.15 தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.
அதைக் கருத்தில் கொள்ளாமல் 36 வெவ்வேறு சர்வே எண்களில் அமைந்திருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்களை பல்வேறு ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட பரங்கிமலை கிராமத்தில் அரசு நிலம் தொடர்பான முறைகேடான பதிவுகள் நடந்திருக்கிறதா என்பதையும், வருவாய் துறை பதிவேடுகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர்களுக்கு பட்டா கொடுத்திருப்பதற்கான பதிவுகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்.
அவ்வாறு இருந்தால் அப்பதிவுகளுக்கு பொறுப்பான பதிவுத் துறை மற்றும் பிறத் துறை அலுவலர்கள், தனி நபர்கள் குறித்த விரிவான விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்க வணிகவரித்துறை இணை ஆணையர் உமா மகேஸ்வரி தலைமையிலான ஒரு விசாரணைக் குழு அரசால் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் சிஎம்ஆர்எல் துணை ஆட்சியராக பணிபுரியும் த. முருகன், கே. இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இக்குழுவும் தன்னுடைய அறிக்கையை 30 நாள்களுக்குள் அரசுக்கு வழங்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.